என் மலர்
திருவள்ளூர்
- கூவம் ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படவே தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது.
- தரைப்பாலத்தில் சேதம் அடைந்த ஒரு பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் சென்று வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட சத்தரை கண்டிகை வழியாக கொண்டஞ்சேரி செல்லும் திருவள்ளூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
இந்த பாலத்தை பயன்படுத்தி 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், தண்டலம், அரக்கோணம் சென்று வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சேதமடைந்த தரைப்பாலத்தை நெடுஞ்சாலைத் துறையினர் 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிகமாக சீரமைத்தனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த பருவ மழையால் கூவம் ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படவே, தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது.
இந்த தரைப்பாலத்தில் சேதம் அடைந்த ஒரு பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் சென்று வருகிறார்கள். இதனால் அவர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இனி மேலும் காலதாமதம் செய்யாமல் சத்தரை கூவம் ஆற்றின் குறுக்கே சேத மடைந்த தரைப்பாலத்தை முழுவதுமாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அம்பத்தூர் பகுதியில் கடந்த மாதம் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- கைதானவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் கடந்த மாதம் பிருந்தா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலமேலு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த கொள்ளை தொடர்பாக ரெட்டேரி லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், நரேந்திரன், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், சூர்யா, புதூர் பகுதியை சேர்ந்த அஸ்வின், அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சுகுனேஷ் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 8 பேரை கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்த 10 பவுன் நகை, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைக்க முயன்று தோல்வி அடைந்து உள்ளனர்.
- கோவில் அலுவலகத்தில் பணம் இருக்கலாம் என்று நினைத்து கதவு பூட்டை உடைக்க முயன்று இருக்கிறார்கள்.
அம்பத்தூர்:
அம்பத்தூர். திருவேங்கடம் நகர். முதல் தெருவில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது.நேற்று இரவு வழக்கம்போல் பூஜை முடிந்ததும் அர்ச்சகர் ரவி கோவில் கதவை பூட்டிச்சென்றார்.
இன்று அதிகாலை கோவிலுக்கு வந்த போது கோவில் நிர்வாக அலுவலகத்தின் கதவு தீப்பற்றி எரிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உண்டியலையும் உடைக்க முயற்சி நடந்து இருந்தது.
இதுகுறித்து அம்பத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் அலமேலு மற்றும் போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைக்க முயன்று தோல்வி அடைந்து உள்ளனர். இதனால் கோவில் அலுவலகத்தில் பணம் இருக்கலாம் என்று நினைத்து கதவு பூட்டை உடைக்க முயன்று இருக்கிறார்கள். அதுவும் நடக்காததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் விளக்கில் இருந்த தீபம் ஏற்ற பயன்படும் நெய்யை கதவின் மீது ஊற்றி தீ வைத்து எரித்து திறந்து உள்ளனர். பின்னர் அங்கிருந்த ரூ. 5 ஆயிரம ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக காட்சியை வைத்து போலீசார் கொள்ளையர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தி.மு.க. சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு விழா மற்றும் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம்.
- மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை:
சென்னை வடகிழக்கு மாவட்டம் புழல் ஒன்றிய தி.மு.க. சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு விழா மற்றும் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழன் பிரசன்னா, முரசொலி மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதிசரவணன், புழல் ஒன்றிய கழக அவைத்தலைவர் ர.செல்வமணி, துணை தலைவர் கலாவதி நந்தகுமார், செங்குன்றம் பே.செயலாளர் ஜி.ராஜேந்திரன், புழல் ஒன்றிய தலைவர் தங்கமணி திருமால், புழல் ஒன்றிய துணை தலைவர் சாந்தி பாஸ்கரன், புழல் ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேஸ்வரி எத்திராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சி.அற்புதராஜ், மூ.ரமேஷ், ஆர்.இ.ஆர்.விப்ரநாராயணன், ரா.ஏ.பாபு, பி.நந்த குமார், கபிலன், வடகரை விஜி, கமலக்கண்ணன், பா.மதிவாணன், குறிஞ்சி எஸ்.கணேசன், பி.ராமகிருஷ்ணன், புதுக்கராம், ஊராட்சி மன்ற தலைவர்கள், என்.ராமு, என்.ஜானகிராமன், ஆஷா கல்விநாதன், பி.சிவக்குமார், கே.கபிலன், மா.மணி, சி.ஏழுமலை, சி.தேவன், சி.மனோகரன், டி.அருணகிரி, ஜெ.முருகன், கலைவாணன், அரி, பிரபா, ராமச்சந்திரன், எ.தினேஷ், இ.ஞானசேகரன், பெ.எழிலன், பெ.கபிலன், ஜி.கே.இனியன், செ.யுவராஜ், என்.எம்.டி.இளங்கோவன், ஆர்.டி.சுரேந்தர், பாலசுப்பிரமணி, விளாங்காடுபாக்கம், ஊராட்சி கிளை செயலாளர்கள் டி.நித்தியானந்தம், வெ.பாரதி, ஜெ.தங்கராஜன், ஆர்.மல்லியார், ஜி.காமராஜ், வெ.கோவிந்தராஜ், பெ.பரிமள செல்வம், டி.நாகராஜ், சு.தனஞ்செழியன், எ.சீனு, எ.வி.அருண், எஸ்.ராமு, எம்.சதீஷ், ச.தனுஷ், நிலவழகி, இனியன், ரதி சீனிவாசன், கே.சத்தியசீலன், ஆனந்திநாகராஜன், தர்மி ரவி, ஏ.எல்.மாரி, அருணாதேவி சீனு, விளாங்காடுபாக்கம் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் கே.அப்பன்ராஜ், கு.இளவரசன், கே.அருள்மொழிவர்மன், திராவிட டில்லி, ஏ.பிரேமலதா, ஈஸ்வரி, செ.மதுரைமுத்து, கே.சேகர், ர.சுந்தரவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சுலோச்சனா தான் அணிந்து இருந்த 11 சவரன் செயினை கழற்றி மணிபர்சில் வைத்தார்.
- திடீரென மர்மநபர்கள் சுலோச்சனாவிடம் இருந்த பர்சை பறித்து சென்று விட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் வரதராஜன் தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி சுலோச்சனா. இவர் தாம்பரத்தில் உள்ள வீட்டுக்கு சென்றுவிட்டு பஸ் மூலம் மணவாளநகர் வந்து இறங்கினார். பின்னர் அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்மநபர்களில் ஒருவன் சுலோச்சனாவிடம் பேச்சுக் கொடுத்தார். செல்லும் போது செயினை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதையடுத்து சுலோச்சனா தான் அணிந்து இருந்த 11 சவரன் செயினை கழற்றி மணிபர்சில் வைத்தார். அப்போது திடீரென மர்மநபர்கள் சுலோச்சனாவிடம் இருந்த பர்சை பறித்து சென்று விட்டனர். இது குறித்து மணவாள நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
- மல்லைய சுவாமிக்கு பொதுமக்கள் காரனோடை கொசஸ்தலை ஆற்றின் அருகில் ஜீவசமாதி அமைத்து வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
- மல்லைய சுவாமிகள் ஜீவசமாதி கருவறை அருகில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு அருகில் திடீரென நல்ல பாம்பு ஒன்று சென்றது.
பொன்னேரி:
காரனோடை அருகே ஸ்ரீ ஸ்ரீ மல்லைய சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றி வந்த மல்லைய சுவாமிகள் மண்ணை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
கடைசியாக அவர் இறப்பதற்கு ஒன்பது நாளைக்கு முன்பாக தான் ஜீவசமாதி அடையப்போவதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து மல்லைய சுவாமிக்கு பொதுமக்கள் காரனோடை கொசஸ்தலை ஆற்றின் அருகில் ஜீவசமாதி அமைத்து வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் குருபூஜை நாள் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். இங்கு வந்தால் மன அமைதி ஏற்படுவதாகவும், செல்வம் பெருகும். தீராத பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு மல்லைய சுவாமிகள் ஜீவசமாதி கருவறை அருகில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு அருகில் திடீரென நல்ல பாம்பு ஒன்று சென்றது. அது அங்கு நின்றபடி படம் எடுத்து ஆடியது.
