என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி சென்னை வாலிபர் பலி
- கொசஸ்தலை ஆற்றில் ராஜாவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.
- மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் ஆந்திரா மாநிலம் தடாவில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பைனான்ஸ் மேனேஜராக வேலை செய்து வந்தார்.
இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் நேற்று காரில் மீஞ்சூரில் உள்ள சீமாவரம் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர்கள் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி குளித்தனர்.
நீண்ட தூரம் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற ராஜா தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தேடியும் கண்டு பிடிக்க முடிய வில்லை.
இது குறித்து செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேடியும் ராஜாவை கண்டுபிடிக்க முடிய வில்லை. இரவு ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்றுகாலை கொசஸ்தலை ஆற்றில் ராஜாவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.






