என் மலர்
திருவள்ளூர்
- மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி பரிதாபமாக சிறுவன் பலியானான்.
- பலியான சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ். இவரது குடும்பம் மற்றும் உறவினர்களின் குடும்பம் என மொத்தம் நான்கு குடும்பத்தினர் நேற்று முன்தினம் பெரியபாளையம் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த வந்தனர்.
இதனால் இவர்கள் கோவிலுக்கு எதிரே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தங்கி இருந்தனர். நேற்று சுவாமி தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
இந்நிலையில், நேற்று மாலை இவர்கள் தங்கியிருந்த விடுதியின் காம்பவுண்ட் சுவர் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த விடுதியில் இருந்த காம்பவுண்டின் இரும்பு கேட் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் 5ம் வகுப்பு படித்து வந்த நித்திஷ் (வயது10) என்ற சிறுவன் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது.
இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சிறுவன் நித்திஷ் உயிருக்கு போராடினான். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி பரிதாபமாக சிறுவன் பலியானான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், பலியான சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த தனியார் தங்கும் விடுதி காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரிக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ் குடும்பத்தினர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
நேர்த்தி கடனை செலுத்த கோவிலுக்கு வந்த குடும்பத்தினரின் சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் பெரியபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- காரில் மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
- குற்றவாளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வருவதாக பெரியபாளையம் மதுவிலக்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிகாவுக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் ஊத்துக்கோட்டை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை நோக்கி சந்தேகத்திற்கு இடமாக வந்த சொகுசு காரை போலீசார் ஊத்துக்கோட்டை செக்போஸ்ட் அருகே மடக்கி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரில் மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மும்பையை சேர்ந்த சூர்யா என்கிற சுரேஷ் (வயது35), சென்னை முகப்பேரை சேர்ந்த கோபி (வயது22 ) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், குற்றவாளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
- பருத்தி சூதாட்டம் நடைபெறுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
- சந்தேகத்துக்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் பருத்தி சூதாட்டம் நடைபெறுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில்,நேற்று ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் ஆரணி பஜார் வீதியில் ரோந்து பணியை மேற்கொண்டனர்.
அப்பொழுது சந்தேகத்துக்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.எனவே, போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.பின்னர்,அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆரம்பாக்கம்,பாரதியார் தெருவை சேர்ந்த நாகராஜ்(வயது32) என்று தெரியவந்தது. மேலும், அவரிடம் ரொக்கப்பணம் ரூ.320 மற்றும் வெள்ளை பேப்பர்கள் 10 உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும்,அவர் பருத்தி என்னும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். எனவே அவரை கைது செய்து
காவல் நிலையம் கொண்டு வந்தனர்.பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர். மேலும், அவரது உத்தரவின் பேரில் குற்றவாளியை போலீசார் பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
- கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
- வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பஜார் வீதி உள்ள கடைகளில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தொடர்ந்து திருடி வருகின்றனர்.
கடந்த வாரம் கருப்புசாமி நாடார் மளிகை கடை,சபரி பேன்சி ஸ்டோர், ரத்னா ஸ்டோர்ஸ் ஆகிய கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தனர். மேலும்,ஏகாம்பரம் மளிகை கடையில் பூட்டை உடைத்து ரொக்க பணம் ரூ.50,000- கொள்ளையடிக்கப்பட்டது.
இந்நிலையில்,நேற்று பஜார் வீதியில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோர் பூட்டை மர்ம நபர்கள் நள்ளிரவில் உடைக்கும் போது எதிர் வீட்டில் இருக்கும் துணிக்கடை வியாபாரி திருடன்,திருடன் என்று கூக்குரல் இட்டார்.இதனால் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், முனிரத்தினம் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில்,வியாபாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பஜனை கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி விரைந்து வந்து வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். வியாபாரிகளின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதனால் வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சனையால் நேற்று காலை முதல் மதியம் வரையில் இப்பகுதியில் பதட்டமும்,பரபரப்பும் நிலவியது.
- லைலா தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்க கம்மல், கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயின் ஆகியவற்றை கழற்றி இளம்பெண்ணிடம் கொடுத்தார்.
- சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற இளம் பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லைலா (65). விதவையான இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஆவார். இவர் தற்போது அதே பகுதியில் உள்ள நூலகத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் லைலா நூலகம் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டி லைலாவிடம் பேச்சுகொடுத்தார். நூலகம் இருக்கும் இடம் வழியாக செல்வதாகவும், வண்டியில் ஏறும்படியும் கூறினார். இதனால் லைலா இளம் பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றதும் டிப்-டாப் இளம் பெண், மூதாட்டி லைலாவிடம் மீண்டும் பேச்சு கொடுத்தார். நீங்கள் அணிந்திருக்கும் கம்மல் நன்றாக உள்ளது. எனக்கு கொடுத்தால் அணிந்து கொண்டு போட்டோ எடுத்து திருப்பிக் கொடுத்து விடுகின்றேன் என்று கூறினார்.
இதை நம்பிய லைலா தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்க கம்மல், கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயின் ஆகியவற்றை கழற்றி இளம்பெண்ணிடம் கொடுத்தார்.
அதனை அணிந்த இளம்பெண் திடீரென மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றுவிட்டார். இதனால் மூதாட்டி லைலா அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பென்னலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற டிப்-டாப் இளம் பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ராஜேஷ் மோட்டார் சைக்கிளுடன் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பத்தூர்:
விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது25). புதூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு அவர் பணி முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். கொரட்டூர் கருக்கு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி முந்தி செல்ல முயன்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய ராஜேஷ் மோட்டார் சைக்கிளுடன் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
விபத்தில் சிக்கி ராஜேஷ் பலியாகி கிடந்த போது அவரது செல்போனை அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் திருடி சென்றதாக தெரிகிறது.
