என் மலர்
திருப்பூர்
- முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும்.
- மொத்தம் 1330 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.
முத்தூர்:
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.10 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 1330 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 91.10 க்கும், குறைந்த பட்சமாக ரூ.63.10 க்கும் ஏலம் போனது. மொத்தம் 1330 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் 23 பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 6517 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.27.80 -க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.24.15-க்கும், சராசரி ரூ.27.30-க்கும் ஏலம் போனது. 2.7 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.74 ஆயிரத்துக்கு ஏலம் போனது என விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார்.
- சிவபெருமானால் படைக்ககூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கக்கூடிய நாளாக ஐப்பசி மாத பவுர்ணமி நாள் அமைகிறது.
- 10 கிலோ சாதத்தை கொண்டும், காய்கறி, பழங்கள் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது.
முத்தூர்:
ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். சிவபெருமானால் படைக்ககூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கக்கூடிய நாளாக ஐப்பசி மாத பவுர்ணமி நாள் அமைகிறது. ஆகவே சிவபெருமான் எழுந்தருளும் அனைத்து கோவில்களிலும் ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் 2000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் நேற்று மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. 10 கிலோ சாதத்தை கொண்டும், காய்கறி, பழங்கள் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் காங்கயம் அருகே உள்ள சின்னாரிபட்டி கம்பம் மாதேசிலிங்கம் கோவில், காங்கயம் காசிவிஸ்வநாதர் கோவில் உள்பட காங்கயம் பகுதியில் உள்ள கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
- திருப்பூா் மாவட்டத்தில் பல இடங்களில் பயனாளிகளுக்கு கடிதங்களை வழங்காமல் அஞ்சல் ஊழியா்கள் அலைக்கழிப்பு செய்து வருகின்றனா்.
- தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தனித்தனியை வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.
திருப்பூர்:
கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு முதல்வா் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜிடம், தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச., மாநில இணைப் பொதுச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தனித்தனியை வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.இந்தக் கடிதங்களுக்கு அஞ்சல் துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தி பயனாளிகளின் பெயா், முகவரி, கைப்பேசி எண் ஆகியவை முறையாக குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால், திருப்பூா் மாவட்டத்தில் பல இடங்களில் பயனாளிகளுக்கு கடிதங்களை வழங்காமல் அஞ்சல் ஊழியா்கள் அலைக்கழிப்பு செய்து வருகின்றனா்.அதிலும் குறிப்பாக இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், மங்கலம் சாலை, கருவம்பாளையம், ராயபுரம், கொங்கு நகா், காந்தி நகா், பிச்சம்பாளையம் புதூா் கிழக்கு, கேத்தம்பாளையம், ராதாகிருஷ்ணன் நகா், வெங்கமேடு ,செட்டிபாளையம், கோவில்வழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு முதல்வா் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதங்கள் கிடைக்கவில்லை. இது தொடா்பாக பயனாளிகள் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அனைத்து பயனாளிகளுக்கும் முதல்வரின் வாழ்த்துக் கடிதம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூா் மாநகராட்சி 1 -வது மண்டத்துக்குட்பட்ட 24 -வது வாா்டில் உள்ள அம்மன் வீதியில் புதிதாக சாக்கடை கால்வாயும், புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.
- திருப்பூா் மாநகராட்சி 1 -வது மண்டத்துக்குட்பட்ட 24 -வது வாா்டில் உள்ள அம்மன் வீதியில் புதிதாக சாக்கடை கால்வாயும், புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் மாநகராட்சி 24-வது வாா்டுக்குட்பட்ட அம்மன் வீதியில் சாலையின் உயரத்துக்கு ஏற்ப சாக்கடைக் கால்வாய் பாலம் அமைக்க வேண்டும் என பாஜக., வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி மேயா் தினேஷ்குமாரிடம், முன்னாள் மாமன்ற உறுப்பினா் நடராஜன் உள்ளிட்ட பாஜக., நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாநகராட்சி 1 -வது மண்டத்துக்குட்பட்ட 24 -வது வாா்டில் உள்ள அம்மன் வீதியில் புதிதாக சாக்கடை கால்வாயும், புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலமானது ஏற்கெனவே இருந்த சாலையின் மட்டத்தில் இருந்து சுமாா் ஒன்றரை அடி உயா்த்தி கட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. சாலையின் மட்டத்துக்கு தகுந்தவாறு ஏற்கனவே பாலம் இருந்தது. இந்நிலையில், புதிய பால கட்டுமான பணியின்போது அப்பகுதி பொதுமக்கள் பாலத்தை உயா்த்தக்கூடாது என தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த வாா்டில் பல இடங்களில் இதேபோல சாலையின் உயரத்தைவிட பாலம் உயா்த்தி கட்டப்பட்டுள்ளதால், மழை காலங்களில் வீடுகளுக்குள் மழை நீா் செல்ல வாய்ப்பு உள்ளது.ஆகவே, சாலையின் உயரத்துக்கு தகுந்தவாறு பாலங்களை அமைக்க வேண்டும். மேலும், அம்மன் குறுக்கு வீதி, செல்லம்மாள் காலனி, ஜீவா வீதி உள்ளிட்ட இடங்களில் சாக்கடைகள் தூா்வாரப்படாமல் கழிவு நீா் தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, சாக்கடை கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து பிரமாண்ட முறையில் கடைகளை அமைத்துள்ளன.
