என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டனர்.
    • சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரங்கின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை 9 நாட்களுக்கு தமிழக அரசின் திருவாரூர் புத்தகத் திருவிழா நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையிலான மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசுத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் புத்தகத் திருவிழாவை இணைந்து நடத்தினர்.

    கல்லூரி, பள்ளி மாணவர்கள், ஏராளமான பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்றனர்.

    தினந்தோறும் சிறந்த தமிழறிஞர்களைக் கொண்டு புத்தகம் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெற்றது.

    மேலும் பள்ளி மாணவ மாணவிகளிடம் பேச்சுப்போட்டி ஓவிய போட்டி விமர்சனப் போட்டி கள் என பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பரிசுகள் வழங்கினார்.

    இந்த புத்தகத் திருவிழாவில் சிறை கைதிகள் பயன்பெறும் வகையில் புத்தக சேகரிப்பு அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது இதில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் புத்தகங்களை வழங்கினர் சுமார் 5000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரங்கின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • நேற்று காலை தியாகராஜருக்கு சிறப்பு நீராட்டு விழா நடைபெற்றது.
    • 1.50 லட்சம் பேர் திரண்ட நிலையிலும் அசம்பாவிதங்களின்றி தேரோட்டம் நடந்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என கூறப்படும் இத்தேரோட்ட நிகழ்ச்சியில் சுமார் 1.50 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

    ஆழித்தேர் கோயிலின் நான்கு வீதிகளையும் சுற்றி நேற்று முன்தினம் மாலை நிலையடிக்கு வந்து சேர்ந்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று (2.4.23) காலை தியாகராஜருக்கு சிறப்பு நீராட்டு விழா நடைபெற்றது.

    மாலையில் வில்லும் அம்புமாய் முப்புரம் எரித்த மூர்த்தி வீதி உலா மற்றும் பிச்சாண்டவர் புறப்பாடு நடைபெற்றது.

    தேரோட்டம் முடிந்த பிறகு நேற்று மாலையும் ஏராளமான பொதுமக்கள் தேரை வந்து பார்த்து வணங்கி சென்றனர்.

    மேலும் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் திரளாக வந்து தேரை பார்த்து பின்னர் தியாகராஜரை வழிபட்டு, அதனைத் தொடர்ந்து கடைகளில் இருந்த பொருட்களையும் வாங்கிச் சென்றனர்.

    தேரோட்டத்தின் போது 1.50 லட்சம் பேர் திரண்ட நிலையிலும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேரோட்டம் அமைதியாக நடைபெற்றது.

    . இந்த ஆண்டு 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் நகை திருட்டு சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.

    இரண்டு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போய் உள்ளதாக புகாராகியுள்ளது.

    மேலும் சிலரது செல்போன்கள் கூட்ட நெருக்கடியில் காணாமல் போய் இருப்பதும் தெரிய வந்தது.

    இந்த ஓரிரு சம்பவங்களை தவிர வேறு எந்த அசம்பாவிதமும் நடைபெ றாமல் பாதுகாப்பான முறையில் தேரோட்டம் நடத்தப்பட்டு இருப்பது பொதுமக்களிடத்தில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

    • ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தையே காண முடியாத அளவுக்கு உள்ளது.
    • ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வழித்தடங்களை கண்டறிந்து அதனை தடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் நகரின் மையமாக ஓடம்போக்கி ஆறு செல்கிறது. ஒரு காலத்தில் இந்த ஆற்றில் ஓடம் போக்குவரத்து இருந்ததால் இதனை ஓடம்போக்கி ஆறு என்று அழைத்ததாக கூறுகின்றனர்.

    இந்த ஆற்றின் மூலம் திருவாரூர் நகரம், விளமல், வன்மீகபுரம், தியானபுரம், சாப்பாவூர், கடாரம்கொண்டான், அலிவலம், கீவளூர் ஆகிய இடங்களில் பாசன வசதிகளும் வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து இருப்பது நீரின் போக்கை மாற்றுகிறது.

    மேலும் நகர்ப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் இந்த ஆற்றில் கலந்து விடுகிறது. இதனால் இந்த ஆற்றின் தண்ணீர் தெளிவற்ற நிலையில் கருமை நிறமாக காட்சியளிக்கிறது.

