என் மலர்
திருவள்ளூர்
- தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
- சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியிலிருந்து சிமெண்ட் கலவையை டேங்கர் லாரி மூலம் சிமெண்ட் கலவை எடுத்துக் கொண்டு சென்னை நோக்கி சென்றது. அந்த லாரியை திருத்தணியை சேர்ந்த பாபு என்பவர் ஓட்டிச் சென்றார்.
சென்னையில் சிமெண்ட் கலவையை இறக்கிவிட்டு மீண்டும் திருவள்ளூர் வழியாக டேங்கர் லாரி ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கி சென்று கொண்டிருந்தது. சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் டி.எஸ்.பி அலுவலகம் அருகே அதிகாலை 5 மணி அளவில் வந்தபோது வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு சுவரில் பலமாக மோதி சாலையோரம் நின்றது.
இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் நேற்று அமாவாசை தினம் என்பதால் வீரராகவர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதிகளவில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்பட்டது. காலை நேரம் என்பதால் போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.அந்த லாரியை முழுவதுமாக அப்புறப்படுத்திய பின்னரே ஐந்தரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து சீரானது.
- அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மீஞ்சூரில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பொன்னேரி:
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மீஞ்சூரில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில துணைத்தலைவர் டிஎல் சதாசிவ லிங்கம், நிர்வாகிகள், மீஞ்சூர்துரைவேல் பாண்டியன், பொன்னேரி கார்த்திகேயன் ஆரணி சுகுமாரன், ஐ என் டி யு சி தாமோதரன், மணவாளன், யுகேந்தர், வில்சன் உட்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
- இன்று மாலை வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
- நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் அமா வசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் கோவில் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர்.
இன்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.
ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாள், மூலவர் வீரராகவ பெருமாளை வழிபட்டனர்.
இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதே போல் நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
- செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.
- கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் தற்போது பூண்டி ஏரியிலேயே சேமிக்கப்பட்டு வருகிறது.
ஊத்துக்கோட்டை:
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது. இந்த தண்ணீர் கடந்த மாதம் 8-ந்தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 550 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
சென்னை குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதனால் இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு அதிகரித்து. 90 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் உள்ளது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. எனினும் தொடர்ந்து 3 நாட்கள் பலத்த மழை கொட்டியதால் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரை வீணாக வெளியேற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் தற்போது பூண்டி ஏரியிலேயே சேமிக்கப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 1,383 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. எனினும் பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமிக்க அதிகாரிகள் விரும்பவில்லை. மேலும் ஏரியில் உள்ள நீர் திறப்பு மதகுகளை சீரமைத்து தண்ணீர் சேமிப்பை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதேபோல் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியிலும் போதுமான தண்ணீர் உள்ளது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பை வருகிற 1-ந்தேதி முதல் நிறுத்த தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதத்தில் தண்ணீரை திறந்து விடும்படி கூறி உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, சென்னை குடிநீர் ஏரிகளில் போது மான தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பை ஜூலை 1-ந்தேதி முதல் நிறுத்தும்படி ஆந்திர அரசிடம் கேட்டுக்கொண்டு உள்ளோம். தற்போது ஏரியில் உள்ள தண்ணீரை வைத்து சென்னையில் 8 மாதங்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்றனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம, சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி(11.7டி.எம்.சி) தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரிகளில் 8368 மி.கனஅடி(8.3டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜீவனாம்ச வழக்கு, செக் மோசடி, சிவில் வழக்கு, வங்கி வராக்கடன் உள்ளிட்ட 1,281 வழக்கு விசாரணை நடைபெற்றது.
- 589 வழக்குகள் உடனடி தீர்வு காணப்பட்டு ரூ.45 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரத்து 83 நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரியில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் கூடுதல் சார்பு நீதிமன்றம் முதன்மை நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள் 1, 2 இயங்கி வருகின்றன.
இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் முதன்மை சார்பு நீதிபதி அறிவுறுத்தலின் படி மெகா லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் நிலமோசடி, குடும்ப நல வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்குகள், ஜீவனாம்ச வழக்கு, செக் மோசடி, சிவில் வழக்கு, வங்கி வராக்கடன், உள்ளிட்ட 1,281 வழக்கு விசாரணை நடைபெற்றது. 589 வழக்குகள் உடனடி தீர்வு காணப்பட்டு ரூ.45 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரத்து 83 நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.
- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.
திருவள்ளூர்:
ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ராஜாநகரம் பகுதியில் நிலப்பிரச்சினை தொடர்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.
அவர்களிடம் தாசில்தார் தமயந்தி, ஆர்.கே.பேட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளை சிலர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி தப்பி சென்று விட்டனர்.
இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலத்த காயம் அடைந்தனர். ஆனால் இதுவரை வருவாய்த்துறை அலுவலர்களை தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயகர்பிரபு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், வருவாய்த் துறை அலுவலர்களை தாக்கிய மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து அளித்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
- விஜயலட்சுமி தொடர்ந்து மதுபோதையில் ரகளையில் ஈடுபடும் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
- கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த முத்தாபுதுபேட்டை தும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது37). அதேபகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி விஜயலட்சுமி.
கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் மது குடித்து விட்டு அடிக்கடி மனைவி விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தும் கேட்கவில்லை. கிருஷ்ணனின் தகராறு எல்லை மீறி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவும் வழக்கம்போல் கிருஷ்ணன் மதுபோதையில் வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபட்டார். அப்போது அவர் மனைவி விஜய லட்சுமியை அடித்து உதைத்ததாகவும் தெரிகிறது. பின்னர் கிருஷ்ணன் வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றுவிட்டார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த விஜயலட்சுமி தொடர்ந்து மதுபோதையில் ரகளையில் ஈடுபடும் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
அவர் வீட்டின் அருகே கிடந்த பெரியகல்லை தூக்கிவந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் கிருஷ்ணனின் தலையில் போட்டார். இதில் பலத்த காயம்அடைந்த கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதற்கிைடயே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோத கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து முத்தா புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணனின் மனைவி விஜயலட்சுமியை கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முழு நேரமும் வகுப்புகள் நடந்து வருகின்றன.
புழல் அடுத்த காவாங்கரை, கண்ணப்பசாமிநகரில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 25 ஆசிரியர்கள் உள்ளனர்.
இப்பள்ளி கடந்த 1989-ம் ஆண்டு புழல் ஊராட்சி ஒன்றிய ஆரம் பள்ளியாக தொடங்கப்பட்டு பின்னர் 2006-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாகவும், 2017-ம் ஆண்டு உயர் நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 10-ம் வகுப்பு வரை செயல்படும் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டாலும் பள்ளியில் தனியாக இடம் ஒதுக்கி கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவில்லை.
இதனால் ஏற்கனவே இருந்த அதே கட்டிடத்தில் கூடுதல் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இதன்காரணமாக கடும் இட நெருக்கடி ஏற்பட்டு மாணவ- மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முழு நேரமும் வகுப்புகள் நடந்து வருகின்றன. மற்ற மாண வர்களுக்கு கொரோனா காலத்தை போல பாதி நேரமே வகுப்புகள் செயல்படுகின்றன. காலையில் இருந்து மதியம் வரை சில வகுப்புகளும் மதியத்துக்கு மேல் சில வகுப்புகளும் செயல்படு கின்றன. இதனால் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் கல்வியின் தரம் குறித்து கவலை அடைந்துள்ளனர்.
ஆசிரியர்களின் முயற்சியால் சில தன்னார்வலர்களின் உதவியுடன் பள்ளிக்கு தேவையான உதவிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு குளிர்பானம், உணவு, காலணி போன்றவை வழங்கி அவர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர். பெரும் சிரமத்தில் உள்ள இப்பள்ளி சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாண வர்களின் பெற்றோர் கூறியதாவது:-
காவாங்கரையில் 10-ம் வகுப்பு வரை செயல்படும் ஒரே அரசு பள்ளி இந்த பள்ளிதான். இப்பள்ளியில் தமிழ், ஆங்கில வழி என இரண்டும் கற்றுத் தருவதால் பணம் செலவு செய்து தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டிய கவலை இல்லாமல் இங்கு சேர்த்து படிக்க வைத்தோம்.
ஆனால் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப பட்ட நிலையில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தராமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் இட நெருக்கடி ஏற்பட்டு மாணவ- மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பல கோடி ரூபாய் செலவு செய்து பொதுக்குழுவை கூட்டியும், நீதிமன்றம் தலையிட்டதால் எடப்பாடி பழனிசாமி நினைத்தது எதுவும் நடக்கவில்லை.
- தற்போது அ.தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர்களை 3 கோடி, 4 கோடி, 5 கோடி என பணம் கொடுத்து வாங்கி பொதுச்செயலாளர் பதவிக்கு வரும் வேலை நடந்து வருகிறது.
அம்பத்தூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் அயபாக்கத்தில் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் மத்தியில் பேசினார். பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவின் பொதுக்குழு கூட்டங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த சரித்திர நிகழ்வாக இருக்கும். அ.தி.மு.க. அழிந்து கொண்டிருக்கிறது என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். கருணாநிதியை எதிர்த்து தான் எம்.ஜி.ஆர். அரசியல் களம் கண்டார். அதே போல அவரை பின் தொடர்ந்து அம்மாவும் அரசியல் களம் வந்தார். தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசி வருகிறார்.
