என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • விவசாயிகள் 28 ஆயிரத்து 580 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.50.94க்கும், குறைந்தபட்சம் ரூ.45.69க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறார்கள்.நேற்று வியாழக்கிழமை 29 விவசாயிகள் கலந்து கொண்டு 28 ஆயிரத்து 580 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 9 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.50.94க்கும், குறைந்தபட்சம் ரூ.45.69க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.13லட்சத்து 82ஆயிரத்து 962க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • 1992ம் ஆண்டு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    • மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றாமல் பயனற்ற நிலையில் தொட்டிகள் விரிசல் விட்டு பழுதடைந்துள்ளது.

    அவினாசி:

    குடிநீர் வினியோகம் செய்வதில் விடுபட்ட குக்கிராமங்கள்,மேல்நிலைத் தொட்டிகள், குடிநீர் விநியோகத்தை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்த விளக்ககூட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் (கிராம ஊராட்சி) விஜயகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் முன்னிலை வகித்தார்.

    இதில் குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ராதா, இளநிலை பொறியாளர்கள் நந்தகுமார்,ராஜப்பன், செந்தில் குமார், சீனிவாசன் மற்றும் 31 ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் ஊராட்சி தலைவர்கள் பேசியதாவது:- ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தும் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஏராளமான கிராமங்கள் விடுபட்டுள்ளது. மேலும் புதிய குடியிருப்பு பகுதிகள் விடுபட்டுள்ளது. 1992ம் ஆண்டு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது 30 வருடங்களுக்கு பிறகு 10 மடங்கு குடியிருப்புகள் அதிகரித்த நிலையில் வெறும் 40 ஆயிரம் லிட்டர் மட்டுமே அதிகரிக்கப்பட்டு 1 லட்சத்து 68 ஆயிரம் லிட்டர் குடிநீர் தான் கிடைக்கிறது.

    இதிலும் முறையாக குடிநீர் வினியோகிப்பதில்லை. இது குறித்து அனைத்து ஊராட்சி தலைவர்கள் -பொதுமக்கள் ஒன்றிணைந்து பல முறை பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு இல்லை. கிராம ஊராட்சி பகுதிகளில் மேல்நிலை தொட்டி அமைத்து 3 வருடங்களாக அதில் தண்ணீர் ஏற்றாமல் பயனற்ற நிலையில் தொட்டிகள் விரிசல் விட்டு பழுதடைந்துள்ளது.

    சில ஆண்டுகளாக அதில் தண்ணீர் ஏற்றாமல் பயனற்ற நிலையில் தொட்டிகள் விரிசல் விட்டு பழுதடைந்துள்ளது. சில ஊராட்சிகளில் தண்ணீர் வினியோகம் இல்லாத நிலையில் பில் தொகை பல மடங்கு அதிகரித்து வருகிறது. எனவே ஊராட்சி பகுதிகளில் மறுசீராய்வு செய்து விடுபட்ட கிராமங்களை இணைத்து அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

    • வளைவில் திரும்ப முயற்சித்த போது பிரேக் டவுன் ஆகி நின்றது.
    • அண்ணா சிலை உள்ள பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை.

    பல்லடம்:

    பல்லடத்தில் அண்ணா சிலை அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு லாரி ஒன்று அங்குள்ள வளைவில் திரும்ப முயற்சித்த போது பிரேக் டவுன் ஆகி நின்றது. ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார், கிரேன் எந்திரம் உதவியுடன் அங்கிருந்து லாரியை அப்புறப்படுத்தினர். லாரி பழுதடைந்து நின்றதால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்:-

    கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனாலும் அண்ணா சிலை உள்ள பகுதியில் போதிய விரிவாக்கம் செய்யப்படவில்லை. கேட்டால் தனியார் இடம் என்று நெடுஞ்சாலை துறையினர் கூறுகின்றனர். தனியார் இடம் என்றாலும் பொதுமக்கள் வசதிக்காக சாலை விரிவாக்க பணி செய்வதற்கு எவ்வளவோ இடங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில் அண்ணா சிலை வளைவு அருகே உள்ள இடங்களை சாலை விரிவாக்க பணிக்கு நெடுஞ்சாலைத்துறையினர் கையகப்படுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். ஏனென்றால் அந்த இடத்தில் தான் வாகனங்கள் திரும்ப முடியாமல் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்துள்ளார்.
    • அரச மரத்தில் மாலை 4 மணி அளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தாராபுரம்:

