என் மலர்
திருப்பூர்
- கார்ப்பரேட் கால் டாக்ஸி நிறுவனங்கள் அரசுக்கு எந்தவொரு வரியும் முறையாக கட்டுவதில்லை.
- போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆல்ட்ராக் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல சங்கங்களை சோ்ந்த டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலெக்டாிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூரில் தற்போது சொந்த பயன்பாட்டு வாகனத்தை பலர் வாடகை வண்டியாக பயன்படுத்தி வருகின்றனர். கார்ப்பரேட் கால் டாக்ஸி நிறுவனங்கள் அரசுக்கு எந்தவொரு வரியும் முறையாக கட்டுவதில்லை. கால் டாக்சி நிறுவனங்கள் குறைந்த கட்டணம் என்று அறிவித்துவிட்டு பயணம் முடிந்ததும் பயணம் செய்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அதுபோல் வாகன உாிமையாளரிடமும், டிரைவர்களிடமும் கால் டாக்சி நிறுவனங்கள் அதிக கமிஷனை பெற்றுக்கொள்கிறாா்கள்.
இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் எங்களுக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்விற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
- ஒவ்வொரு பகுதிகளில் ஒரு யானைக்கூட்டம் என ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அணைக்குள் காணப்படுகின்றன.
- ஆண்டு தோறும் இந்த சமயத்தில் யானைகள் வருகை அதிக அளவு காணப்படும்.
உடுமலை:
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருப்பூர் வனக்கோட்டம் அமராவதி, உடுமலை, கொழுமம், வந்தரவு வனச்சரகங்கள் அரிய வகை விலங்குகள் வசிக்கும் பகுதியாக உள்ளது.வனப்பகுதிகளில் வறட்சி, தென்மேற்கு பருவ மழை தொடங்க தாமதம் காரணமாக காடுகளில் உள்ள ஓடைகள், சிற்றாறுகள் வறண்டு காணப்படுகின்றன.
இதனால் குடிநீர் மற்றும் உணவுக்காக அமராவதி அணைக்கு யானைக்கூட்டங்கள் படையெடுத்து வருகின்றன. அணையிலும் நீர் இருப்பு குறைந்து புல்வெளிகளாக, நிலப்பகுதிகளாக காணப்படுகிறது. ஒவ்வொரு பகுதிகளில் ஒரு யானைக்கூட்டம் என ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அணைக்குள் காணப்படுகின்றன.
உடுமலை - அமராவதி வனச்சரகங்களுக்கு மத்தியில் உடுமலை - மூணாறு சாலை காணப்படுகிறது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில் காலை, மாலை நேரங்களில் யானைக்கூட்டங்கள், ஒவ்வொன்றாக இந்த சாலையை கடக்கின்றன.
மேலும் சாலையோரத்தில் உள்ள வனப்பகுதிகளிலும் நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறை சோதனை சாவடிகளில் அறிவுறுத்தப்படுவதோடு வனத்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆண்டு தோறும் இந்த சமயத்தில் யானைகள் வருகை அதிக அளவு காணப்படும். யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. மூணாறு சாலையிலும் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது என்றனர்.
- குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
- பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உடுமலை:
உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், மாவடப்பு, குலிப்பட்டி, குருமலை, மேல் குருமலை உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
இந்த சூழலில் நேற்று உடுமலை உட்கோட்ட காவல்துறை சார்பாக தளிஞ்சி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் கலந்து கொண்டு மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட அமராவதி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ,வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
- வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் ஏலம் நடைபெற்றது.
- 102 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில், ஜூன்.28-
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள்.
நேற்று செவ்வாய்கிழமை 102 விவசாயிகள் கலந்து கொண்டு 42 ஆயிரத்து 247 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 74.88 க்கும், குறைந்தபட்சம் ரூ.56.88க்கும் கொள்முதல் செய்தனர்.
நேற்று மொத்தம் ரூ.27லட்சத்து 53ஆயிரத்து 504 க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
- பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
- ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
திருப்பூர்:
ஈரோடு, திருப்பூர், கோவையில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தினர் நிதி மோசடியில் ஈடுபட்டதால் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புங்கந்துரை கிராமத்தில் உள்ள நிலம் மற்றும் காங்கேயம் கண்டியன் கோவில் கிராமத்தில் உள்ள அசையா சொத்துக்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் 4.7.2023 அன்று பகல் 12 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் (அறை எண்:202) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேற்கண்ட சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர் ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம் தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை 3. 7.2023 அன்று மாலை 5மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.
- உடல் மற்றும் உள்ளத்திற்கான நன்மைகள் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரை க்கப்பட்டது.
- இயன்றவரை யோகா பயிற்சி செய்து பலன் பெற வேண்டும் என்றார்.
அவினாசி:
அவினாசி அரசு கலை -அறிவியல் கல்லூரி மற்றும் பரம்பொருள் அறக்கட்டளை சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. யோகா பயிற்றுனர் பெத்தண்ணசாமி வரவேற்றார். யோகா பயிற்சியின் அவசியம் குறித்தும், அதன் மூலம் ஏற்படும் உடல் மற்றும் உள்ளத்திற்கான நன்மைகள் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரை க்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் நளதம் பேசுகையில் , வேலைப்பளு மற்றும் வாழ்வில் ஏற்படும் இன்னல்களால் ஏற்படும் மனச்சோர்வினை தடுக்கும் வகையில் யோகா உள்ளது. இயன்றவரை யோகா பயிற்சி செய்து பலன் பெற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், நாடி சுத்தி, மஹாரம் போன்ற யோக நிலைகள் , மன அமைதிக்கான தியான பயிற்சிகள் வழங்கப்பட்டது. அனைத்து துறை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைத்த சர்வதேச வணிகத்துறை தலைவர் பாலமுருகன் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
- 3பேருக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்துச் செல்லும் பை வழங்கப்பட்டது
- தன்னார்வலர்கள் நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்களுக்கு நூல்களை வழங்குவர்.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் ஊர் புற நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தில் தன்னார்வலர்கள் 3பேருக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்துச் செல்லும் பை வழங்கப்பட்டது. நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மளிகை செல்வம், வாசகர் வட்ட உறுப்பினர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் மலர்க்கொடி வரவேற்றார்.