இதனை கண்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள், பரவசமடைந்து வணங்கினர். இதுபற்றி அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கோயில் ஊழியர்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் இயற்கை ஆர்வலரான இளம்பெண் ஹரிணிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அதனை அருகே உள்ள வனப்பகுதியில் விட்டார்.
- 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய நடத்தப்பட்டது.
- அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடந்தது.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜபெருமான் திருநடனம் புரிந்த 5 சபைகளில் முதல் (ரத்தின) சபையாக திகழ்கிறது.
இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா பத்துநாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம்.
அதன்படி விழாவின் 9-வது நாளான நேற்று மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு ரத்தின சபாபதி பெருமான் பழைய ஆருத்ரா அபிஷேக மண்டபத்தில் விபூதி அபிஷேகத்துடன் எழுந்தருளினார்.
பின்னர், நடராஜருக்கு, கதம்பத்தூள், நெல்லிப் பொடி, வில்வப் பொடி, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என மொத்தம் 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய நடத்தப்பட்டது.
பின்னர் இன்று அதிகாலை சுவாமிக்கு சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடந்தது. பகல் 12 மணிக்கு அனுக்கிரக தரிசனம் நடைபெற்றது.
ஆருத்ரா தரிசன விழாவில் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். நாளை காலை 8.45 மணிக்கு, சாந்தி அபிஷேகம் நடை பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடு களை முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, தக்கார் ஆகியோர் செய்தி ருந்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் மச்ச அவதாரத்தில் சிவனை வழிபட்டதாக வரலாறு.
ஆருத்ராதரிசன விழாவையொட்டி 9 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48 வகை வாசனை திரவியங்கள், 23 வகைபழ வகைகள், பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் மற்றும் மலர்கள் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு அபிஷேம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அச்சரைப் பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆருத்தார தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடராஜ பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 36 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றன.
கோவில் சிவாச்சாரியார் சங்கர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்தி ரங்கள் முழங்க, மேளதாளங்களுடன் சிறப்பு ஆராதனை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து நடராஜ பெருமானும், சிவகாம சுந்தரியும் கோவிலின் உள் பிரகார வளாகத்தில் வலம் வந்தனர். பின்னர் சூரிய பிரபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மாட வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
- திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மெல்கி ராஜா சிங், மாவட்ட தலைவர் ஜம்பு ஆகியோர் தலைமை தாங்கினர்.
திருவள்ளூர்:
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மற்றும் நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மெல்கி ராஜா சிங், மாவட்ட தலைவர் ஜம்பு ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநில துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சீ.காந்திமதிநாதன் வரவேற்றார்.
இதில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஞானசேகரன், எஸ்.பிரபாகரன், மாநில சட்டச்செயலாளர் ஆர்.குப்புசாமி மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவர்கள் கற்றுக் கொண்ட பரதநாட்டிய நடனத்தை தங்களது பெற்றோர்கள் முன்பு அரங்கேற்றினர்.
- பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஓம்கார பரதநாட்டிய பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக பரதநாட்டிய கலையை நாட்டிய ரத்தினம் பிரதீஸ் சிவானந்தன், நடன பூசனம் ஷீபா பிரதீஷ் ஆகியோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பாக கற்பித்து வருகின்றனர்.
