என் மலர்
திருப்பூர்
- வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
- கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.50, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள். இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10, கத்தரிக்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.30 , சின்ன வெங்காயம் ரூ. 50, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60, வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.150, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.50, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- வனத்தின் தன்மையை பாதிக்கப்படுவது மற்றும் வனவிலங்குகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறித்து அறிவிப்பு பதாகையுடன் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
- கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வருவதை முற்றிலுமாக தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
உடுமலை,அக்.1-
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் ஏழுமலையான் கோவில் உள்ளது.இந்த கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு புரட்டாசி மாதம் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டும் வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர்.
அந்த வகையில் 2- வது சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.அப்போது பூஜை சாமான்கள் மற்றும் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து உதவி வனப்பாதுகாவலர் க.கணேஷ்ராம் தலைமையில் உடுமலை வனச்சர அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள், அதன் பயன்பாட்டால் வனத்தின் தன்மையை பாதிக்கப்படுவது மற்றும் வனவிலங்குகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறித்து அறிவிப்பு பதாகையுடன் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்துமாறும் அறிவுரை வழங்கப்பட்டது. அத்துடன் கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய மாற்று பைகளும் வழங்கப்பட்டது. மேலும் வருகின்ற சனிக்கிழமைகளில் கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வருவதை முற்றிலுமாக தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
வனத்துறையினரின் இந்த நடவடிக்கையால் பிளாஸ்டிக் பைகள் வன பகுதிக்குள் ஊடுருவுவது ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்டதால் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலையில் விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பாதித்து வந்தனர்.
- நீர் இன்றி பல ஆயிரக்கணக்கான மரங்கள் காய் பிடிக்காமலும், காய்ந்தும் வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலையில் விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பாதித்து வந்தனர்.இந்நிலையில் கோடை மழை, தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று கிணறு, போர்வெல்களில் நீரின்றியும், புதிதாக போர்வெல்கள் அமைத்தாலும் நீர் இன்றி, நிலைப்பயிரான தென்னையை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
பல கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்து, வெட்டி அகற்றும் அவல நிலை உள்ளது.
இது குறித்து தென்னை விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் மதுசூதனன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், நீர் இன்றி பல ஆயிரக்கணக்கான மரங்கள் காய் பிடிக்காமலும், காய்ந்தும் வருகிறது. ஒரு சில மாதங்கள் இதே நிலை நீடித்தால் தென்னை மரங்கள் அடியோடு காய்ந்து கருகும்.
நீண்ட கால பயிரான தென்னையை காக்க தண்ணீர் லாரிகள் வாயிலாக ஒரு லாரி ரூ.4,500 விலை கொடுத்து வாங்கி ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து, மரங்களின் உயிரை காப்பாற்ற விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மரத்திற்கு உரிய இழப்பீடும், மறு நடவிற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தென்னை வளர்ச்சி வாரியத்தின் சார்பில் தென்னை காப்புறுதி திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவீதம் மற்றும் தலா 25 சதவீதம், மாநில அரசும், விவசாயிகளும் செலுத்தும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
எனவே பயிர்க்காப்பீட்டு திட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் இணையும் வகையில், அரசு துறைகளை ஒருங்கிணைத்து துரித நடவடிக்கை எடுக்கவும், காப்பீட்டுத்தொகையாக ஒரு மரத்திற்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கவும் வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பழமர செடிகள் மானிய விலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக வழங்கப்படுகிறது.
- தங்களது ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ போன்றவற்றினை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
குண்டடம்
குண்டடம் வட்டார பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெறுவதற்காக பழமர செடிகள் மானிய விலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ச.சசிகலா தெரிவித்துள்ளதாவது:-
நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக 5 வகையான பழமரச் செடிகளான மா, சப்போட்டா, கொய்யா, நெல்லி மற்றும் எலுமிச்சை போன்றவை அடங்கிய தொகுப்பானது 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.200, மானிய விலையில் ரூ.50-க்கு 5 வகை பழ மர செடிகள் அடங்கிய தொகுப்பினை ஒருவர் பெற்றுக் கொள்ளலாம்.
கிராமம் ஒன்றிற்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் மூலமாக 176 எண்களும் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 எண்களும் வழங்கப்படும். 2023- 24 நிதியாண்டில் குண்டடம் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களான பெரியகுமாரபாளையம், கண்ணாங்கோவில், செங்கோடம்பாளையம் மற்றும் பெல்லம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு 80 சதவீத தொகுப்புகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மீதம் உள்ள 20 சதவீத தொகுப்புகளை மற்ற கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்கும் இத்தகைய பழமரச்செடிகளை அனைவரும் பெற்று பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்களது விபரங்களை www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தங்களது ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ போன்றவற்றினை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர் ரத்தின பாரதி 9488928722, உதவி தோட்டக்கலை அலுவலர் சிவமூர்த்தி 9750327875, மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் அபிராமி 6385536512 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- ஜீவானந்தம் (வயது 34) இவர் பல்லடத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்
- வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 4 லட்சம் மற்றும் 2 1/4 பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கொடுவாய் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 34). இவர் பல்லடத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி குடும்பத்துடன் திண்டுக்கல் சென்று விட்டார். பின்னர் அடுத்த நாள் காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த ஜீவானந்தம் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 4 லட்சம் மற்றும் 2 1/4 பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை. இது குறித்து ஜீவானந்தம் அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பெருந்தொழுவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்த அப்பாஸ் என்பவரது மகன் ஜீனஸிர்(20) என்பதும், இவர் ஜீவானந்தம் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரொக்கம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- குருசாமி என்பவரது மகன் ரூபானந்தன் (வயது 28) ஓட்டிக்கொண்டு சென்றார்.