அ.ம.மு.க. என்ற ஒரு கட்சி இருக்கிறது என்றும் இதில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து அவர் பேசி வருகிறார். அ.தி.மு.க. அயோக்கியர்களின் கூடாரம் ஆகி விட்டது. ஆகவே, வருங்காலத்தில் அம்மாவின் கொள்கைகளை முன்னிறுத்தி அம்மாவின் ஆட்சியை அமைப்போம். அதன் பின்னர் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்.
அ.தி.மு.க. தவறானவர்களின் கைகளில் மாட்டிக்கொண்ட காரணத்தினால் தான் நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை தொடங்கினோம்.
தற்போது இரட்டை இலை சின்னம் எம்.ஆர் ராதா கையிலும் வீரப்பா போன்ற வில்லன்களின் கையிலும் மாட்டி உள்ளது. அதனை அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள்தான் மீட்டு எடுப்பார்கள்.
ஓ.பன்னீர் செல்வத்தை ரகசியமாக சந்திக்க எனக்கு எந்தவித தேவையும் இல்லை. பல கோடி ரூபாய் செலவு செய்து பொதுக்குழுவை கூட்டியும், நீதிமன்றம் தலையிட்டதால் எடப்பாடி பழனிசாமி நினைத்தது எதுவும் நடக்கவில்லை. இதனால் அவர்கள் ஏதேதோ பேசி வருகின்றனர்.
தற்போது அ.தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர்களை 3 கோடி, 4 கோடி, 5 கோடி என பணம் கொடுத்து வாங்கி பொதுச்செயலாளர் பதவிக்கு வரும் வேலை நடந்து வருகிறது. அதற்காக எடப்பாடி பழனிசாமி அசுர ஆட்டம் ஆடி வருகிறார். அதனால், அ.தி.மு.க. இயக்கம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் நல்லவேளை தண்ணீர் பாட்டிலால் மட்டும்தான் தாக்கப்பட்டார். அந்த கூட்டத்தில் இருப்பவர்கள் இதை விட ஆபத்தானவர்கள். ஆனால் மிக தைரியமாக அங்கு சென்று அந்த பொதுக்குழுவில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐ.பி.எல் ஏலம் போல கட்சி நிர்வாகிகளை பல கோடி கொடுத்து வாங்கினாலும் எடப்பாடி பழனிசாமி நினைத்தது நடக்காமல் போய்விட்டது.
ஒற்றை தலைமை பிரச்சினை காரணமாக தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தற்போது யாரும் பேசுவதே இல்லை அதனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை தற்போது காற்றில் பறக்க விட்டிருக்கிறார்.
பொதுக்குழுவில் கைமாறிய பணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முறையாக கைப்பற்றி இருந்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் டி.டி.வி.தினகரனுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு 5 அடி வெள்ளிவேல், வீரவாள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன், அமைப்பு செயலாளர் தட்சிணா மூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் குட்வில் குமார், பொறி யாளர் அணி மாநில செயலாளர் கரிகாலன், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வேதாசலம், மேற்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் லக்கி முருகன், கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கர் ராஜா மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட, கிளைக்கழக நிர்வாகிகள் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
- கும்மிடிப்பூண்டி அடுத்த கோங்கல் மேடு கிராமத்தை சேர்ந்தவர் சுனிர். இவரது மகன் ஹைடன்.
- மாணவன் ஹைடன் எப்படி இறந்தான் என்பது குறித்து பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டி அடுத்த கோங்கல் மேடு கிராமத்தை சேர்ந்தவர் சுனிர். இவரது மகன் ஹைடன் (வயது12). பொன்னேரி அடுத்த கொக்குமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை மாணவன் ஹைடன் வீட்டின் அருகே விளையாடினான். பின்னர் அவன் வீட்டில் உள்ள தொட்டியில் குளித்துவிட்டு மாடிக்கு ஏறி சென்றான். அப்போது திடீரென மாணவன் ஹைடன் மயங்கி கீழே விழுந்தான்.
உடனடியாக பெற்றோர் அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஹைடன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாணவன் ஹைடன் எப்படி இறந்தான் என்பது குறித்து பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- திருமழிசை ஆத்துகால் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது47).
- போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையன் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருமழிசை ஆத்துகால் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது47). இவர் தனியார் கம்பெனியில் காவலாளியாக பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று உதயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இவரது மூத்த மகள் பவித்ரா மாலையில் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தந்தைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
உதயகுமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 27 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உதயகுமார் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையன் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
- மாணவி ஹரிணிகாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
- தங்கி இருந்த மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
திருவாரூரை சேர்ந்தவர் ஹரிணிகா (வயது16). இவர் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்
கடந்த 3 நாட்களாக மாணவி ஹரிணிகாவுக்கு வயிற்றுபோக்கு, வாந்தி இருந்து வந்தது. இந்தநிலையில் அவருக்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது.
இதையடுத்து அவரை செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி ஹரிணிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது உடன் தங்கி இருந்த மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி ஹரிணிகாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மாணவியின் திடீர் சாவு குறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






