என் மலர்
திருப்பூர்
- திருப்பூர் தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவர்களது பின்னால் வந்த கார், பைக் மீது மோதியுள்ளது.
- கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மற்றவர்கள் அனைவரும் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு அவினாசிபாளையம், கொடுவாய் சந்தை ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் பிரதாப் (வயது 29). இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் தனது நண்பர் ராஜேஷ் உடன் ஒரு பஞ்சர் கடையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கொடுவாய் தட்டாவலசை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மகன் நவீன்குமார், பிரதாபை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.
மேலும் அவரது மோட்டார் சைக்கிளின் சாவியையும் பிடுங்கி வைத்துக் கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து பிரதாப் அவரது நண்பரிடம் கூறி அங்கு வரச் சொல்லி உள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரதாப், தனது நண்பர்களுடன் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க திருப்பூர் தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவர்களது பின்னால் வந்த கார், பைக் மீது மோதியுள்ளது.
அப்போது அவர்கள் ஓரமாக நின்றுள்ளனர். அதுசமயம் மேலும் 2 கார்களில் சிலர் வந்துள்ளனர். அவர்கள் வலுக்கட்டாயமாக பிரதாப்பை குண்டு கட்டாக காரில் தூக்கி போட்டு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் ஓலப்பாளையம் அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பிற்கு கொண்டு சென்று தென்னை மட்டை மற்றும் இரும்பு கம்பியால் அவரை பலமாக தாக்கியுள்ளனர்.
அதன்பின்னர் இதை யாரிடமாவது சொன்னால் உன்னை குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பிரதாப் அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் நவீன்குமார், நந்தகுமார், அருண், மணி , சேனாபதி, ரமேஷ், சேகர், கதிரேசன் மற்றும் சிலர் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
உடனே அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் நவீன்குமார் (வயது 27), நந்தகுமார் (26), ரமேஷ் (38 ) ஆகிய மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து மற்றவர்கள் அனைவரும் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று (திங்கட்கிழமை) ஊதியூர், தாயம்பாளையத்தை சேர்ந்த அருண் (வயது 37), திருப்பூரை சேர்ந்த பாலச்சந்தர் (40 ), திருப்பூர், கருப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் (44), வெள்ளகோவில் குமரான்டிசாவடியை சேர்ந்த அசோக் (31), ஊதியூர் நிழலியை சேர்ந்த சேகர் (33 ) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு. பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 14 ஒன்றிய வட்டார வள மையங்களில் பணியாற்றும் 54 சிறப்பு பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- சிறப்பு பயிற்றுனர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
திருப்பூர்:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்றுனர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி கே.எஸ்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் திருப்பூர் தெற்கு வட்டார வள மையத்தில் நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, திருப்பூர் மாவட்ட உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இப்பயிற்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 14 ஒன்றிய வட்டார வள மையங்களில் பணியாற்றும் 54 சிறப்பு பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட சிறப்பு பயிற்றுனர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
- திருப்பூர் மாவட்டம் காங்கயம் மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்ககான மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்
- பஸ் நிலையம் வரும் பயணிகள் இருசக்கர வாகனத்தில் எப்படி நுழைந்து செல்வது என்று மனக்குமறலுடன் சென்று வருகிறார்கள்.
காங்கயம்:
ருப்பூர் மாவட்டம் காங்கயம் மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்ககான மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் காங்கயம் பஸ் நிலையத்தின் இருபுறமும் சென்னிலை மெயின் ரோடு பிரிவு உள்ளது.
இதில் தினமும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஏனோ, தானோ என்று நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் இருசக்கர வாகனத்தில் எப்படி நுழைந்து செல்வது என்று மனக்குமறலுடன் சென்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது.
இதனால் சில நேரம் பஸ்சிற்கு வரும் பயணிகள் அவச அவசரமாக ஓடி வரும்போது அங்கு நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனம் மீது மோதி கீழே விழும் பரிதாப நிலைமை நீடித்து வருகிறது.
