என் மலர்
திருப்பூர்
- உடுமலை வக்கீல்கள் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
- பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
உடுமலை:
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு, உடுமலை வக்கீல்கள் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. உடுமலை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் கண் மற்றும் பல் பரிசோதனை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், ஈ.சி.ஜி. மற்றும் அக்குபஞ்சர், பிசியோதெரபி சிகிச்சை நடத்தப்பட்டது.இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், உடுமலை ஜே.எம். எண்-1 மாஜிஸ்திரேட் கே.விஜயகுமார், ஜே.எம். எண்-2 மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி, உடுமலை வக்கீல் சங்கத்தலைவர் மனோகரன், பொருளாளர் பிரபாகரன், அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிசந்திரன், திருப்பூர் மாவட்ட வக்கீல் அருணாசலம் உள்ளிட்ட வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்ட வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
- தனியார் தொழிற்சாலையில் மின்மீட்டரை எரித்து மின்கட்டண அளவீடு மோசடி நடைபெற்றது.
- மின்வாரிய அதிகாரிகளிடம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றது.
திருப்பூர்
திருப்பூரில் தனியார் தொழிற்சாலையில் மின்மீட்டரை எரித்து மின்கட்டண அளவீடு மோசடி சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் 5 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான கோவை தெற்கு மின்பகிர்மான வட்ட மின் அளவீடு ஆய்வக செயற்பொறியாளர் சிவக்குமார் திருப்பூர் குமார் நகர் மின்வாரிய அலுவலகத்தில் 2-வது கட்ட விசாரணையை தொடங்கினார். புகார் தெரிவிக்கப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச்செயலாளர் சரவணன், விசாரணை அதிகாரியிடம் புகார் மனு அளித்தார். முன்னதாக மின்மீட்டர் எரிக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு விசாரணை அதிகாரி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
- மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு, மேற்கண்ட 4 வார்டுகளில் குடியிருப்புகளில் குழாயை திறந்தால் 24 மணி நேரம் தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சியில் வசிக்கும் மக்களின்குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆழ்குழாய் கிணறு மூலமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு 4-வது குடிநீர் திட்டம் மூலம்
24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்
முதல்கட்ட பணிகள் விரைவில் தொடக்கம்
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது 60 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதாகும். வார்டு வாரியாக பகிர்மான குழாய்கள் இணைப்பு பணிகள் முடிந்து மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றி வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில வார்டுகளில் மட்டும் முழுமையான அளவில் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் 4-வது குடிநீர் திட்டத்தில் 4 வார்டுகளில் மட்டும் 24 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் அறிவித்தார். அதன்படி 20,30, 44, 51 ஆகிய 4 வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஆரம்பகட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு, மேற்கண்ட 4 வார்டுகளில் குடியிருப்புகளில் குழாயை திறந்தால் 24 மணி நேரம் தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் அளவு குறைந்தாலும் உடனடியாக நிரப்பும் பணிகள், குடிநீர் வினியோகம் செய்யும்போது குடிநீரின் அளவை கண்டறியும் ஸ்கேடா கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது. 20, 30, 44, 51 ஆகிய 4 வார்டுகளில் மக்கள் அதிகம் உள்ள வார்டுகளாகும்.
அதனால் அந்த வார்டுகளில் இந்த பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்பட உள்ளதாக மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
- விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவதும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
- ஆட்டோவில் பள்ளி மாணவர்களை அதிக அளவில் ஏற்றுவதால் ஏற்படும் சிக்கல்களும், விபத்துகளும் குறித்து ஓட்டுனருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
வீரபாண்டி,
திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவில் உள்ள திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் ஆட்டோ ஓட்டுனருக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பாதுகாப்பான பயணம் செய்வதும், விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவதும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், ஆட்டோவில் பள்ளி மாணவர்களை அதிக அளவில் ஏற்றுவதால் ஏற்படும் சிக்கல்களும், விபத்துகளும் குறித்து ஓட்டுனருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஆட்டோவில் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஓட்டுனரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தெரிவித்தார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மலா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பலரும் கலந்து கொண்டனர்.
- தென்மேற்கு பருவமழை பொழிவும் குறைவாகவே இருந்தது.
- நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.
குடிமங்கலம்:
குடிமங்கலம் வட்டாரத்தில் பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் 7,188 ெஹக்டேர் ஆழ்குழாய் கிணறு வாயிலாக 3,012,கிணற்று பாசனத்தில் 5,719, மீதமுள்ள 5,534 ெஹக்டேர் பரப்பில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்றுப்பாசனத்துக்கு நிலத்தடி நீர் மட்டமே முக்கிய ஆதாரமாக உள்ளது.
