என் மலர்
திருவள்ளூர்
- சென்னையில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா திருவள்ளூர் மாவட்டத்துக்குச் சென்றார்.
- அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. ஏழை எளியோருக்கான கட்சி என்றார்.
திருவள்ளூர்:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில், தொண்டர்களைச் சந்திக்க சென்னையில் இருந்து திருத்தணி புறப்பட்டார் சசிகலா. சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற சசிகலா திருத்தணி அடைந்தார். அங்கு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரிசெய்யப்படும்.
அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் என்னுடன் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. ஏழை எளியோருக்கான கட்சி
நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க பாடுபடுவேன். அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2-வது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்ய முடியும்.
தி.மு.க.வை தான் எப்போதும் எங்கள் எதிரியாகப் பார்ப்போம்.
வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க.வை ஒரு தலைமையின்கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என தெரிவித்தார்.
- 2 தரப்பினரையும் அழைத்து 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.
- பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னேரி:
பழவேற்காடு உப்பங்கழி ஏரியில் கோட்டை குப்பம், ஆண்டிகுப்பம், நடுவூர் மாதா குப்பம், கிராமத்தினர் சுழற்சி முறையில் அண்ணா மலைச்சேரி வடக்கு திசை வரையிலும், கிழக்கு திசை முகத்து வாரம் வரையிலும் பாரம்பரியமாக மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த 8 மாதத்திற்கு முன்பு மீன்பிடிப்பதில் இருதப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி ஒரு தரப்பினர் பொன்னேரி கோட்டாட்சியர் செல்வத்திடம் புகார் மனு அளித்தனர். இரு தரப்பினரையும் அழைத்து கோட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.
எனினும் ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை மீன்பிடி தொழில் செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து 2 தரப்பினரையும் அழைத்து 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. மே 8-ந்தேதி பழவேற்காடு மீனவர் கூட்டமைப்பு சார்பில் சமாதான கூட்டம் நடத்தியும் முடிவு எட்டப்பட வில்லை.
இதைத்தொடர்ந்து மீனவர்கள் பிரச்சினை குறித்து மீனவ கூட்டுறவு சங்க தலைவர் பார்த்திபன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதில், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்களை பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
- அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிரபல தனியார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- கைதான 2 பேரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிரபல தனியார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து திடீரென ரூ.1.10 கோடி மாயமானது.
மர்ம நபர் ஆன்-லைன் மூலம் நூதன முறையில் பணத்தை திருடி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ஆன்-லைன் மூலம் நூதன முறையில் தனியார் நிறுவனத்தின் பணத்தை திருடியது கொல்கத்தாவைச் சேர்ந்த சபீர் அலி, கிருஷ்ணகுமார் பிரதாப் என்பது தெரிந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கொல்கத்தா விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை சென்னை அழைத்து வந்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைதான 2 பேரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நூதன திருட்டுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்றும் விசாரணை நடக்கிறது.
- ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
- இன்று காலை திடீரென இந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலையின் இரு புறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைப்பதற்கான செட்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக அப்பகுதியில் குடோன் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை திடீரென இந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் அலறியடித்துக் வெளியே ஓடி வந்தனர். தகவல் அறிந்ததும் மதுரவாயல், பூந்தமல்லி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை தலையாரி தெருவை சேர்ந்தவர் முனி ரத்தினம்.
- சீதஞ்சேரியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை தலையாரி தெருவை சேர்ந்தவர் முனி ரத்தினம். இவரது மனைவி பாரதி (வயது50) சீதஞ்சேரியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 16-ந் தேதி மாலை சீதஞ்சேரியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் பாரதி கழுத்தில் இருந்த 4.5 சவரன் தங்கச் தாலி செயினை பறித்து தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து பாரதி பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினார். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (40) என்று தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ரமேசை கைது செய்தனர். இவர் ஆந்திராவில் பல வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. ரமேசை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த னர்.
- இலவச வீட்டு மனைகள் பெற்ற பயனாளிகள் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தனர்.
- புகாரின் மீது விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் அளவீடு செய்து வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ஆர்.கே. பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜாநகரம் கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டது.
தங்கள் வீடுகளுக்கு அருகில் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜநகரம் கிராமத்தைச் சார்ந்த மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், பல ஆண்டுகளாக பயனாளிகளுக்கு சர்வே செய்து நிலம் வழங்கப்படாத நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில், இலவச வீட்டு மனைகள் பெற்ற பயனாளிகள் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தனர்.
புகாரின் மீது விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் அளவீடு செய்து வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
அதன்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி ஆர்.டி.ஒ. சத்யா தலைமையில் வருவாய்த்துறையினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரணீத் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் இலவச வீட்டு மனைகள் சர்வே செய்து பயனாளிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு இலவச வீட்டுமனை சர்வே செய்து அமைக்கப்பட்டிருந்த அளவீட்டு கற்களை அகற்றினர். இச்சம்பவம் தொடர்பாக கிராமத்தைச் சேர்ந்த கவிகண்ணன், விநாயகம், ஜெயராமன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிப்பட்டு - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் மாநில நெடுஞ்சாலையில் மரங்களை வெட்டி சாய்த்தனர். பொதுமக்களுடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற ஆர்.கே. பேட்டை தாசில்தார் தமயந்தியை சிறைபிடித்தனர். பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பிடியில் சிக்கி 3 மணிநேரம் போராடிய தாசில்தார் திடீரென்று மயக்கம் அடைந்தார். அவரை கடும் போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களிடமிருந்து போலீசார் மீட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது திடீரென்று போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை, மின்சாரத்தை தடை செய்து சரமாரியாக கற்கள் கொண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் போலீசார் அங்கிருந்து தப்பி ஓடினர். நேற்று மாலை இரவு வரை நடந்த இந்த சம்பவத்தில் ஆர்.கே பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்த பரபரப்பான நிலையில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்ய பிரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண் ஆகியோர் ஆர்.கே.பேட்டையில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையிலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார்.