எனவே பயணிகளுக்கு இடையூறாக உள்ள இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் உடனடியாக ஓழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஙகயம் பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காங்கயம் நகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
- பொதுமக்கள் வீடுகள் முன்பு தொட்டி போல கழிவு நீரை விட்டு வருகின்றனர்.
- நகராட்சி தலைவர் இல்லாததால் மனு அளிக்குமாறு அங்கிருந்த நகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி 6- வது வார்டுக்கு உட்பட்ட கரையான்புதூர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், பொதுமக்கள் வீடுகள் முன்பு தொட்டி போல கழிவு நீரை விட்டு வருகின்றனர்.
இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே கழிவு நீர் கால்வாய் அமைத்து தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நகராட்சி அலுவலகத்தில் இதுகுறித்து புகார் தெரிவிக்க சுமார் 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
அவர்களுடன் நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தியும் வந்தார். இந்த நிலையில் நகராட்சி தலைவர் இல்லாததால் மனு அளிக்குமாறு அங்கிருந்த நகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
- அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
திருப்பூர்:
திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராடிய விவசாயிகள் மீது தமிழக அரசு பொய் வழக்குகளை பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும் , விவசாயிகள் மீது அராஜக போக்கை கடைபிடிப்பதாக தமிழக அரசை கண்டிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
- ரோட்டோரங்களில் அழுகிய நிலையில் முட்டைகள் குவியல் குவியிலாக கொட்டப்பட்டு வருகிறது.
- அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் சுங்கச்சாவடி அருகில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரங்களில் அழுகிய நிலையில் முட்டைகள் குவியல் குவியிலாக கொட்டப்பட்டு வருகிறது.
மேலும் அங்கு பல்வேறு கழிவுகளும் வீசப்படுவதால் அந்த வழியே செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த அழுகிய முட்டைகள் அருகில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து வீசப்படுகிறதா? அல்லது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகங்களில் இருந்து கொண்டு வந்து போடுகின்றனரா? என்பது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- பூவின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. பறிப்பு கூலி கூட கிடைக்கவில்லை.
- ஒரு கிலோ 10 முதல் 20 ரூபாய் வரையே விலை போகிறது.
திருப்பூர்:
குறைந்த முதலீடு, பராமரிப்பு செலவு குறைவு, தினசரி வருமானம் போன்ற காரணங்களால் கணிசமான விவசாயிகள் கோழிகொண்டை பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மாலை கட்ட கோழி கொண்டை பூக்கள் அதிக அளவில் பயன்படுகிறது.
தேவைக்கு அதிகமான உற்பத்தி, பிற பூக்களின் விலை வீழ்ச்சி, தேவை குறைவு போன்ற காரணங்களால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயுத பூஜை வரை கோழி கொண்டை பூக்களுக்கு ஓரளவு விலை கிடைத்தது. அதன்பின் பூவின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. பறிப்பு கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் மாடுகளை மேய விட்டும், செடிகளை அழித்தும் வருகின்றனர். இதனால் பூ சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கோழிக்கொண்டை பூ சாகுபடி விவசாயிகள் சிலர் கூறுகையில், ஒரு கிலோ 10 முதல் 20 ரூபாய் வரையே விலை போகிறது. அசல் கூட தேறவில்லை. எனவே வேறு வழியின்றி அவற்றை அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்றனர்.
- துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9மணி முதல் மாலை4மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருப்பூர்:
திருப்பூர் குமார்நகர் துைண மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமி நகர் பகுதியில் மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின்வாரிய செயற்ெபாறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- திருப்பூர் பெரியகடை வீதியை சேர்ந்தவர் பல்கீஸ் பேகம் (வயது 31).