குடிமங்கலம் பகுதியின் சராசரி மழையளவு 681 மி.மீ., ஆகும். இதில் வடகிழக்கு பருவமழை சீசனில் 70 சதவீதம், கோடை மழை 18, தென்மேற்கு பருவமழையால் 12 சதவீதம் மழைப்பொழிவு கிடைக்கிறது.பருவமழை குறையும் காலங்களில் அப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு பல ஆண்டுகள் வளர்த்த தென்னை மரங்கள் கருகுகின்றன. கடந்த 2002 - 2004, 2012 - 14, 2017 - 18 ஆண்டுகளில் போதிய மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டது.
நடப்பாண்டு கோடை கால மழை போதியளவு பெய்யாத நிலையில் தென்மேற்கு பருவமழை பொழிவும் குறைவாகவே இருந்தது.இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் வறட்சியான காற்றும் வேகமாக வீசி வருகிறது.இதனால் பெரும்பாலான குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் பெருமளவு பாதித்து கிணறு, போர்வெல்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக ஆடிப்பட்ட சாகுபடியை துவக்காமல், தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்களை காப்பாற்றுவதில் விவசாயிகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
விளைநிலங்களில் நிலைப்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினாலும் விரைவாக ஈரப்பதம் காய்ந்து விடுகிறது. மேலும் கிணறு மற்றும் போர்வெல்களில் நீர் மட்டம் வேகமாக குறைந்து விட்டது.காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க புதிதாக போர்வெல்கள் அமைக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
சுமார் ஆயிரம் அடி வரை போர்வெல் அமைத்தாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. நீண்ட கால பயிரான தென்னை மரங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை துவங்கியுள்ளது.போதிய மழை இல்லாததால் மானாவாரி விளைநிலங்களில் ஆடிப்பட்டத்துக்கான எவ்வித பணிகளையும் விவசாயிகள் துவக்கவில்லை.
வழக்கமாக ஆகஸ்டு மாதத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.இந்தாண்டு காண்டூர் கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் பராமரிப்பு பணிகள் காரணமாக பாசனத்துக்கு இம்மாதத்தில் தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகியுள்ளது. காண்டூர் கால்வாய் பராமரிப்பு காரணமாக தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெறப்படவில்லை.
குடிமங்கலம் வட்டார விவசாயிகள் கூறுகையில், கால்வாய் பராமரிப்பு பணிகளை குறித்த நேரத்தில் முடித்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில், சாகுபடி கைவிடப்பட்டு தரிசாகும் அபாயம் உள்ளது.
கால்வாய் பராமரிப்பு பணிகளின் நிலை மற்றும் தண்ணீர் திறப்பு குறித்து தமிழக அரசு முறையான தகவல் மற்றும் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றனர்.
- திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
- போத்தனூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருப்பூர்,
திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. பெங்களூரு-கோவை இன்டர்சிட்டி ெரயில் கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டதற்கு மாற்றாக இந்த ெரயிலை கோவை வரை நீட்டிப்பதாக அப்போது ெரயில்வே அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக அந்த ெரயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டது. அந்த ெரயிலை, இப்போது ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது பாம்பன் பாலமும், ராமேஸ்வரம் ெரயில்வே நிலையமும் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரம் செல்ல வேண்டிய ெரயில்கள் அனைத்தும், மண்டபம் மற்றும் ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படுகின்றன.
கோவையிலிருந்து 1920 லிருந்தே தனுஷ்கோடிக்கு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்த பின்பு அந்த ெரயில் கோவை- ராமேஸ்வரம் இரவு நேர ெரயிலாக இயக்கப்பட்டு வந்தது.
மருதமலை, பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களையும் இணைக்கும் வகையில் 90 ஆண்டுகளாக இயங்கி வந்தது.
கோவையில் வாழும் பல லட்சம் தென் மாவட்ட மக்களுக்கும் பெரிதும் பயனளித்து வந்தது. அகல ெரயில் பாதைப்பணிக்காக நிறுத்தப்பட்ட அந்த ெரயிலை மீண்டும் இயக்கினால் கொங்கு மண்டலத்திலுள்ள பக்தர்கள், தென் மாவட்ட மக்கள் அனைவருக்கும் பேருதவியாக இருக்குமென்று தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி, மனுப்போர் நடத்தி வருகின்றன. மக்கள் பிரதிநிதிகளும் கடிதம் மேல் கடிதம் அனுப்பி வருகின்றனர். இன்று வரையிலும் இதற்கான பரிந்துரை கூட அனுப்பப்படவில்லை.