200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று சலங்கை பூஜை அரங்கேற்றிய நிலையில், பரதநாட்டிய பள்ளியின் 15ஆவது சலங்கை பூஜை பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் பயின்ற புஷ்பாஞ்சலி அலாரிப்பு, கவுத்துவம், ஜதீஸ்வரம், குச்சிப்புடி ஆகிய நடனங்களை சலங்கை ஒலி பூஜையாக நிறைவேற்றினார்கள். பள்ளி மாணவர்கள் கற்றுக் கொண்ட பரதநாட்டிய நடனத்தை தங்களது பெற்றோர்கள் முன்பு அரங்கேற்றினர்.
விழாவில் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டினார். 19ஆவது வார்டு நகர்மன்ற கவுன்சிலர் நல்ல சிவம் வழக்கறிஞர் ஸ்ரீதர் பாபு மற்றும் மாணவர்கள் பிரகாஷ் தீக்க்ஷா, துவானி, ஜோஸ்லின் ரெய்னா, ஜெஸ்மிதா, காவேரி, மோனிகா, ரித்திதா ஸ்ரீ, நிவிதா, ரிஷிதா ஸ்ரீ, ராகவி, சிந்துஜா, வணிஸ்கா ஸ்ரீ, மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் பலர் பங்கேற்றனர்.
- திருநின்றவூர், மாதவ வேணுகோபால் தெருவில் தனியாக வசித்து வருபவர் அகிலாண்டேஸ்வரி.
- நேற்று இரவு அகிலாண்டேஸ்வரி வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து அகிலாண்டேஸ்வரியை கத்திமுனையில் மிரட்டினர்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் சந்திரலேகா. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 3 வாலிபர்கள் திடீரென புகுந்தனர். அவர்கள் சந்திரலேகாவை கத்தி முனையில் மிரட்டி நகை-பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
திருநின்றவூர், மாதவ வேணுகோபால் தெருவில் தனியாக வசித்து வருபவர் அகிலாண்டேஸ்வரி(65). நேற்று இரவு அவர் வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து அகிலாண்டேஸ்வரியை கத்திமுனையில் மிரட்டினர்.
வீட்டில் நகை-பணம் இல்லாததால் அகிலாண்டேஸ்வரி அணிந்து இருந்த கம்மல், மூக்குத்தி, வளையலை பறித்து கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்தும் குறைந்த அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23 அடியை நெருங்கி உள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளில் மொத்தம் 11. 757 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
இதில் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி நவம்பர் 28-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வந்தது. இதனிடையே வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.
இதேபோல் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்தும் குறைந்த அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் பூண்டி ஏரி அதன் முழு கொள்ளவான 35 அடி முழுவதும் நிரம்பி உள்ளது.
ஏரியில் முழுகொள்ளளவான 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 480 கன அடி வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க முடியாது என்பதால் ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம், மதகுகள் வழியாகவும், கொசஸ்தலை ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 200 கன அடியும் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23 அடியை நெருங்கி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 22.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
இதேபோல் புழல் ஏரியின் நீர்மட்டமும் மொத்த உயரமான 21 அடியில் 19.80 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளிலும் வரும் நாட்களில் பூண்டி ஏரியில் இருந்து அனுப்பப்படும் தண்ணீரை சேமித்து வைக்கமுடியாத நிலை உள்ளது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டு உள்ள கிருஷ்ணா தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். எனவே பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு விரைவில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளிலும் தற்போது மொத்த கொள்ளளவில் 92 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்யமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- நாளை அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெறுகிறது.
- இன்று இரவு 9 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கிறது.
- 7-ந்தேதி காலை 8.45 மணிக்கு சாந்தி அபிஷேகம் நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் சிவபெருமான் திருநடனமாடிய 5 திருச்சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது.
காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து பாடிய தலமாகவும் விளங்குகிறது.
மார்கழி மாதம் திருவா திரை நட்சத்திரத்தில் இக்கோவிலில் ஆருத்ரா விழா விமரிசையாக நடைபெறும். நடராஜ பெருமானின் 6 அபிஷேகங்களில் ஆருத்ரா அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தலத்தில் நடராஜரின் திருமேனியில் விளாம்பழம் சார்த்தப்பட்டு அதன்மீது சிவப்பு வண்ணத்தில் உள்ள மாதுளை முத்துக்கள் சார்த்தப்படும்.
