என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • சந்தேகத்தின் பேரில் போலீசார் கார்த்திக்கிடம் விசாரித்தபோது அவர் நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி நாடகமாடியது தெரிந்தது.
    • வழிப்பறி நாடகத்தின்போது போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கார்த்திக்கை உண்மையிலேயே செங்கலால் தலையில் தாக்கி இருந்தனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி, பூந்தமல்லி சாலையில் கேஸ் பங்க் உள்ளது. இங்கு புதுப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் அவர் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியப் பகுதியில் உள்ள வங்கி அருகே சென்றபோது மர்மநபர்கள் தன்னை தாக்கி பணத்தை கொள்ளை யடித்து சென்றுவிட்டதாக கார்த்திக் தெரிவித்தார். அவருக்கு காயமும் ஏற்பட்டு இருந்தது.

    இதுகுறித்து அவர் ஆவடி போலீசில் புகார் அளித்தார். உதவி ஆணையர் புருசோத்தமன், ஆவடி இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின்பேரில் கார்த்திக்கிடம் விசாரித்த போது அவர் நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி நாடக மாடியது தெரிந்தது. கார்த்திக் தனது நண்பர்களான தங்கமுத்து, ஆனந்த் ஆகியோருடன் சேர்ந்து இந்த வழிப்பறி நாடகத்தை அரங்கேற்றி இருந்தார். இதையடுத்து கார்த்திக் உள்ளிட்ட 3 பேரையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    கார்த்திக் பெட்ரோல் பங்க் வசூல் பணம் ரூ.60 ஆயிரம் வரை கையாடல் செய்து பங்குச் சந்தையில் முதலீடு செய்து இருந்தார். பின்னர் அவரால் அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் வங்கிக்கு பணம் கொண்டு செல்லும்போது வழிப்பறி நாடகமாடி அந்த பணத்தை வைத்து விடலாம் என்று நினைத்து அவர் நண்பர்களுடன் சேர்ந்து இந்த திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். வழிப்பறி நாடகத்தின்போது போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கார்த்திக்கை உண்மையிலேயே செங்கலால் தலையில் தாக்கி இருந்தனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். எனினும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் நண்பர்களுடன் சிக்கிக்கொண்டார்.

    • வல்லூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • வல்லூர் அனல்மின் நிலையத்தில் 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    வல்லூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பாலமுருகனை சரமாரியாக தாக்கி ஆட்டோவுடன் கடத்தி சென்றனர்.
    • சிறிது தூரம் சென்றதும் பாலமுருகனை கீழே தள்ளிவிட்டு ஆட்டோவை மட்டும் கடத்திச் சென்று விட்டனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(34) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு திருவேற்காடு அருகே பருத்திப்பட்டு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ஆட்டோ மீது தங்களது மோட்டார் சைக்கிளை மோதினர். பின்னர் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்து இருப்பதாக கூறி ஆட்டோ டிரைவர் பாலமுருகனிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பாலமுருகனை சரமாரியாக தாக்கி ஆட்டோவுடன் கடத்தி சென்றனர். சிறிது தூரம் சென்றதும் பாலமுருகனை கீழே தள்ளிவிட்டு ஆட்டோவை மட்டும் கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து அறிந்ததும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கடத்தப்பட்ட ஆட்டோவை தேடிய போது அது திருவேற்காடு பகுதியில் நிறுத்தப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆட்டோவை மீட்க சென்றபோது அங்கிருந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். இதில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாவும் தெரிகிறது.

    இதுகுறித்து திருவேற்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள், சங்க நிர்வாகிகள் திருவேற்காடு பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து சந்தேகப்படத் தேவையில்லை.
    • அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் தயக்கமில்லாமல் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறி உள்ளார்

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் தமது எல்லாக் கிளைகளிலும் 10 ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொள்ளவும், பரிவர்த்தனை செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து சந்தேகப்படத் தேவையில்லை. வங்கிகளிலும், பஸ்களிலும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் தயக்கமில்லாமல் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறி உள்ளார்.

    • போரூரை சேர்ந்தவர் ஷோபனா(வயது22) சாப்ட்வேர் என்ஜினீயர்.
    • பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    பூந்தமல்லி:

    போரூரை சேர்ந்தவர் ஷோபனா(வயது22) சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் நேற்று காலை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் தனது தம்பியை பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். நொளம்பூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது வேன் உரசியதால் அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.

    அப்போது பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி ஷோபனா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த நிலையில் விபத்துக்கு காரணமான வேன் மற்றும் லாரி டிரைவர்கள் மோகன், பார்த்திபன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஆவடி, பூந்தமல்லி சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது.
    • மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென கார்த்திக்கை வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.

    ஆவடி:

    ஆவடி, பூந்தமல்லி சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு ஊழியராக கார்த்திக் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று மதியம் அவர் ரூ.1 1/2 லட்சத்தை ஆவடி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு அருகே உள்ள வங்கியில் செலுத்த மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென கார்த்திக்கை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.1 1/2 லட்சத்தை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து உதவி கமிஷனர் புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பட்டம்மாள் என்பவர் மீது வயர்கள் விழுந்தன.
    • மின்வயர் அறுந்ததும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் பட்டம்மாள் உயிர் தப்பினார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கொடூர் ஊராட்சிக்குட்பட்ட தட பெரும்பாக்கம் கிருஷ்ணாபுரம் சாலையில் மின்கம்பங்கள் உள்ளன.

    இந்த நிலையில் அவ்வழியே சென்ற லாரி ஒன்று சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு மின் கம்பத்தின் மீது மோதி சென்று விட்டது.

