என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • போதைப் பொருட்கள் உட்கொண்டால் உடல்நிலை சீர்கெடுவது மட்டுமின்றி ஆயுள் காலம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
    • மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்துக்கு ஆளாக கூடாது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் உட்கொண்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்ச் செல்வம் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் உட்கொண்டால் உடல்நிலை சீர்கெடுவது மட்டுமின்றி ஆயுள் காலம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    எனவே மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்துக்கு ஆளாக கூடாது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். யாராவது கஞ்சா போன்ற போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்தால் 9444005105 செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்போரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். மேலும் தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

    இவ்வாறு இன்ஸ்பெக்டர் ஏழுமலை தெரிவித்தார்.

    • போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.
    • புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    போகிப்பண்டிகையன்று பழைய சிந்தனைகளையும், செயல்களையும் தவிர்த்து, புதிய சிந்தனைகள் மற்றும் செயல்திட்டங்களை தொடங்க வேண்டும் என்ற நோக்கில், பழையன கழிதலும், புதியன புகுதலுமென நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.

    இத்தகைய பழக்கம் பெரும் நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் வேறுவிதமாக கடைபிடிக்கப்பட்டு, போகியன்று தங்களிடமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை எரிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இத்தகைய புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளன. இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) போகித் திருநாளில், நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எந்திரத்தை பொதுமக்கள் பயன்படுத்தி மஞ்சப்பையை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
    • பொது மக்களுக்கு மஞ்சப் பை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவர் வழங்கினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் முதன் முறையாக மஞ்சப்பை வழங்கும் எந்திரம் கலெக்டர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    மேலும் திருவள்ளூர் பஸ் நிலையம், ஆவடி பஸ் நிலையம், பொன்னேரி பஸ் நிலையம், திருத்தணி முருகன் கோயில் ஆகிய இடங்களிலும் மஞ்சப்பை விற்பனை எந்திரத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மஞ்சப்பை விற்பனை எந்திரத்தை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். இதில் ரூ.10 செலுத்தி மஞ்சப்பையை பெற்றுக்கொள்ளலாம்.

    இதில் புதிய ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் கூறும்போது, 'ஒரு முறை பயன்படுத்தி தூக்கிய எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எளிதில் மக்கும் தன்மையுடைய இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களான துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.

    இந்த எந்திரத்தை பொதுமக்கள் பயன்படுத்தி மஞ்சப்பையை பெற்றுக் கொள்ளலாம் என்றார். இதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு மஞ்சப் பை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி, சுகாதார அலுவலர் கே.ஆர்.கோவிந்தரா ஜூலு, சுகாதார ஆய்வாளர் வெயில்முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • விடுதியில் இருந்த காம்பவுண்டின் இரும்பு கேட் கண்ணிமைக்கும் நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த நித்திஷ் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது.
    • விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ் குடும்பத்தினர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

    பெரியபாளையம்:

    சென்னை அயனாவரத்தில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆவார். இவரது குடும்பம் மற்றும் உறவினர்களின் குடும்பம் என மொத்தம் நான்கு குடும்பத்தினர் சனிக்கிழமை மாலை பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த வந்தனர். இவர்கள் கோவிலுக்கு எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தங்கினர். ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

    அன்று மாலை அவர்கள் தங்கியிருந்த விடுதியின் காம்பவுண்ட் சுவர் அருகே ரமேஷ் குடும்பத்தைச்சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த விடுதியில் இருந்த காம்பவுண்டின் இரும்பு கேட் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவரான நித்திஷ் (10) என்பவன் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் நித்திஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பலியான சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ் குடும்பத்தினர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். திங்கட்கிழமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சாலை ரமேஷ் குடும்பத்தினர் நித்திஷ் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் தனியார் விடுதியை குத்தகைக்கு எடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் பெரியப்பாளையம், அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜசேகர் (45) என்பவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து செய்தனர். மேலும் அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    • பொன்னேரியில் அபிநய நாட்டியக்கூடத்தின் எட்டாம் ஆண்டுவிழா மற்றும் பரதம் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • இசைக்கலைமணி ஷோபனா முத்தையா ஆகியோர் பரதத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியில் அபிநய நாட்டியக்கூடத்தின் எட்டாம் ஆண்டுவிழா மற்றும் பரதம் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நாட்டியக்கூட ஆசிரியர் ஜெயந்தி சிவா தலைமை தாங்கினார்.

     இவ்விழாவில் பரதநாட்டியம் பயின்ற மாணவிகள் சுதி லயத்துடன் வித வித முகபாவனைகளுடன் நளினமுடன் அசத்தலாக  பரதநாட்டியம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    இதனை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள் நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன்,  நாட்டிய மயூரி விஜயலட்சுமி பிரகாஷ், இசைக்கலைமணி ஷோபனா முத்தையா ஆகியோர் பரதத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து இப்பள்ளியில் பரதநாட்டியம் பயின்று நிறைவுசெய்த 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் பட்டம் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டனர். இவ்விழாவில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போதை பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.

    தண்டையார்பேட்டை பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட மாவா மற்றும் போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வடிவேல் மற்றும் போலீசார் ஸ்ரீரங்கம்மாள் தெருவில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தினர்.

    அங்கு போதைபாக்கு, ஆயிரம் கிலோ மாவா மற்றும் அதனை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் இருந்தது. இதையடுத்து வண்ணாரப்பேட்டையை சேரந்த புனிதா,கொடுங்கையூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.

