என் மலர்
திருவாரூர்
- குற்றவாளியான ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34).
வளரும் தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தார். இவர் மீது பல்வேறு கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக ராஜ்குமார் தனது வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேருடன் நேற்று வந்தார்.அதனைத் தொடர்ந்து வழக்கறிஞரை கொரடாச்சேரி அருகில் உள்ள கமலாபுரத்தில் விடுவதற்காக காரில் 5 பேருடன் சென்றார்.
அப்போது மன்னார்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி அதிவேகத்தில் வந்த கார் இவர்கள் வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் ராஜ்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பி ஓடினர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை ஆகியோர் உத்தரவின்பேரில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த நீடாமங்கலத்தை சேர்ந்த நடேச தமிழர்வனின் மகன் ஸ்டாலின் பாரதி (வயது 32) , அரசு (20), மாதவன் (21), வீரபாண்டியன் (29), பாண்டியன் (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நீடாமங்கலம் கடைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். எனவே நடேசன் தமிழார்வனின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் அவரது மகன் ஸ்டாலின்பாரதி சிலருடன சேர்ந்து ராஜ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா ? எனவும் விசாரித்து வருகின்றனர்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது போன்ற நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு.
- ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு பிரச்சார கையேடு வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஓ.என்.ஜி.சி மற்றும் திருவாரூர் காவல்துறை ஆகியவை இணைந்து திருவாரூர் பஸ் நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் சாலை விதிகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது, இருசக்கர வாகனத்தில் 2 நபருக்கு மேல் செல்லக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது போன்ற நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, ஹெல்மெட் அணிந்து வந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓ.என்.ஜி.சி சார்பில் டீசர்ட் வழங்கப்பட்டது.
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு பிரச்சார கையேடு வழங்கப்பட்டது.
இதில் திருவாரூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் ஈஸ்வரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், திருவாரூர் நகர சப்இன்ஸ்பெக்டர் தியாகராஜன், ஓ.என்.ஜி.சி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் முதன்மை பொது மேலாளர் சிவசங்கர், துணை பொதுமேலாளர்கள் தியாகராஜன், வேனு கோபால், சமூக பொறுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் நடந்தது
- கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழியம்மன் உள்பட அனைத்து சன்னதிகளிலும் அபிஷேகம் செய்யப்பட்டது.
திருவாரூர் :
நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஹோமம் தொடங்கியது.
தொடர்ந்து கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழியம்மன் உள்பட அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.
மதியம் பூர்ணாகுதியும் அதனைத்தொடர்ந்து குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் செயல்அலுவலர் மணவழகன், கோவில்கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- அரவிந்தன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பு படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார்.
- மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த வாஞ்சியூரை சேர்ந்தவர் மோகன் (வயது 55) விவசாயி. இவரது மனைவி கமலா. இவர்களுக்கு அரவிந்தன் (19), அர்ஜூன் (15) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
அரவிந்தன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பு படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அரவிந்தன் மதுபானம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது மோகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு நடந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மகன் அரவிந்தன் குடிபோதையில் வீட்டில் இருந்த கடப்பாரையால் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மோகன் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மோகனை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் மகனே தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மன்னார்குடியில் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- நரிக்குறவர் காலனியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசித்துவரும் மக்களிடம் கலெக்டர் கலந்துரையாடினார்.
திருவாரூர்:
மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட ஜெயினத்தெரு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டுவருவதை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட மன்னை நகர் பகுதியில் வசித்துவரும் நரிக்குறவர் காலனியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசித்துவரும் மக்களிடம் கலந்துரையாடினார்.
மேலும் தாமரைக்குளத்தில் உட்புற சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுவதையும், ருக்மணி குளத்தில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டும் பணியினையும், மேலநாகை பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தாசில்தார் ஜீவானந்தம், மன்னார்குடி நகராட்சி தலைவர்.மன்னை சோழராஜன், நகராட்சி துணைத் தலைவர் கைலாசம், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர்.குணசேகரன், ஆகியோர் இருந்தனர்.
- பாரதமாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
- பெண் பயனாளிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பாரதமாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
பாரத மாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்தார்.
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தலைவர் சந்திரசேகரன், பிரதிநிதி அமராவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காப்பீட்டு கழக அலுவலர் சுவாமிநாதன் வரவேற்றார்.
உலகில் வாக்கு அளிக்கின்ற ஓட்டு போடும் உரிமையை பெண்களுக்கு முதன்முதலாக வழங்கிய அதிகாரப்பூர்வமான தினமாகவும் பெண்கள் சுயசார்புடன் கல்வி, பொருளாதாம், சமூக ரீதியாகவும், வலிமைமிக்க, அதிகாரமிக்க தலைமை பண்புடன் வாழ்வதற்கு வழிவகை செய்த நாளாக உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது.
இப்படி கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் நிராதரவாக அன்புக்கு ஏங்கி நிற்கும் பெண்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என்று காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தில் பெண்கள் இல்லத்தில் தங்கியுள்ள அனைத்து பெண் பயனாளிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாரதமாதா இல்லக் காப்பாளர்கள் புனிதா, கனிமொழி, துர்காதேவி, உளவியல் ஆற்றுப்படுத்தனர் கௌசல்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க செயலாளர் காந்தி நன்றி கூறினார்.
- மகளிர் தின விழா திருத்துறைப்பூண்டி ரயிலடி பள்ளிவாசல் தெருவில் கொண்டாடப்பட்டது.