    இதில் மின்கம்ப வயர்கள் திடீரென அறுந்து விழுந்தன. அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பட்டம்மாள் என்ப வர் மீது வயர்கள் விழுந்தன. மின்வயர் அறுந்ததும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

    மேலும் சாலையின் குறுக்கே மின் கம்பம் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் பொன்னேரி மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பீரோவில் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் நகை-பணம் இல்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பனப்பாக்கம், நெட்டித்தெருவை சேர்ந்தவர் சரோஜம்மாள் (வயது75). கணவரை இழந்த அவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு சரோஜா வழக்கம்போல் தூங்கினார். இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து இருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் நைசாக புகுந்து கொள்ளையன் ஒருவன் அங்குள்ள பீரோவை திறந்து நகை பணத்தை தேடினான்.

    ஆனால் பீரோவில் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் நகை-பணம் இல்லை. எனினும் அவன் அங்கிருந்த பொருட்களில் எங்காவது மறைத்து வைத்து இருக்கலாம் என்று நினைத்து தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டான்.

    இதற்கிடையே பொருட்கள் உருளும் சத்தம் கேட்டு எழுந்த மூதாட்டி சரோஜம்மாள், வீட்டுக்குள் கொள்ளையன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கொள்ளையனை கண்டதும் கூச்சலிட்டார். ஏற்கனவே கொள்ளையடிக்க விலை உயர்ந்த பொருட்கள் நகை-பணம் இல்லாததால் கொள்ளையன் கடும் கோபத்தில் இருந்தான். ஆத்திரம் அடைந்த அவன் மூதாட்டி சரோஜம்மாளை கத்தியை காட்டி மிரட்டினான். மேலும் கத்தக்கூடாது என்று கூறி சரோஜம்மாளை தாக்கினான். நகை, பணத்தை கொடுக்குமாறும் மிரட்டினான். ஆனால் சரோஜாம்மாள் தன்னிடம் நகை-பணம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த கொள்ளையன் 'எனது நேரத்தை வீணடித்து விட்டாய்' என்று கூறி சரோஜம்மாளின் முகத்தில் குத்தினான். மேலும் எச்சிலையும் துப்பியதாக தெரிகிறது.

    இதில் நிலைகுலைந்த சரோஜம்மாள் வலியால் துடித்தார். எனினும் வெறும் கையுடன் போக விரும்பாத கொள்ளையன் சரோஜம்மாள் விரலில் அணிந்து இருந்த சிறிய மோதிரத்தை கழற்ற முயன்றான்.

    ஆனால் அந்த மோதிரம் இறுகலாக இருந்ததால் அதுவும் வரவில்லை. இதனால் மூதாட்டி சரோஜம்மாள் வலியால் அலறி துடித்தார். ஆத்திரத்தின் உச்சம் அடைந்த கொள்ளையன் மோதிரத்தை பறிக்கும் முயற்சியையும் கைவிட்டு மீண்டும் சரோஜம்மாளை தாக்கிவிட்டு அங்கிருந்து ஏமாற்றத்துடன் தப்பி சென்றுவிட்டான். நீண்ட நேரத்துக்கு பின்னர் சரோஜம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து விசாரித்தனர். அப்போது தான் கொள்ளையன் புகுந்து அவரை தாக்கி இருப்பது தெரிந்தது. பலத்த காயம் அடைந்த சரோஜம்மாளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கஞ்சா விற்பனையை கண்டித்த ஒருவரை வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை வைத்து சிறுவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை கண்டித்த அப்பகுதியை சேர்ந்த ஒருவரை அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (30) என்பவரை கைது செய்தனர்.

    • செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • செல்வம் பாக்கெட்டில் விஷ பாட்டில் இருந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பெரிய எடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (58). கூலி தொழிலாளி. இவர் திருவள்ளூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஏரிக்கரையில் மயங்கி விழுந்து கிடந்தார்.

    உடனடியாக செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவரது பாக்கெட்டில் விஷ பாட்டில் இருந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    • சந்தேகப்படும் படியாக நின்ற 2 வாலிபர்களிடம் போலீசார் சோதனை செய்த போது கஞ்சா இருந்தது.
    • கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி பஸ் நிலையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற 2 வாலிபர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் திருத்தணியை அடுத்த சிவாடா காலனியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், தாழவேடு காலனியைச் சேர்ந்த தனுஷ் என்பது தெரிந்தது.

    கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • அரசு பஸ்சை இயக்க கோரி பொன்னேரி பஸ்நிலையம் அருகே புதிய தேரடி தெரு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்

    பொன்னேரி:

    பொன்னேரி பணிமனையில் இருந்து மொத்தம் 55 பஸ்கள் திருவள்ளூர், செங்குன்றம், கோயம்பேடு கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு சுண்ணாம்பு குளம், அண்ணாமலைச்சேரி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் நேற்று இரவு பொன்னேரி பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் அண்ணாமலைச்சேரி பகுதிக்கு செல்லும் அரசு பஸ்சுக்காக (எண்:90சி) காத்திருந்தனர்.

    ஆனால நீண்ட நேரமாக பஸ்கள் வரவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது சரிவர பதில் கூறவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் குறித்த நேரத்தில் அரசு பஸ்சை இயக்க கோரி பொன்னேரி பஸ்நிலையம் அருகே புதிய தேரடி தெரு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பஸ்டிரைவர் ஒருவர் கூறும்போது, 'பொன்னேரி பஸ்பணி மனையில் மொத்தம் 55 பஸ்கள் உள்ளன. இதனை இயக்குவதற்கு 110 டிரைவர்கள் தேவை. ஆனால் 90 டிரைவர்கள் மட்டுமே உள்ளனர்.

    இதனால் அதிகமாக வேலை பளு உள்ளது. பல வழித்தடங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன' என்றார்.

    ×