    • மாணவர் பாலாஜி பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை வீட்டில் போலீசார் கைப்பற்றினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் பாலாஜி(வயது17). தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை விஜயன் தனது மனைவியுடன் பொங்கல் பண்டிகைக்காக ஜவுளி எடுக்க வெளியில் சென்று விட்டார். வீட்டில் பாலாஜியும், அவரது தங்கையும் இருந்தனர்.

    இந்த நிலையில் அறைக்குள் சென்ற பாலாஜி நீண்டநேரம் ஆகியும் வெளியேவரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தங்கை பார்த்த போது பாலாஜி தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாலாஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஆவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் புருஷோத்தமன் விசாரணை நடத்தினார். மாணவர் பாலாஜி பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை வீட்டில் போலீசார் கைப்பற்றினர்.

    அதில் அவர், என்னை நீங்கள் நன்றாகத்தான் பார்துக்கொண்டீர்கள். நீங்கள் விரும்பும் படிப்பை எனக்கு படிக்க விருப்பமில்லை. என் வாழ்க்கை என் விருப்பப்படி இல்லை. தங்கையின் வாழ்க்கை யாவது அவளது விருப்பப்படி அமைய வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    மாணவர் பாலாஜி நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக வேறு ஒரு மேல் படிப்புக்கும் பாலாஜியை பெற்றோர் வற்புறுத்தி ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்து நிர்பந்தித்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்த நிலையில் பாலாஜி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மார்கழி மாதத்தில் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் மார்கழி மாதத்தின் அவசியம் குறித்து விளக்கினர்
    • 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மார்கழி மாதத்தின் மகத்துவத்தை போற்றும் வகையில் பஜனை பாடினர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, சிவன் கோயில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மார்கழி மாதத்தின் மகத்துவம் குறித்து பஞ்செட்டி ஸ்ரீ கோரண்ட்லா இராமலிங்கய்யா விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மார்கழி மாதத்தில் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் மார்கழி மாதத்தின் அவசியம் மற்றும் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஜனை பாடினர். மேலும், மார்கழி மாதத்தின் மகத்துவத்தை போற்றும் வகையில் மாணவர்கள் சிவன், பார்வதி ரங்கன் ஆண்டாள் வேடமிட்டு வந்திருந்தனர். மார்கழி மாதத்தின் சிறப்பு குறித்து உரை நிகழ்த்தினர்.

    • இரும்பு கதவு சிறுவன் நித்தீஷ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    சென்னை, அயனாவரம், ஹவுசிங் போர்டு பெரியார் சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். மனைவி துர்கா, மகன்கள் ஜீவா, நித்தீஷ் (வயது10) மற்றும் உறவினர்கள் 30 பேருடன் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

    அவர்கள் பெரியபாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். சாமி தரிசனம் முடிந்தவுடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

    அப்போது விடுதி அறையின் அருகே சிறுவன் நித்தீஸ் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அங்கிருந்த இரும்பு கதவு சிறுவன் நித்தீஷ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.

    இது குறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் இந்த வழக்கில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி பலியான நித்தீசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுவன் சாவில் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    திருவள்ளூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    • பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 19.92 அடிக்கு நிரம்பி உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 5 ஏரிகளில் மொத்தம் 10 ஆயிரத்து 911 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.8 சதவீதம் ஆகும்.

    வடகிழக்கு பருவமழை மற்றும் 'மாண்டஸ்' புயல் காரணமாக கொட்டிதீர்த்த கனமழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

    நீர் இருப்பு தொடர்ந்து அதிகரித்ததால் பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    இதற்கிடையே ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் முதல் தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கடந்த 30-ந் தேதி முழு கொள்ளளவான 3231 மி.கன.அடியை எட்டியது.

    பூண்டி ஏரியில் தண்ணீரை தொடர்ந்து தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அங்கிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளிலும் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் அங்கும் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கையும் அனுப்பினர்.

    ஆனால் தொடர்ந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் 703 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் 23 அடியை நெருங்கி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 22.98 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    ஏரிக்கு 246 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 130 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 19.92 அடிக்கு நிரம்பி உள்ளது. ஏரியில் 2996 மி.கன. அடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது (மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி). ஏரிக்கு 315 கன அடி தண்ணீர் வருகிறது. குடிநீர் தேவைக்காக 187 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் 831 மி.கன அடியும் (மொத்த கொள்ளளவு 1081 மி.கன அடி), கண்ணன்கோட்டை தேர்வாய கண்டிகை ஏரியில் 482 மி.கன அடியும் (மொத்த கொள்ளளவு 500 மி.கன. அடி) தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் வேகமாக மோதியது.
    • விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பூந்தமல்லி:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.

    இந்த கல்லூரியில் படிக்கும் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 30-பேருடன் கல்லூரி பஸ் இன்று காலை 8 மணி அளவில் குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் வேகமாக மோதியது.

    இதில் கல்லூரி பஸ்சின் முன்பகுதி நசுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அலறினர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த அனைவரும் குரோம்பேட்டை அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காயம் அடைந்த இரண்டு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • கொசஸ்தலை ஆற்றில் ராஜாவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.
    • மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் ஆந்திரா மாநிலம் தடாவில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பைனான்ஸ் மேனேஜராக வேலை செய்து வந்தார்.

    இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் நேற்று காரில் மீஞ்சூரில் உள்ள சீமாவரம் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர்கள் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி குளித்தனர்.

    நீண்ட தூரம் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற ராஜா தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தேடியும் கண்டு பிடிக்க முடிய வில்லை.

    இது குறித்து செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேடியும் ராஜாவை கண்டுபிடிக்க முடிய வில்லை. இரவு ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்றுகாலை கொசஸ்தலை ஆற்றில் ராஜாவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    ×