என் மலர்
திருவள்ளூர்
- சின்னம்பேடு ஊராட்சி, அய்யனார் மேடு பஸ் நிறுத்தம் அருகே சிறுவன் கைது செய்யப்பட்டான்
- சுமார் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயற்சி
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் நேற்று மாலை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். சின்னம்பேடு ஊராட்சி, அய்யனார் மேடு பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவன் சுமார் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய நின்று கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டான். எனவே, போலீசார் அந்த சிறுவனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழா நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகர தலைவர் பரிமளம் விஸ்வநாதன் பங்கேற்பு
பொன்னேரி:
தமிழாலயா இலக்கிய அமைப்பு மற்றும் பொன்னேரி இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இரு நூல்கள் வெளியீட்டு விழா இலக்கியப் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன் தமிழாலயா இலக்கிய அமைப்பு செயலாளர் கவிஞர் சிவலிங்கம் தலைவர் தாமோதரன் நூலகர் சம்பத் ஆகியோர் ஏற்பாட்டில் பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகர தலைவர் பரிமளம் விஸ்வநாதன், துணை தலைவர் விஜயகுமார், திமுக நகரத் தலைவர் ரவிக்குமார், வழக்கறிஞர்கள் காளமேகம், பொன்செல்வன், ஜி.வி. என், ஹோம்ஸ் குமார், டாக்டர் ராதாகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் காத்தவராயன், முன்னாள் தலைவர் சுரேஷ்குமார், ஆசிரியர் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு முனைவர் ரதிகுமாரி எழுதிய மனிதன் முழு நிலை பெற என்ற நூல், முனைவர் சிதம்பரம் எழுதிய பெண் அடிமை தீரு மட்டும் பேசுவோம் ஆகிய நூல்களை வெளியிட்டனர். இதில் வார்டு உறுப்பினர்கள் நல்ல சிவம், உமாபதி, ஆசிரியர்கள் இலக்கிய பேரவை இலக்கிய அமைப்பு உறுப்பினர்கள், வாசகர்கள் கலந்துகொண்டனர்.
- சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ரூ.15 ஆகவும், கேன் தண்ணீர் ரூ.30 ஆகவும் விற்கப்படுகிறது.
- பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரிடம் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேடு, கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அதிக உப்பு தன்மையுடன் இருப்பதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
கிராமமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருகிறார்கள். டிராக்டர் மூலம் வினிேயாகிக்கப்படும் தண்ணீர் ஒரு குடம் ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ரூ.15 ஆகவும், கேன் தண்ணீர் ரூ.30 ஆகவும் விற்கப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வாரத்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் மட்டும் தண்ணீர் வருகிறது. அதுவும் அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதால் குடிநீருக்கு பயன்படுத்தமுடிவதில்லை. குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இந்த தண்ணீரால் பாத்திரங்கள் முழுவதும் உப்பு படிகிறது. வாஷிங் மெஷின், அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும் ரேஷன் பொருள் வாங்குவதற்காக அருகில் உள்ள கே. ஆர் பாளையம் பகுதிக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வரவேண்டி உள்ளது. வயதானவர்கள் கைரேகை வைக்க செல்ல முடிவதில்லை என்றனர்.
இதற்கிடையே மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரிடம் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து நாலூர் கே. ஆர் பாளையம், நந்தியம்பாக்கம் பகுதியில் புதிய டிரான்ஸ்பாமர் திறக்கப்பட்டது. இதில் தலைவர்கள் கலாவதி, பாலன், சுஜாதா ரகு மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மர்ம நபர்கள் வீட்டின் பூட்டிடை உடைத்து 10 பவுன் நகை,2 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பத்மாவதி நகரை சேர்ந்தவர் பாபு . ரெயில்வே ஊழியர். இவர் வீட்டை பூட்டிவிட்டு அம்பத்தூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டிடை உடைத்து 10 பவுன் நகை,2 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து பாபு செவ்வாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
- சென்னை, நந்தனத்தை சேர்ந்தவர் கணேசன். இவரை கடந்த நவம்பர் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பணமோசடி வழக்கில் கைது செய்தனர்.
- புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை, நந்தனத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது56). இவரை கடந்த நவம்பர் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பணமோசடி வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவர் புழல் ஜெயிலில் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு கணேசனுக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிேலயே கணேசன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆஸ்பத்திரியில் 20 டாக்டர்கள் 26 செவிலியர்கள் 4 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- தரம் மற்றும் சிகிச்சை, பயன்பாடுகள் கண்டறிந்து மதிப்பெண் அடிப்படையில் 88.82 சதவீதம் மத்திய குழுவினரால் வழங்கப்பட்டன.