    மேலும் இந்த ஆற்றில் பெரும்பாலான இடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தையே காண முடியாத அளவுக்கு உள்ளது.

    இதனால் நீரின் தூய்மை மாறுவதோடு, ஆற்று நீரின் போக்கும் மாறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே இந்த ஆற்றில் தெளிந்த நீரோட்டம் இருக்கும் வகையில் செய்திட வேண்டும்.

    அதற்கேற்ற வகையில் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

    ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வழித்தடங்களை கண்டறிந்து அதனையும் தடுத்து, அப்புறப்படுத்த வேண்டும்.

    இதன் மூலம் ஆற்றில் தெளிவான நீரோட்டத்தை ஏற்படுத்தி நகரின் அழகை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இக்கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது.
    • வருகிற 16-ந்தேதி பாலாலயம் செய்து பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட த்தொடரில் நடைபெற்ற விவாதத்தின் போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ. இரா.காமராஜ் பேசியதாவது:-

    வாஞ்சிநாத சுவாமி கோவில்

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவாஞ்சியத்தில் வாஞ்சிநாத சுவாமி கோவில் உள்ளது. காசியை விட ஒரு வீசம் அதிகம் உள்ளது என்ற பெருமை கோயிலுக்கு உண்டு.

    இக்கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதியும் உள்ளது. வயல்வெளிகள், நாணல் புல் செடிகள் உள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் இதுவரை ஒருவர் கூட பாம்பு கடித்து இறக்கவில்லை என்பது இப்பகுதியின் சிறப்புகளில் ஒன்று.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலின் கும்பாபிஷேக பணிகள் 6.3.22 தேதியில் ரூ.94.65 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது.

    ஓராண்டாக 20 சதவீதம் கூட பணிகள் நிறைவடை யவில்லை. ஆகவே கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இக்கோவில் வெளிப்புற சுற்றுச்சுவரை அறநிலையத்துறை சார்பில் கருங்கல் கொண்டு அமைத்து தர வேண்டும்.

    அவலியநல்லூர் சட்டநாத கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

    விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அபய வரதராஜ பெருமாள் கோவில்

    அதுபோல் ஆலங்குடியில் உள்ள அபய வரதராஜ பெருமாள் கோவில் மொட்டை கோபுரமாக உள்ளது. இதற்கு ராஜகோபுரம் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவிலில் வெளிப்புற சுற்றுச் சுவர் உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்நேரத்தில் கருங்கல் சுவராக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டால் உபயோதாரர்களிடம் ஆட்சேபம் ஏற்படும்.

    எனவே இக்கோவிலில் மீதமுள்ள இரண்டு சுற்று பிரகாரங்களை கருங்கல் சுவர்களாக அமைக்க கருத்துரு கேட்டு பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    அவலியநல்லூர் சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக ரூ .34.30 லட்சம் திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    பணிகள் 16.4.2023 அன்று பாலாலயம் செய்து தொடங்கப்பட உள்ளது.

    இதில் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் ஆலங்குடி அபய வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது.

    அதிலுள்ள மொட்டை கோபுரம் தொல்லியல் துறை மூலம் ஆய்வுகள் நடத்தி, மொட்டை கோபுரத்தின் உறுதித்தன்மையை அறிந்து அதற்கேற்ற வகையில் ராஜகோபுரம் கட்டி தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரடாச்சேரியில் தொழிலாளி தவறி விழுந்து பலியானார்.
    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் உச்சியில் இருந்து கீழே விழுந்தார்.

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே செம்மங்குடி யை அடுத்த புளிச்சங்காடியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 51). இவர் கம்பி பிட்டராக வேலை செய்து வந்தார்.

    இவர் கொரடாச்சேரி இளங்குடி அருகே கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது ஆரோக்கியதாஸ் எதிர்பாராத விதமாக கால் தவறி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் உச்சியில் இருந்து கீழே விழுந்தார்.