இந்நிலையில் மங்களூருவிலிருந்து ராமேஸ்வரத்துக்கு போத்தனூர் வழியாக வாரம் இரு முறை ெரயிலை இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை அனுப்பியுள்ளது.அதையும் கோவை சந்திப்புக்கு வராமல், போத்தனூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- உற்பத்தி செலவை குறைக்கவும் அடுத்தகட்ட முயற்சியாக பாலியஸ்டர் துணிக்கு சாயமிடவும் ஆயத்தமாகி வருகின்றனர்.
- நொடிக்கு 6 மீட்டர் தூரம் பிரின்ட் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் சாய ஆலைகள் அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகியுள்ளன. மின் கட்டண உயர்வு உட்பட பல காரணங்களால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. உற்பத்தி செலவை குறைக்கவும் அடுத்தகட்ட முயற்சியாக பாலியஸ்டர் துணிக்கு சாயமிடவும் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் 28 பேர் அடங்கிய குழு குஜராத் சென்று திரும்பியுள்ளது. சூரத் மற்றும் அகமதாபாத் சென்று ஓவன் துணிகளுக்கான சாயம் மற்றும் பிரின்டிங் ஆலைகளை பார்வையிட்டதோடு தொழில் அமைப்பினரை சந்தித்து திரும்பினர்.
அகமதாபாத் சாய ஆலை கழிவுகள் முதல்கட்ட சுத்திகரிப்பு மட்டும் செய்யப்படுகிறது. உப்புத்தன்மையுள்ள கழிவு கடலில் நேரடியாக கலக்கப்படுகிறது. அங்கு ஜெனரேட்டர் தேவையே இல்லை. ஒரு நாள் மின்தடை நீங்கலாக மற்ற நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறையின்றி ஆலைகள் இயங்குகின்றன. மின் தடை ஏற்பட்டால் 140 டிகிரி வெப்பத்தில் இருக்கும் துணி கருகிவிடும்.தடையில்லா மின்சாரம் இருந்தால் பல சிக்கல்களை தீர்க்கிறது என்கின்றனர் சாய ஆலை உரிமையாளர்கள்.
பிரின்டிங் தொழிற்சாலைகளில் அதிநவீன மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக டிஜிட்டல் பிரின்டிங் மெஷினில் குறைந்தது 10 மீட்டர் முதல் சாயமிடும் வசதி உள்ளது. அதாவது நொடிக்கு 6 மீட்டர் தூரம் பிரின்ட் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
அகமதாபாத் நகரில் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற ரஞ்சன் சர்மா என்பவர் உப்பில்லாமல் சாயமிடும் நானோ தொழில்நுட்பத்தில் சாயமிட்டு வெற்றி கண்டுள்ளார். துணியுடன் சிறிது ரசாயனம் கலந்து சாயமிட்டாலே போதும், உப்பு தேவையில்லை.
பாலியஸ்டர் துணிக்கு குளிர்ந்த நீரிலேயே சாயமிடுவதும் வெற்றி அடைந்துள்ளது. பாலியஸ்டர் துணிக்கு 130 டிகிரி வெப்பத்தில் சாயமிட வேண்டும். ஆனால் அகமதாபாத்தில் குளிர்ந்த நீரிலேயே சாயமிடுகின்றனர்.சாயமிட்ட துணிகளை ஒரு மணி நேரம் சுடு நீரில் நனைத்து வைத்தாலும் சாயம் பிரியாது. இது 100 சதவீதம் பாலியஸ்டர் துணி சாயமிட ஏற்றது.
சூரத், அகமதாபாத் சென்று தொழில்நுட்ப பகிர்வு செய்து கொள்வதன் மூலம் திருப்பூர் சாயத்தொழில், நிச்சயம் அடுத்தகட்டத்துக்கு நகரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாதேஸ்வரன் கூறுகையில், அகமதாபாத்தில் பார்த்து வந்தபடி உப்பில்லா நானோ தொழில்நுட்பத்தில், சாயமிட முடிவு செய்துள்ளோம். அதற்காக முறையான அனுமதியுடன் சோதனை முறையில் நானோ தொழில்நுட்பத்தில் உப்பில்லாமல் சாயமிட தீர்மானித்துள்ளோம். விரைவில் சங்க உறுப்பினர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:-
சூரத் பகுதியில் பார்த்த ஸ்டீம் ஹவுஸ் தொழில்நுட்பம் வரவேற்புக்குரியது. அகமதாபாத்தில் குளிர்ந்த நீரில் பாலியஸ்டர் துணிகளுக்கு சாயமிடும் தொழில்நுட்பமும், நானோ தொழில்நுட்பமும் திருப்பூரின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும். முதல்கட்ட சுத்திகரிப்புக்கு பின் உப்பு தண்ணீரை கடலில் கலப்பதால் செலவு குறைவாக இருக்கிறது. அதற்கு பதிலாக திருப்பூரில் உப்பில்லா சாயமிடும் தொழில்நுட்பமும் ஸ்டீம் இல்லாமல், பாலியஸ்டர் துணிக்கு சாயமிடும் தொழில்நுட்பமும் பின்பற்றப்படும். 4 நாள் பயணமாக சென்று வந்தது.