பொன்னேரி:
பொன்னேரியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் பொது அறுவை சிகிச்சை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, குழந்தை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, மகப்பேறு மருத்துவம், டயாலிசிஸ், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பிரிவு, பல் மருத்துவம், தோல் மருத்துவம், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், 24 மணி நேர ஆய்வகம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், 24 மணி நேரம் செயல்படும் விபத்து சிகிச்சை பிரிவுகள் உள்ளன.
ஆஸ்பத்திரியில் 20 டாக்டர்கள் 26 செவிலியர்கள் 4 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16,17, 18-ந்தேதிகளில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் மருத்துவர்கள் அருண்குமார்ரஸ்தோகி, சுனிதா பாலிவால், வைஷாலி தட்டாத்ரியா, ஆகிய மூவர் அடங்கிய குழுவினர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் விபத்து பிரிவு, பொது மருத்துவம், ஆய்வகக் கூடம், நுண்கதிர் பிரிவு, சமையல் கூடம், உணவின் தரம், மகப்பேறு பிரிவு, உள்ளிட்ட 13 துறைகளை ஆய்வு செய்தனர். அவற்றின் தரம் மற்றும் சிகிச்சை, பயன்பாடுகள் கண்டறிந்து மதிப்பெண் அடிப்படையில் 88.82 சதவீதம் மத்திய குழுவினரால் வழங்கப்பட்டன.
இதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டிற்கான தேசிய தரச்சான்று பொன்னேரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அசோகன் தெரிவித்தார்.
- குடிநீராக ஊராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு குழாய் அமைத்து தந்தும் இந்த குளத்தின் நீரையே குடிக்க, சமைக்க மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
- 4 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் ஒருபகுதி படிகள் சரிந்து விழுந்துள்ளது.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், அத்திப்பட்டு ஊராட்சியில், 3 ஏக்கரில் அமைந்துள்ளது கொள்ளம்மா குளம். இந்த குளம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இந்த குளத்து நீரையே, சமையல் மற்றும் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
மாற்று குடிநீராக ஊராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு குழாய் அமைத்து தந்தும் இந்த குளத்தின் நீரையே குடிக்க, சமைக்க மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் ஒருபகுதி படிகள் சரிந்து விழுந்துள்ளது. இதனை ஒன்றிய நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அனுமதியின்றி ரத்த பரிசோதனை நிலையம் வைத்துக்கொண்டு, அங்கு நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் ராபர்ட்டை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா, பாண்டியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் (வயது 43). இவர், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பஜார் வீதியில் அனுமதியின்றி ரத்த பரிசோதனை நிலையம் வைத்துக்கொண்டு, அங்கு நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், திருத்தணி அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் ராதிகா தேவி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் ராபர்ட், பிளஸ்-2 மற்றும் லேப் டெக்னீசியன் படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. அங்கிருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் ராபர்ட்டை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட தனிப்படை போலீசார் பள்ளிப்பட்டு பகுதியில் அரசு டாக்டர் லட்சுமி நாராயண் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பள்ளிப்பட்டு பகுதிகளில் 10-ம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த மோகன் (47), வடிவேலு (53) ஆகிய போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், செங்கட்டானூர் பகுதியில் போலி டாக்டர் ஞானபிரகாசத்தை (40) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர், எலக்ட்ரோபதி என்ற படிப்பை முடித்துவிட்டு மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது.
மேலும் திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரக்கோவில் கிராமத்தில் மூதாட்டி ஒருவர், அவருடைய கணவர் கிளினிக் வைத்து நடத்திய அனுபவத்தை கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக திருவாலங்காடு போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் அந்த கிளிக்கில் சோதனை நடத்தினர்.
இதில் மூதாட்டி ரெஜினா (74) அந்த பகுதியில் 15 ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் புகாரின்பேரில் திருவாலங்காடு போலீசார் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைபோல கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிறபேட்டையில் முதலுதவி மையம் என்ற பெயரில் மருந்து கடையுடன் சேர்த்து நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்த மகேஷ் (31) மற்றும் கவரைப்போட்டையில் சித்தா மருத்துவம் படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த ஞானசுந்தரி (46) ஆகிய 2 பேரை பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்களில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம், வங்கி பாஸ்புக் மற்றும் காசோலையை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் அடங்கிய காட்டூர் பஜாரில் வசிப்பவர் நாகன் (வயது 68). இவர் வங்கியில் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்தார். பின்னர் சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று மற்றொரு வங்கிக்கு சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்களில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம், வங்கி பாஸ்புக் மற்றும் காசோலையை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து நாதன் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாய்மொழி அவதூறு குற்றச்சாட்டிற்காக ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது அதிகார துஷ்ப்ரயோகத்தால் விலை கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு.
