search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிகிச்சைக்காக ெதாழிலாளியை ெதாட்டில் கட்டி தூக்கிச்சென்ற மலைவாழ் மக்கள் - பாதை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை
    X

    சிகிச்சைக்காக ெதாழிலாளியை ெதாட்டில் கட்டி தூக்கிச்சென்ற காட்சி.

    சிகிச்சைக்காக ெதாழிலாளியை ெதாட்டில் கட்டி தூக்கிச்சென்ற மலைவாழ் மக்கள் - பாதை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

    • ஈசல்தட்டு பகுதியில் சின்ன கூழையன் என்பவர் தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறியதாக தெரிகிறது
    • ஒரு உயிரை காப்பதற்கு பல உயிர்களையும் பணயம் வைத்து இந்த செயலை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டுமலை, கோடந்தூர், பொறுப்பாறு, தளஞ்சி,தளிஞ்சிவயல்,ஈசல் தட்டு,குழிப்பட்டி, குருமலை, மேற்கு குருமலை, கருமுட்டி, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. நிலையான வருமானம் இல்லாததால் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் வடுமாங்காய் பறித்தல்,தேன் எடுத்தல் போன்ற உயிரை பணயம் வைக்கும் சுய தொழில்களிலும் ஈடுபட வேண்டிய சூழல் மலைவாழ் மக்களுக்கு ஏற்படுகிறது.

    அந்த வகையில் ஈசல்தட்டு பகுதியில் சின்ன கூழையன்(வயது 65) என்பவர் தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார்.இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

    அதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் சின்ன கூழையனை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி எடுத்து வந்தனர்.அவசரகால உதவிகள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாதை வசதி அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையிலேயே இருந்து வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாவதும் தொடர்கதையாக உள்ளது. பிரசவம்,எதிர்பாராமல் நடக்கும் விபத்து,அவசர கால உதவியை பெறுவதற்கு வனப்பகுதி வழியாக பயணித்து அடிவாரத்தை அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் உயிரை காக்கும் பொன்னான நேரம் வீணாகி விடுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் வனப்பகுதியில் தொட்டில் கட்டி தூக்கி வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.இதற்காக திடகாத்திரமான உடல்வாகு கொண்ட நபர்கள் தேவை. ஒரு உயிரை காப்பதற்கு பல உயிர்களையும் பணயம் வைத்து இந்த செயலை செய்து வருகின்றனர்.எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி வனப்பகுதியில் பாதை அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்துடன் தேன்எடுத்தல், வடுமாங்காய் பறித்தல் போன்ற உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளும் தொழில்களுக்கு தகுந்த உபகரணங்களும், விழிப்புணர்வும் வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×