என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • 3 டன் எடையுள்ள எண்ணை பாக்கெட்டுகள் சாலையில் சிதறி கிடந்தன.
    • வேனை ஓட்டி வந்த டிரைவர் ஆரூணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    திருவொற்றியூர்:

    பெரியபாளையத்தில் இருந்து மயிலாப்பூருக்கு தனியார் கம்பெனி வேனில் சமையல் எண்ணை பாக்கெட்டை ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலத்தில் செல்லும் பொழுது வேன் பழுதடைந்து திடீரென்று ஸ்டான்லி மருத்துவமனை அருகே மேம்பாலத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

    அதில் ஏற்றிக் கொண்டு வந்த 3 டன் எடையுள்ள எண்ணை பாக்கெட்டுகள் சாலையில் சிதறி கிடந்தன. வேனை ஓட்டி வந்த டிரைவர் ஆரூணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவருடன் வந்த கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போக்குவரத்து போலீசார் கிரேன் மூலம் வேனை அப்புறப்படுத்தினர்.

    • தினேஷ் பணம் தர மறுத்துள்ளார். இதனால் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் 400 ரூபாய் பணத்தை பறித்து சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு ரவுடி வெங்கடேசன் என்ற சொனிட்டி காவை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தினேஷ் (18) இவர் பட்டரை சாலையில் டீக்கடைக்கு நடந்து சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி வெங்கடேசன் (எ) சொனிட்டிகா (25) என்பவர் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

    தினேஷ் பணம் தர மறுத்துள்ளார். இதனால் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் 400 ரூபாய் பணத்தை பறித்து சென்றார்.

    இது குறித்து தினேஷ் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ரவுடி வெங்கடேசன் என்ற சொனிட்டி காவை கைது செய்தனர்.

    • மேகநாதன் தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் ரோஜா செடிக்களை வளர்த்து வருகிறார்.
    • வயலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் மேகநாதன் வயலுக்கு சென்று பார்த்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, பொம்மராஜுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 55) விவசாயி. இவரது மனைவி துளசி (50). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ள நிலையில் மகள்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து அவரவர்கள் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

    மகன் கல்லூரியில் படித்து வருகிறார். மேகநாதன் தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் ரோஜா செடிக்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் தோட்டத்திற்குள் நுழைவதை தடுக்க மின் வேலி அமைத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் தோட்டத்தில் ரோஜா பூக்களை பறித்து வருவதற்காக நேற்று காலை துளசி தனியாக தோட்டத்திற்கு வந்தார். அப்போது கணவன் அமைத்த மின்வேலியில் அவர் சிக்கி உடலில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    வயலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் மேகநாதன் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு மனைவி துளசி மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் அமைத்த மின்வேலியில் தனது மனைவியே சிக்கி இறந்து விட்டாரே என மன உளைச்சலில் தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட கிராமத்தினர் இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கணவன்-மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்ணின் எலும்புக் கூடு கிடப்பது குறித்து கிராம நிர்வாக அதிகாரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மதுரைவாசல் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் ஒரு பெண் எரித்து கொலை செய்யப்பட்டு எலும்பு கூடாக கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி வேலாயுதத்துக்கு தகவல் கிடைத்தது. எனவே, இது குறித்து அவர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே, பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தடய அறிவியல் நிபுணர்கள் விரைந்து சென்று அப்பெண் அணிந்திருந்த கால் மெட்டி, வளையல் உள்ளிட்டவைகளையும், தடயங்களையும் சேகரித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தில் சமீபத்தில் யாராவது காணாமல் போனதாக புகார் வந்ததா? எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறுதி சடங்கிற்கு பணம் இல்லாததால் ஏரியில் போட்டு எரித்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

    மீட்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூட்டை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காக்களூர் பகுதி மக்களுக்கு அருகில் உள்ள மற்றொரு சுடுகாட்டை பயன்படுத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • காக்களூர் பகுதி மக்கள் தங்களுக்கு தனியாக சுடுகாடு நிலம் ஒதுக்கி தரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர்.

    திருவள்ளூர்:

    திருப்பதியில் இருந்து நெமிலிச்சேரி வரை ரூ.364 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைய உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த சாலை திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் பொது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுடுகாடு வழியாக செல்கிறது. இதையடுத்து அந்த சுடுகாடு நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    அந்த இடத்தில் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது சுடுகாடு இருந்த இடத்தில் இருந்த செடிகள் முழுவதும் அகற்றப்பட்டு உள்ளது.

    மேலும் காக்களூர் பகுதி மக்களுக்கு அருகில் உள்ள மற்றொரு சுடுகாட்டை பயன்படுத்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்கனவே பயன்படுத்தி வரும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் காக்களூர் பகுதி மக்கள் தங்களுக்கு தனியாக சுடுகாடு நிலம் ஒதுக்கி தரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது.

