என் மலர்
திருப்பூர்
- சாலைகளை சுத்தம் செய்யும் பணிக்கு நவீன வாகனங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.
- சாலையில் பறந்து வந்து விழும் குப்பை கழிவுகளையும் இந்த எந்திரம் அகற்றிவிடும்.
திருப்பூர்:
திருப்பூர் நகரப்பகுதி சாலைகளை சுத்தம் செய்யும் பணிக்கு நவீன வாகனங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.அனைத்து பிரதான சாலைகள் மையத்தடுப்புடன் உள்ளன. இவற்றின் மையப்பகுதிகள் மற்றும் பிற ரோடுகளின் இருபுறத்திலும் அதிக அளவில் மண் சேர்கிறது. மண்ணை அப்புறப்படுத்தி, சாலைகளை சுத்தப்படுத்துவது தூய்மைப்பணியாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
காற்று வீசும் நேரங்களில் இந்த மண் குவியல் காற்றில் பறந்து சென்று வாகன ஓட்டிகளை அவதிப்படுத்துகிறது. மழை நாட்களில் இது சேறாக மாறி, வாகனங்கள் இயக்கத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கு தீர்வு காணும் விதமாக தற்போது மாநகராட்சி பகுதியில் தூய்மைப்பணிக்கு டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனம் நவீன எந்திரங்களை களம் இறக்கியுள்ளது.இந்த வாகனம் வாயிலாக எளிதாக சாலை பகுதிகள் தூய்மைப்படுத்தப்படும். சாலைகளிலும், ரோட்டோரங்களிலும் சேகரமாகும் மண்ணை அகற்றி சுத்தம் செய்யும் பணியை இந்த வாகனங்கள் மேற்கொள்ளவுள்ளன.
மேலும் சாலையில் பறந்து வந்து விழும் குப்பை கழிவுகளையும் இந்த எந்திரம் அகற்றிவிடும். தற்போது முதல் கட்டமாக இரு வாகனங்கள் வந்துள்ளன. இந்த வாகனம் 200 ஊழியர்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ரோடு தூய்மைப்பணியை செய்து முடிக்கும் திறன் கொண்டது.
இந்த வாகனங்கள் பயன்பாட்டை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.
- கர்நாடகாவில் ரூ.2000 கொடுத்து பெண்களை கையேந்த வைத்துள்ளனர்.
- தமிழகத்தில் ரூ.8 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க.-தி.மு.க.தான் காரணம்
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். மகளிர் உரிமைத்தொகையை பெற பெண்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரூ.1000 கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகிறார்கள். கர்நாடகாவில் ரூ.2000 கொடுத்து பெண்களை கையேந்த வைத்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே உரிமைத்தொகை கொடுக்கிறார்கள்.
பா.ஜ.க.வும் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200 குறைத்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் ரூ.2000 ஆக்கி விடுவார்கள்.
தமிழகத்தில் ரூ.8 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க.-தி.மு.க.தான் காரணம். தற்போது பொதுப்பணத்தை எடுத்து செலவு செய்கின்றனர். தி.மு.க. அரசு மக்களுக்காக எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இறந்த கோழிகளை கால்வாயில் வீசியெறியாமல் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைக்க வேண்டும்.
- சரியான முறையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
திருப்பூர்:
பி.ஏ.பி., கால்வாயில் குப்பை, கழிவுகள் மற்றும் இறந்த கோழிகள் வீசப்படுவதால் கால்வாயில் வரும் தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதில் பெரும் சங்கடத்தை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மேற்பார்வையில் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கால்வாய் மாசு தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் வழங்கிய அறிக்கை அடிப்படையில் ஆய்வின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு:-
கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க, நமக்கு நாமே திட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் வேலி அமைத்து தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதற்காகும் செலவினத்தில் 3ல் ஒரு பகுதியை வழங்க விவசாயிகள் ஒப்புக்கொண்டனர்.