- டி.டி.வி. தினகரனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருவள்ளுர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார். கூட்டத்தில் அ.ம.மு.க. துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன், மண்டல பொறுப்பாளர், பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான கரிகாலன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் இ.லக்கிமுருகன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் என சுமார் 2,000 பேர் கலந்து கொள்கிறார்கள். ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தரும் பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 மையங்களில் மொத்தம் 4609 ஆண்களும், 939 பெண்களும் தேர்வு எழுதுகின்றனர்.
- தேர்வு எழுதுபவர்கள் கைப்பை, புத்தகங்கள், செல்போன், கால்குலேட்டர், புளுடூத் போன்ற மின்சாதன பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 548 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இந்தத் தேர்வில் திருப்பாச்சூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 1309 ஆண்கள் மட்டும் தேர்வு எழுதுகின்றனர். காக்களூர் சி, சி, சி இந்து மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 1300 பேரும், திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் 1300 பேரும், பாண்டூர் இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 700 பேரும், திருத்தணி ஜி.ஆர்.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 939 பெண்களும் தேர்வு எழுதுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 மையங்களில் மொத்தம் 4609 ஆண்களும், 939 பெண்களும் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த தேர்வு எழுதுபவர்கள் கைப்பை, புத்தகங்கள், செல்போன் மற்றும் கால்குலேட்டர், புளுடூத் போன்ற மின்சாதன பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. சோதனைக்கு பின்னரே தேர்வு எழுதுபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத்தேர்வை கண்காணிக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 4 துணை போலீஸ் சூப்பிரண்டு, 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 532 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பேக்கரியில் பூட்டை உடைத்து கடையில் உள்ள டி.வி. மற்றும் லேப்டாப் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- கடையை திறக்க வந்த உரிமையாளர், திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சி பெரியகுப்பம் ரெயில்வே குடியிருப்பில் வசிப்பவர் நாகம்மாள் (70). வீட்டின் பின்புறமாக உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.
மற்றொரு சம்பவம்...
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் ஆயில் மில் அருகில் தனியார் திருமண மண்டபம் அருகில் உள்ள பேக்கரியில் இரவு பூட்டை உடைத்து கடையில் உள்ள டி.வி. மற்றும் லேப்டாப் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் காலையில் கடையை திறக்க வந்த உரிமையாளர், திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருண்குமார் பலரிடம் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.
- தற்கொலை செய்த அருண்குமார், கடந்த 6 மாதத்துக்கு முன்பு பதவி உயர்வு வரும் என்று எதிர்பார்த்து இருந்ததாக தெரிகிறது.
திருநின்றவூர்:
பட்டாபிராம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 42). இவர் சேப்பாக்கத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
அருண்குமார் பலரிடம் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் அருண்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அருண்குமார் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி தேவி அறைக்குள் சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கணவர் அருண்குமார் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பட்டாபிராம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த அருண்குமார், கடந்த 6 மாதத்துக்கு முன்பு பதவி உயர்வு வரும் என்று எதிர்பார்த்து இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. மேலும் கடன் தொல்லையும் இருந்ததால் அருண்குமார் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.
அருண்குமாரிடம் பணத்தை திருப்பி கேட்டு கடன் கொடுத்தவர்கள் யாரேனும் நெருக்கடி கொடுத்தனரா? பணி செய்த இடத்தில் ஏதாவது பிரச்சினை உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் பட்டாபிராம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில்களில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் செய்யப்பட்டது.
- ஒரே நாளில் 3 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த நெமிலி அகரம் கிராமத்தில் உள்ள செல்லத்தம்மன் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த நகை மற்றும் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதேபோல் அருகே உள்ள கீழ்விளாகம் கிராமத்தில் பாப்பாத்தி அம்மன்கோவில், கடும்பாடிஅம்மன் கோவில் பூட்டையும் உடைத்து நகை-உண்டியல் பணத்தை சுருட்டி சென்று விட்டனர். மூன்று கோவில்களிலும் மொத்தம் 24 சவரன் தங்க நகை, உண்டியல் பணம் ரூ.5 லட்சம் வரை கொள்ளை போய் இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே நாளில் 3 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கோவில் இடத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளை மூடி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- வீடுகளை காலி செய்ய அவகாசம் கொடுத்து அதிகாரிகள் சென்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த சயனாவரம் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 28 ஏக்கர் 78 சென்ட் நிலம் உள்ளது. இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது
இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பில் இருந்த 14 ஏக்கர் 51 சென்ட் நிலத்தை போலீசார் பாதுகாப்புடன் மீட்டனர். பின்னர் அந்த இடத்தில் பெயர்ப்பலகை, எல்லைக்கற்களை நட்டு வைத்தனர்.
இதைத்தொடர்ந்து கோவில் இடத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளை மூடி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதே போல் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு அங்கு குடியிருந்தவர்களிடம் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசித்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மூன்று தலைமுறைகளாக வசித்து வருவதால் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரி செலுத்துகிறோம் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே பெண் ஒருவர் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றார். அவரை பாதுகாப்புக்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து சமாதானப்படுத்தினர்.
தகவல் அறிந்ததும் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் அங்கு வந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடனும், பொதுமக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து வீடுகளை காலி செய்ய அவகாசம் கொடுத்து அதிகாரிகள் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






