என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • கிரிவலப்பாதை அருகே 17.9 ஹெக்டோ் அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் குவாரி உள்ளது.
    • அரசு விதிகளின்படி உள்ள 40 வகையான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயில் அடிவாரப் பகுதியில் உள்ள கிரிவலப்பாதை அருகே 17.9 ஹெக்டோ் (சுமாா் 45 ஏக்கா்) அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் குவாரி உள்ளது.தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு சொந்தமான இந்த குவாரியில் கலா் கிரானைட் துண்டுகளை வெட்டி எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட நிா்வாகம் திருப்பூா் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு கனிமவள நிறுவன துணை மேலாளா் கணேசன், திருப்பூா் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் சரவணகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    பொதுமக்கள் சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் மற்றும் சிவன்மலை பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

    கனிம வள நிறுவன துணை மேலாளா் கணேசன், மேற்கண்ட குவாரியில் கலா் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கும் திட்டம் குறித்தும், அதனுடைய செயல்பாடு குறித்தும் குறும்படம் மூலம் விளக்கினாா்.

    அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, முகிலன் உள்ளிட்டோா் எழுந்து இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.அரசு விதிகளின்படி உள்ள 40 வகையான ஆவணங்கள் இதில் இணைக்கப்படவில்லை என்றும், இங்குள்ள இயற்கை வளத்தை எடுத்துச் செல்வதை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினா்.

    தொடா்ந்து கிரானைட் கல் குவாரியில் கல் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, முழக்கமிட்டனா். கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களும் கல்குவாரி திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ் குமாா் பேசியபோது, காங்கயம் ஒன்றியக் குழு, சிவன்மலை ஊராட்சி கூட்டங்களைக் கூட்டிஇதற்கு எதிராக தீா்மான நிறைவேற்றப்படும் எனவும், இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.

    இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், பாதியில் கூட்டத்தை விட்டு எழுந்து சென்றாா். இவரைத் தொடா்ந்து மற்ற அலுவலா்களும் சென்று விட, பொதுமக்களும் எந்தவித முடிவும் தெரியாமல் கலைந்து சென்றனா்.

    • சூரிய ஒளி மின் சக்திக்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • ஜி.எஸ்.டி., திரும்ப பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர்

    மின் கட்டண உயர்வு விசைத்தறி உள்ளிட்ட ஜவுளித் தொழில்துறையினரை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதற்கு தீர்வாக சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் பயன்படுத்தினர். தற்போது சோலார் மின்சாரம் பயன்படுத்துவதற்கான நெட்வொர்க் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஜவுளித் தொழில் துறையினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

    இது குறித்து நாடா இல்லா தறி நெசவாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    சூரிய ஒளி மின் சக்திக்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 27 பைசாவாக இருந்தது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒரு ரூபாய் 48 பைசாவாக உயர்த்தப்பட்டது. நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தோம்.

    இந்நிலையில் கடந்த ஜூலை 1 முதல் ஒரு ரூபாய் 53 பைசாவாக மீண்டும் நெட்வொர்க் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வேதனையை அளிக்கிறது.சூரிய ஒளி மின் உற்பத்தியை கணக்கீடு செய்ய மீட்டர் பொருத்த வேண்டும்.

    ஜி.எஸ்.டி., திரும்ப பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட நெட்வொர்க் கட்டணத்தை குறைத்து சூரிய ஒளி மின் சக்தி உற்பத்திக்கு மானியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு கோவிந்தராஜ் கூறினார்.

    • விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
    • விவசாய மின் இணைப்பு பெற அந்தந்த பகுதி மின்வாரிய செயற்பொறியாளரை அணுகி பயன்பெறலாம்.

    திருப்பூர்:

    தட்கல் சிறப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விவசாயிகள் அந்தந்தப் பகுதி மின்வாரியத்தை அணுகலாம் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    இது குறித்து மின் வாரியத்தினா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு ஆணையின்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் ஏற்கனவே தட்கல் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் மற்றும் தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. ஆகவே, இத்திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற அந்தந்த பகுதி மின்வாரிய செயற்பொறியாளரை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனா்.

    • ஆா்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ. 7,539 வரை விற்பனையானது.
    • மொத்தம் ரூ.22 லட்சத்து 29ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.22.29 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு, 970 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ. 7,539 வரையிலும், மட்டரக (கொட்டுரகம்) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ. 3,500 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்து 29ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது. 

    • லாரி நிலைதடுமாறி, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • லாரியில் சரக்கு எதுவும் இல்லாததால், ஓட்டுநா் மணிகண்டன் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்.

    காங்கயம்:

    தாராபுரத்தில் இருந்து திருப்பூா் நோக்கி டிப்பா் லாரி சென்று கொண்டிருந்தது. கொடுவாய் பகுதியில் சென்றபோது திடீரென லாரி நிலைதடுமாறி, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    லாரியில் சரக்கு எதுவும் இல்லாததால், ஓட்டுநா் மணிகண்டன் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து ஊதியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

    • ஒரு மரத்தின் கள்ளை 48 நாள்கள் பருகி வந்தால் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
    • ஜனவரி 21 ந் தேதிமுதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.