    இதில் ஆரோக்கிய தாஸ் தலையில் பலத்த காயமடைந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆரோக்கியதாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மனைவி சவுரியம்மாள் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதன் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசிரியர் தேவிபாலா ஆண்டறிக்கை வாசித்தார்.
    • முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்காலடி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா பள்ளி செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில், வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பி ரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் வெற்றிவேல், கொக்காலடி ஊராட்சி தலைவர் வசந்தன் முன்னிலையில் நடந்தது.

    விழாவுக்கு ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன், அறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராஜ சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    பள்ளியில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியை செல்லத்தாய்க்கு நினைவு பரிசை தலைமை ஆசிரியர் அருள் அரசு வழங்கினார். ஆசிரியர் தேவிபாலா ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் முன்னாள் மாணவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    டெல்டா மாவட்டங்களில் சிறந்த சேவையாற்றி வரும் துரை ராயப்பன் மற்றும் ராஜ சரவணன் ஆகியோருக்கு கொக்காலாடி ஊராட்சி மன்றம் சார்பில் டெல்டா நாயகன் என்று விருது வழங்கப்பட்டது.

    விழாவில் திரைப்பட புகழ் அகிலன் மேஜிக் செய்தார்.

    முடிவில் ஆசிரியை வளர்மதி நன்றி கூறினார்.

    • ஆரூரா.. தியாகேசா.. கோஷம் விண்ணை பிளந்தது
    • ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு.

    திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா கடந்த மாதம் (மார்ச்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் இன்று காலை நடந்தது.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. ஆழித்தேரோட்ட விழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம். மேலும், பல்வேறு பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

    தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, இன்று காலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேரோட்டம் நடைபெற்றது. அடுத்ததாக, காலை 7.30 மணிக்கு ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

    கலெக்டர் சாருஸ்ரீ, செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர்.

    அதனை தொடர்ந்து பச்சைக்கொடி காட்டியவுடன் ஆரூரா.. தியாகேசா... என விண்ணை பிளக்க முழக்கமிட்டபடி லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

    திருவாரூர் நிலையடியில் இருந்து புறப்பட்ட தேர் கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது.

    இந்த அழகை காண திருவாரூர், தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரின் அழகை கண்டு ரசித்தனர். இதனைத் தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடந்தது.

    இன்று மாலையில் ஆழித்தேர் மீண்டும் நிலையை வந்தடையும்.

    தேரோட்டத்தை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழு தேரை பின்தொடர்ந்து சென்றது. பக்தர்கள் வசதிக்காக நகரின் முக்கிய இடங்கள் மற்றும் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்காலிக கழிவறைகளும் ஏற்படுத்தப்பட்டன. 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆழித்தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் வடுவூரில் கோதண்டராமர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக சன்னதியில் இருந்து கோதண்டராமர் வில்லேந்திய கோலத்தில் வலம் வந்து கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

    பின்னர் தீட்சிதர்கள் கொடிக்கு பூஜை செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கருடன் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலையில் சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக கோதண்டராமர் திருக்கல்யாண சேவையில் வீதி உலா நடந்தது. விழா நாட்களில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறும்.

    இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சூரிய பிரபை வாகனத்திலும், நாளை(சனிக்கிழமை) வெள்ளி சேஷ வாகனத்திலும் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ந் தேதி கருடசேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    • தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
    • தியாகராஜர், அம்பாள், முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர்கள் என மொத்தம் 5 தேர்கள் வடம் பிடிக்கப்படும்.

    திருவாரூர்:

    சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும் சர்வதோச பரிகார தலமாகவும் விளங்குவது புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில்.

    இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் நாளை ஏப்ரல் 1ஆம் தேதி நடை பெற உள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும்.

    சாதாரணமாக இந்த தேர் 36 அடி உயரமும் 36 அடி அகலமும் கொண்டது. நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுடன் சேர்த்து இதன் எடை சுமார் 220 டன்னாக இருக்கிறது.

    இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி நடைபெற்றுள்ளது.

    அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம்.

    அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை சுமார் 300 டன் ஆகும்.

    முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர், அம்பாள் தேர், முருகர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம் ஐந்து தேர்கள் உள்ளது.

