என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே பஸ்நிலையத்தில் மாணவர்கள் கோஷ்டி மோதல்
- பள்ளி முடிந்ததும் மாணவர்கள் கூட்டமாக அருகில் உள்ள பஸ்நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
- திருத்தணி போலீசார் விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர்:
திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகை பகுதியில் அரசினர் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்கள் கூட்டமாக அருகில் உள்ள பஸ்நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பு மாணவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
அப்போது வாலிபர் சிலரும் மற்றொரு மாணவர்களுக்கு ஆதரவாக கையில் கம்புடன் வந்து தாக்கினர். இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள பகுதியிலேயே மாணவர்கள் கோஷ்டிகளாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவர்கள் மோதிக் கொண்ட காட்சியை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக திருத்தணி போலீசார் விசாரணை நடத்தினர். வீடியோ காட்சியை வைத்து மோதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் மோதலுக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.






