search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடு-கோழிகளை கடித்துக்கொல்லும் வெறிநாய்கள் - பொதுமக்கள் அச்சம்
    X

    கோப்பு படம்.

    ஆடு-கோழிகளை கடித்துக்கொல்லும் வெறிநாய்கள் - பொதுமக்கள் அச்சம்

    • ஒருசில இடங்களில் தெருநாய்கள் குழந்தைகளை விரட்டி, விரட்டி கடிக்கவும் செய்கின்றன.
    • குழந்தைகள், மாணவ-மாணவிகள் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகரின் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் கூட்டம், கூட்டமாக படையெடுத்து செல்லும் தெருநாய்கள் பொதுமக்களை தொடர்ந்து பதம் பார்த்து வருகின்றன.

     ஒருசில இடங்களில் தெருநாய்கள் குழந்தைகளை விரட்டி, விரட்டி கடிக்கவும் செய்கின்றன. வீதிகளில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியாக செல்ல முடியாமல் உயிரை கையில் பிடித்தபடியே ஒருவித அச்சத்துடனேயே போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையோரம் படுத்திருக்கும் தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை திடீரென விரட்டுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுவதுடன், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட காரணமாக அமைகிறது. இந்த நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் தபால் அலுவலகம் வீதியில் கடந்த 2 நாட்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் வீடுகளில் இருந்த ஆட்டுக்குட்டி மற்றும் கோழிகளை தெருநாய்கள் கடித்து குதறி உள்ளன. இதில் மறுநாள் காலை ஆடு, கோழிகள் பரிதாபமாக செத்துக்கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அனுப்பர்பாளையம்-ஆத்துப்பாளையம் சாலை, கோகுலம் காலணி, தபால் அலுவலகம் வீதி உள்பட அனுப்பர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக வெறித்தனத்துடன் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள், மாணவ-மாணவிகள் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, நத்தக்காடையூர், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய் ஆடு , மாடுகளை கடித்து கொன்று வருகின்றன. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

     எனவே அந்த பகுதிகளில் சுற்றி திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடித்து செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×