பொங்கலூர் பகுதியில் உள்ள கால்வாயில் பயன்பாடற்ற ஜீப் சாலை வழியாக கோழிக்கழிவுகள் கொண்டு வரப்பட்டு கால்வாயில் கொட்டப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் அச்சாலையை மூட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்வாய் அருகில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இறந்த கோழிகளை கால்வாயில் வீசியெறியாமல் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைக்க வேண்டும். இதை உள்ளாட்சி நிர்வாகத்தினர், கால்நடைத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.
அதிக அளவு குப்பை, கழிவு கொட்டப்படும் இடத்தையொட்டி வசிக்கும் குடியிருப்புவாசிகள், கோழிப்பண்ணை, ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து, உள்ளாட்சி நிர்வாகத்தினர், கால்நடை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். கால்வாயில் குப்பை மற்றும் கோழிக்கழிவு கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். அபராத தொகை குறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பிற உள்ளாட்சி நிர்வாகத்தினர் முடிவெடுத்து அறிவிப்பு செய்ய வேண்டும்.
இவையெல்லாம், சரியான முறையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
- மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள வறட்சியான காலங்களில் கரும்பில் வெண்புழு தாக்குதல் அதிகமாக இருக்கும்.
- கரும்பு நடவு செய்யும் போது வேப்பம் புண்ணாக்கு இட்ட வயலில் இதன் தாக்குதல் இருக்காது.
குடிமங்கலம்:
கடந்த சில ஆண்டுகளாகவே தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை உள்ளிட்ட காரணங்களால் பணப்பயிரான கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் குறைந்துள்ளது. இந்தநிலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவகார எல்லைகளுக்குட்பட்ட திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள கரும்புப் பயிரில் ஒருசில இடங்களில் வெண்புழுக்களின் தாக்குதல் தென்படுகிறது.
இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் காளிமுத்து, மடத்துக்குளம் தாலுகா கணியூர், காரத்தொழுவு, பழனி தாலுகா நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
வெண்புழு தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அவர் கூறியதாவது:-
மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள வறட்சியான காலங்களில் கரும்பில் வெண்புழு தாக்குதல் அதிகமாக இருக்கும். வெண்புழு தாக்குதலால் கரும்பு பயிரின் இலைகள் மஞ்சள் நிறமடைந்து வாடி சருகு போல மாறிவிடும். குருத்துப்பகுதி முழுவதும் காய்ந்து விடும். பாதிக்கப்பட்ட கரும்புத்தூரினை இழுத்தால் எளிதில் கையோடு மேலே வந்துவிடும். அத்துடன் வெண்புழுக்கள் வேர் மற்றும் அடிக்குருத்து பகுதியில் அதிக அளவில் சேதம் உண்டாக்கும். வெண்குருத்துப்புழு தாக்குதலை தவிர்க்க விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கலாம்.
கரும்பு நடவு செய்யும் போது வேப்பம் புண்ணாக்கு இட்ட வயலில் இதன் தாக்குதல் இருக்காது. கோடை காலங்களில் அறுவடை முடிந்தவுடன் ஆழமாக உழவு செய்ய வேண்டும். வயலில் எப்போதும் ஈரத்தன்மை இருக்குமாறு வைத்திருக்க வேண்டும். இதனால் புழுக்கள் மண்ணை விட்டு வெளியே வந்துவிடும். பயிர் சுழற்சி முறைகளை கடைபிடித்தும் வெண்புழு தாக்குதல் பாதிப்பிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம். வெண் புழுக்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மெட்டாரைசியம் அனிசோபிலியே மற்றும் பிவேரியா பேசியானா ஆகிய உயிரியல் பூஞ்சானக் கொல்லிகளை தலா 5 கிலோ வீதம் எடுத்துக்கொண்டு 100 கிலோ மட்கிய தொழு உரத்துடன் நன்கு கலந்து 10 நாட்கள் வைத்திருந்த பின் பாதிக்கப்பட்ட இடங்களில் தூவி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு குருத்துக்கு 2 முதல் 5 புழுக்கள் வரை இதன் பாதிப்பு தென்பட்டால் ஊடுருவி பாயும் ரசாயன பூச்சிக்கொல்லிகளான குளோர்பைரிபாஸ் ஏக்கருக்கு 80 கிராம் என்ற அளவில் 80 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
- தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது.
