என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • அணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு 2003-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் ஓடையின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கட்டுவதற்கு 1997-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2000-ம் ஆண்டில் அணை கட்டும் பணி தொடங்கியது.

    அணைகட்டுவதற்கு 150 விவசாயிகளிடம் இருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர். அணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு 2003-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவசாயிக்கு இழப்பீடு தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டு கோர்ட்டு உத்தர விட்டது. ஆனாலும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலு வலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களை 'சீல்' வைத்தனர்.ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    உரிய இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு நல்லதங்காள் அணையில் இருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மண் எடுத்துக்கொண்டு கோனாபுரத்தில் உள்ள கிராமத்திற்கு சென்றனர். அங்கு அந்த மண்ணுக்கு பூஜை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. இன்று விவசாயிகள் கருப்பு கொடியுடன் வாயில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • தடுப்பூசி குழுவினர், ஆங்காங்கே முகாம் அமைத்து இப்பணியை செய்து வருகின்றனர்.

    குடிமங்கலம்

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் வாயிலாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கேரளாவில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் மாநில எல்லையையொட்டிய தமிழக கிராமங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி உடுமலை அடுத்த கோடந்தூர், தளிஞ்சி, ஈசல்தட்டு, குழிப்பட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் கால்நடைத்துறையால் கோமாரி தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் கால்நடைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:-

    தமிழக - கேரள மாநில எல்லையையொட்டி கிராமங்களில் கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. குறிப்பாக 12,000 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி குழுவினர், ஆங்காங்கே முகாம் அமைக்கும்போது கால்நடை வளர்ப்போர் தங்களது 4 மாத வயதிற்கு மேற்பட்ட பசு மற்றும் எருமைகளுக்கு தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும்
    • 95 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 53 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர்

    தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோர் அறிவுரையின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் மாநகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய பண்டிகை விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று, பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அவ்வாறு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என்று ஆய்வு நடத்தினார்கள்.

    இதில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 52 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 32 உணவு நிறுவனங்கள், 11 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 95 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 53 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    • 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • கிராம ஊராட்சி நிர்வாகம் ,பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    உடுமலை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் , பொதுமக்கள் பங்கேற்றனர். சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்று விழா நடைபெற்றது.அதைத்தொடர்ந்து கிராம ஊராட்சி நிர்வாகம் ,பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 839 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. மெய்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பால சுப்பிரமணியம், துணைத்தலைவர் விஸ்வநாதன், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராகல்பாவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமை வகித்தார். ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கி.ஊ) கலந்து கொண்டார்.

    இதே போன்று சின்னவீரன் பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையிலும் பூலாங்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா இளங்கோவன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள், தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், உடுமலை வட்ட சட்ட பணிகள் குழுவை சேர்ந்த நிர்வாகிகள், வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2017ம் ஆண்டு சர்வே எண் 252, 253ல் 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது.
    • 38 ஆயிரத்து 800 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது.

    உடுமலை:

    பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வந்து சேகரிக்கப்பட்டு, பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.திருமூர்த்தி அணையின் கிழக்குப்பகுதியில் 300 ஏக்கர் நீர் தேங்கும் பரப்பு மண் மேடாக காணப்படுகிறது.

    இந்த மண் அகற்றி ஆழப்படுத்த வேண்டும். கூடுதலாக, ஒரு டி.எம்.சி., வரை நீர் சேமிக்க முடிவதோடு பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்க முடியும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு சர்வே எண் 252, 253ல் 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் மண் எடுத்தனர். கடந்த ஆண்டு சர்வே எண் 254ல், 34 ஆயிரம் கன மீட்டர் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது. பருவ மழை துவக்கம், பாசனத்திற்கு நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களினால் 17 ஆயிரம் கன மீட்டர் மட்டுமே மண் எடுக்கப்பட்டது. திருமூர்த்தி அணையில் தேங்கியுள்ள வண்டல் மண் அதிக சத்துக்களுடன் காணப்படுவதால் விவசாய நிலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே நடப்பாண்டும் கோடை காலத்தில் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் புதிதாக சர்வே எண் குறிப்பிட்டு மண் எடுக்க அரசிதழில் அறிவிப்பு வெளியிடாமல் கடந்தாண்டு நிலுவையிலிருந்த 17 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்க மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

    அதிக அளவு விவசாயிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் குறைந்த அளவு விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மாதம் 18ந் தேதி முதல் விவசாயிகள் மண் எடுத்து வருகின்றனர்.