- காங்கயம் நகரின் பிரதான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காங்கயம்:
காங்கயம் நகரின் பிரதான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து பாரதிய கிசான் சங்க மாவட்ட துணைத் தலைவா் மு.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- காங்கயம் நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக காங்கயம் பேருந்து நிலையம் அருகில், திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து பிரமாண்ட முறையில் கடைகளை அமைத்துள்ளன.இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், பாதசாரிகளும் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, சாலையை ஆக்கிரமித்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூா் மாவட்டம், பல்லடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை 5 நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.
- செல்வம் என்ற வெங்கடேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மாவட்டம், பல்லடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை 5 நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.
இந்த கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் கடந்த செப்டம்பா் 21- ந் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய திருநெல்வேலி மாவட்டம், வடக்கு அரியநாயகிபுரம், அம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த ஏ.செல்வம் (எ) வெங்கடேஷை (29) குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓா் ஆண்டு சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தாா்.
இதையடுத்து, செல்வம் என்ற வெங்கடேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள வெங்கடேஷிடம் போலீசார் வழங்கினா்.
அதேபோல, அவிநாசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொலை வழக்கில் தொடா்புடைய திண்டுக்கல் மாவட்டம், புஸ்பத்துரைச் சோ்ந்த கில்டன் (22), வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொள்ளை வழக்கில் தொடா்புடைய மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த தாந்தவன்குளத்தைச் சோ்ந்த மருது (29) ஆகியோரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
காங்கயம் காவல் நிலையத்துக்குள்பட்ட சிவன்மலையில் ஆயில் மில் உரிமையாளா் வீட்டில் நடந்த கூட்டுக் கொள்ளை வழக்கில் தொடா்புடைய கள்ளக்குறிச்சி, ஆறாம்பூண்டி குச்சிக்காட்டைச் சோ்ந்த பி.அண்ணாதுரை (32), தளி தெருவைச் சோ்ந்த பி.சுந்தா் (25),ஆறாம்பூண்டி மேல்தெருவைச் சோ்ந்த எஸ்.ராமநாதன் (35) ஆகியோரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.திருப்பூா் மாவட்டத்தில் நிகழாண்டு தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 47 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிதி உதவி வழங்கிய 11-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.
- காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.
முத்தூர்:
காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.
காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தவர் பழனி. இவர் கடந்த 4-ந் தேதி இயற்கை எய்தினார். இவரது மனைவியும் காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நகராட்சி 11-வது வார்டு பொதுமக்களின் உதவியோடு ரூ.35 ஆயிரம் நிதி சேகரிக்கப்பட்டு அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கயம் நகர்மன்ற உறுப்பினர் கே.டி.அருண்குமார் பங்கேற்று, பழனியின் குடும்பத்தினருக்கு மேற்கண்ட தொகையை வழங்கினார். மேலும் நிதி உதவி வழங்கிய 11-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.
- முத்துமங்களம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர்.
- அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கான எண்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.
முத்தூர்:
முத்தூர் அருகே முத்துமங்களம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முத்துமங்களம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர். இதில் முத்தூர் ந.கரையூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன்(வயது 55) என்பவர் லாட்டரி சீட்டுகளின் நம்பர்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கான எண்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.
- கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.
- இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது.
மடத்துக்குளம்:
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு பிரதான சாகுபடியாக மக்காச்சோளம் இருந்தது. தீவன உற்பத்திக்கு மக்காச்சோளம் தேவை அதிகமாக இருப்பதால் நல்ல விலையும் கிடைத்து வந்தது. வழக்கமாக ஆகஸ்டு மாதத்தில் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.