காங்கயம்:
முத்தூர் அருகே வள்ளியரச்சல் அருகில் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 19-ந்தேதி முதல் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து செல்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும். எனவே குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
- தற்சார்பு பொருளாதாரம் குறித்து மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடக்கிறது.
திருப்பூர்:
நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்பூர் வருகை தந்தார்.
காலை 9 மணிக்கு திருப்பூர் கே.செட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் கட்சி கொடியேற்றி வைத்தார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்னா ஜே.மனோகர், திருப்பூர் மண்டல செயலாளர் வான்மதி வேலுச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் தாராபுரம் சென்ற அவர், அங்கு நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு பல்லடத்தில் தனியார் நிறுவனத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசுகிறார்.
இன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் யூனியன் மில்ரோடு ஸ்ரீசக்தி தியேட்டர் அருகில் தற்சார்பு பொருளாதாரம் குறித்து மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடக்கிறது. இதில் அவர் சிறப்புரையாற்றுகிறார்.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம் திருப்பூர் நடராஜா தியேட்டர் அருகே உள்ள தெற்கு ரோட்டரி மகாலில் நடக்கிறது. இதில் சீமான் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
- பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
- சாலைகளில் செல்லும் போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்புவதாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் சாலைப்பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விபத்துக்கான காரணங்களாக இருச்சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் இருவரும் தலைகவசம் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது அலைபேசியை பயன்படுத்துவது, மோட்டார், கார் போன்ற 4 சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாதது, சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காதது மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கடைகளினாலும், வாகனங்களில் நிறுத்தி விற்பனை செய்யும் உணவுப்பொருட்களை வாங்க வரும் நபர்களும் சாலையில் வாகனத்தை நிறுத்துவதாலும் உள்ளிட்டவைகளால் விபத்துகள் ஏற்படுகின்றது. அவற்றை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வண்ணம் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக சாலை வளைவுகள், சாலை சந்திப்புகள், குறுகிய சாலைகள்,போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் அதிகம் வேகம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலைகளில் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டுவதாலும், சாலைகளில் செல்லும் போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்புவதாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் வண்ணம் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
சாலைப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தினை தவிர்ப்பதாகும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். திருப்பூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாதாந்திர சட்டம்,ஒழுங்கு குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன்,மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா விஜயன் , துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 3000 சதுர அடியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு ஒரே கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது.
- ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெருமாநல்லூர்:
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள கூலிபாளையம் பகுதியில் தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3000 சதுர அடியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு ஒரே கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. மேற்கூரையில் அலுமினிய தகடுகளால் ஆன கூலிங் சீட் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கட்டிங், டெய்லரிங், அயர்னிங் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழ் நாட்டு தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றும் (செவ்வாய்க்கிழமை) பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வேலைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாலை வேளையில் டீ அருந்துவதற்கான இடைவேளையில் அனைவரும் வெளியே உள்ள கடைக்கு சென்று உள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் பனியன் நிறுவனத்திற்குள் இருந்து பணியை செய்து வந்தனர்.
அப்போது கனமழையோடு கூடிய சூறைக்காற்று வீசியதில், அலுமினியத்தால் ஆன தகர கொட்டகை, காற்றில் பறந்தது. மேலும் பலத்த சூறைக் காற்றின் வேகம் தாங்காமல் பனியன் நிறுவனத்தின் ஹரலோ பிளாக் சுவர்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
திடீரென நடந்த இந்த விபத்தில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர் .இதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஸ்கேட்டிங் போட்டிகள் அவிநாசி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றன.
