search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே சாதி பெயரை சொல்லி தாக்கிய வழக்கு - வன்கொடுமை சட்டத்தில்  மேலும் 5 பேர் கைது
    X

    கோப்புபடம்.

    பல்லடம் அருகே சாதி பெயரை சொல்லி தாக்கிய வழக்கு - வன்கொடுமை சட்டத்தில் மேலும் 5 பேர் கைது

    • திருப்பூர் தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவர்களது பின்னால் வந்த கார், பைக் மீது மோதியுள்ளது.
    • கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மற்றவர்கள் அனைவரும் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு அவினாசிபாளையம், கொடுவாய் சந்தை ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் பிரதாப் (வயது 29). இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் தனது நண்பர் ராஜேஷ் உடன் ஒரு பஞ்சர் கடையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கொடுவாய் தட்டாவலசை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மகன் நவீன்குமார், பிரதாபை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.

    மேலும் அவரது மோட்டார் சைக்கிளின் சாவியையும் பிடுங்கி வைத்துக் கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து பிரதாப் அவரது நண்பரிடம் கூறி அங்கு வரச் சொல்லி உள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரதாப், தனது நண்பர்களுடன் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க திருப்பூர் தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவர்களது பின்னால் வந்த கார், பைக் மீது மோதியுள்ளது.

    அப்போது அவர்கள் ஓரமாக நின்றுள்ளனர். அதுசமயம் மேலும் 2 கார்களில் சிலர் வந்துள்ளனர். அவர்கள் வலுக்கட்டாயமாக பிரதாப்பை குண்டு கட்டாக காரில் தூக்கி போட்டு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் ஓலப்பாளையம் அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பிற்கு கொண்டு சென்று தென்னை மட்டை மற்றும் இரும்பு கம்பியால் அவரை பலமாக தாக்கியுள்ளனர்.

    அதன்பின்னர் இதை யாரிடமாவது சொன்னால் உன்னை குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பிரதாப் அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் நவீன்குமார், நந்தகுமார், அருண், மணி , சேனாபதி, ரமேஷ், சேகர், கதிரேசன் மற்றும் சிலர் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

    உடனே அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் நவீன்குமார் (வயது 27), நந்தகுமார் (26), ரமேஷ் (38 ) ஆகிய மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மற்றவர்கள் அனைவரும் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று (திங்கட்கிழமை) ஊதியூர், தாயம்பாளையத்தை சேர்ந்த அருண் (வயது 37), திருப்பூரை சேர்ந்த பாலச்சந்தர் (40 ), திருப்பூர், கருப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் (44), வெள்ளகோவில் குமரான்டிசாவடியை சேர்ந்த அசோக் (31), ஊதியூர் நிழலியை சேர்ந்த சேகர் (33 ) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு. பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×