என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.
    • மது பிரியர்கள் குடியிருப்பு வீடுகளின் வாசல்படிகள் மற்றும் சாலையில் அமர்ந்து குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பசுபதி வீதியில் கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மற்றும் உடுமலை நகர கூட்டுறவு வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் இயங்கி வருவதுடன் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளது. இதனால் இந்த வீதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.

    இந்த சூழலில் உடுமலை- தளி பிரதான சாலையை ஒட்டியவாறு இந்த சாலையின் நுழைவுப் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.அங்கு மது பாட்டில்களை வாங்க வருகின்ற மது பிரியர்கள் குடியிருப்பு வீடுகளின் வாசல்படிகள் மற்றும் சாலையில் அமர்ந்து குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் சாலையில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் கடும் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    குறிப்பாக அந்த வீதி வழியாக பெண்கள் பகலில் கூட பாதுகாப்புடன் நடந்து செல்ல இயலாத சூழலே உள்ளது. இதனால் அச்சமடையும் பெண்கள் வங்கிகளில் கணக்கு தொடங்கி கடன்கள் பெறுவதற்கு கூட முன்வருவதில்லை.இதன் காரணமாக வங்கி சேவைகள் ஏழை எளிய நடுத்தர பெண்களுக்கு கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படுவதுடன் வங்கிப் பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. அதை உணர்த்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏடிஎம்., மையத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியது. போதை ஆசாமிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு கல்லை எடுத்து ஏடிஎம்., மையத்தின் கண்ணாடியை உடைத்து விட்டனர். அதைத் தொடர்ந்து பசுபதி வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதன் பின்பும் கூட கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் முன் வரவில்லை. ஏன் சிந்திக்கவும் கூட இல்லை என்றே சொல்லலாம். இதனால் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்ற பெண்கள் மற்றும் வங்கியில் பணி புரியும் பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

    அதிகாரிகளின் இந்த செயலானது பொதுமக்கள் நலனுக்கு எதிராக உள்ளதால் அரசு மீது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. எனவே பெண்கள் நலனை கருத்தில் கொண்டு பசுபதி வீதியில் இயங்கி வருகின்ற டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • 15 நாட்களுக்கு முதல் சிப்ட் முடிவடைந்த நிலையில் இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கபட்டுள்ளது
    • கால்வாயை சுத்தம் செய்திடவேண்டுமென விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., 4 ம் மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறக்கபட்டு 15 நாட்களுக்கு முதல் சிப்ட் முடிவடைந்த நிலையில் இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கபட்டுள்ளது

    38 கிலோமீட்டர் நீளம் கொண்ட பி.ஏ.பி வாய்கால் எலையமுத்தூர் பிரிவிலிருந்து வெஞ்சமடைவரை சுமார் நான்கு கிலோமீட்டர் வரை நகர குடியிருப்பு பகுதிகளை ஒட்டி செல்கிறது. இதனால் குப்பைகள் ,இறந்தவிலங்குகளின் உடல்களை கால்வாயில் வீசுவது, கோழிகழிவுகள், காய்கறிகழிவுகளை போடுவது போன்ற சிலரின் செயல்களால் கால்வாய் அசுத்தம் நிறைந்து துர்நாற்றம் வீசி தண்ணீர் செல்ல தடையாக இருந்தது. எனவே கால்வாயை சுத்தம் செய்திடவேண்டுமென விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தண்ணீர் திறந்துவிடப்படும் முன் செயற் பொறியாளர் மகேந்திரன் தலைமையில் போர்கால அடிப்படையில் களம் இறங்கிய உதவி பொறியாளர் பாபு சபரீஸ்வரன், இளம் பொறியாளர் விஜய்சேகர் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி., மூலம் தூர்வாரி புதர்மண்டி கிடந்த செடி கொடிகளை வெட்டி அகற்றினர். மீண்டும் செடிகள் வளராமல் இருக்கும் வகையில் தீ வைத்தும் எரிக்கப்பட்டது.இதனால் உடுமலை கால்வாய் சுத்தமாகி பளிச் என காட்சி தந்ததோடு கடைமடை வரை தண்ணீர் தடையின்றி சென்று வருகிறது .இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் கடைமடை வரை தண்ணீர் தடையின்றி கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்த பி.ஏ.பி அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    • உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது.
    • சமுதாயத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதில் இருந்து விலகுவது குறித்தும் விளக்கமாக கூறினர்.

    உடுமலை : 

    உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள பள்ளிகளை ஒருங்கிணைத்து உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது. திருப்பூர் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியின் திட்ட அலுவலர் நாராயணன் வரவேற்புரை ஆற்றினார். முதல் அமர்வில் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா,போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் இன்றைய சமுதாயத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதில் இருந்து விலகுவது குறித்தும் விளக்கமாக கூறினர்.