- குஜராத்தில் வழக்கு தொடுத்தவரே அதற்கு தடை வாங்கிய நிலையில் திட்டமிட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதாக சாடினார்.
பொன்னேரி:
பொன்னேரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணை தலைவர் சதா சிவலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
அதானி ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பாராளுமன்றத்தில் பேச கூடாது என்பதாலேயே ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார். தடை கோரப்பட்ட வழக்கை தூசி தட்டி ஒரே மாதத்தில் தண்டனை விதித்து அடுத்த நாளே தகுதி நீக்கம் செய்துள்ளதாக சாடினார். ராகுல்காந்தி வழக்கில் நீதிபதியை மாற்றி தீர்ப்பு பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ராகுல்காந்தியை அரசியலில் இருந்து ஒழித்து விடலாம் என்பது ஏளனத்திற்குரியது என்றார். ராகுல் காந்தியின் நடை பயணத்தால் ஏற்பட்ட எழுச்சியை கண்டு பாஜக அஞ்சி நடுங்குவதாகவும், அதனொரு பகுதியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.
வாய்மொழி அவதூறு குற்றச்சாட்டிற்காக ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது அதிகார துஷ்ப்ரயோகத்தால் விலை கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு எனவும் சாடினார். குஜராத்தில் வழக்கு தொடுத்தவரே அதற்கு தடை வாங்கிய நிலையில் திட்டமிட்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதாக சாடினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கார்த்திகேயன், யுகேந்தர், சந்திரசேகர், கோவர்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கூட்டு சாலையில் இந்திய தேசிய காங்கிரஸ், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ், சோழவரம் வடக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு புனைந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் மத்திய மோடி அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்தும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மாநில விவசாய பிரிவு செயலாளர் வி.தாயளன் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மாவட்ட துணை தலைவர்கள் கோபி கிருஷ்ணன், கே.எம்.சந்திரசேகர், வட்டார தலைவர்கள் சீமாவரம் கோவிந்தராஜ், சிறுவாபுரி உமாபதி, நகர தலைவர்கள் ஆரணி சுகுமார், பொன்னேரி கார்த்திகேயன், மகிளா காங்கிரஸ் தொகுதி தலைவர் எழிலரசி மற்றும் ஹேமலதா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வினோத், கண்ணைய்யா, ரமேஷ், ரோஸ், மணி, வசந்த், பிரபு உள்ளிட்டோர் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
- பொன்னேரி சுற்றுவட்டார சபை விசுவாசிகள் குழுவாக பாடல் பாடி இயேசுவின் போதனைகளை எடுத்துரைத்து ஊர்வலமாக சென்றனர்
- கிறிஸ்தவ போதகர்கள் இணைந்து நடத்திய சிலுவை தியான ஊர்வலம் தடப்பெரும்பாக்கத்தில் ஆல் மைட்டி காட் சபையில் இருந்து பாஸ்டர் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.
பொன்னேரி:
புனித வெள்ளியை முன்னிட்டு பொன்னேரியில் அனைத்து கிறிஸ்தவ போதகர்கள் இணைந்து நடத்திய சிலுவை தியான ஊர்வலம் தடப்பெரும்பாக்கத்தில் ஆல் மைட்டி காட் சபையில் இருந்து பாஸ்டர் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விசுவநாதன், தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஊர்வலமானது பொன்னேரி பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் வழியாக எல் இ எஃப் சர்ச்சில் முடிவடைந்தது.
இதில் பொன்னேரி சுற்றுவட்டார சபை விசுவாசிகள் குழுவாக பாடல் பாடி இயேசுவின் போதனைகளை எடுத்துரைத்து ஊர்வலமாக சென்றனர். இதில் ஒருவர் இயேசுவைப்போல் வேடமணிந்து சிலுவை மரத்தில் தொங்கிய படி சென்ற காட்சி பரவசத்துடன் காணப்பட்டது. ஊர்வலத்தில் பிஷப்மார்கள், போதகர்கள், ஊழியர்கள், விசுவாசிகள், சுவிசேஷகர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
- மண் ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாமுண்டீஸ்வரி மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
- திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி . இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் கொசவன்பாளையம் கிராமத்திற்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருப்பாச்சூர் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது மண் ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாமுண்டீஸ்வரி மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை விபத்தில் பலியான சாமுண்டீஸ்வரி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






