என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தமிழகத்தில் தற்போது 3,122 வரையாடுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது
    • 5 ஆண்டுகளில் செயல்படுத்த ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை

    தமிழகத்தின் மாநில விலங்கு நீலகிரி வரையாடுகள். தமிழகத்தில் தற்போது 3,122 வரையாடுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.அழிவின் விளிம்பில் இவை உள்ளன. அவற்றை மீட்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக அரசு டிசம்பர் 2022ம் ஆண்டு அறிவித்தது.

    இத்திட்டத்தை, 2022 - 2027 என, 5 ஆண்டுகளில் செயல்படுத்த ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் அவற்றின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட உள்ளன. வரையாடுகள் தற்போது தமிழகம், கேரளாவில் பரவலாக உள்ளன. இதையடுத்து இரு மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பை நடத்த வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதன்படி நவம்பர்மாதம் தென்மேற்கு பருவமழைக்குப் பிறகு மற்றும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் என தமிழக வனத்துறை இரு விதமாக, கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. 

    • வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று, 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது.
    • சொந்த போனில், ஆசிரியர்களே இணையதள கட்டணம் செலுத்தி ஆன்லைன் தேர்வு நடத்தி வருகிறோம்.

    திருப்பூர்:

    கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்ட கற்றல் இடைவெளி போக்க எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது.வரும் 2025 வரை, இந்த சிலபஸ் அடிப்படையில் தான் பாடம் கையாளப்படும். 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை, அரும்பு, மொட்டு, மலர் என 3 வகையினராக பிரித்து பாடம் நடத்தப்படுகிறது.

    வினாத்தாள் பிரத்யேகமாக வடிவமைத்து, மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப அவர்களின் கற்றல் நிலை பரிசோதிக்கப்படுகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று, 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது.

    ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு வகை வினாத்தாள் திரையில் தோன்றும். இதை ஆசிரியர்கள் உதவியோடு விடையை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இத்தேர்வு ஆசிரியர்களின் மொபைல் போன் மூலமாக நடத்தப்படுகிறது. அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் வாராந்திர தேர்வு வெள்ளிக்கிழமை துவங்கி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை தொடருகிறது.சர்வர் குளறுபடி, நெட்வொர்க் சிக்கல் இல்லாமல் இருந்தால் மட்டுமே, இருநாட்களில் அனைத்து மாணவர்களும் ஆன்லைனில் தேர்வை முடிக்க முடியும்.மீதமுள்ள நாட்களில் வகுப்பு கையாள்வதோடு, அதிக வகுப்பு செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக, ஆசிரியர்கள் தரப்பில் தொடர் புகார்கள் எழுந்தன.

    இதைத்தொடர்ந்து, மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் இரண்டாம் பருவத்தில் இருந்து இருவாரத்திற்கு ஒருமுறை ஆன்லைன் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், வாரத்தில் அதிகபட்சம் 3 நாட்கள் வரை, ஆன்லைன் தேர்வு நடத்திவிட்டு மீதமுள்ள நாட்களில் மட்டுமே பாடம் கையாள வேண்டியிருக்கிறது. ஒரே நாளில் ஆன்லைன் தேர்வு நடத்துமளவுக்கு கம்ப்யூட்டர்களோ, டேப்லெட் போன்ற எந்த உபகரணங்களும், தொடக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.சொந்த போனில், ஆசிரியர்களே இணையதள கட்டணம் செலுத்தி ஆன்லைன் தேர்வு நடத்தி வருகிறோம்.

    இதுகுறித்து தொடர்ச்சியாக ஆசிரியர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் தற்போது இருவாரத்திற்கு ஒருமுறை ஆன்லைன் தேர்வு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றனர்.

    • உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களின் முக்கிய பாசன நீராதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது.
    • மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை கைகொடுக்காத நிலையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

    மடத்துக்குளம்

    உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களின் முக்கிய பாசன நீராதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. அமராவதி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 63 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாய் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு நேரடியாக பலனளித்து வருகிறது. இதுதவிர நிலத்தடி நீராதாரத்தை உயர்த்துவதற்கு உதவுவதன் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்துக்கு கைகொடுக்கிறது.

    இந்தநிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் பிரதான கால்வாயில் பல இடங்களில் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் கால்வாயின் கரையில் மட்டுமல்லாமல் கால்வாயின் உள்ளேயும் குப்பைகளை கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் கால்வாயில் தேங்கும் குப்பைகள் மற்றும் பாலிதீன் கழிவுகள் நீர் திறப்பின்போது மடைகளில் அடைப்பை ஏற்படுத்துவதால் பெருமளவு நீர் வீணாகிறது. அத்துடன் கழிவுகளால் விளைநிலங்களும் வீணாகும் நிலை உள்ளது.மேலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மண் குவியல் நிறைந்து பாசன நீர் செல்வதில் தடைகளை ஏற்படுத்துகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மடத்துக்குளம் பகுதியில் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் அமராவதி பிரதான கால்வாயை தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை கைகொடுக்காத நிலையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைப்பயிர்களை காப்பாற்ற போராடும் நிலை உள்ளது.எனவே அமராவதி அணையிலிருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில் தற்போது 64.87 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவான இருப்பேயாகும்.

