என் மலர்
திருவள்ளூர்
- அ.தி.மு.க.வில் ஒற்றை, இரட்டை, கூட்டுத் தலைமை ஒருபுறம் இருந்தாலும், அதிமுகவுக்கு பாஜக தலைமை இருக்கக்கூடாது.
- குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை பாஜக உடைத்து, எம்.எம்.எல்.க்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆணழகன் சீனிவாசனின் தாயார் படத்திறப்பு மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
அப்போது, திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே. பேட்டை ராஜா நகரம் பகுதியில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பட்டியலின மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் வீடு கட்டி குடியேறுவதற்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒற்றை, இரட்டை, கூட்டுத் தலைமை ஒருபுறம் இருந்தாலும், அதிமுகவுக்கு பாஜக தலைமை இருக்கக்கூடாது. அது அதிமுகவுக்கும், தமிழகத்துக்கும் நல்லதல்ல குடியரசுத்தலைவர் தேர்தல், அம்பேத்கருக்கும் சங்பரிவர் அமைப்பின் நிறுவனருக்கும் இடையிலான யுத்தம் என நினைக்கிறேன்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை பாஜக உடைத்து, எம்.எம்.எல்.க்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி வருகிறது. அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பெரும்பான்மையான இந்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம், பா.ஜ.க. அரசு, இந்துகளுக்கு விரோதமான அரசு என்பதை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் நீல வானத்து நிலவன், பாலசிங்கம், மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், தளபதிசுந்தர், அருண் கவுதம், செஞ்சிசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர்- பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று வந்தது. இதனால் பதறிப்போன ராஜசேகர் திடீரென பிரேக் பிடித்தார்.
- இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
திருவள்ளூர்:
திருவள்ளூர், குப்புசாமி நகர் சிவராஜ் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 30). இவர் திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தாரர்.
நேற்று இரவு ராஜசேகர் வேலை முடிந்ததும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
திருவள்ளூர்- பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று வந்தது. இதனால் பதறிப்போன ராஜசேகர் திடீரென பிரேக் பிடித்தார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜசேகர் திருவள்ளூர்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தாமரைச்செல்வி. சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் தாமரைச்செல்வி வேலை பார்த்து வருகிறார்.
- இவர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த சூப்பர்வைசர் ராதிகா என்பவர், “இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை” என்று கூறி கண்டித்தார்.
போரூர்:
விருகம்பாக்கம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த சூப்பர்வைசர் ராதிகா என்பவர், "இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை" என்று கூறி கண்டித்தார். இதில் தாமரைச்செல்விக்கும், ராதிகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் தாமரைச்செல்வியின் காதில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெரிய பாளையம்கோவிலில் உள்ள தங்க நகைகளை இன்று முதலீடு செய்ததன் மூலம் மாதமொன்றுக்கு ரூபாய் ஒரு கோடி வட்டி கிடைக்கும்.
- சிறுவாபுரி முருகன் கோவிலில் நவம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
பெரியபாளையம்:
கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித்தொகை கோவில் திருப்பணி மற்றும் வளர்ச்சிப்பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் பெரிய பாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் பக்தர்களால் காணிக்கையாக கிடைத்ததில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த தங்கத்தை வங்கியில் முதலீடு செய்யும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ 512 கிராம் தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய ஒப்படைத்தார். அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரிய பாளையம்கோவிலில் உள்ள தங்க நகைகளை இன்று முதலீடு செய்ததன் மூலம் மாதமொன்றுக்கு ரூபாய் ஒரு கோடி வட்டி கிடைக்கும். 18 மாதங்களில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் உள்பட 3 கோவில்களில் தங்கத்தேர் செய்து முடிக்கப்படும்.
சிறுவாபுரி முருகன் கோவிலில் நவம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜி, எம்.எல்.ஏக்கள் டி.ஜே.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்களின் முதன்மை செயலாளர் எம்.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கோவிலின் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோக மித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 23-ந் தேதி கடைக்கு சென்ற மணிகண்டன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
- இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி ஜோதி ராமலிங்க தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (45). தொழிலாளி. சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
கடந்த 23-ந் தேதி கடைக்கு சென்ற மணிகண்டன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு கனமழை கொட்டியது.
- திருத்தணி, பேரம்பாக்கம், கடம்பத்தூர், பூண்டி, திருவலாங்காடு, ஈக்காடு, தாமரைப்பாக்கம், பட்டரைபெரும்புதூர் உள்ளிட்ட பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு கனமழை கொட்டியது. இந்த மழை சுமார் அரைமணி நேரம் நீடித்து பின்னர் சாரல் மழையாக கொட்டியது.
இதேபோல் திருத்தணி, பேரம்பாக்கம், கடம்பத்தூர், பூண்டி, திருவலாங்காடு, ஈக்காடு, தாமரைப்பாக்கம், பட்டரைபெரும்புதூர் உள்ளிட்ட பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகமாக திருத்தணியில் 45 மி.மீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
திருத்தணி - 45
திருவலாங்காடு - 29
திருவள்ளூர் - 27
ஆவடி - 24
பூண்டி - 22
பூந்தமல்லி - 14
தாமரைப்பாக்கம் - 13
ஜமீன் கொரட்டூர் - 10
பொன்னேரி - 7
பள்ளிப்பட்டு - 5
ஊத்துக்கோட்டை - 5
ஆர்கே பேட்டை - 2
சோழவரம் - 2
புழல் - 1.
- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- சென்னை தரமணியில் உள்ள அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் லதா தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் உமாராணி, பூந்தமல்லி ஒன்றிய நிர்வாகி மாறி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் வாங்கும் பில் முழுமையான தொகை வழங்க வேண்டும்.காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.மூன்று வருடம் பணி முடிந்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஏற்கனவே மினி மையத்தில் இருந்து மெயின் மையத்திற்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு 10 ஆண்டுக்கான இன்கிரிமென்ட் தொகை வழங்க வேண்டும். எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளுக்கு அனுபவமிக்க அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். உணவு செலவினங்களுக்கு முன்பணமாக ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிக்கொடை ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். சில்லறை செலவீனம் ரூபாய் 200 வழங்க வேண்டும். பயணப்படி ரூபாய் 400 வழங்க வேண்டும். முறையான சரியான எடைக் கருவிகள் வழங்க வேண்டும் பணிவரன் முறைபடுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேறும் வரை தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 30 ஆம் தேதி சென்னை தரமணியில் உள்ள அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் திரளான அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பிரதமர் மோடியின் பேச்சும், செயலும் வேறு வேறாக உள்ளது.
- கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே.கோவிந்தராஜன் தலைமையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே.கோவிந்தராஜன் தலைமையில்
திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதில் திராவிட கொள்கை பற்றாளர் நாஞ்சில் சம்பத், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம். பி. மற்றும் இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் பங்கேற்று தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கு திராவிடம் குறித்து எடுத்துரைத்தனர். அமைப்பாளர் உதயசூரியன் துணை அமைப்பாளர்கள் கே.வி.லோகேஷ், ஜெ.மோகன்பாபு, கேவி.ஆனந்குமார், முரளிதரன், தில்லை குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஏவி.ராமமூர்த்தி, தன்னலம் கிருஷ்ணமூர்த்தி, மணிபாலன், பாச.குணசேகரன், கன்னிகை ஸ்டாலின், அபிராமி குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் திருச்சி சிவா எம். பி. நிருபர்களிடம் கூறுகையில், "பா.ஜ.க.வின் குதிரை பேரம் காரணமாக பல மாநிலங்களில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் சரியான நேரத்தில் தீர்ப்பளித்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். பா. ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் சட்டத்தின் மாண்புகள் மங்கி வருகிறது. அரசியல் சட்டத்தின் மாண்பை காப்பாற்ற ஒருவர் வர வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி தரப்பில் யஸ்வந்த் சின்கா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யஸ்வந்த் சின்கா வெற்றி பெற்று எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிப்பார். நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்வரும் 2024 பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும். பிரதமர் மோடியின் பேச்சும், செயலும் வேறு வேறாக உள்ளது. நாடாளுமன்றத்தில் இருப்பார் ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொரட்டூர் அக்ரகாரம் மேட்டு தெரு பகுதியில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது.
- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு.
அம்பத்தூர்:
கொரட்டூர் அக்ரகாரம் மேட்டு தெரு பகுதியில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைந்து பணத்தை அள்ளி சென்று விட்டனர். இது குறித்து கொரட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். இதில் கோவிலில் கொள்ளையில் ஈடுபட்டது வில்லிவாக்கம் வள்ளியம்மாள் நகரை சேர்ந்த கார்த்திக், கொரட்டூர் எல்லையம்மன் நகரை சேர்ந்த சல்மான் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
- அயனம்பாக்கம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
- பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு பொக்லைன் இயந்திரத்தை இயக்கி குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
பூந்தமல்லி:
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதி, திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ராஜாங்குப்பம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு பொக்லைன் இயந்திரத்தை இயக்கி குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் ஆனந்திரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பொன்னேரி அடுத்த மேட்டு காலனியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் வந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் லாரியில் சிக்கிய யுவராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த மவுத்தம்பேடு முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ்(வயது50). இவர் ஆரணி மின்சார வாரியத்தில் ஊழியராக பணி செய்து வந்தார்.
நேற்று மாலை அவர் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
பொன்னேரி அடுத்த மேட்டு காலனியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் வந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் லாரியில் சிக்கிய யுவராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது யுவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த ஆண்டுக்கான விழா ஜூலை 21-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
- சிறந்த முறையில் இந்த விழாவை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இதையொட்டி கோவிலில் முன் ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கோவிலில் நடைபெறும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா 21.7.2022 முதல் 25.7.2022 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த 5 நாட்களில் பெரிய அளவிலான கூட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் முன் ஏற்பாடாக முதல் கட்ட நடவடிக்கைகள் என்ற வகையில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், திருத்தணி கோவில் நிர்வாகத்தைச் சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தோம்.
கடந்த வாரம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எந்த விதமான பிரச்சனையும் இன்றி சுவாமியை தரிசனம் செய்வதற்கும், ஆடி கிருத்திகை திருவிழாவை சரியான முறையில் கொண்டாடுவதற்கும் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும், அரசு துறை சார்பாக என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இன்றைக்கு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம். பக்தர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறைகள், குளியலறைகள், கண்காணிப்பு கேமிராக்கள், மின் இணைப்பு, சுகாதார வசதிகள், அதுமட்டுமின்றி, தீயணைப்பு வசதிகள், தகவல் நிலையம் போன்ற பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காவல்துறை சார்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளும், வாகனங்களை நிறுத்துவதற்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே ஒரு முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மேலும், எந்த வகையிலான கூடுதல் பாதுகாப்பு வசதிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிறந்த முறையில் இந்த விழாவை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருத்தணி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அஸ்வத் பேகம், துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, வேலூர் மண்டல நகைகள் சரி பார்ப்பு துணை ஆணையர் ரமணி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி உடன் இருந்தனர்.






