search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    16-வது நாளாக நீடிக்கும் ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம்: தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்குமா?
    X

    16-வது நாளாக நீடிக்கும் ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம்: தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்குமா?

    • திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
    • தமிழ்நாட்டில் இருந்து துணி உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள், சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில்துறையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 5ந் தேதி முதல் 25 -ந் தேதி வரை உற்பத்தி நிறுத்த போராட்டத்தை திருப்பூர்,கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்து அது நடைபெற்று வருகிறது. இன்றுடன் 16 நாட்களாக நீடிக்கும் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ. 2000 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி,பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து துணி இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் துணி உற்பத்தியாளர்கள் போட்டி போட்டு தொழில் செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து துணி உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.

    உலக பொருளாதார மந்தம், உக்ரைன், இஸ்ரேல் போர்கள் காரணமாக ஏற்றுமதி தடைபட்டுள்ளது. கடந்த 6 மாதமாகவே ஜவுளி உற்பத்தி தொழில் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தோம். தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால் கடந்த 5-ந்தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகிறோம். இதன் மூலம் கடந்த 16 நாட்களாக சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இருந்த போதிலும் ஜவுளி தொழிலுக்கு சாதகமான அறிவிப்புகள் இன்னும் அரசிடம் இருந்து வரவில்லை. மின் கட்டண உயர்வு, நிலை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வேண்டும். மின் மிகை பயன்பாடு கட்டணம் ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் ஜவுளி தொழிலை காப்பாற்ற முடியும். மத்திய அரசு பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் தான் ஜவுளி உற்பத்தி தொழிலை மீட்டெடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×