திருப்பூர் சாயத்தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் அம்சங்களுடன் இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்கள், ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் கலெக்டர அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்கள், ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 15-வது நிதிக்குழு மானியத்திட்டம், தமிழ்நாடு ஊரக கிராம சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குடிநீா் விநியோகம், வடிகால், தெருவிளக்கு, சாலை, பொதுக் கழிப்பிடம், நியாய விலைக் கடை, சமுதாய நலக்கூடம், தொகுப்பு வீடுகள், பேருந்து மற்றும் நிழற்குடை, பள்ளிக் கட்டடம், சத்துணவு மையம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம், கால்நடை மருத்துவமனை, மயானம் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டு கொண்டுவர வேண்டும் என்றாா்.
ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மதுமிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, திருப்பூா் மற்றும் ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊத்துக்குளி மற்றம் குன்னத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
- திருப்பூர் குமரன் சிலை முன் நடக்கும் போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர்:
நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய பா.ஜனதா அரசையும், அதற்கு துணை போகும் தமிழக கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்தநிலையில் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். வருகிற 20-ந் தேதி திருப்பூர் குமரன் சிலை முன் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், மருத்துவர் அணி அமைப்பாளர் கோபு, இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி, மாவட்ட, மாநகர, தொகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
- சோதனை அடிப்படையில் நடத்திய ஆய்வில் 350 சதவீதம் விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டது.
- வரி விதிப்புக்கு உட்படுத்தாதவர்களுக்கு கடும் அபராதம் விதித்து வரி வசூலிக்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை இதுவரை மாநகராட்சிக்கு வரி விதிப்புக்கு உட்படுத்தப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் வரியை குறைத்து மதிப்பிட்டு செலுத்துவதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 2 வார்டுகளில் சோதனை அடிப்படையில் நடத்திய ஆய்வில் 350 சதவீதம் விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டது. வர்த்தக, தொழிற்சாலைகள் இந்த விதிமீறலில் அதிகம் ஈடுபட்டது தெரியவந்தது.
இதன்காரணமாக வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படாமல் உள்ள வரியினங்கள், குறிப்பாக வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உடனடியாக தாங்களாகவே முன் வந்து மாநகராட்சியில் வரி விதிப்பு செய்து கொள்ள வேண்டும் என்று மேயர் தினேஷ்குமார் ஏற்கனவே அறிவித்தார். வரி குறைத்து மதிப்பிட்டுள்ளவர்களும் உரிய வரியை செலுத்த அந்தந்த பில்கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த மாத இறுதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மேயர் எச்சரிக்கை விடுத்தார். இதற்கான பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பெறும் முகாம்கள் தொடர்ச்சியாக நடந்ததால் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது.
அதற்கு பிறகும் வரி விதிப்புக்கு உட்படுத்தாதவர்களுக்கு கடும் அபராதம் விதித்து வரி வசூலிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பில்கலெக்டர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று மேயர் தினேஷ்குமார் எச்சரித்துள்ளார். இதுதவிர தனியார் நிறுவனத்தின் மூலமாக 60 வார்டுகளிலும் வரி விதிப்புக்கு உட்படுத்தாத கட்டிடங்கள், வரி குறைவாக விதிக்கப்பட்ட கட்டிடங்கள் உள்பட அனைத்து கட்டிடங்களிலும் ஆய்வு செய்து விவரங்களை சேகரிக்க உள்ளதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.
- ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம்கள் இன்று , நாளை (சனிக்கிழமை), நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்களும், முதலாம், 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்ற அதே இடங்களில் நடைபெறுகிறது.
வருவாய்த்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அந்த குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம். இதுதவிர சிறப்பு முகாம்களில் ஏற்கனவே விண்ணப்பபதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வர முடியாத குடும்ப தலைவிகள் இந்த முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி–யோ–கம் இருக்–காது.
- துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அவினாசி:
அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கப்பள்ளி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட செங்கப்பள்ளி, ஜோதி நகர், சரவணாபுரம், கே.பி.ஆர். மில் பகுதி, பியூர்டிராப் கம்பெனி பகுதி, கருடா நகர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் பல்லடம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.