    திருமூர்த்தி அணையை கூடுதல் பரப்பளவில் ஆழப்படுத்தும் வகையில் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இதனையடுத்து, நடப்பாண்டு 38 ஆயிரத்து 800 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- நீர் நிலைகளை தூர்வாரும் வகையில், விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. நடப்பாண்டு, குளங்களில் மண் எடுக்க மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.திருமூர்த்தி அணையில் கடந்தாண்டு நிலுவையிலிருந்த 17 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கூடுதல் அனுமதி கோரி விவசாயிகள் விண்ணப்பித்ததால் மேலும் 38,800 கன மீட்டர் எடுக்கஅனுமதியளிக்கப்பட உள்ளது.

    தற்போது 54 விவசாயிகள் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. முதற்கட்டமாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். அணையில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர், புஞ்சை நிலமாகஇருந்தால் 90 கன மீட்டர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நிகழ்ச்சிக்கு வங்கி முன்னாள் ராணுவ வீரர் பாதுகாவலர் நடராஜ் தலைமை வகித்தார்.
    • இந்திய அரசு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது.

    உடுமலை:

    உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கம் சார்பில் உடுமலை நேதாஜி மைதானத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். டாக்டர் பாலகுமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் நாயப் சுபேதார் நடராஜ் தலைமையில் ராணுவ அணிவகுப்பு நடந்தது.

    தொடர்ந்து உடுமலை பாரத ஸ்டேட் வங்கியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வங்கி முன்னாள் ராணுவ வீரர் பாதுகாவலர் நடராஜ் தலைமை வகித்தார். வங்கி முதன்மை மேலாளர் ராபின்சன் தேசிய கொடி ஏற்றி வைத்து முன்னாள் ராணுவ நல சங்க அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ வீரர்கள் ,வங்கி பாதுகாவலர்கள் மதன் கோவிந்தராஜ், செல்வராஜ், நந்தகோ பால்,விஜயகுமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    1971 ல் இந்தியா- பாகிஸ்தான் போரில் கலந்து கொண்டு வெற்றியடைந்ததற்காக இந்திய அரசாங்கம் அழகிரிசாமி மற்றும் முத்துக்காளை அழகுராஜ், சந்திரசேகர் ஆகியோருக்கு இந்திய அரசு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது. இவர்களுக்கு வங்கி சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை வளாகத்தில் சுதந்திர தின கொடி ஏற்றப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் நாயப் சுபேதார் நடராஜ் மற்றும் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தனர். இதில் டிரஸ்டிகள் கணேசன், பாலமுருகன், முன்னாள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி ,ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சத்யம் பாபு ,சைனிக் பள்ளி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் நூலக வாசகர் வட்டத்துடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்கள் கொடியேற்றினர். இதில் பணி நிறைவு நூலகர் கணேசன், நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ருத்தரப்பா நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடந்த கொடியேற்று விழாவில் நகராட்சி துணைத் தலைவர் கலைராஜன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி வைத்து ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க செயலாளர் சக்தி ,செயலாளர் சிவக்குமார், துணைத்தலைவர் சுபேதார், மேஜர் கோவிந்தராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • 131விவசாயிகள் கலந்து கொண்டு 94 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.75 க்கும், குறைந்தபட்சம் ரூ.58.85க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று செவ்வாய்கிழமை 131விவசாயிகள் கலந்து கொண்டு 94 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.75 க்கும், குறைந்தபட்சம் ரூ.58.85க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.68லட்சத்து 26ஆயிரத்து 45க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக யுவராஜ் என்பவரை கைது செய்தனர்.
    • புதிய பஸ் நிலையம் அருகே மது பாட்டில்கள் வைத்திருந்த ஜெயக்குமார் என்பவரை கைது செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில், முத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடை என்ற இடத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக யுவராஜ் (வயது 40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே போன்று வெள்ளகோவில் புதிய பஸ் நிலையம் அருகே மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஜெயக்குமார் (50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குடிநீர், தெருவிளக்கு, போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • சில ஊராட்சிகளில் சிறு, சிறு வாக்குவாதங்களுடன் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    பல்லடம்:

    77-வது சுதந்திரதினத்தினை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும்என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.இதன்படி பல்லடம் வட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளில், கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் குடிநீர், தெருவிளக்கு, போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் புவனேஸ்வரி,அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் புனிதா சரவணன் தலைமையில் நடைபெற்றது. கரைப்புதூர் ஊராட்சியில் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

    இதேபோல செம்மிபாளையம் ஊராட்சியில் ஷிலா புண்ணியமூர்த்தி தலைமையிலும், மாதப்பூர் ஊராட்சியில் அசோக்குமார் தலைமையிலும், கரடிவாவி ஊராட்சியில் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் தலைமையிலும், கோடங்கிபாளையம் ஊராட்சியில் காவி.பழனிச்சாமி தலைமையிலும், மாணிக்காபுரம் ஊராட்சியில் நந்தினி சண்முகசுந்தரம் தலைமையிலும், மல்லேகவுண்டம்பாளையத்தில் முத்துக்குமாரசுவாமி தலைமையிலும், பருவாய் ஊராட்சியில் ரவிச்சந்திரன் தலைமையிலும், புளியம்பட்டி ஊராட்சியில் உத்தமராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

    இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையம் ஊராட்சி கிராம சபை தலைவர் கவிதாமணி கலந்து கொள்ளாததாலும், ஊராட்சி மன்ற கணக்கு வழக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி,பணிக்கம்பட்டி ஊராட்சி, அனுப்பட்டி ஊராட்சி, உள்ளிட்டஊராட்சிகளில் சிறு, சிறு வாக்குவாதங்களுடன் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    • சம்பவத்தன்று மனைவி சுகன்யா உடன் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • தடுமாறி விழுந்த தனலட்சுமிக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த நமச்சிவாயம் மகன் முருகேசன் (வயது 33) .இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவி சுகன்யா உடன் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுகன்யாவை முருகேசன் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனை தடுக்கச் சென்ற முருகேசனின் தாயார் தனலட்சுமி (வயது 70) யையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தடுமாறி விழுந்த தனலட்சுமிக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார், முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • ராஜகோபுர பராமரிப்பு பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
    • புகை மருந்து அடித்து தேன்பூச்சிகளை அழித்து தேன்கூட்டை அப்புறப்படுத்தி னர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாக கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்த பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஏழு நிலைராஜ கோபுரத்தின் உச்சியில் பெரிய அளவில் தேன் கூடு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதனால் ராஜகோபுர பராமரிப்பு பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே கோவில் நிர்வாகத்தின் மூலம் தேன் கூட்டை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பொள்ளாச்சியிலிருந்து 5 நபர்கள் குழுவினர் வந்தனர். அவர்கள் புகை மருந்து அடித்து தேன்பூச்சிகளை அழித்து தேன்கூட்டை அப்புறப்படுத்தி அதிலிருந்த தேனை எடுத்து சேமித்தனர்.இதையடுத்து ராஜகோபுர பராமரிப்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைபணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அவினாசி:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு அவினாசி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தேசிய கொடியேற்றிவைத்தார்.

    இதையடுத்து பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைபணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராமலிங்கம், துணைத்தலைவர் மோகன், வார்டு உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    ×