    பிரதான கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் வீணாகாமல் கடைமடை வரை உள்ள விவசாயிகளுக்கும் முழுமையாக போய் சேர வேண்டியது அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு கால்வாய் தூர்வாரப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.ஆனால் கிருஷ்ணாபுரம் முதல் துங்காவி வரையிலான குறைந்த தூரத்துக்கு மட்டுமே தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. எனவே கால்வாயை முழுமையாக தூர்வாரவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சனிக்கிழமை தோறும் அதிகாலையில் ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
    • அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது.

    குண்டடம்:

    குண்டடத்தில் சனிக்கிழமை தோறும் அதிகாலையில் ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கோழிகள் ஆகியவைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோல் அவற்றை வாங்குவதற்கு ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வருகிறார்கள்.

    இந்த சந்தையில் கடந்த மாதம் விறுவிறுப்பாக ஆடு, கோழிகள் விற்பனையானது. ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதால் கடைகளில் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் குறைந்த அளவு எண்ணிக்கையில் ஆடு -கோழிகளை வாங்கிச்செல்கின்றனர். இம் மாதம் இறைச்சி கடை வியாபாரிகள் குறைந்த அளவே சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது.

    கடந்த வாரம் 10கிலோ எடைகொண்ட ஆடு ரூ. 5ஆயிரத்து 500 வரை விற்பனையானது. இந்த வாரம் 10 கிேலா ஆடு ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதேபோல் கோழி கடந்த வாரம் 1 கிலோ ரூ. 350 வரை விற்பனையானது. இந்தவாரம் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது.

    இதுபற்றி வியாபாரிகள் தரப்பில் கூறும்போது,வழக்கமாக புரட்டாசி சீசனில் ஆடுகள் மற்றும் கோழிகளின் விலை குறைவாகத்தான் இருக்கும்.புரட்டாசி முடியும் தருவாயில் நல்ல விலை கிடைக்கும் என்றனர்.

    • வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ஏலத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளைபொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.இதன்படி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 17 ஆயிரத்து 637 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனை தொடர்ந்து டெண்டர் முறையில் ஏலம் நடைபெற்றது.இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.24.60-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.65-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 60 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.82.15-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.70-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 4 ஆயிரத்து 748 தேங்காய்களும், 18 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது.இதில் தேங்காய் ஒரு கிலோவிற்கு 55 பைசாவும், தேங்காய் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.6.20-ம் கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைத்தது.

    மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு 9 டன் அளவில் மொத்தம் ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 117-க்கு வேளாண் விளை பொருள்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    • ஒருசில இடங்களில் தெருநாய்கள் குழந்தைகளை விரட்டி, விரட்டி கடிக்கவும் செய்கின்றன.
    • குழந்தைகள், மாணவ-மாணவிகள் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகரின் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் கூட்டம், கூட்டமாக படையெடுத்து செல்லும் தெருநாய்கள் பொதுமக்களை தொடர்ந்து பதம் பார்த்து வருகின்றன.

     ஒருசில இடங்களில் தெருநாய்கள் குழந்தைகளை விரட்டி, விரட்டி கடிக்கவும் செய்கின்றன. வீதிகளில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியாக செல்ல முடியாமல் உயிரை கையில் பிடித்தபடியே ஒருவித அச்சத்துடனேயே போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையோரம் படுத்திருக்கும் தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை திடீரென விரட்டுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுவதுடன், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட காரணமாக அமைகிறது. இந்த நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் தபால் அலுவலகம் வீதியில் கடந்த 2 நாட்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் வீடுகளில் இருந்த ஆட்டுக்குட்டி மற்றும் கோழிகளை தெருநாய்கள் கடித்து குதறி உள்ளன. இதில் மறுநாள் காலை ஆடு, கோழிகள் பரிதாபமாக செத்துக்கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அனுப்பர்பாளையம்-ஆத்துப்பாளையம் சாலை, கோகுலம் காலணி, தபால் அலுவலகம் வீதி உள்பட அனுப்பர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக வெறித்தனத்துடன் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள், மாணவ-மாணவிகள் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, நத்தக்காடையூர், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய் ஆடு , மாடுகளை கடித்து கொன்று வருகின்றன. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

     எனவே அந்த பகுதிகளில் சுற்றி திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடித்து செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உளவுத்துறை கண்காணிப்பு குறைவால் இதுபோன்ற தாக்குதல் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது.
    • வருங்காலத்தில் பல இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லவும், ஆயுத கலாசாரம் பெருகவும், அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாடு ஆயுதகாடாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது.

