பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி பெண் பலி- அதிர்ச்சியில் கணவனும் தற்கொலை

மேகநாதன் தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் ரோஜா செடிக்களை வளர்த்து வருகிறார். வயலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் மேகநாதன் வயலுக்கு சென்று பார்த்தார்.
மனைவி துளசியுடன் கணவன் மேகநாதன்
மனைவி துளசியுடன் கணவன் மேகநாதன்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, பொம்மராஜுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 55) விவசாயி. இவரது மனைவி துளசி (50). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ள நிலையில் மகள்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து அவரவர்கள் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

மகன் கல்லூரியில் படித்து வருகிறார். மேகநாதன் தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் ரோஜா செடிக்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் தோட்டத்திற்குள் நுழைவதை தடுக்க மின் வேலி அமைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தோட்டத்தில் ரோஜா பூக்களை பறித்து வருவதற்காக நேற்று காலை துளசி தனியாக தோட்டத்திற்கு வந்தார். அப்போது கணவன் அமைத்த மின்வேலியில் அவர் சிக்கி உடலில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

வயலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் மேகநாதன் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு மனைவி துளசி மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் அமைத்த மின்வேலியில் தனது மனைவியே சிக்கி இறந்து விட்டாரே என மன உளைச்சலில் தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட கிராமத்தினர் இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கணவன்-மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com