என் மலர்
திருவாரூர்
- நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடவாசல் பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கு 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கு 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் விவசாயிகள் சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். தனியார் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு அறுவடை செய்ய ரூ.3 ஆயிரம் வசூல் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் வேளாண்மை பொறியியல் துறைக்கு ஆலோசனை வழங்கி போதிய அளவு அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
அதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திருவாரூர் மாவட்டத்தில் உடனடியாக திறந்து விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை காலதாமதம் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் என கலெக்டருக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
திருவாரூர்:
நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் அகத்தியர் ஜென்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி சிறப்பு யாகம் நடந்தது.
தொடர்ந்து அகத்தியர் மற்றும் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மானாமதுரை மகா பஞ்சமுகி பிரத்தியங்கராதேவி மாதவராமன் சுவாமிஜி செய்திருந்தார்.
- 15 வயது பள்ளி மாணவிக்கு சில நாட்களாக தொடர்ந்து தொல்லை.
- போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள காரியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). டிரைவர்.
இவர், அப்பகுதியில் படிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கு சில நாட்களாக தொடர்ந்து செல்போனில் ஆபாச செய்தி அனுப்பி வந்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இந்தநிலையில் மாணவியின் தந்தை திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கான்கிரீட் பெயர்ந்து சிமெண்டு கம்பிகள் வெளியே தெரியும் அளவில் காணப்படுகிறது.
- பொருட்கள் வாங்கும் போது தொட்டி இடிந்து விழுமோ என்ற அச்சம்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பனையூர் ஊராட்சி கீழப்பனையூர் கிராமத்தில் கிராம கூட்டுறவு அங்காடி செயல்பட்டு வருகிறது.
இதில் கீழ பள்ளிச்சந்தம், திருப்பத்தூர், கீழப்பனையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்த அங்காடி வாசலில் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 20 ஆண்டுகளாக உள்ளது. தற்போது இந்த தொட்டியின் நான்கு தூண்களும் சேதமடைந்துள்ளது.
மேலும் கான்கிரீட் பெயர்ந்து சிமெண்டு கம்பிகள் வெளியே தெரியும் அளவில் காணப்படுகிறது.
எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அங்காடிக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ? என அச்சப்படுகின்றனர்.
எனவே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அங்காடிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கூறியதாவது:- அங்காடி வாசலில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளாக உள்ளது.
இந்த தொட்டியின் தூண்கள் அனைத்தும் சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால் நாங்கள் பொருட்கள் வாங்கும் போது தொட்டி இடிந்து விழுமோ? என்ற அச்சத்துடன் பொருட்களை வாங்கி செல்கிறோம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் ெதரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- உணவு காளான் உற்பத்தி பற்றி அறிந்து கொண்ட பிறகு மாணவிகளும், விவசாயிகளும் செய்முறை பயிற்சி.
- உணவு காளான் உற்பத்திக்கான பல்வேறு திட்டங்கள் குறித்தும், மானியம் குறித்தும் கூறினார்.
திருவாரூர்:
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உணவுக் காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது.
உணவுக் காளானின் நன்மைகளை பற்றியும், அதனை உற்பத்தி செய்யும் முறைகளை பற்றியும், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் விவசாயிகள் மட்டுமல்லாமல் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகளும் கலந்துக் கொண்டனர்.
உணவுக் காளான் உற்பத்தி பற்றி அறிந்து கொண்ட பிறகு மாணவிகளும், விவசாயிகளும் செய்முறை பயிற்சியில் ஈடுபட்டனர்.
இப்பயிற்சியில் கூடுதலாக, மூல வித்து, தாய் வித்து மற்றும் படுக்கை வித்து ஆகியவற்றை தயாரிக்கும் முறைகளப் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தோட்டக்கலை உதவி இயக்குனரான இளவரசன் உணவுக் காளான் உற்பத்திக்கான பல்வேறு திட்டங்கள் குறித்தும், மானியம் குறித்தும் கூறினார். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக கண்காட்சி நடைபெற்றது.
அதில் காளான் வளர்ப்பு குடில், காளான் உருளை, படுக்கை காளான், வித்துக்கள் மற்றும் நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கான பொருட்களும் இடம் பெற்றிருந்தன.
இந்த பயிற்சியில் கலந்துக்கொண்ட விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. .பயிற்சியை நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.
- 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
ராய் டிரஸ்ட் இன்டர்நே ஷனல், ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் ஆகியவை இணைந்து பொது, சர்க்கரை மற்றும் இருதய நோய் இலவச மருத்துவ முகாம் ஆயக்காரன்புலம் இரா.நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயக்காரன்புலம் அரிமா சங்க தலைவர் அரிமா மாதவன் தலைமையில் நடைபெற்றது.
ஆயக்கா ரன்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் மற்றும் திருத்துறைப்பூண்டி ஹரிஸ் தங்க மாளிகை உரிமையாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார தலைவர் அங்கை. ராசேந்திரன் முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருத்தினராக ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பன் கலந்து கொண்டார்.
