என் மலர்
திருப்பூர்
- 3 பெண்கள், 3 வாலிபர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர்.
- மீட்கப்பட்ட 2 பெண்கள் கோவை பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 3 பெண்கள், 3 வாலிபர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண் மற்றும் 3 வாலிபர்கள் விபசார புரோக்கர்களாக செயல்பட்டதும், மற்ற 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து விபசார புரோக்கர்களான சேலம் மாவட்டம் கெங்கவள்ளி தாலுகா காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சத்யா என்கின்ற சேர்மகனி (வயது 31), ஊத்துக்குளி ஹவுஸிங் யூனிட் டாலர் சிட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்கின்ற செந்தில்குமார் (41), நாகப்பட்டினம் பிரிஞ்சி மூளை லெனின் தெரு பகுதியை சேர்ந்த அகிலன் (23), அதே பகுதியை சேர்ந்த விஸ்வந்த் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.மீட்கப்பட்ட 2 பெண்கள் கோவை பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
- பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- முருகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் கிருத்திகையொட்டி நேற்று முருகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- 18 வயதிற்க்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- ஆதார் எண்ணை கட்டாயம் தொழிலாளர் நல அலுவலகத்தில் பதிவு செய்தல் வேண்டும்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் நலம் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் மு.கனியரசி முத்துக்குமார் தலைமையில், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு ) எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்த கூடாது. 18 வயதிற்க்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் மூலம் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும்.
மேலும் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைத்தல் கூடாது என குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல் வேண்டும் எனவும் இது போன்ற செயலில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பணியில் அமர்த்தும் நிறுவனம் மீது கள ஆய்வு மேற்கொண்டு தகுந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் பணியாளர்களை வேலையில் சேர்க்கும் பொழுது அவர்களுடைய வயதை கண்டறிய ஆதார் எண்ணை கட்டாயம் தொழிலாளர் நல அலுவலகத்தில் பதிவு செய்தல் வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் விஜயலட்சுமி குமரவேல் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, குழந்தைகள் நல குழு உறுப்பினர், பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு பிரதிநிதி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், தன்னார்வுத் தொண்டு நிறுவனத்தினர், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பழுதான வண்டியையும் பார்த்தபோது அதிலிருந்த பேட்டரி, மற்றும் மோட்டார் காணாமல் போயிருந்தது.
- 40 மீட்டர் மின் கேபிள் வயர்களையும் மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சியில் 2 மின்சார எரிபொருள் குப்பை சேகரிப்பு வண்டி உள்ளது. இவற்றில் 1 வண்டி பழுதான நிலையில், ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.மற்றொரு வண்டியை நேற்று காலை பணிக்காக தூய்மை பணியாளர்கள் எடுக்கச் சென்றபோது, அந்த வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அதன் ஓட்டுநர் வண்டியை சோதித்துப் பார்த்தபோது வண்டியில் இருந்த பேட்டரி, மற்றும் மோட்டார் காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து பழுதான வண்டியையும் பார்த்தபோது அதிலிருந்த பேட்டரி, மற்றும் மோட்டார் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் இதுகுறித்து மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமாரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லாகவுண்டன்பாளையம்புதூரில் அமைக்கப்பட்டு இருந்த பித்தளை கேட்வால் மற்றும் தொட்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யும் மின் மோட்டாருக்கு பொருத்தப்பட்டிருந்த 40 மீட்டர் மின் கேபிள் வயர்களையும் மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமாரின் அறிவுறுத்தல் படி, மின் மோட்டார் இயக்குனர் முருகன், ராமசாமி, துப்புரவு தூய்மை பணியாளர் ஆனந்த் ரவி ஆகியோர் தனித்தனியே பல்லடம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை மானியம், இதர விவசாயிகளுக்கு அதிக பட்சமாக ரூ.70 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
- கிராமங்களுக்கு உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் வழங்கப்படும்.
