search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur Collector Office"

    • கூட்டத்தில் பங்கேற்க வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • இளைஞரணியின் செயல்பாடு மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக பேச உள்ளார்.

    ஆவடி:

    தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் மாதம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் வகையில் மாவட்ட வாரியாக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் இன்று திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை ஆவடியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    கூட்டத்திற்கு திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார்.

    இதில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை வழங்க உள்ளார்.

    இளைஞரணியின் செயல்பாடு மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திருத்தணி சந்திரன் எம்.எல்.ஏ. திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜே.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ., பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் அப்துல் மாலிக், பிரபு கஜேந்திரன், மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு, ஆவடி மேயர் உதயகுமார், மாநகர செயலர் சண்.பிரகாஷ் மற்றும் அனைத்து அணி அமைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆவடியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    முன்னதாக, இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் சென்றிருந்தார்.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களின் நிலைப்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    செப்டம்பர் 15-ந்தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் எவ்வளவு பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தற்போது நடைபெறும் களஆய்வு விவரங்களையும் கேட்டறிந்தார்.

    இது தவிர சிறப்புத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீசுடன் ஆலோசித்தார். இதில் சிறப்பு திட்ட அதிகாரி டாரேஸ் அகமது உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் 912 பேர்களுக்கு ரூ.36 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒருநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பல இடங்களில் வரவேற்புகள் கொடுக்கப்பட்டன.

    • மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.
    • மாணவரிடம் போராட்டத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    திருவள்ளூர்:

    பெரியபாளையம் அடுத்த தண்டலம் ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவர் அம்பத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டீசல் மெக்கானிக் படித்து வருகிறார்.

    இன்று காலை 8.30 மணி அளவில் அந்த மாணவர் சீருடை மற்றும் கல்லூரியின் அடையாள அட்டை அணிந்த படி திருவள்ளூருக்கு வந்தார். திடீரென அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முட்டி போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள் விசாரித்த போது அந்த மாணவர் தனது கோரிக்கை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து விசாரித்தால் மட்டுமே தனது கோரிக்கை குறித்து தெரிவிப்பேன் என்று கூறி தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு முட்டிபோட்டபடி இருந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும், திருவள்ளூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவரை அங்கிருந்து குண்டு கட்டாக தூக்கி போலீஸ் காரில் ஏற்றி திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு மாணவரிடம் போராட்டத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவரின் இந்த திடீர் நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆர்ப்பாட்டத்தின் போது, களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும், களப்பணியாளர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
    • உட்பிரிவு செய்ய முடியாத இன மனுக்கள் மீது கூட்டு பட்டா பரிந்துரை வழங்கிட வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் தாலிப், மாவட்ட செயலாளர் பிரதீப் நரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மெல்கி ராஜா சிங் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும், களப்பணியாளர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும். உட்பிரிவு செய்ய முடியாத இன மனுக்கள் மீது கூட்டு பட்டா பரிந்துரை வழங்கிட வேண்டும்.

    துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் துவங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை வெங்கத்தூர் 15-வது வார்டில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டி வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 டிராக்டர்களில் குப்பைகளை கொட்ட வந்த போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு திருப்பி அனுப்பினர்.

    திருவள்ளூர்:

    கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கத்தூர் பகுதி. வெங்கத்தூர் 15-வது வார்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை வெங்கத்தூர் 15-வது வார்டில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 டிராக்டர்களில் குப்பைகளை கொட்ட வந்த போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு திருப்பி அனுப்பினர்.

    இதற்கிடையே வெங்கத்தூர் 15-வது வார்டு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் தனி ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் அனைவரும் கைகளில் பதாகைகள் ஏந்தி கலெக்டர் அலுவலக நுழை வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் குப்பை கொட்டுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. உடனடியாக குப்பையை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் வெங்கத்தூர் 15-வது வார்டை தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    திருவள்ளூர்:

    ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ராஜாநகரம் பகுதியில் நிலப்பிரச்சினை தொடர்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

    அவர்களிடம் தாசில்தார் தமயந்தி, ஆர்.கே.பேட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளை சிலர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி தப்பி சென்று விட்டனர்.

    இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலத்த காயம் அடைந்தனர். ஆனால் இதுவரை வருவாய்த்துறை அலுவலர்களை தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயகர்பிரபு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், வருவாய்த் துறை அலுவலர்களை தாக்கிய மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து அளித்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

    ×