    திருப்பூர்

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கம்பம் மலை தேயிலை தோட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகம் மீது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதலை நடத்திவிட்டு எச்சரிக்கை செய்வது போல் கருத்தை பதிவிட்டு சென்றுள்ளனர். தமிழகத்தில் நக்சல் தீவிரவாதிகள் தலை தூக்குகின்றனர் என்றும், எல்லையில் உள்ள காடுகளில் பதுங்கி பயிற்சி எடுத்து வருகிறார்கள் என்றும், காவல்துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து நக்சலைட்டுகளை ஒடுக்க வேண்டும் என்றும் பலமுறை தமிழக அரசுக்கு இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    தற்போது தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதால் இந்த தாக்குதல் நீலகிரியில் நடந்துள்ளது. உளவுத்துறை கண்காணிப்பு குறைவால் இதுபோன்ற தாக்குதல் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தில் நக்சல் தடுப்பு போலீஸ் பிரிவு செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வருங்காலத்தில் பல இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லவும், ஆயுத கலாசாரம் பெருகவும், அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாடு ஆயுதகாடாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழக அரசு நக்சலைட்டுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • பாரதமாதா இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவா் சாய்குமரன் தலைமை வகித்தாா்.
    • ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    திருப்பூர்:

    அவிநாசிபாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துத்தர வலியுறுத்தி இந்து பரிவாா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    பல்லடத்தை அடுத்த கொடுவாய் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாரதமாதா இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவா் சாய்குமரன் தலைமை வகித்தாா். இதில் அவிநாசிபாளையம் லட்சுமி நகா், அம்மன் நகா், போக்குவரத்து நகா் ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும், அவிநாசிபாளையம் காவல் நிலையத்தின் புதிய கட்டடத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் மற்றும் போக்குவரத்துப் பிரிவு தொடங்க வேண்டும், சுங்கம் பகுதியில் உயா்மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

    ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். 

    • கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் (பொறுப்பு) பெ.அய்யப்பராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிளுவன்காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலபட்டி, குருவப்பநாயக்கனூர் மற்றும் ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.அப்போது மின் பாதைகளின் அருகில் உள்ள மரங்களின் கிளையை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் டி.கோபால்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மூலனூர், கன்னிவாடி, கொளத்துபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 3-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மூலனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, நொச்சிக்காட்டு வலசு, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.

    கன்னிவாடி துணை மின்நிலையங்களுக்குட்பட்ட மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.

    கொளத்துப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்டஉப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம். துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு. கரையூர், காளிபாளையம். மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன் கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் சாலக்கடை, எலுகாம்வலசு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புத்தகங்களை அந்தந்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
    • பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றனர்.

    திருப்பூர்:

    காலாண்டு தேர்வு தொடங்கிய ஓரிரு நாளில், இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் சென்னையில் இருந்து திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தெற்கு பகுதி பள்ளிகளுக்கான புத்தகம், நோட்டுகள் குப்பா ண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், வடக்கு பகுதி பள்ளிகளுக்கு புத்தகங்கள் 15 வேலம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் இருப்பு வைக்கப்ப ட்டிருந்தது. தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து, புத்தகங்களை அந்தந்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.

    இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை, மொழிப்பாடம், பிற பாடங்கள் உட்பட 70 ஆயிரம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஐந்தாம் வகுப்புக்கு 14 ஆயிரம் புத்தகங்கள், குறைந்தபட்சமாக ஒன்றாம் வகுப்புக்கு 79 ஆயிரம் புத்தகங்கள் வந்துள்ளன.

    இவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்படும். பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றனர்.

    • திருப்பூர் மாவட்டம்-மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நீலிகணபதிபாளையம் பகுதியில் கருட பெருமாள் கோவில் உள்ளது.
    • கருடபெருமாள் சிறப்பு காய்கறிஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்-மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நீலிகணபதிபாளையம் பகுதியில் கருட பெருமாள் கோவில் உள்ளது.இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான எம்.செட்டிபாளையம், சுல்தான்பேட்டை,நீலிகணபதிபாளையம்,மங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காற்றாலைகளில் கேபிள் வயர் திருடும் கும்பல் என்பது தெரிய வந்தது.
    • இந்த 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி, வடமலைபாளையம் ஊராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த காற்றாலைகளில் உள்ள கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போவதும் நடந்து வந்தது. இது குறித்து காற்றாலை உரிமையாளர்கள் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காற்றாலைகளில் கேபிள் வயர் திருடும் கும்பல் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவர்கள் மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டம்பட்டி மற்றும் வடமலைபாளையம் பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர்களை திருடியது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு வேன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த முருகேசன் என்பரது மகன் வேல்குமார் (வயது 28 ), அதே பகுதியை சேர்ந்த பிச்சை நாடார் என்பவரது மகன் மாரியப்பன் (38), வெள்ளைச்சாமி என்பவரது மகன் பெருமாள் (32), தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ராமன் என்பவரது மகன் விஜி (28), புதுக்கோட்டை மாவட்டம் ,இலுப்பூர் பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரது மகன் ஜீவானந்தன் (23) என்பதும் தெரிய வந்தது. இந்த 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×