திருப்பூர்:
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள தாராபுரம், திருப்பூர், உடுமலை உபகோட்ட வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு பவர் டிரில்லர் மானியத்தில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.மானியம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல் ஆதார்கார்டு, வங்கிகணக்கு எண், போட்டோ ஆகியவற்றினை உழவன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய இயலாத விவசாயிகள்அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் உதவியினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மானியத்தொகை போக மீதம் உள்ள தொகைக்கு வங்கி வரைவோலை அல்லது மின்னணு பண பரிமாற்றம் மேற்கொள்ளலாம். சிறு, குறு, மகளிர், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை மானியம், இதர விவசாயிகளுக்கு அதிக பட்சமாக ரூ.70 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் பவர்டிரில்லர் பெறப்பட்ட பின்னர் துறை அலுவலர்களால் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மானியத் தொகை, உரிய நிறுவனங்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் உபகோட்ட அலுவலக உதவிசெயற்பொறியாளர் தி.சந்திரன்- 9442529340, தாராபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் எஸ். சுந்தரராஜன்- 9865028152 ,உடுமலை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன் 9003930773 ஆகியோரின் தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
- தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.
திருப்பூர்:
தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் ஆகியவற்றில் 377 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றில் 186 மையங்களை மூட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி கூறியதாவது:-
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், தமிழகத்தில் 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சேவையில் பாதிப்பு ஏற்படும். எச்.ஐ.வி. நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உருவாகும். அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு 100 சதவீதம் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது.
ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து வழங்கும் மையங்களை தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தொடங்க மத்திய அரசு ஆர்வம் செலுத்தி வருகிறது. இதனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து மாத்திரைகளை பணம் கொடுத்து பெறும் நிலை ஏற்படும். தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 27-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக http://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- 20 கிராம ஊராட்சிகளிலும் தற்போது ஆன்லைன் வரி வசூல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பல்லடம்:
தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்துமாறு உத்தரவிடபட்டுள்ளது. கிராம பகுதிகளில் பொதுமக்கள் வீட்டு மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ஒற்றைச் சாளர முறையில் இணைய தளம் மூலம் வழங்குவதற்கும், கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டி இருந்தது. தற்போது பொதுமக்கள் தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக http://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 கிராம ஊராட்சிகளிலும் தற்போது ஆன்லைன் வரி வசூல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில்,ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு ஆன்லைன் வரி வசூல் குறித்த பயிற்சி வகுப்பு பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார் . ஆன்லைன் மூலம் வரி வசூல் செய்வது குறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன் விளக்கம் அளித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் கலந்துகொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
- மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை நிறுத்தப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர்எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் குமார்நகர்,சந்தைப்பேட்டை துணைமின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை குமார் நகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட ராமமூர்த்திநகர்,பி.என். ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர்,அப்பாச்சிநகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின்ரோடு, வ.உ.சி.நகர், டி.எஸ்.ஆர். லே அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம்,டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலைநகர், சந்திராகாலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்நிலையம் மற்றும் லட்சுமிநகர்.
சந்தைப்பேட்டை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அரண்மனைப்புதூர்,தட்டான்தோட்டம்,எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ெஷரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர்,திரு.வி.க.நகர், கருப்பக்கவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம்,கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார்காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில்ரோடு, மிஷின் வீதி, காமராஜர் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின்ரோடு, தாராபுரம் ே்ராடு, கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம், பழவஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தங்களது வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர் வாயிலாக சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
- இந்த சேவைக்கு கட்டணமாக 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பென்ஷனர்களுக்கான வாழ்நாள் சான்று பதிவுக்கான நேர்காணல், நடைபெற்று வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தலைமை கருவூல அலுவலகம் மற்றும் திருப்பூர் வடக்கு, அவிநாசி, தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளத்தில் உள்ள சார்நிலை கருவூல அலுவலகங்களில், பென்ஷனர்களுக்கான வாழ்நாள் சான்று பதிவு நடைபெற்று வருகிறது.