தன்னார்வலர்கள் நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்களுக்கு நூல்களை வழங்குவர். இவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில் உறுப்பினராக சேர்க்கவும் ஒரு முறை அதிகபட்சமாக 25 நூல்கள் வரை எடுத்துச் சென்று நூலக உறுப்பினர்களின் இல்லங்களுக்கு நேரடியாக வழங்கி வரும் இந்த திட்டத்தில் பத்மாவதி, கற்பகம், ராமராஜன் ஆகியோர் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நூல் எடுத்து செல்லும் பை வழங்கப்பட்டது.
- கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தக்காளி விலை சரிந்து, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
- திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளது.
திருப்பூர்:
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விரைவில் ஒரு கிலோ விலை 100 ரூபாயை எட்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஒரே நேரத்தில் உள்ளூர், வெளிமாநில வரத்து என இரண்டும் குறைந்ததால் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளது. தெற்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக 35 முதல் 38 டன் தக்காளி வரும் நிலையில் தற்போது 25 முதல் 30 டன் தக்காளி மட்டுமே வருகிறது.
வடக்கு உழவர்சந்தைக்கு 8 டன் வரும் நிலையில், 4 டன் தக்காளி வருவதே அரிதாகியுள்ளது. திருப்பூருக்கான தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் 26 கிலோ தக்காளி டிப்பர் 2,000 ரூபாய்க்கும், 14 கிலோ சிறிய டிப்பர் 1,000 ரூபாய்க்கும் விற்றது. மொத்த விலையில் தக்காளி 70 முதல் 80 ரூபாய்க்கும், சில்லறை விலையில் கிலோ 80 முதல் 85 ரூபாய்க்கும் தக்காளி விற்றது. இதனால் மளிகை கடைகளில் 250 கிராம் தக்காளி 20 முதல் 30 ரூபாய், கிலோ 90 ரூபாய் என விற்கப்படுகிறது.
தக்காளி விலை திடீர் உயர்வு குறித்து உழவர் சந்தை அலுவலர்கள் கூறியதாவது:-
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தக்காளி விலை சரிந்து, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. செலவு அதிகரித்து வரும் சூழலில் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என எண்ணிய விவசாயிகள் பலர் தக்காளி பயிரிடுவதை குறைத்தனர். இதனால் வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது என்றனர்.
- உடல்நலக்குறைவு காரணமாக தந்தை மறைந்த நிலையிலும் பவானி பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்தார்.
- பவானியின் மேற்படிப்பிற்காக உதவித் தொகை வழங்கினார்.
திருப்பூர்:
ராமநாதபுரம் மாவட்டம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பூவலிங்கம். இவர் மனைவி வனஜாதேவி. இவர்களுடைய மகள் பவானி. இவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பவானி கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்தார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தந்தை மறைந்த நிலையிலும் பவானி பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்தார். இதை அறிந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் மாணவியிடம் கட்சி நிர்வாகிகள் மூலம் செல்போன் மூலமாக பேசி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பவானியின் மேற்படிப்பிற்காக உதவித் தொகையும் வழங்கினார். இதை ஓ.பன்னீர்செல்வம் அணியின் திருப்பூர் மாநகர் மாவட்ட துணை செயலாளரும், கனிஷ்கா பில்டர்ஸ் அண்டு புரொமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனருமான கனிஷ்கா சிவக்குமார் மாணவி பவானியிடம் வழங்கினார்.
அப்போது ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் மோ.ராஜசேகர் என்கிற திலீப் மற்றும் மாணவியின் குடும்பத்தினர் உடன் இருந்தனர். கல்வி உதவித்தொகையை பெற்றுக் கொண்ட பவானி, தமிழ்நாடு முழுவதும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியும், ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவியும் வழங்கி சமூக சேவையாற்றி வரும் ஜெயபிரதீப், தந்தையை இழந்த என்னை அழைத்து ஊக்கப்படுத்தி, உதவி செய்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது என்றார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையத்தில், தனியார் ஒருவர் வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுமான பணிக்காக பொறியாளர் ஒருவரிடம் கட்டுமான பணிகளை செய்வதற்கு, இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் மேற்கொண்டு பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறி, நேற்று அவரது வீட்டு முன் பொறியாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்தில் வந்து புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.
- பழமைவாய்ந்த பெரிய மரத்தின் கிளைகளை யாரோ சிலர் வெட்டியதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- இங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது சிலர் மரக்கிளைகளை வெட்டி சென்று விடுவதாக தெரிகிறது.
அவினாசி:
அவினாசி வ.வு.ச.,காலனி பகுதியில் செங்காடு திடல் உள்ளது. இங்கு அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அமைப்பினர் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது. இங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது சிலர் மரக்கிளைகளை வெட்டி சென்று விடுவதாக தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் உள்ள பழமைவாய்ந்த பெரிய மரத்தின் கிளைகளை யாரோ சிலர் வெட்டியதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மரத்தை வெட்டியவர்கள் மீது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகேயுள்ள முத்தூரில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி, வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், அப்போது போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டன. அனைவரும் போதைப் பொருட்கள் ஒழிப்பு பற்றிய உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.