- விழாவில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ரயிலடி பள்ளிவாசல் தெருவில் உள்ள ஸ்ரீ பாலநாகம்மாள் மகளிர் சுய உதவி குழு சார்பில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவில் அப்பகுதியில் வசிக்கும் மைக்கேல் ராஜ், ரம்யா குடும்பத்திற்கு குழுவின் உறுப்பினர் பிரதிநிதி ஜான்சிராணி, தேன்மொழி ஆகியோரின் தலைமையில் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டது.
- ஏப்ரல் 1-ந்தேதி ஆழிதேரோட்டம் நடைபெறுகிறது
- கடந்த 2 ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தேரோட்டம் நடை பெற உள்ளது.
சப்தவிடங்க தலங்களில் முதன்மையானதும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் விளங்குகிறது.
இக்கோயிலில் நடைபெறும் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. 96 அடி உயரத்தில் வீதி நிறைந்த அகலத்தோடு நடைபெறும் தேர்த் திருவிழாவை காண நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இத்தேரோட்டம் நடைபெறுவதால் இதனை ஆழி தேரோட்டம் என்றும் பக்தர்கள் புகழ்கின்றனர்.
தேர் திருவிழாவை முன்னிட்டு இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
அதையொட்டி தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழா தொடங்குவதை முன்னிட்டு கோவிலில் கொடி மரத்துக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி சிறப்பு பூஜைகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து கொடி ஏற்றி வைக்கப்பட்டு, விழா உற்சவம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் சந்திரசேகரர், அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தொடர்ந்து வரும் 27-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் இரவு பல்வேறு வெள்ளி வாகனம், பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் சந்திரசேகரர் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி உலகப் பிரசித்தி பெற்ற ஆழி தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தேரோட்டம் நடை பெற உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.
- ரெயிலடி நரிக்குறவர் காலனி பகுதியில் இருப்பிட வசதி குறித்து கேட்டறிந்தார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடை பெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ நேரில் ஆய்வு செய்தார்.
மன்னார்குடி ஜெயின தெருவில் உள்ள அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார் .
இதனை தொடர்ந்து ரயிலடி நரிக்குறவர் காலனி பகுதியில் இருப்பிட வசதி குறித்து நரிக்குறவர் மக்களிடம் கேட்டறிந்தார்.
நகராட்சி மாடல் நடுநிலைப்பள்ளி, மற்றும் மன்னார்குடி ருக்மணி குளம், தாமரைக் குளம் பகுதிகளில் நடைபெற்று வரும் கரைகள் மேம்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
- நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் கால்நடை டாக்டர்கள் மகேந்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர்கள் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.
முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில் மக்கள் பிரதிநிதிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது ஒரு பணம் செலுத்தும் முறையாகும்.
- இது பணம் செலுத்துவதற்கான உடனடி மற்றும் வசதியான வழியாகும்.
திருவாரூர்:
திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் சென்னையை சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கீர்த்தனா தங்கவேல் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் டிஜிட்டல் பண பரிவர்த்த னையால் பணத்தை இழந்துபாதிக்க ப்பட்டவர்களுக்கு ஆலோ சனைகளும், வழிகாட்டு தல்களும் செய்யப்பட்டது.
கருத்தரங்கில், பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்தியாவில் ஒவ்வொரு நபரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வெவ்வேறு வழிகளை பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது ஒரு பணம் செலுத்தும் முறையாகும்.
இதில் பணம் செலுத்துபவர் மற்றும் பெறுபவர் இருவரும் டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி பணத்தை அனுப்பவும், பெறவும் செய்கின்றனர்.
இது பணம் செலுத்துவதற்கான உடனடி மற்றும் வசதியான வழியாகும்.
இது தவிர, மோசடி பேர்வழிகளால் பொதுமக்கள் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனையில் ஏமாற்றப்படும்போது, சைபர் கிரைம் தடுப்பு அமைப்புகள் வழியாகவும் கண்டறிந்து பொதுமக்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது.
இதனை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த கருத்தரங்கில், டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் செய்தால் செய்வதோடு நடவடிக்கை எடுக்க பரிந்து ரையும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
- 300 வகையான பாரம்பரிய உணவு வகைகளை மாணவ - மாணவிகள் காட்சிபடுத்தியிருந்தனர்.
- மூலிகையால் செய்யப்பட்ட துவையல்கள் என பல்வேறு உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை தமிழ்நாடு, இயற்கை உணவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் பாரத் கல்லூரி இணைந்து நடத்திய பாரம்பரிய உணவுத் திருவிழா தொடங்கியது.
மொத்தம் 2 நாட்கள் நடைபெறும் இந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் 300 வகையான பாரம்பரிய உணவுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக இந்த நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு அரசு பள்ளி மாணவர்கள் பறை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
உணவு திருவிழாவினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் உற்சாகமாக பறை இசைத்ததை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
தொடர்ந்து 300 வகையான பாரம்பரிய உணவு வகைகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக பாரம்பரிய அரிசி வகையில் செய்யப்பட்ட உணவு வகைகள் சிறு தானியங்களில் செய்யப்பட்ட தோசை மற்றும் இட்லி வகைகள், தூதுவளை உள்ளிட்ட பல்வேறு மூலிகையில் செய்யப்பட்ட துவையல்கள் என பல்வேறு உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
மேலும் தர்பூசணியில் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் உருவப்படங்களும் இடம் பெற்றிருந்தன.
இதனை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கண்டு களித்து சென்றனர்.
மொத்தம் இரண்டு நாட்கள் இந்த உணவுத் திருவிழா நடைபெற்றது.
இதில் உணவு பாரம்பரியம் குறித்த கருத்தரங்கு மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தன.