    மேலும் இலவச அலைபேசி எண்களையும் மாணவர்களுக்கு வழங்கினர். மாணவிகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும் அதில் இருந்து விடுபடுவது குறித்தும் வக்கீல் சத்தியவாணி உரை நிகழ்த்தினார். 2-வது அமர்வாக மதியம் உடுமலை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கோகுல்,ஆனந்த் ஆகியோர் அவசரகால சிகிச்சை,முதல் உதவி மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.மேலும் நாளைய உலகம் மாணவர் கையில் என்ற தன்னம்பிக்கை சொற்பொழிவும் நடைபெற்றது.திருப்பூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட முன்னாள் தொடர்பு அலுவலர் கந்தசாமி என்.எஸ்.எஸ்சின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார். நிறைவாக பூலாங்கிணார் அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் சரவணன் நன்றி கூறினார். 

    • 550 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.
    • கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுவதற்கு இந்த குளத்து நீர் பெருமளவில் உதவுகிறது.

    உடுமலை : 

    திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதியையொட்டி குளத்துப்பாளையம் பகுதியில் சுமார் 450 ஏக்கரில் கோதையம்மன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் மூலம் சுமார் 550 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் அருகில் உள்ள மடத்தூர், மயிலாபுரம், என்.ஜி.புதூர், குளத்துப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுவதற்கு இந்த குளத்து நீர் பெருமளவில் உதவுகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் மழைநீர் இந்த குளத்தில் சேமிக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் கோதையம்மன் குளத்தின் கரையில் உயர் அழுத்த மின் கம்பம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கோதையம்மன் குளத்தின் தெற்குப்பகுதியில் நேரடி பாசன வாய்க்கால் மூலம் 32 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த பகுதியில் உயர் அழுத்த மின் கம்பங்கள் அமைப்பதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மூலம் மின் வாரியத்துக்கு மனு அளித்தோம். அதனைத்தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் கடந்த சில நாட்களாக பொதுப்பணித்துறையினரின் வழிகாட்டுதலுடன் மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் மின் வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர். களிமண் நிலத்தில் மின் கம்பங்கள் அமைத்தால் அவை விரைவில் சாய்ந்து விவசாயிகளுக்கும், தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

    30 அடிக்கும் குறைவான இடைவெளியில் உயர் மின் அழுத்த பாதை செல்லும் போது தென்னை மரங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும்.மேலும் நேரடி பாசன வாய்க்கால் பராமரிக்க முடியாமல் நாளடைவில் அழியும் நிலை ஏற்படும். அத்துடன் குளத்தின் கரைகளும் சேதமடைந்து பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.மேலும் நாணல் உள்ளிட்ட காய்ந்த செடிகள் எளிதில் தீப்பிடித்து மிகப்பெரும் விபத்தை உருவாக்கக்கூடும்.

    எனவே விவசாயிகளின் நலன் கருதி உயர் அழுத்த மின் கம்பங்களை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதையும் தாண்டி விவசாயிகளுக்கும், குளத்துக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மின் கம்பங்களை அமைக்கும் முயற்சி தொடர்ந்தால் பணிகளைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வழியில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சொந்த நிதியிலிருந்து ரூ.1,000மும், வேட்டி, சேலைகளையும் வழங்கி பேசினார்.
    • பொதுக்குழு உறுப்பினர் மோகனசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காங்கயம் : 

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர். அ.லட்சுமணன் தலைமையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் காங்கயம் பழனியப்பா திருமண மண்டபத்தில் 180 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவினை தொடங்கி வைத்து, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1,000-மும், வேட்டி, சேலைகளையும் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், துணைச்செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) ஸ்டெல்லா, தி.மு.க. பிரமுகர்களான குண்டடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், தி.மு.க. யூனியன் கவுன்சிலர் ரவி, கவுன்சிலர் செல்வம் ராமசாமி, படியூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சண்முக சுந்தரம், காங்கயம் நகர தி.மு.க. செயலாளர் வசந்தம் சேமலையப்பன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மோகனசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 52 கார்டுகள் கொண்ட சீட்டு கட்டு மற்றும் ரூ. 850-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அவினாசி:

    அவினாசி போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவினாசி ராயம்பாளையம் ரோட்டில் சங்கமம் குளம் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக மடத்துப்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது 37), காந்திபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (52), தேவராயம்பாளையம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (43), மோகன் (46), முகமது யாசிக் (34), திருமுருகன் பூண்டி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (60), கருமாபாளையத்தைச் சேர்ந்த சித்திக் (47) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகள் கொண்ட சீட்டு கட்டு மற்றும் ரூ. 850-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • புதிய நிர்வாகிகள் தேர்தல் திருப்பூர் ஜீவா காலனி மில் தொழிலாளர் கூட்டுறவு சொசைட்டி மண்டபத்தில் நடைபெற்றது
    • கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பாரதிவாசன் தலைமை வகித்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்ட வீடியோ, போட்டோகிராபர்ஸ் சங்க பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் திருப்பூர் ஜீவா காலனி மில் தொழிலாளர் கூட்டுறவு சொசைட்டி மண்டபத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பாரதிவாசன் தலைமை வகித்தார். பொருளாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து சங்கப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு, சங்கத்தின் வரவு - செலவு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட வீடியோ போட்டோகிராபர்ஸ் சங்க புதிய தலைவராக எம். கார்த்திகேயன், செயலாளராக இளங்கோ, பொருளாளராக வில்லியம், துணைத்தலைவர்களாக கதிர்வேல், சுப்பிரமணிய சிவா, துணைச்செயலாளர்களாக சரவணன், சண்முகசுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ரமேஷ், சுப்பிரமணி, வேணுகோபால், பழனிச்சாமி ,ஜீவானந்தம் ,முருகநாதன், ஜெயபாலன் மற்றும் பலர் செயல்பட்டனர். வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு திருப்பூர்,பல்லடம்,அவிநாசி, காங்கேயம், தாராபுரம் ,உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டோகிராபர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அடிக்கடி ேராந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அடிக்கடி ேராந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பிரிவு பகுதியில் நேற்று ரோந்து பணி மேற்கொண்ட போது அங்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் ஜெகநாதன் (வயது 36) மற்றும் கருமத்தம்பட்டியை சேர்ந்த செந்தில் என்பவர் மகன் பிரகாஷ் ( 26) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல பல்லடம் அருகே உள்ள அறிகுறி நகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பல்லடம் சேடபாளையம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சித்திரக்கனி ( 43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 12 மதுபான பாட்டில்களும், பள்ளம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற கொடுவாய் நாகலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சிவாச்சலம் மகன் கார்த்திக் ( 32), என்பவரிடமிருந்து 9 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    • குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
    • திருப்பூர் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்டெல்லா தலைமை தாங்கினார்.

    பல்லடம்:

    பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 110 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்டெல்லா தலைமை தாங்கினார்.

    மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன் முன்னிலை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா வரவேற்றார். பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்வரிசை தட்டுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், பல்லடம் நகர் மன்ற உறுப்பினர்கள் வசந்தாமணி, சபீனா, மற்றும் துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தாமணி, சபீனா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி வரவேற்றார்.இந்த மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது.

    மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் டாக்டர் அன்வர் அலி, கண் மருத்துவ அலுவலர் பாலமுருகன்,வட்டார சுகாதார ஆய்வாளர் லோகநாதன், பொங்கலூர் வட்டார சுகாதார ஆய்வாளர் வரதராஜன், மற்றும் சுகாதாரத் துறையினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் ந.சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.
    • பழுதுகளை சரி செய்வதற்கு ரூ.40 லட்சம் மதிப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சி அலுவலகத்திலுள்ள நகர்மன்ற கூடத்தில் காங்கயம் நகர்மன்ற சாதாரண கூட்டமானது நடைபெற்றது.நகர்மன்ற தலைவர் ந.சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் துணைத் தலைவர் கமலவேணி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் காங்கயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் குடிநீர்க் குழாய்கள் மற்றும் மின் மோட்டார்களின் பழுதுகளை சரி செய்வதற்கு ரூ.40 லட்சம் மதிப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மேலும் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் இருந்து 9-வது வார்டு வரை குடிநீர் குழாய்களில் ஏற்படும் பழுதை சரி செய்வதற்கும், மின் மோட்டார்கள் மற்றும் சிறு மின் விசைப்பம்பு ஆகியவற்றில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதற்கும் ரூ.20 லட்சம் மதிப்பிலும், 10-வது வார்டு முதல் 18-வது வார்டு வரை உள்ள குடிநீர் குழாய்கள் மற்றும் மின் மோட்டார்கள் பழுதுகளை சரி செய்ய ரூ.20 லட்சம் மதிப்பிலும் மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    காங்கயம் நகராட்சி பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்குவதற்கு ரூ.1 லட்சம் மதிப்பில் நகராட்சி பொது நிதியிலிருந்து வழங்கப்படுவது உள்பட மொத்தம் 18 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து காங்கயம் நகராட்சியின் நகர்மன்றத் தலைவர், ஆணையாளர், நகர்மன்ற துணைத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • வான் மழை மாதாந்திர கூட்டத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக எம். எஸ்.சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் வனம் அறக்கட்டளையில் வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் மறைவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்று நடப்பட்டது. பின்னர் நடைபெற்ற வான் மழை மாதாந்திர கூட்டத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வனம் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக எம். எஸ்.சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியில் உள்ள சங்க அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதணன், பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம், மற்றும் சுப்பிரமணியம், பொருளாளர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×