என் மலர்
திருவள்ளூர்
- முகப்பேர் கிழக்கு நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மனிஷ் (வயது22).
- மது அருந்தி விட்டு போதையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அம்பத்தூர்:
முகப்பேர் கிழக்கு நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மனிஷ் (வயது22). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
முகப்பேர் மேற்கு காளமேகம் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (24). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
இவர்கள் நேற்று இரவு மது அருந்தி விட்டு போதையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மனிஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
முகப்பேர் கிழக்கு ரெட்டிப்பாளையம் பகுதியில் சென்ற போது வேகமாக சென்ற மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி மின்சார டிரான்ஸ்பார்மரில் மோதியது. இதில் மனிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தினேஷ் தலையில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
- அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மன்ற கூடத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குமரவேல், செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர் அருணாச்சலம் பேசுகையில், "தன் வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
மற்றொரு அ.தி.மு.க. கவுன்சிலர் ஆனந்தி பேசுகையில், "அனைத்து தெரு விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். தி.மு.க. கவுன்சிலர் வெங்கடேசன் பேசுகையில், "செட்டித்தெரு இருளர் காலனியில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும், அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
தி.மு.க. கவுன்சிலர் கோகுலகிருஷ்ணன் பேசுகையில், "அங்காளம்மன் கோவில் தெருவில் திறந்த வெளி கழிவுநீர் கால்வாய் உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் திறந்தவெளி கால்வாய்களுக்கு கான்கிரீட் பலகைகளை கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
தி.மு.க. கவுன்சிலர் கோல்டு மணி பேசுகையில், "தன் வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். தி.மு.க. கவுன்சிலர் சுமலதா நரேஷ் பேசும்போது, "தன் வார்டில் கூடுதலாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
தி.மு.க. உறுப்பினர்கள் திரிபுரசுந்தரி, அபிராமி, இந்துமதி, கல்பனா பார்த்திபன், சமீமாரஹீம் ஆகியோர் பேசும்போது, "தினக்கூலி அடிப்படையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர். இப்படி அனைத்து வார்டு கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விரைவில் நிறைவேற்றப்படும்
இதற்கு பதில் அளித்து பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணை தலைவர் குமரவேல் பேசிய தாவது:-
அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். மேலும் தமிழ்நாடு அரசு தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. நிதிநிலை சீரடைந்ததும் அரசிடம் கூடுதல் நிதி பெற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முடிவில் பங்கஜம் நன்றி கூறினார்.
- பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
- முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பேரூராட்சி சார்பில் உதவி இயக்குனர் கண்ணன் விழிப்புணர்வு மற்றும் அறிவுரை வழங்கினார்.
பொன்னேரி:
கொரோனா பரவலை தடுப்பதற்காக மீஞ்சூர் பேரூராட்சி பஜார் வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பேரூராட்சி சார்பில் உதவி இயக்குனர் கண்ணன் விழிப்புணர்வு மற்றும் அறிவுரை வழங்கினார்.
மேலும் நேற்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ள நிலையில் கடைகளில் பயன்படுத்திய 197 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இதை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து டி.எச் சாலையில் முக கவசம் அணிய வேண்டும் என ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கிகள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அவருடன் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு, பேரூராட்சி அலுவலர்கள் பலர் உடன் சென்றனர்.
- ஊத்துக்கோட்டை 4 ரோடு சந்திப்பில் அண்ணா சாலை உள்ளது.
- மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை 4 ரோடு சந்திப்பில் அண்ணா சாலை உள்ளது. இதை ஓட்டி சக்தியவேடு ரோடு ஓரம் மின்கம்பம் உள்ளது. சம்பவத்தன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின்கம்பம் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை மின்கம்பம் சேதம் அடைந்ததால் மின் தடை ஏற்பட்டது. சேதமடைந்த மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர்.
- திருத்தணி நகராட்சி சுப்பிரமணிய நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்கா கருமாரி அம்மன் ஆலயம் உள்ளது.
- கோவிலை திறக்க வந்த போது பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
திருத்தணி:
திருத்தணி நகராட்சி சுப்பிரமணிய நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்கா கருமாரி அம்மன் ஆலயம் உள்ளது.
இந்த கோவிலில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு புகுந்த கொள்ளையர்கள் கோவில் பூட்டை உடைத்து அம்மனின் சூலம், குத்துவிளக்கு கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த ரூ.10 ஆயிரம் பணம் இருந்த உண்டியலை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று காலை கோவில் பூசாரி மோகன வேல் கோவிலை திறக்க வந்த போது பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே கோவிலில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் அம்மன்கோவிலில் சூலம் மற்றும் உண்டியல் பணம் கொள்ளைபோன சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பூண்டி ஏரியின் கரைகளை உயர்த்தி 5 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- பூண்டி ஏரியின் தற்போதைய ஆழம் 35 அடி ஆகும். இது 37 அடியாக ஆழப்படுத்தப்பட்டு உள்ளது.