அதையொட்டி நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயிரின் வளர்ச்சி தருணத்தில் பருவ மழை பெய்யும். எனவே அந்த சீசனில் 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும். இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது. மழையும் பெய்யவில்லை. இதனால் நான்காம் மண்டல ஆயக்கட்டு பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம் நடவு செய்ய ஆர்வம் காட்டவில்லை. சிலர் மட்டும் உலர் தீவன தேவைக்காக மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.
இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் மானாவாரியாக மக்காச்சோளம் நடவு செய்ய துவங்கியுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மக்காச்சோளம் 90 - 110 நாட்கள் வயதுடையது. பயிரின் வளர்ச்சித்தருணம் மற்றும் கதிர் பிடிக்கும் போது மழை பெய்தால் இறவை பாசனம் போல மானாவாரியிலும், விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. குறித்த நேரத்தில் மழை பெய்யாவிட்டால் பயிரின் வளர்ச்சி பாதித்து கதிர்கள் சரியாக பிடிக்காது. விளைச்சலும் ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 10 மூட்டையாக குறைந்து விடும்.இருப்பினும் மக்காச்சோள பயிர்களை கால்நடைகளுக்கு உலர் தீவனமாக பயன்படுத்தலாம். வறட்சியால் தீவனத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகிறோம் என்றனர்.
- நூல் விலையால் ஸ்பின்னிங் மில்களை முறையாக இயக்க முடியாமல் உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.
- நூல் ரகங்களின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் மில் உரிமையாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
மங்கலம்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஸ்பின்னிங் மில்கள் செயல்படுகின்றன. இத்தொழில்களை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
கடந்த பல மாதங்களாகவே விசைத்தறி ஜவுளித்தொழில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நிலையில்லாத பஞ்சு விலை, நூல் விலையால் ஸ்பின்னிங் மில்களை முறையாக இயக்க முடியாமல் உரிமையாளர்கள் தவிக்கின்றனர். உற்பத்தியையும் குறைத்து விட்டனர். சில மில்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அதேபோல் கூலி உயர்வு கிடைக்காதது, மின் கட்டண உயர்வு, பாவு நூல் சப்ளை இல்லாதது உட்பட பல காரணங்களால் 90 சதவீத விசைத்தறிகள் முடங்கியுள்ளன.
கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூல் ரகங்கள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இயல்பாக இருந்த நூல் ரகங்களின் விலை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த மாதத்தில் இருந்த விலையை விட 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. நூல் ரகங்களின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் மில் உரிமையாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து மில் உரிமையாளர் சந்திரன் கூறுகையில், தொடர்ந்து நூல் விலை சரிந்து வருவதால் உற்பத்தியை குறைந்துள்ளோம். ஒரு ஷிப்ட் மட்டுமே இயக்குகிறோம். ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட நூல் ரகங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தேங்கியுள்ளது. தற்போதைய விலைக்கு விற்றால் நஷ்டம் தான் ஏற்படும். இதேபோல் விலை வீழ்ச்சி அடைந்தால் மில்லை இயக்க முடியாது என்றார்.
கடந்த பல மாதங்களாக, துணி ரகங்களுக்கும் உரிய விலை கிடைக்காததால் பல கோடி மீட்டர் துணிகள் குடோன்களில் தேங்கியுள்ளன. ஜவுளி உற்பத்தியாளர்கள் செய்வதறியாது உள்ளனர்.
இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைத்தால் தான் இங்கு உற்பத்தியாகும் காடா துணிகள் விற்பனையாகும். ஆனால் வெளிநாட்டு ஆர்டர்கள் தற்போது சுத்தமாக இல்லை. வடநாட்டில் கேட்டாலும் ஆர்டர் இல்லை என்றுதான் கூறுகின்றனர். அதன் காரணமாக பல கோடி மீட்டர் துணி ரகங்கள் தேங்கி கிடக்கின்றன.
வேறு வழியில்லாமல், பாவு நூல் சப்ளையை நிறுத்தி விட்டோம். தொழிலாளர்களிடம் தீபாவளி பண்டிகை முடிந்து வேலைக்கு வந்தால் போதும் என அனுப்பி விட்டோம். நஷ்டம் ஏற்படாமல் உரிய விலை கிடைக்கும் போது தான் துணிகளை விற்கும் நிலையில் உள்ளோம் என்றனர். விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள் முழுமையாக இயக்கப்படாததால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். குடும்பத்தை நடத்த, கட்டட தொழில் உட்பட மாற்றுப் பணிகளை தேடி சென்றுவிட்டனர்.