- அரசு பஸ் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பனியன் நிறுவன பஸ் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
ஊத்துக்குளி :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பூசாரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சில் பணிபுரியும் வேலை ஆட்களை ஏற்றிக்கொண்டு ஊத்துக்குளி பாப்பம்பாளையத்தை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் ரூபானந்தன் (வயது 28) ஓட்டிக்கொண்டு சென்றார். செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே ரோட்டில் பஸ்சுக்கு முன்னால் கரூர் மாவட்டம் உடையாரட்டியை சேர்ந்த அரசன் என்பவரது மகன் முனியப்பன் (வயது 41) மேட்டுப்பாளையத்தில் இருந்து லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர், தனக்கு முன்னால் சென்ற ஒரு லாரியை முந்தி செல்ல முயற்சித்து எந்தவித சிக்னலும் இல்லாத இடத்தில் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதாக தெரிகிறது . ரூபானந்தன் லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது பஸ்சிற்கு பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பனியன் நிறுவன பஸ் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பனியன் நிறுவன பஸ் அருகே வந்த கார் மீது உரசி இடதுபுறம் உள்ள சாலையில் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ரூபானந்தனுக்கு முதுகு, மார்பு மற்றும் இரண்டு கால்களில் பலத்த காயங்களும், பஸ்சில் பயணித்த 21 பேருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது. அரசு பஸ்சில் பயணம் செய்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக எந்தவித காயமும் இன்றி தப்பினர் . இந்த விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் முனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலக ரேபிஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- கலந்து கொண்ட அனைவரும் உலக ரேபிஸ் தடுப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வட்டார பொது சுகாதார துறையின் சார்பில் பொங்கலூர் அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக ரேபிஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வெறி நாய் கடி பற்றியும், நாய் கடி தடுப்பூசி பற்றியும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், மருத்துவ அலுவலர்கள் நந்தகுமார், நிவேதா மற்றும் கால்நடை மருத்துவர்கள் உமாசங்கர், ஜெகநாதன் ஆகியோர் எடுத்து கூறினர். மேலும் கலந்து கொண்ட அனைவரும் உலக ரேபிஸ் தடுப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம், துணை தலைவர் ராதாகிருஷ்ணன் . சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி மற்றும் பூமலர்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று வருகின்றன.
- பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம் அல்லது சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று வருகின்றன. இதனால் ஆடு வளர்ப்போர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (35) என்பவர் தான் வளர்த்து வரும் வெள்ளாடுகளை காட்டில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று பகலில் திடீரென அங்கு வந்த சில தெரு நாய்கள் 7 ஆடுகளை கடித்து கொன்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். இதே போல் முத்துக்குமார் நகர் என்ற இடத்தில் 5 ஆடுகளை நாய்கள் கடித்து படுகாயம் அடைந்தன. அந்த ஆடுகள் உரிமையாளர்களால் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இதுவரை வெள்ளகோவில், கல்லாங்காட்டுவலசு, அய்யனூர், திருமங்கலம், கச்சேரி வலசு, நாச்சிபாளையம், காடையூரான் வலசு உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் நாய்கள் கடித்து இறந்துள்ளன. பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் விட வேண்டும், இறந்து போன ஆடுகளுக்கு உண்டான உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் அல்லது சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
- இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தியாகி சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
- தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமையில் சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊத்துக்குளி :
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகாவில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தியாகி சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் மாவட்ட பொருளாளர் மணியன், எம்.தொட்டிபாளையம் தாலுகா செயலாளர் பிரகாஷ், நடுப்பட்டி ராசப்பன், கரைப்பாளையம் கருப்புசாமி, ராமசாமி, அம்பேத்கர் நகர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதேபோல் ஊத்துக்குளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா கமிட்டி அலுவலகத்தில் தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமையில் சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், ஆர்.எஸ். கிளை செயலாளர் சிவசாமி, பாலமுரளி, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன் பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015 - ல் கட்டப்பட்டது.
- அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது.
