என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரைவாசல் ஏரியில் பெண் எரித்துக் கொலை? தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை
- பெண்ணின் எலும்புக் கூடு கிடப்பது குறித்து கிராம நிர்வாக அதிகாரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மதுரைவாசல் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் ஒரு பெண் எரித்து கொலை செய்யப்பட்டு எலும்பு கூடாக கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி வேலாயுதத்துக்கு தகவல் கிடைத்தது. எனவே, இது குறித்து அவர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே, பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தடய அறிவியல் நிபுணர்கள் விரைந்து சென்று அப்பெண் அணிந்திருந்த கால் மெட்டி, வளையல் உள்ளிட்டவைகளையும், தடயங்களையும் சேகரித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தில் சமீபத்தில் யாராவது காணாமல் போனதாக புகார் வந்ததா? எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறுதி சடங்கிற்கு பணம் இல்லாததால் ஏரியில் போட்டு எரித்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
மீட்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூட்டை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