    தாராபுரம் வடதாரை காமராஜ்புரத்தை சேர்ந்தவர் தனசேகர்-சாந்தி. இவர்களது மகன் விஜய் (வயது 19) .இவர் மினி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்துள்ளார். பின்னர் தாராபுரம் ஜின்னா மைதானத்தை அடுத்த மாசாணி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள அரச மரத்தில் மாலை 4 மணி அளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விைரந்து சென்றார். பின்னர் விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜய் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் 10 மாணவ மாணவிகளுக்கு ரூ.1லட்சம் வழங்கப்பட்டது.
    • விழாவில் வெள்ளிரவெளி பஞ்சாயத்து தலைவர் சிவன்மலை தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது .விழாவில் வெள்ளிரவெளி பஞ்சாயத்து தலைவர் சிவன்மலை தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் திருப்பூர் ரோட்டரி ஆனந்தம் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் ரோட்டரி ஆனந்தம் சங்கத்தின் தலைவர் ஏ.பி. அருண் பழனிசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ரோட்டரி ஆளுநர் எம்.டி. டாக்டர் சுந்தர்ராஜன், சென்னை சிப்காட் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் குன்னத்தூர் காவல் ஆய்வாளர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே சிறப்புறையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    அதன்படி வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் 10 மாணவ மாணவிகளுக்கு ரூ.1லட்சம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை ,மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி, சலவை தொழிலாளிகளுக்கு சலவை பெட்டிகள் என ரூ.2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்த நலத்திட்ட உதவிகள் ஆனந்தம் ரோட்டரி சங்க தலைவர் அருண் பழனிச்சாமியின் தந்தை கே. பழனிச்சாமி கவுண்டர் நினைவாக தொடர்ந்து 15-வது ஆண்டாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி , ஆனந்தம் ரோட்டரி செயலாளர் கௌரிசங்கர், பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் பலவேசம், பயிற்சியாளர் பாலசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், மண்டல ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, மாவட்ட உதவி ஆளுநர் ஹரி விக்னேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கே.எம். நகர் பகுதியான 8 வீதிகளுக்கும் தார்சாலை அமைப்பதாக திருப்பூர் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாதாள சாக்கடை அமைக்காமல் தார்சாலை அமைப்பதற்கு வேலை தொடங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 52-வது வார்டு, கே.எம். நகர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மேயரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 52- வது வார்டுக்குட்பட்ட வெள்ளியங்காடு தெற்கு கே.எம். நகர் பகுதியான 8 வீதிகளுக்கும் தார்சாலை அமைப்பதாக திருப்பூர் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டியில் பாதாளசாக்கடையும் சேர்த்து தார்சாலை அமைக்கப்படுகிறது. ஆனால் எங்கள் பகுதியில் மட்டும் பாதாள சாக்கடை அமைக்காமல் தார்சாலை அமைப்பதற்கு வேலை தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் பாதாளசாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

    • பாலாஜி கதிரவனிடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் பெற்று தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
    • 5பேரும் சேர்ந்து பாலாஜியை காரில் கடத்தி சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அண்ணாநகர் 2-வது வீதியை சேர்ந்த கருப்புசாமி மகன் பாலாஜி (வயது 33). இவரை ஒரு கும்பல் நேற்று காரில் கடத்தி செல்வதாகவும், அவரை மீட்கு மாறும் ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு திருப்பூர் மாவட்ட போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சின்னப்பள்ளம் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    அப்போது ஒரு காரில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பாலாஜி இருந்தார். அவரை போலீசார் மீட்டனர். மேலும் அவரை கடத்தி சென்ற கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சைதலியை சேர்ந்த சிவக்குமார் (35), கோவிந்தராஜ் (36), சபியுல்லா (30), குட்டூரை சேர்ந்த பிரபு (29) , செம்ப டம்புத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் (36) ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.

    5பேரும் பாலாஜியை கடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சாமியார் கதிரவன் தன்னிடம் புதையல் இருப்பதாகவும் ரூ.35 லட்சம் தந்தால் அதனை எடுத்து கொடுப்பதாக தனது நண்பரான பாலாஜியிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அவர் கடத்தல் வழக்கில் கைதான சிவக்குமார், கோவிந்தராஜ், சபியுல்லா, பிரபு, ராமச்சந்திரன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய 5பேரும் ரூ.35 லட்சத்தை பாலாஜியிடம் கொடுத்துள்ளார். அதனை அவர் சாமியார் கதிரவனிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட கதிரவன் தலைமறைவாகி விட்டார். நீண்ட நாட்களாகியும் பாலாஜி புதையலை எடுத்து கொடுக்காததால் நேற்று 5 பேரும் பாலாஜியை தேடி திருப்பூர் வந்துள்ளனர். அப்போது 5 பேரும் புதையலை கொடுக்கா விட்டால் ரூ.35 லட்சத்தை திருப்பி கொடுக்குமாறு பாலாஜியிடம் கேட்டுள்ளனர். பாலாஜி கதிரவனிடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் பெற்று தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் 5பேரும் சேர்ந்து பாலாஜியை காரில் கடத்தி சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணத்துடன் மாயமான கதிரவனையும் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணையை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்தேக்க அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர். அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.

    நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் அதற்கு உரிய வட்டியை சேர்த்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2019-ம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

    இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஜப்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் உரிய இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கோனேரிபட்டி கிராமத்தில் நல்லதங்காள் அணையில் இருந்து மண் எடுத்து வந்து அதை பூஜை செய்து அதன் பிறகு பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று 5-வது நாளாக விவசாயிகள் கையில் கருப்பு கொடியுடன் வாயில் கருப்பு துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 6-வது நாளான இன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாய்க்கு தாலி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • பேராசிரியர் பாலமுருகன் மருத்துவ விடுப்பில் உள்ளதால் இன்னும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் காந்தி சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியின் தமிழ் துறை தலைவராக பாலமுருகன் பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த ஓராண்டிற்கு முன்பாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி பல்லடம் அரசு கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் மாணவி ஒருவருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆன்லைன் மூலமாக பெறப்பட்ட புகாரின் பேரில், திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்னடத்தை அலுவலர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

    அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பாலமுருகன் தலைமறைவாகி விட்டார்.அவரை போலீசார் வலைவீசி தேடி வருகினறனர்.

    கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், புகார் குறித்து தனியாக விசாரணை குழு அமைக்கப்பட்டு மாணவிகளிடம் விசாரணை நடை பெற்று வருவதாகவும், பேராசிரியர் பாலமுருகன் மருத்துவ விடுப்பில் உள்ளதால் இன்னும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.
    • 2 பேரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாரம், சுண்டக்காம்பாளையத்தை சோ்ந்தவா் ராதா கிருஷ்ணன். இவா் மக்காச்சோள அரவை ஆலை நடத்தி வருகிறாா். இந்நிலையில் கட்டிட விரிவாக்க பணிக்காக சுண்டக்காம்பாளையம் ஊராட்சித்தலைவா் ஆனந்த் என்ற லோகநாதனை தொடா்பு கொண்டுள்ளாா்.

    அவா், கட்டிட அனுமதிக்கு ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா். மேலும் முன் பணமாக ரூ.2.30 லட்சம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.

    இதையடுத்து ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை ராதாகிருஷ்ணன் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கெளசல்யா தலைமையிலான போலீசார் ஊராட்சித் தலைவா் லோகநாதன் (வயது 43), ஊராட்சி செயலா் அமிா்தலிங்கம் (35) ஆகியோரை பிடித்தனா்.இதையடுத்து 2 பேரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    • வாழைத்தோட்டத்து அய்யன்கோவிலில் சிறப்புவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

    மங்கலம்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அருகே உள்ள வி.அய்யம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வாழைத்தோட்டத்து அய்யன்கோவிலில் சிறப்புவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விழாயகா பழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன்,சாமளாபுரம் வருவாய்த்துறை ஆய்வாளர் பிரேமா, பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன், திமுக., சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி , துணைச்செயலாளர் தியாகராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி, வினோஜ்குமார், துளசிமணி ஆறுமுகம், கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளா்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளோம்
    • இளைஞா்களைத் தோ்வு செய்து சிறப்பு பயிற்சி அளித்து, அங்கீகார சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

    திருப்பூர்:

    பீகார் மாநில அரசின் தொழிலாளா் துறை சாா்பில், திறன் மேம்பாட்டு மிஷன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அந்த மாநிலத்தில் உள்ள இளைஞா்களைத் தோ்வு செய்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளனா்.

    இந்நிலையில்,பீகாா் தொழிலாளா் துறை அதிகாரிகள், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் அதன் நிா்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனா். இதில், தமிழ்நாடு உயா்திறன் மேம்பாட்டு மைய நிா்வாக இயக்குநா் கிரிதரன், பீகார் திறன் மேம்பாட்டு மிஷன் இயக்குநா் சஞ்சய்குமாா் தொழிலாளா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டம் திறன் குறித்து பேசினா்.

    திறன் மேம்பாட்டு மிஷன் கூடுதல் முதன்மை செயல் அலுவலா் ராஜீவ் ரஞ்சன் பேசுகையில்,பீகாரில் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளா்களை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், இளைஞா்களைத் தோ்வு செய்து சிறப்பு பயிற்சி அளித்து, அங்கீகார சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. இந்த தொழிலாளா்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலமாக திருப்பூரின் தொழிலாளா் தேவை பூா்த்தியாகும் என்றாா்.

    இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் பேசுகையில், பின்னலாடைத் தொழிலுக்கு திறன் பயிற்சி பெற்ற தொழிலாளா்களின் தேவை அதிகமாக உள்ளது. பீகாா் அதிகாரிகளின் அழைப்பை ஏற்று அங்குள்ள திறன் பயிற்சி மையங்களை நேரில் பாா்வையிட்டு விரிவாக ஆலோசிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

    இந்தக் கூட்டத்தில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் திருக்குமரன், பொருளாளா் கோபாலகிருஷ்ணன், இணைச்செயலாளா் குமாா் துரைசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×