மொத்தத்தில் விசைத்தறி ஜவுளி தொழில், தற்போதைய நிலையில் கடும் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொழிலில் ஏற்படும் வீழ்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண விசைத்தறிகள் உள்ளன. இங்கு மட்டும், தினசரி ஒரு கோடி மீட்டர் துணி உற்பத்தியும், 50 கோடி ரூபாய் அளவுக்கு வரவு, செலவு கணக்கும் நடைபெறுகிறது. இதில் 80 சதவீத துணிகள் மதிப்பு கூட்டப்பட்டு உள்நாட்டிலேயே குறைந்த விலையில் பயன்படுத்தப்படுகிறது.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர், மத்திய இணையமைச்சர் முருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
விசைத்தறிகள் வாயிலாக கிராமப்புறங்களில் உள்ள பல லட்சம் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். இந்திய அளவில் 40 சதவீத கிரே காடா துணி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் உற்பத்தியாகிறது. சாதா விசைத்தறியாளர்கள், மூன்றாண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வுக்காகவும், மின் கட்டணம் உயர்வு ஏற்படும் போதெல்லாம் மின்கட்டண குறைப்புக்காகவும் போராடி வருகின்றனர்.
வட மாநிலங்களில் மட்டுமே இங்கு தயாராகும் காடா துணிகள் மதிப்பு கூட்டப்படுகின்றன. சிறு, குறு விசைத்தறியாளர்கள், உற்பத்தி செய்யும் குறைந்தளவு துணிகளை, வட மாநிலங்களில் நேரடியாக கொண்டு சென்று விற்க முடியாது. இடைத்தரகர்கள் வாயிலாக விற்கும் போது, குறைந்த விலைக்கே விற்க வேண்டியுள்ளது.ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், சாதாரண விசைத்தறிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.
சோமனூர் கிளஸ்டர் பகுதியில் ஜவுளிச்சந்தை அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதியும், மானியமும் வழங்க வேண்டும். அதன் வாயிலாக சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்தி கொள்ள முடியும். வருமானம் பெருகும். வாழ்வாதாரம் உயரும்.
- கடந்த வாரத்தில் 10 கிலோ கொண்ட செம்மறி ஆடு ரூ.7ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- கன்னிவாடி சுற்றுவட்டார பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மூலனூர்:
தமிழகத்தில் நடைபெறும் முக்கிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தையாகும். இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.இங்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெரு நகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து ஆடுகளை இறைச்சிக்காக வாங்கி செல்கின்றனர்.
அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர். கடந்த 2 வாரங்களாக இந்த பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் மேலும் செம்மறி மற்றும் மேச்சேரி இன ஆடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் இனி வரும் காலங்களில் மழைக்காலம் தொடங்குவதால் இந்த பகுதியில் மேய்ச்சல் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் அதிக லாபம் தரும் மேச்சேரி இன மற்றும் செம்மறி ஆடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது
இதனால் ஆடுகளின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. கடந்த வாரத்தில் 10 கிலோ கொண்ட செம்மறி ஆடு ரூ.7ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.770 என்ற அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு செம்மறி ஆட்டின் விலை ரூ.7ஆயிரத்து 700 ஆகும்.இதனால் கன்னிவாடி சுற்றுவட்டார பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஆடுகளின் விலை மேலும் உயரும் என்பதால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சாய் இன்வெர்ட் கன்சல்டன்சி நிறுவனர் வையுறு அமர்நாத் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
- சென்னை அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரியின் ஜவுளி தொழில்நுட்ப நிறுவனராக பணியாற்றியவர்.
திருப்பூர்:
திருப்பூரில் இளம் ஏற்றுமதியாளர்கள் பின்னலாடை தொழில் துறையின் நுட்பங்களை அறியும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் காபி வித் எக்ஸ்பர்ட் என்ற கருத்தரங்கை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் எதிர்கால பின்னலாடை தயாரிப்பின் புதிய தொழில்நுட்பம் மற்றும் மேம்பாடு என்ற தலைப்பில் வருகிற 2-ந் தேதி மாலை 5 மணிக்கு அப்பாச்சி நகரில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் சக்திவேல் அரங்கில் நடக்கிறது.சாய் இன்வெர்ட் கன்சல்டன்சி நிறுவனர் வையுறு அமர்நாத் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜவுளி தொழிற்துறையில் நிபுணத்துவம் பெற்றவர். சென்னை அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரியின் ஜவுளி தொழில்நுட்ப நிறுவனராக பணியாற்றியவர். இந்த கருத்தரங்கில் இளம் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.