- காவல் ஆணையா் பிரவின்குமாா் அபிநபு தொடங்கி வைத்தாா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட ரோலா் ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன், திருப்பூா் ரோல்ஸ்ப்ரோ அகாதெமி சாா்பில் ஸ்கேட்டிங் போட்டிகள் அவிநாசி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றன. 200 மீட்டா், 400 மீட்டா், 1000 மீட்டா் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளை திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவின்குமாா் அபிநபு தொடங்கி வைத்தாா்.இதில் 4 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
போட்டிகளை மாவட்ட ரோலா் ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன் மாவட்டச் செயலாளா் பிரகாஷ், தலைவா் தெய்வராஜ், துணைச்செயலாளா் ஜெயகுமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் இந்திரா சுந்தர்ராஜம் கூறுகையில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னையில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனா் என்றாா்.
- குமாரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.
- வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவர் காங்கயம் அரசு போக்குவரத்து கழக கிளையில், அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தனது மகள் யாழினியை (15) பின் இருக்கையில் உட்கார வைத்துக் கொண்டு வெள்ளகோவில், அய்யனூர் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீர் என நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் பின்னால் அமர்ந்திருந்த யாழினிக்கு லேசான காயம் ஏற்பட்டது. குமார் பலத்த காயம் அடைந்தார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குமாரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.
ஆனால் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன குமாருக்கு சங்கீதா என்ற மனைவியும், யாழினி என்ற மகளும், பூவேந்திரன் என்ற மகனும் உள்ளனர்.
- பால் பாக்கெட்களை அனுப்புவதற்காக சரக்கு வேன் வாடகைக்கு எடுத்து அனுப்பி வருகின்றனர்.
- பால் பாக்கெட்களை ஆய்வு செய்த போது, பால் பாக்கெட்கள் அதிகம் இருப்பது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான பால் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த கௌதம் (வயது34) சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பால் பாக்கெட்களை அனுப்புவதற்காக சரக்கு வேன் வாடகைக்கு எடுத்து அனுப்பி வருகின்றனர்.
இதன் ஓட்டுனராக பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் செந்தில்குமார் (வயது41) பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, பால் நிறுவனத்தில் இருந்து, குறிப்பிட்ட அளவுக்கு மேல் பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தனர்.
இதற்கிடையே நேற்று சரக்கு வேனில் ஏற்றப்பட்ட பால் பாக்கெட்களை நிறுவன மேலாளர் சகாய பாபு ஆய்வு செய்த போது, குறிப்பிட்ட அளவைவிட பால் பாக்கெட்கள் அதிகம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் விசாரித்த போது இருவரும் பால் பாக்கெட்களை திருடி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, பால் பாக்கெட்டுகள் திருட்டு குறித்து மேலாளர் சகாய பாபு புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மின்சாரப் பயன்பாட்டை குறைக்கும் வகையில் சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்துவதற்காக திட்டமிட்டனர்.
- தீ மளமளவென பரவி சூரிய ஒளி மின் தகடுகளில் தீ பற்றியது.
பல்லடம்:
பல்லடம்- பொள்ளாச்சி பைபாஸ் ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான டெக்டைல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மின்சாரப் பயன்பாட்டை குறைக்கும் வகையில் சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்துவதற்காக திட்டமிட்டனர். இதற்காக சூரிய மின் ஒளி தகடுகள் வாங்கி இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
அதனைப் பொருத்தும் வேலைகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. டெக்டைல்ஸ் நிறுவனத்தில் உள்ள காலி இடத்தில் சூரிய ஒளி மின் தகடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று மாலை அந்த இடத்தில் அருகே இருந்த காய்ந்த புற்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவி சூரிய ஒளி மின் தகடுகளில் தீ பற்றியது.
தீப்பிடித்து எரிவதை கண்ட தொழிலாளர்கள், இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சூரிய ஒளியில் மின் தகடுகளில் பற்றி எரிந்த தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் அங்கிருந்த ஏராளமான சூரிய ஒளி மின் தகடுகள் தீயில் இருந்து சேதம் ஆகியது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






