search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் -  பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    குடியிருப்பு பகுதிகளின் நடுவே அமைந்துள்ள டாஸ்மாக் கடை.

    டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்

    • சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.
    • மது பிரியர்கள் குடியிருப்பு வீடுகளின் வாசல்படிகள் மற்றும் சாலையில் அமர்ந்து குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பசுபதி வீதியில் கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மற்றும் உடுமலை நகர கூட்டுறவு வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் இயங்கி வருவதுடன் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளது. இதனால் இந்த வீதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.

    இந்த சூழலில் உடுமலை- தளி பிரதான சாலையை ஒட்டியவாறு இந்த சாலையின் நுழைவுப் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.அங்கு மது பாட்டில்களை வாங்க வருகின்ற மது பிரியர்கள் குடியிருப்பு வீடுகளின் வாசல்படிகள் மற்றும் சாலையில் அமர்ந்து குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் சாலையில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் கடும் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    குறிப்பாக அந்த வீதி வழியாக பெண்கள் பகலில் கூட பாதுகாப்புடன் நடந்து செல்ல இயலாத சூழலே உள்ளது. இதனால் அச்சமடையும் பெண்கள் வங்கிகளில் கணக்கு தொடங்கி கடன்கள் பெறுவதற்கு கூட முன்வருவதில்லை.இதன் காரணமாக வங்கி சேவைகள் ஏழை எளிய நடுத்தர பெண்களுக்கு கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படுவதுடன் வங்கிப் பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. அதை உணர்த்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏடிஎம்., மையத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியது. போதை ஆசாமிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு கல்லை எடுத்து ஏடிஎம்., மையத்தின் கண்ணாடியை உடைத்து விட்டனர். அதைத் தொடர்ந்து பசுபதி வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதன் பின்பும் கூட கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் முன் வரவில்லை. ஏன் சிந்திக்கவும் கூட இல்லை என்றே சொல்லலாம். இதனால் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்ற பெண்கள் மற்றும் வங்கியில் பணி புரியும் பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

    அதிகாரிகளின் இந்த செயலானது பொதுமக்கள் நலனுக்கு எதிராக உள்ளதால் அரசு மீது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. எனவே பெண்கள் நலனை கருத்தில் கொண்டு பசுபதி வீதியில் இயங்கி வருகின்ற டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×