    அவிநாசி:

    தமிழகம் முழுவதும் ஜனவரி 21 ந் தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி அவிநாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு மரத்தின் கள்ளை 48 நாள்கள் பருகி வந்தால் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவக் குணம் கொண்டது. ஏலம், கடைகள் என்று இருந்தால், ஒரு மரத்துக்கு கள் கிடைக்காது. ஆகவே கள்ளு கடை வேண்டாம். கள்ளுக்கான தடை நீக்க வேண்டும். இதை முன்வைத்து, அரசியல் அமைப்புச் சட்டப்படி, ஜனவரி 21 ந் தேதிமுதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.

    காவிரி நீா் பிரச்னையில், நாள்தோறும் நீா் பங்கீடு என்ற அம்சம் தீா்ப்பில் இடம் பெற்றிருந்தால் தீா்வு எளிதாக இருந்திருக்கும். மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என்றாா்.

    • துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அவினாசி:

    அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    செங்கப்பள்ளி துணை மின் நிலைய பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூலுவபட்டி மற்றும் பெருமாநல்லூர் தெற்கு பகுதி அலுவலகங்களுக்கு உட்பட்ட குருவாயூரப்பன் நகர், படையப்பா நகர், வாவிபாளையம், கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம், காளிபாளையம், கிளன்மார்க்கன்மில் பகுதி, ஆதியூர் பிரிவு, தான்டா கவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
    • நிகழ்ச்சியில் தமிழாசிரியர்கள் வே. சின்னராசு, ராசேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பள்ளி நூலகத்தில் தமிழ் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தேன் சிட்டு சிறார் இதழ் மூலம் வாசிப்புப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    மாணவர்கள் படித்து பயன் பெறும் வகையில் பள்ளி நூலகத்திற்கு திருப்பூர் தமிழினி அமைப்பின் சார்பில் தமிழ் அறிவோம் என்னும் இலக்கண நூல்களின் தொகுப்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நூல்களை கவிஞர் நா. மகுடேஸ்வரன் வழங்கியுள்ளார். பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ப. விஜயா நூல்களை வழங்க நூலகப் பொறுப்பாசிரியர் மரகதம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தமிழாசிரியர்கள் வே. சின்னராசு ,ராசேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • சுவற்றின் மேல் சாவியை வைத்துவிட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • அலமாரியில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் திருடியுள்ளனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகேயுள்ள வேலாயுதகவுண்டன்புதூர் குளுகாட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கிட்டுச்சாமி(வயது 70) ,விவசாயி. நேற்று காலை இவர் குடியிருக்கும் வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள சுவற்றின் மேல் சாவியை வைத்துவிட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். இவரது மனைவி லோகநாயகி(63) மகனுடன் வெளியூர் சென்று விட்டார்.

    கிட்டுச்சாமி மதியம் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளே அலமாரியில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் பின்புறமாக பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார்.
    • வண்டியின் பெட்டியை திறந்து பார்த்தபோது பணம் காணாமல் போயிருந்தது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் தொட்டியபாளையம் பொட்டுசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது47). இவர் முத்தூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு என்ஜினீயரிங் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை செய்யும் கம்பெனியிலிருந்து வங்கியில் கட்டுவதற்காக ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் பின்புறமாக பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார்.

    பின்பு வெள்ளகோவில் ரோட்டில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றபோது அங்கு கூட்டமாக இருந்ததால் பணத்தை கட்டாமல் வந்துள்ளார். மகாலட்சுமி நகரில் உள்ள உரிமையாளரின் வீட்டுக்கு சென்று வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி உரிமையாளரிடம் தகவல் தெரிவித்து விட்டு பின்பு மீண்டும் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு கம்பெனிக்கு சென்றார். அங்கு வண்டியின் பெட்டியை திறந்து பார்த்தபோது பணம் காணாமல் போயிருந்தது. அதிர்ச்சியடைந்த கவிதா இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தார்.
    • சிலிண்டர்களை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களால் உடனடியாக இறக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலையில் இருந்து ஆலம்பாளையம் கிராமத்திற்கு எரிவாயு சிலிண்டர்களுடன் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் என்ஜினீல் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. அதனை பார்த்த டிரைவர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தார்.ஆனால் முடியவில்லை.

    உடனே இது குறித்து உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிலிண்டர் வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். வாகனத்தில் தீ பற்றிய உடன் அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களால் உடனடியாக இறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அமராவதி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
    • சிறப்பு ஓய்வூதிய பெறும் அனைவரையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 7-வது மாவட்ட பேரவை கூட்டம் திருப்பூர் மங்கலம் பாதை கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் சண்முகம் கொடியேற்றினார். துணை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் குணசேகரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில துணை தலைவர் அரங்கநாதன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் செயலாளர் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் நிசார் அகமது, திருப்பூர் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் மணியன், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் நாட்ராயன், ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ரீட்டா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், ஊர்புற நூலகர் போன்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கமுடேசன் பிடித்த காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், சிறப்பு ஓய்வூதிய பெறும் அனைவரையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    ×