கருவூலங்கள் வாயிலாக பென்ஷன் பெறுவோர், தங்கள் அருகாமையில் உள்ள கருவூலங்களுக்கு சென்று வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். ஆதார் கார்டு, பென்ஷனர் அட்டை, வங்கி கணக்கு விவரம், ஏதேனும் ஒரு மொபைல் எண் (ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை) கொண்டு சென்று, கைரேகை வைத்து பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் உள்ள மாவட்ட தலைமை கருவூல அலுவலகத்தில் வாழ்நாள் சான்று பதிவுக்காக வரும் பென்ஷனர்களுக்கு கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து மாவட்ட தலைமை கருவூல அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கருவூலங்கள் வாயிலாக பென்ஷன் பெறுவோர் 12,519 பேர் உள்ளனர். இவர்களுக்கான வாழ்நாள் சான்று பதிவு நேர்காணல் நடைபெற்று வருகிறது. தாங்கள் ஓய்வூதியம் பெறும் அருகாமையில் உள்ள கருவூல அலுவலகங்களுக்கு காலை, 10 மணி முதல் மதியம் 2 மணிக்குள் சென்று வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். தாங்கள் ஓய்வுபெற்ற மாதத்தில் நேர்காணலில் பங்கேற்று பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து பென்ஷனர்களும் வருகிற 2024 மார்ச் 31ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, கடந்த ஜூலை 2022 முதல் வீட்டில் இருந்த படியே, தங்களது வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர் வாயிலாக சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதற்கான புத்துணர்வு ஒப்பந்தமாக, தமிழக அரசுக்கும் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக்கும் இடையே கடந்த ஜூன் 2023 இறுதியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், ஜூலை 2023 முதல் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை போக்கும் விதமாக, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்களின் வீட்டிலேயே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல்போன் எண், பி.பி.ஓ., எண், மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்த பின் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும்.கடந்தாண்டு சுமார் 1.75 லட்சம் ஓய்வூதியதார்கள் வீட்டிலிருந்த படியே தங்களின் வாழ்நாள் சான்றிதழை தபால்காரர் வாயிலாக சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
எனவே ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே, தங்களது தபால்காரர்களிடம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.எட்., படிப்பு 2023-25ம் ஆண்டு சேர்க்கைக்கான, விண்ணப்ப படிவம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
- குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
திருப்பூர்:
பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்விமுறையில் பி.எட்., படிப்பு 2023-25ம் ஆண்டு சேர்க்கைக்கான, விண்ணப்ப படிவம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.சேர்க்கை செயல்பாடுகள் அரசு மதிப்பெண் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் நடைபெறும்.இரண்டாண்டு, ஆசிரியர் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.
2 ஆண்டுகள் முழு நேரம் தற்காலிகம் அல்லது நிரந்தர அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில்,ஆசிரியராக பணியாற்றி இருக்கவேண்டும்.இன வாரியாக பட்டப்படிப்பில், குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
கல்லூரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது.
மேலும் விபரங்களை, https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.விண்ணப்பங்களை அக்டோபர் 5-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பூலாங்கிணரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 77).சம்பவத்தன்று இரவு உடுமலை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் முக்கோணம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் முன்பு சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இது குறித்து பொது மக்கள் உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ் கண்ணா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் சுப்பிரமணி தலையில் ஹாலோ பிளாக் கல்லை போட்டு மர்ம நபர் கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்த மர்மநபர் யார்? எதற்காக கொலை செய்தார் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலையாளியை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன், உடுமலை டி.எஸ்.பி., சுகுமார் உத்தரவின் பேரில் உடுமலை இன்ஸ்பெக்டர் ராஜ் கண்ணா, மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் ராேஜஷ் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
- வன உரிமை சட்டப்படி வழங்கியுள்ள பட்டாவில் மக்களுக்கு பயன்படாத நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்.
- பெட்டி, படுக்கை, சமையல் பொருட்களுடன் வந்த மலைவாழ் மக்கள் வன அலுவலர் அலுவலகம் முன்பு அண்டாவில் சமைத்து சாப்பிட்டனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை வன அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் இன்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாதைக்கு செல்ல கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும், ஆறுகளை கடந்து செல்ல பாலம் கட்ட வேண்டும், குடிநீர், செல்போன் கோபுரம், சமுதாயக்கூடம், பள்ளி, அங்கன்வாடி, ரேஷன் கடை, மருத்துவமனை, வீடு, வேளாண்மை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.
வன உரிமை சட்டப்படி வழங்கியுள்ள பட்டாவில் மக்களுக்கு பயன்படாத நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் உடுமலையில் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
பெட்டி, படுக்கை, சமையல் பொருட்களுடன் வந்த மலைவாழ் மக்கள் வன அலுவலர் அலுவலகம் முன்பு அண்டாவில் சமைத்து சாப்பிட்டனர். பின்னர் இரவு அங்கேயே படுத்து தூங்கினர். இன்று 3-வது நாளாக போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் முத்து கண்ணன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மதுசூதனன், குமார், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம், நகர செயலாளர் தண்டபாணி, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி பஞ்சலிங்கம் உட்பட மலைவாழ் மக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.
இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மலைவாழ் மக்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அதில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உடுமலையில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 500 பேர் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.