    இந்த தேரோட்டத்தின் போது தேரை நிறுத்துவதற்காக 600 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையால் ஆனவை.

    நாளை காலை 5.30 மணிக்கு முருகர், விநாயகர் தேர்கள் இழுக்கப்படுகிறது.

    பின்னர் 7.30 மணிக்கு பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர் இழுக்கப்படுகிறது.

    இதனை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைக்கிறார்.

    தேர் பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் சுமார் 1500 போலீசார் ஈடுப்பட்டு உள்ளனர்.

    தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் விழா கோலம் பூண்டுள்ளது. 

    • பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
    • தேரின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

    திருவாரூர்:

    சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும் சர்வதோச பரிகார தலமாகவும் விளங்குவது புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில். இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் நாளை மறுநாள் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

    அதனை முன்னிட்டு தேரின் கட்டுமான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும். சாதாரணமாக இந்த தேர் 36 அடி உயரமும் 36 அடி அகலமும் கொண்டது.

    நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுடன் சேர்த்து இதன் எடை சுமார் 220 டன்னாக இருக்கிறது.

    இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி நடைபெற்றுள்ளது.

    அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம். அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டுள்ளது.

    அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை சுமார் 300 டன் ஆகும். முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த தேரின் கட்டுமான பணிகள் என்பது தற்போது நிறைவுப்பணி நடைபெற்று வருகிறது.

    பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர், அம்பாள் தேர், முருகர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம் ஐந்து தேருக்கான கட்டுமான பணிகள் நிறைவு பெற்றது.

    இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு பகலாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த தேரோட்டத்தின் போது தேரை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 600 முட்டுக்கட்டைகள் தயாரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையில் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கட்டுமான பணிகள் வரும் இன்று மாலைக்குள் முழுமை அடையும்.

    அதனைத் தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தியாகராஜ சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.

    உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித் தேரோட்டத்தை பார்ப்பதற்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிவர்.

    எனவே அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த தேரோட்டப் பணிகளில் பாதுகாப்பு பணிக்ககாக 1500 போலீசார் உள்ளிட்ட 2500 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • திருவாரூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி வருகிற (ஏப்ரல்) 2-ந்தேதி உடன் முடிவடைகிறது.
    • தினமும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள், பொதுமக்ககள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி வருகிற (ஏப்ரல்) 2-ந்தேதி உடன் முடிவடைகிறது.

    இதில் சுமார் 60 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் புத்தக வெளியீட்டாளர்களின் படைப்புகள் காட்சி படுத்தப்பட்டு சலுகை விலையில் விற்பனை நடைபெற்று வருகிறது.

    மேலும், மகளிர் சுயஉதவி குழுக்களின் தயாரிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    தினமும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்ககள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், இதில் மக்கள் பங்கேற்கும் விதமாக திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளரும், சமூக சேவகருமான செந்தில்குமார் கடந்த ஒரு வாரமாக திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மைக் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

    இவரது விழிப்புணர்வு மூலம் இதுவரை 2 ஆயிரத்து 542 இளைஞர்கள் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு சுமார் ரூ.30 ஆயிரம்-க்கு புத்தகம் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும், ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை சிறை துறைக்கு தானமாக வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

    இவரது இந்த பணியை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அரசு அனுமதியின்றி பழமையான கட்டங்களை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொருளாளர் வெற்றி தலைமை வகித்தார்.

    ஒன்றிய பொருளாளர் விடுதலை பாண்டி, ஒன்றிய துணை செயலாளர்கள் மாரிமுத்து, அம்பை முருகேஷ், ராஜவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர்செல்வன், ஒன்றிய செயலாளர் துரை.ஈழராஜா, நகரச் செயலாளர் குணா.கண்ணதாசன் ஆகியோர் பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஆட்சியின்போது மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம், கழிவறை கட்டும் திட்டம், உறிஞ்சிக் குழாய் அமைக்கும் திட்டம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீதும், பழமையான அரசு கட்டிடங்களை அனுமதி இன்றி இடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×