- கோம்பை தோட்டம் பகுதியில் தங்கியிருந்து ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
திருப்பூர் :
திருப்பூர் பெரியகடை வீதியை சேர்ந்தவர் பல்கீஸ் பேகம் (வயது 31). இவர் கணவரிடம் விவாகரத்து பெற்று வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். திண்டுக்கல் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் முகமது அபுதாகீர் சேட் (44). இவர் திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் தங்கியிருந்து ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். பல்கீஸ் பேகம், முகமது அபுதாகீர் சேட் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி பல்கீஸ் பேகம் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இந்தநிலையில் கடந்த 30-6-2019 அன்று காலை பல்கீஸ் பேகம் வீட்டுக்கு முகமது அபுதாகீர் சேட் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முகமது அபுதாகீர் சேட், கத்தியால் பல்கீஸ் பேகத்தை குத்திக்கொலை செய்தார். இதுதொடர்பாக தெற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முகமது அபுதாகீர் சேட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பெண்ணைக்கொலை செய்த முகமது அபுதாகீர் சேட்டுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், கணேசன் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.
- காயமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பருத்தியூர் கிராமத்திற்கு தடம் எண் 33 என்ற டவுன் பஸ் சென்றது. இந்த பஸ்சை டிரைவர் பிரபாகர் ஓட்டினார். கண்டக்டராக குமார் பணிபுரிந்தார். இந்தநிலையில் தேவனூர் புதூர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து 3 பேர் பஸ்சில் ஏறினார்கள்.
குடிபோதையில் இருந்த அவர்கள் கண்டக்டரிடம் தங்களை இலவசமாக உடுமலைக்கு அழைத்துச் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு கண்டக்டர் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். ஆனால் அவர்கள் டிக்கெட் எடுக்க மறுத்துவிட்டனர். பின்னர் கண்டக்டர் சின்னப்புதூர் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆசாமிகளை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் பஸ்சை பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் புங்கமுத்தூர் பிரிவில் பஸ்சை வழிமறித்து செங்கல் மற்றும் கல்லைக்கொண்டு டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர், டிரைவரை தாக்கிய போதை ஆசாமிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு கீழத்தெருவை சேர்ந்த மனோகரன் மகன் ஆனந்தன் (22) , கோவை மாவட்டம் கோட்டூர் அங்கலகுறிச்சியை சேர்ந்த சுந்தரேஸ்வரன் மகன் மகேந்திரபிரசாத் (19)ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
- திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
- தமிழ்நாட்டில் இருந்து துணி உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.
பல்லடம்:
திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள், சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில்துறையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 5ந் தேதி முதல் 25 -ந் தேதி வரை உற்பத்தி நிறுத்த போராட்டத்தை திருப்பூர்,கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்து அது நடைபெற்று வருகிறது. இன்றுடன் 16 நாட்களாக நீடிக்கும் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ. 2000 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி,பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து துணி இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் துணி உற்பத்தியாளர்கள் போட்டி போட்டு தொழில் செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து துணி உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.
உலக பொருளாதார மந்தம், உக்ரைன், இஸ்ரேல் போர்கள் காரணமாக ஏற்றுமதி தடைபட்டுள்ளது. கடந்த 6 மாதமாகவே ஜவுளி உற்பத்தி தொழில் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தோம். தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால் கடந்த 5-ந்தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகிறோம். இதன் மூலம் கடந்த 16 நாட்களாக சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இருந்த போதிலும் ஜவுளி தொழிலுக்கு சாதகமான அறிவிப்புகள் இன்னும் அரசிடம் இருந்து வரவில்லை. மின் கட்டண உயர்வு, நிலை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வேண்டும். மின் மிகை பயன்பாடு கட்டணம் ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் ஜவுளி தொழிலை காப்பாற்ற முடியும். மத்திய அரசு பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் தான் ஜவுளி உற்பத்தி தொழிலை மீட்டெடுக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விதைகளின் தரம் குறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
- பயிரின் எண்ணிக்கையும் அதன் முளைப்புத்திறனை பொருத்தே அமைகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 376 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதனை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 நபருக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரணத்திற்கான காசோலையினையும், 2 நபர்களுக்கு ரூ.18 ஆயிரத்து 100 மதிப்பீட்டில் 3 சக்கர மிதிவண்டிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 நபர்களுக்கு ரூ.19 ஆயிரத்து 484 மதிப்பீட்டில் விலையில்லா தேய்ப்பு பெட்டிகளை வழங்கினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