ஊத்துக்கோட்டை:
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த 5 ஏரிகளில் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும்.3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை 16 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.
கடந்த 2 வருடங்களில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் மதகு வழியாக திறந்துவிடப்பட்டது. இப்படி சுமார் 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போய் சேர்ந்தது. சென்னை மக்களின் 1 வருட குடிநீர் சராசரி தேவை 12 டி.எம்.சி. ஆகும். தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல திட்டங்கள் வகுத்துள்ளனர்.
குறிப்பாக பூண்டி ஏரியின் கரைகளை உயர்த்தி 5 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய கொள்ளளவு 3. 231.டி.எம்சி. ஆகும். கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க மதகுகள் மறுசீரமைப்பு செய்து ஏரியின் பரப்பளவை அதிகப்படுத்த, தனியாரிடமிருந்து இடம் வாங்கி, கரைகளை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இதற்காக மண் தரம் மற்றும் தரை கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர்கள் ஸ்ரீதரன், குமரன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் சில நாட்கள் முன்னர் ஏரியை ஆய்வு செய்தனர். இக்குழு தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
அரசு நிதி ஒதுக்கிய பின்னர் பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க வைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.
இதற்காக பூண்டி ஏரியை 2 அடி ஆழப்படுத்துகிறார்கள். பூண்டி ஏரியின் தற்போதைய ஆழம் 35 அடி ஆகும். இது 37 அடியாக ஆழப்படுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே திருவள்ளூர் அருகே உள்ள ராமஞ்சேரியில் 20 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க திறனுள்ள பிரம்மாண்ட அணை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் கிருஷ்ணா தண்ணீர் வீணாவதை தடுக்க கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் வழியாக நீரை கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி கால்வாய் அமைத்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் சென்னைக்கு கொண்டு செல்ல முடியும்.
- கடந்த மாதம் 27-ந்தேதி சென்னைக்கு சென்று செல்போன் சர்வீஸ் செய்து வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
- நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
பொன்னேரி:
பொன்னேரி பாலாஜி நகரைச்சேர்ந்தவர் மகேஷ் (37). இவர் பொன்னேரி ரெயில்வே சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 27-ந்தேதி சென்னைக்கு சென்று செல்போன் சர்வீஸ் செய்து வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அவரது குடும்பத்தினர் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் காயத்ரி (30).
- காயத்திரி கல்வீசி தாக்கியதில் கொள்ளையர்களில் ஒருவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் காயத்ரி (30).இவர் கொடூர் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலை திட்ட பணியின் பொறுப்பாளராக உள்ளார். நேற்று மாலை அவர் கிருஷ்ணாபுரத்தில் இருந்து வெள்ளோடைசெல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென காயத்திரி அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர். அப்போது காயத்திரி கல்வீசி தாக்கியதில் கொள்ளையர்களில் ஒருவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரேசன் அரிசி மூட்டையுடன் பதுங்கி இருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.
- ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசியை கடத்தி தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ஏ.கே. பிரீத் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையில் போலீசார் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் ரேசன் அரிசி மூட்டையுடன் பதுங்கி இருந்த கும்பல் போலீசாரை கண்டதும் மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த 35 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த ரேசன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் திருவள்ளூர் வட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாவிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசியை கடத்தி தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
- தினேஷ் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.
- இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த வெங்கத்துார் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). ரவுடி. இவரை கடந்த 11-ந் தேதி மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தார்.
பின்னர் தினேசை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தினேஷ் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ரவுடி தினேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவை மணவாளநகர் போலீசார் புழல் சிறை சூப்பிரண்டிடம் வழங்கினார்.
- பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், இரவு நேரத்தில் பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
- திருவள்ளூர் பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களிலும் இரவு முழுவதும் விட்டு விட்டு லேசான மழை கொட்டியது.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கன மழை கொட்டியது. பின்னர் இந்த மழை விடிய விடிய சாரல் மழையாக நீடித்தது.
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழைபெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை கொட்டியது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், இரவு நேரத்தில் பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
மாவட்டத்தில் ஊத்துக்கோட்டையில் அதிக பட்சமாக 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் திருவள்ளூர் பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களிலும் இரவு முழுவதும் விட்டு விட்டு லேசான மழை கொட்டியது.
பலத்த மழை காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மீ.மீட்டரில்) வருமாறு:-
திருவள்ளூர் - 36
பூண்டி - 17
பொன்னேரி - 16
ஜமீன் கொரட்டூர் - 16
சோழவரம் - 9
புழல் - 9
தாமரைப்பாக்கம் - 8
கும்மிடிப்பூண்டி - 7
பள்ளிப்பட்டு - 7
திருவாலங்காடு - 6
திருத்தணி - 5
பூந்தமல்லி - 4
ஆர்.கே.பேட்டை- 2