இதனால் அவரை அடையாளம் காண்பதிலும், உறவினர்களுக்கு தகவல் கொடுப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பொன்னேரியை அடுத்த மெதுர் ஊராட்சிக்குட்பட்ட காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
- கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது.
பொன்னேரியை அடுத்த மெதுர் ஊராட்சிக்குட்பட்ட காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடந்த சில நாட்களாக மீனவர்களிடையே மீன் பிடித் தொழில் செய்வதில் மோதல் ஏற்பட்டு வருகிறது.
- மீன்பிடிப்பதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்துவருவதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
பழவேற்காட்டை சுற்றி உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் பழவேற்காடு ஏரி மற்றும் கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக மீனவர்களிடையே மீன் பிடித் தொழில் செய்வதில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் பழவேற்காட்டில் உள்ள மீன் ஏலக் கூடத்துக்கு விற்பனைக்கு வரும் மீன்கள் வரத்து பெருமளவு குறைந்து விட்டது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று பழவேற்காடு மீன்சந்தையில் வழக்கமான மீன்விற்பனை இல்லை. குறைந்த அளவே மீன்கள் விற்பனைக்கு வந்ததால் மீன்சந்தை களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.
பெரிய வகை மீன்கள் அதிக அளவில் வராததால் விற்பனைக்கு இருந்த சிறிய வகை மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்து இருந்தது.
ரூ.200-க்கு விற்கப்பட்ட இறால் இன்று காலை ரூ.500 வரை விற்கப்பட்டது. இதேபோல் ரூ.300-க்கு விற்ற நண்டு ரூ. 800 வரை விற்பனை ஆனது.
ரூ.500-க்கு விற்ற வஞ்சிரம் ரூ.1000 வரையிலும், ரூ.100-க்கு விற்ற மத்தி ரூ.300-க்கும், கானங்கத்தை ரூ. 500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, பழவேற்காடு பகுதியில் மீன்பிடிப்பதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்துவருவதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விற்பனைக்கு மீன்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது என்றனர்.
- கடலில் பயன்படுத்தும் வலையை பழவேற்காடு ஏரியில் பயன்படுத்தக் கூடாது.
- இரு தரப்பினரும் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பொன்னேரி:
பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மீனவர்களுக்கும், நடுவூர் மாதா குப்பம், ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம் மீனவர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது.
கடலில் மீன் பிடிக்கும் கூனங்குப்பம் மீனவர்கள் ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்பட வில்லை.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடலில் பயன்படுத்தும் வலையை பழவேற்காடு ஏரியில் பயன்படுத்தக் கூடாது எனவும், பாரம்பரிய ஒதுக்கீடு பகுதியில் மட்டுமே மீன்பிடிக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார். இதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இருதரப்பு மீனவர்களிடையேயும் இன்னும் சுமூகமான முடிவு வர வில்லை.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழவேற்காடு ஏரியில் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, கூனங்குப்பம் மீனவர்களும் அங்கு மீன்பிடித்ததாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதுகுறித்து இரு தரப்பினரும் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே பழவேற்காடு ஏரியில் கோட்டைக்குப்பம் மீனவர்கள் நேற்று மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஏரியின் ஓரக்கரைபாடு எனப்படும் இடத்தில் கூனங்குப்பம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் அந்த பகுதியை தாண்டி வலையை வீசியதாக கூறி கோட்டைக்குப்பம் மீனவர்களுக்கும், கூனங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் அங்கு வந்தனர். அவர்களுக்கும் கூனங்குப்பம் மீனவர்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் நடுவூர் மாதா குப்பத்தை சேர்ந்த ராபர்ட், சந்தியாகிராஜ், சகாயராஜ், மார்டீன், ஆரோக்கியராஜ், பாலு, சாலமன் ஆகிய 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் 5 பேர்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீனவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதட்ட மானநிலை ஏற்பட்டு உள்ளது. பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியா சக்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மோதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி நேற்று இரவு கோட்டைக்குப்பம், நடுவூர்மாதா குப்பத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பழவேற்காடு பஸ்நிலையம் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க பழவேற்காட்டில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- பள்ளி முடிந்ததும் மாணவர்கள் கூட்டமாக அருகில் உள்ள பஸ்நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
- திருத்தணி போலீசார் விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர்:
திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகை பகுதியில் அரசினர் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்கள் கூட்டமாக அருகில் உள்ள பஸ்நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பு மாணவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
அப்போது வாலிபர் சிலரும் மற்றொரு மாணவர்களுக்கு ஆதரவாக கையில் கம்புடன் வந்து தாக்கினர். இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள பகுதியிலேயே மாணவர்கள் கோஷ்டிகளாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவர்கள் மோதிக் கொண்ட காட்சியை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக திருத்தணி போலீசார் விசாரணை நடத்தினர். வீடியோ காட்சியை வைத்து மோதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் மோதலுக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
- வேண்பாக்கம் துணை மின் நிலையம் அருகே மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது
பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம் துணை மின் நிலையம் அருகே மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (31). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 3-ந் தேதி தினேஷ் வீட்டை பூட்டிவிட்டு தனது தாயுடன் மைசூர் சென்றார்.
பின்னர் நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து அரை பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது.
மேலும் 3 லேப்டாப், ஒரு செல்போனும் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து தினேஷ் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