    இதற்கிடையே காக்களூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(48) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். சுடுகாடு நிலம் வழங்காததை கண்டித்து அவரது உடலை அப்பகுதியில் 4 வழிச்சாலை பணி நடக்கும் இடம் அருகே சாலையோரம் திடீரென எரித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுடுகாடு நிலம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • இரவு புட்லூர் கிராமத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற உள்ளது.

    திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் உற்சவர் வீரராகவர் பெருமாள் புட்லூர் கிராமத்திற்கு விஜயம் செய்வது வழக்கம். இது திருவூரல் மகோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவூரல் மகோற்சவம் இன்று நடைபெற்றது.

    இதையொட்டி உற்சவர் வீரராகவர் பெருமாள், கோவிலில் இருந்து அதி காலை 5 மணிக்கு புட்லூர் கிராமத்திற்கு புறப்பட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அங்கு இன்று மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு புட்லூர் கிராமத்தில்சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற உள்ளது. பின்னர் நாளை அதிகாலை 2 மணிக்கு புட்லூரில் இருந்து வீரராகவ பெருமாள் திருவள்ளூர் கோவிலுக்கு திரும்புவார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 832 பேரில் 270 பேர் தேர்வுக்கு வரவில்லை.
    • அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49 ஆயிரத்து 455 பேரில் 711 பேர் தேர்வு எழுத வராமல் இருந்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 997 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் முதல் நாள் தேர்வில் இந்த 3 மாவட்டங்களில் மொத்தம் 1563 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 832 பேரில் 270 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 ஆயிரத்து 350 பேரில் 582 பேர் தேர்வு எழுதவில்லை.

    அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49 ஆயிரத்து 455 பேரில் 711 பேர் தேர்வு எழுத வராமல் இருந்து உள்ளனர்.

    மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வராதது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நேரில் கேட்டறிய திட்டமிட்டு உள்ளனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ராமனிடம் கேட்டபோது, திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நாளில் 711 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதுபற்றி விசாரித்து வருகிறோம்.

    தேர்வு எழுதாத மாணவர்களை வருகிற ஜுன் மாதத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்க வைக்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். ஜூலை மாதத்தில் அந்த மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பில் சேரும் வகையில் தேர்வு எழுத தயார்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது" என்றார்.

    • கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலைேயாரம் இருந்த பழமையான ஸ்ரீகருமாரி அம்மன்கோவில் மீது மோதி நின்றது.
    • 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் இடிந்ததால் பக்தர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள ஒதிக்காடு கிராமத்தில் திருவள்ளூர்- செங்குன்றம் சாலையோரம் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீகருமாரியம்மன் கோவில் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர்- செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது கோவிலை அகற்றுவதற்கு கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவில் அகற்றப்படாமால் நெடுஞ்சாலை ஓரத்திலேயே இருந்து பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. கோவில் முன்பு புற்று ஒன்றும் உள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வெங்காயம் லோடு ஏற்றிய லாரி ஒன்று திருவள்ளூர் வழியாக செங்குன்றம் நோக்கிச் சென்றது. ஒதிக்காடு பகுதியில் வந்தபோது எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருக்க டிரைவர் லாரியை திருப்பினார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலைேயாரம் இருந்த பழமையான ஸ்ரீகருமாரி அம்மன்கோவில் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் கோவிலின் முன்பகுதி முழுவதும் இடிந்து தரைமட்டமானது. கோவில் முன்பு இருந்த புற்றும் இடிந்தது. மேலும் லாரியின் முன்பக்க சக்கரம் உடைந்து தனியாக ஓடியது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் விஜயகுமார் உயிர் தப்பினார். விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் இடிந்ததால் பக்தர்கள் கவலை அடைந்து உள்ளனர். திருவள்ளூர்- செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது கூட கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் அப்படியே இருந்த நிலையில் லாரி மோதியதில் தற்போது சேதம் அடைந்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேதம் அடைந்த கோவிலை உடனடியாக சீரமைக்க கிராமமக்கள் முடிவு செய்து உள்ளனர்.

    • பொன்னேரி நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.
    • வரிபாக்கியை வசூலிக்க தெருக்ககளில் முகாமிட்டு பணியாளர்கள் மூலம் வரி வசூல் செய்யப்படுகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களில் பெரும்பாலானோர் 2022-23 ஆண்டிற்கான சொத்து வரியும், தொழில் வரி, குடிநீர் வரி, கடைவரி, வீட்டு வரி உள்ளிட்டவை இன்னும் செலுத்தாமல் உள்ளனர். அவர்களிடம் வரி வசூலிக்க நகராட்சி ஆணையாளர் கோபிநாத் உத்தரவின் படி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.54 லட்சம் வரை வரிபாக்கி இருப்பதாக தெரிகிறது. வரிபாக்கியை வசூலிக்க தெருக்ககளில் முகாமிட்டு பணியாளர்கள் மூலம் வரி வசூல் செய்யப்படுகிறது. மேலும் ஒலிப்பெருக்கி, துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்றும் வரிசெலுத்த அறிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கோபிநாத் கூறும்போது, 'வரி செலுத்தாதவர்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. குடிநீர் வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், என்று எச்சரித்து உள்ளார்.

    • சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோயிலில் 100 ஆண்டுக்கு பின் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
    • அகத்திய முனிவர் வந்து பூசித்து இறைவனின் திருக்கல்யாணக் கோலத்தைத் தரிசித்தார்.

    சிறுவாபுரி:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் உள்ளது. இக்கோவில் புராண காலத்தில் ஸ்ரீ இராமபிரானின் மைந்தர்களாகிய லவகுசர்கள் வந்து வணங்கிய சிறப்புமிக்கது. அகத்திய முனிவர் வந்து பூசித்து இறைவனின் திருக்கல்யாணக் கோலத்தைத் தரிசித்ததாக தல வரலாறு கூறுகிறது.

    இந்திரன் தேவருலகை மீட்டெடுக்க இக்கோவிலுக்கு வந்து தவஞ்செய்த புண்ணிய திருத்தலமும் ஆகும். இதனால் இங்கு வந்து வணங்கினால் கல்யாணத் தடைகள் நீங்கும், இழந்த பதவிகள் கிடைக்கும், வீடு-நிலம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    பங்குனி உத்திரம் திருநாளில்தான் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருக்கல்யாணம் செய்வது சிறப்பு ஆகும். இந்த புராண வரலாற்றை முன்னிட்டு உலகெங்கும் உள்ள சிவன் கோயில்களில் பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண உற்சவம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இக்கோவிலில் நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. காலையில் நல்லெண்ணை, பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், எலுமிச்சை, இளநீர், மாதுளை உள்ளிட்ட 27 வகை பொருட்களால் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

    அதன்பின், திருக்கல்யாண உற்சவத்திற்குத் தேவையான சீர்வரிசை பொருட்களை இக்கிராமத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலிலிருந்து ஊர்வலமாக கிராம மக்கள் கொண்டு வந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க நேற்று இரவு

    ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரருக்குத் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

    இதன்பின், இடப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து உற்சவத்திற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக கல்யாண பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இதில், சிறுவாபுரியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் கே.சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சிறிது நேரத்தில் மொய்தீனின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்து 865 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
    • டிப்-டாப் வாலிபர் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த குன்னமஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன்(58). பொன்னேரியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

    இவர் பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அருகில் நின்று கொண்டி ருந்த டிப்-டாப் வாலிபரிடம் தனது ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி கூறினார்.

    அந்த வாலிபரும் உதவி செய்வதாக கூறி ஏ.டி.எம்.கார்டை வாங்கினார். மேலும் மொய்தீனிடம் ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

    பின்னர் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணத்தை எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை என்று கூறி ஏ.டி.எம்.கார்டை மொய்தீனிடம் கொடுத்து விட்டு டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். மொய்தீனும் அந்த வாலிபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டுடன் வீட்டுக்கு வந்தார்.

    சிறிது நேரத்தில் மொய்தீனின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்து 865 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மொய்தீன் வங்கிக்கு சென்று விசாரித்த போதுதான் டிப்-டாப் வாலிபர் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண் காணிப்பு காமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மத்திய புழல் சிறையில் 64 கைதிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.
    • மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.

    அதன்படி இன்று (6-ந் தேதி) தமிழ், 10-ந் தேதி ஆங்கிலம், 13-ந் தேதி கணிதம், 17-ந் தேதி அறிவியல், 20-ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது .

    மொத்தம் 188 தேர்வு மையங்களில் நடைபெறும் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 25 ஆயிரத்து 531 மாணவர்களும் 24 ஆயிரத்து 682 மாணவிகளும் என மொத்தம் 50 ஆயிரத்து 213 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 24, 506 ஆண்களும் 23 ஆயிரத்து 819 பெண்களும் மற்றும் 48,325 பேர் எழுதுகின்றனர்.

    தனித் தேர்வாளர்கள் 23 ஆயிரத்து 78 பேர், நரம்பியல் குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் 270 பேர், மத்திய புழல் சிறையில் 64 கைதிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.

    இந்த பொதுத் தேர்வில் 2059 அறை கண்காணிப்பாளர் மற்றும் 239 பறக்கும் படையினர் பணி ஈடுபட்டு வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், தேர்வு மையங்களில் செல்போன், கணினி போன்ற டிஜிட்டல் வாட்ச், பெல்ட், ஷூ அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு மாணவர்கள் சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்கு உள்ளே அனுமதித்தனர்.

    ×