அதை பார்க்கும்போது நடராஜர் மீது ரத்தின கற்கள் பதித்திருப்பதுபோல் இருக்கும். ரத்தின சபாபதி பெருமானுக்கு இரவு 9 மணிக்கு அபிஷேகம் தொடங்கி அதிகாலை 4 மணி வரை அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.
ஆருத்ரா வைபவத்தில் நடராஜர் மும்முறை தனி வலம் வருவது அனுக்கிரக தரிசனம் எனப்படும். அந்த தருணத்தில் வானத்தில் கருடன் வட்டமிடும் என்பது ஐதீகம். பின்னர் ராஜகோபுர பிரகாரத்தை வலம் வந்து ஆருத்ரா மண்டபத்தின் அருகே தனது ரத்தின சபையை பார்த்தவாறு நிற்பார்.
தீபாராதனையை ஏற்றுக் கொண்டு பிறகு ஆலமர பிரகார வலம் மீண்டும் ஆருத்ரா மண்டபத்துக்கு வந்து எதிரே திருக்கண்ணாவுக்கு முன்பாக உள்ள நந்தி தேவரை பார்த்தவாறு ரத்தின சபைக்கு செல்வார். அங்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை நடைபெறும்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் அகிய 5 தொழில்களை நடராஜ பெருமான் புரிவதை இந்த ஆருத்ரா தரிசனம் கொண்டுள்ளது. நடராஜர் ஆருத்ரா மண்டபத் தில் எழுந்தருள்வது படைத்தலை குறிக்கும். ஒவ்வொரு அபிஷேகத் திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அந்தந்த அபிஷே கத்தை ஏற்றுக் கொண்டு அதற்குரிய பலனை கொடுப் பது நம்மை காத்தலை குறிக்கும். நடராஜர் கோபுர தரிசனம் முடிந்து திருக்கண் அறிந்த விநாயகர் ஆலயம் சென்று தீபாராதனையை ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி அழித்தலை குறிக்கும். அதாவது பக்தர்களின் பாவங்கள் மற்றும் துன்பங்களை அழிக்கிறார்.
ஆருத்ரா தினத்தன்று ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களின் பாவங்களை இறைவன் பஸ்மமாக்குகிறார். பஸ்மமாக்கிய பொருளே மையாகிறது. அந்த மையையே திருச்சாந்து பிரசாதமாக தருகிறார்கள்.
இறைவனின் திருவருளை நாடி வரும் பக்தர்களின் பாவங்களை 'வெள்ளை சாத்துபடி' என்னும் வைபவத்தின் மூலம் நீக்கி அவர்களை வெள்ளை மனதுடன் திகழ வைக்கிறார். இதுவே மறைத்தல் ஆகும். திருவீதி உலா முடிந்து முஞ்சிகேஸ்வர தரிசனம் ஆகும்போது அனுக்கிரகம் தருவதே அருளல் ஆகும். அனுக்கிரக தரிசனத்தின் போது பக்தர்கள் வேண்டுவதை அளித்து அருள்பாலிக்கிறார்.
திருவாலங்காடு வடாரண் யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா விழா இன்று நடக்கிறது. ஆருத்ரா விழாவையொட்டி கோவிலில் உள்ள தல விருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் இன்று இரவு 9 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கிறது.
இந்த சிறப்பு அபிஷேகம் பால், தேன், வில்வப்பொடி, வாழை, பலா, பூக்கள் உள்ளிட்ட 41 வகை பொருட்களால் விடிய விடிய நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து நாளை (6-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு அனுக்கிரக தரிசனம் நடக்கிறது. வருகிற 7-ந்தேதி காலை 8.45 மணிக்கு சாந்தி அபிஷேகம் நடக்கிறது.