உடுமலை:
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.அதன் மூலமாக பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் பொதுமக்கள் உடுமலைக்கு வந்து செல்கின்றனர்.இந்த சூழலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்டுவதற்கு ஏதுவாக பஸ் நிலைய வளாகத்தில் தனியாக அறை கட்டப்பட்டது.சிறிது காலம் செயல்பட்டு வந்த அந்த அறை பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் பெண்கள் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.அதுமட்டுமின்றி பஸ்நிலைய வளாகத்தில் பெண்களுக்கு தனியாக சுகாதார வளாக வசதியும் ஏற்படுத்தி தரவில்லை.இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
கிராமத்தில் இருந்து உடுமலை நகருக்கு வருகை வருகின்ற பெண்கள் பல்வேறு பணிகளை முடித்து கொண்டு திரும்பவும் வீட்டுக்கு செல்வதற்கு மத்திய பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதில் கர்ப்பிணி மற்றும் கை குழந்தையுடன் உள்ள பெண்களும் அடங்குவர். பிரசவத்துக்கு பின்பு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன் பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015 - ல் கட்டப்பட்டது. சிறிது காலம் செயல்பாட்டில் இருந்த அந்த அறை போதிய பராமரிப்பு இல்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் நீண்ட காலமாக பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கைக்குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் உடுமலைக்கு வருகை தருகின்ற கிராமத்து பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இது குறித்து நிர்வாகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது. மேலும் ஆண்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகமும் பராமரிப்பில்லாமல் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் பஸ்சுக்காக காத்து கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடுமலை பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
அதுமட்டுமின்றி பெண்களுக்கு தனியாக சுகாதார வளாகம் அமைத்து கொடுப்பதுடன் பராமரிப்பில்லாமல் உள்ள ஆண்களுக்கான சுகாதார வளாகத்தை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
- ஈசல்தட்டு பகுதியில் சின்ன கூழையன் என்பவர் தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறியதாக தெரிகிறது
- ஒரு உயிரை காப்பதற்கு பல உயிர்களையும் பணயம் வைத்து இந்த செயலை செய்து வருகின்றனர்.
உடுமலை:
உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டுமலை, கோடந்தூர், பொறுப்பாறு, தளஞ்சி,தளிஞ்சிவயல்,ஈசல் தட்டு,குழிப்பட்டி, குருமலை, மேற்கு குருமலை, கருமுட்டி, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. நிலையான வருமானம் இல்லாததால் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் வடுமாங்காய் பறித்தல்,தேன் எடுத்தல் போன்ற உயிரை பணயம் வைக்கும் சுய தொழில்களிலும் ஈடுபட வேண்டிய சூழல் மலைவாழ் மக்களுக்கு ஏற்படுகிறது.
அந்த வகையில் ஈசல்தட்டு பகுதியில் சின்ன கூழையன்(வயது 65) என்பவர் தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார்.இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.
அதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் சின்ன கூழையனை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி எடுத்து வந்தனர்.அவசரகால உதவிகள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாதை வசதி அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையிலேயே இருந்து வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாவதும் தொடர்கதையாக உள்ளது. பிரசவம்,எதிர்பாராமல் நடக்கும் விபத்து,அவசர கால உதவியை பெறுவதற்கு வனப்பகுதி வழியாக பயணித்து அடிவாரத்தை அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் உயிரை காக்கும் பொன்னான நேரம் வீணாகி விடுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
மேலும் வனப்பகுதியில் தொட்டில் கட்டி தூக்கி வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.இதற்காக திடகாத்திரமான உடல்வாகு கொண்ட நபர்கள் தேவை. ஒரு உயிரை காப்பதற்கு பல உயிர்களையும் பணயம் வைத்து இந்த செயலை செய்து வருகின்றனர்.எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி வனப்பகுதியில் பாதை அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் தேன்எடுத்தல், வடுமாங்காய் பறித்தல் போன்ற உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளும் தொழில்களுக்கு தகுந்த உபகரணங்களும், விழிப்புணர்வும் வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- உலக வர்த்தகம் பாதிப்பால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது.
- இயற்கை பருத்தி இழைகளால் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணி பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறிகள் மூலம் ஜவுளி உற்பத்திக்கான காடாத்துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் உலக வர்த்தகம் பாதிப்பால் விசைத்தறி காடா துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறியதாவது:-
உலக வர்த்தகம் பாதிப்பால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. வட மாநிலங்களில் துணி உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் அவர்கள் காடா துணியை விலை குறைவாக கொடுக்க முடிகிறது. கடந்த 5 மாதத்தில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான விசைத்தறி காடா துணி விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
எனவே தமிழ்நாட்டில் புதிய ஜவுளி கொள்கை அமைத்து விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு என்று தனியாக அதிகாரிகள் குழுவை அமைத்து ஆராய்ந்து மானியம், வங்கி கடன் உதவி உள்ளிட்ட தேவையானவற்றை கண்டறிந்து அவற்றை செய்து கொடுத்தால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பழையபடி இயல்பு நிலைக்கு திரும்பும். இயற்கை பருத்தி இழைகளால் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணி பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