காமாட்சி மெடிக்கல் சென்டர் மூத்த மருத்துவர் கார்த்திகேயன், மருத்துவர்கள் சசிகலா, ராகுல்யா உடல்நலம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முடிவில் வைத்தியநாதன் நன்றி கூறினார்.
முகாமில் பொருளாளர் முருகானந்தம், அரிமா சங்க முன்னாள் தலைவர்கள், இயக்குநர்கள், உறுப்பினர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடை ந்தனர். நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், பி.எம்.ஐ, ரத்தத்தில் சர்க்கரை அளவு, இருதய பரிசோதனைகள் (இ.சி.சி.மற்றும் எக்கோ) செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
- இன்று காலை அந்த பகுதியில் ஒரு லாரி செம்மண் இறக்க வந்துள்ளது.
- உயர் அழுத்த மின் கம்பி மீது டிப்பர் உரசியது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே இன்று காலை மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலியானார்.
திருவாரூர் அருகே புலிவலம் ஆர்.பி.எஸ். சாந்தாநகர் பகுதியில் சாலை பணிக்காக தஞ்சாவூர் பகுதியில் இருந்து டிப்பர் லாரி மூலம் செம்மண் இறக்கும் பணி நடை ெபற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் ஒரு லாரி செம்மண் இறக்க வந்துள்ளது. அந்த லாரியை மணிகண்டன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். பின்னர் லாரியில் இருந்த மண்ணை இறக்க டிப்பரை தூக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது டிப்பர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி மணிகண்டன் உயிரிழந்தார்.
உடனடியாக அப்பகுதி மக்கள் இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணி கண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலை நேரத்தில் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பி மீது டிப்பர் லாரி உரசி ஓட்டுநர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நிகழ்ச்சிக்கு கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா தலைமை வகித்தார்.
- திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.
திருவாரூர்:
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 21-22 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் கொரடாச்சேரி ஔவையார் நகரில் ரூ14.65 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா தலைமை வகித்தார்.
கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய கட்டிடத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், பேரூராட்சி துணைத் தலைவர் தளபதி, பேரூராட்சி திமுக செயலாளர் கலைவேந்தன், வார்டு கவுன்சிலர் சத்தியபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரூராட்சி செயலாளர் நாராயணமூர்த்தி வரவேற்றார். இறுதியில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாளர் காளிதாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தொடர்ந்து அங்காடி வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ நட்டார்.
- சாலை சீரமைப்பு பணிகள் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
- உதவி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதில் தினமும் தூய்மை படுத்தும் பணிகள், சாலை சீரமைப்பு பணிகள் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில் முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதற்கு உதவி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரவீன் குமார், ஆசிரியர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். திட்ட அலுவலர் ராஜாராமன் செயல் அறிக்கை வாசித்தார். இதில் டி.எஸ்.பி. விவேகானந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சி யில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்த லைவர் சௌந்தர ராஜன், ஆலங்காடு பள்ளி தலைவர் கோபி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகாம் உதவி அலுவலர் மகேஷ் நன்றி கூறினார்.
- 41 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.251.86 லட்சம் மொத்த தொகையில், ரூ.72.62 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டது.
- தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 10 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழக தலைவர் மதிவாணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி த்தலைவ ர்பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் 41 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.251.86 லட்சம் மொத்த தொகையில், ரூ.72.62 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டது. மேலும், தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 10 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது.
- வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நீடாமங்கலம்:
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் விளங்கி வருகிறது.
இத்திட்டத்தின்படி கொள்ளிடத்தில் இருந்து வேதாரண்யம் வரை குழாய் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு முக்கிய பகுதிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து இராட்சத மின்மோட்டார் மூலம் நீரேற்றி தினசரி பல லட்சம் லிட்டர் தண்ணீர் பல லட்சம் குடும்பங்களை சென்றடைந்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருகருக்காவூர் பகுதியில் உள்ள நீரேற்றும் மையத்தில் இருந்து குழாய் மூலம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் சென்று வருகிறது.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது. இதனால் வலங்கைமானில் இருந்து பாபநாசம் செல்லும் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருக்குறள், பன்னிரு திருமுறை வகுப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
- மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஓதி தொடங்கி வைத்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் திருக்குறள், பன்னிரு திருமுறை வகுப்புகளுக்கான ஆனந்த குருகுலம் தொடக்க விழா மாடர்ன் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் தீபா ராணி அனைவரையும் வரவேற்றார். ஆன்மீக ஆனந்தம் அமைப்பின் செயலாளர் எடையூர் மணிமாறன் மாணவர்களுக்கு தேவார புத்தகம் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக துரை ராயப்பன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் விஜயராஜ் வாழ்த்துரை வழங்கினார். ஓதுவார் வடுகநாதன், துணை ஓதுவார் கருணாநிதி மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஓதி தொடங்கி வைத்தனர்.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாடர்ன் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் முருகானந்தம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சர்வாலய உழவாரப்பணி குழு அமைப்புடன் இணைந்து ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பினர் செய்திருந்தனர்.






