என் மலர்
திருப்பத்தூர்
- குளிர்ச்சியான சூழல் நிலவியது
- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் கடந்த சில நாட்களாக வெயில் அதிக அளவு காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. மாலை 6.30 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது.
சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார் (வயது27). இவர் மேட்டுபாளையம் பகுதியில் உள்ள பாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இருசக்கர வாகனத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது வாணியம்பாடியில் இருந்து வளையாம்பட்டு நோக்கி சர்வீஸ் சாலையில் பைக் வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் நிர்மல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் சூப்பிரண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் கலந்து கொண்டு அணிவகுப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி பஸ் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் சி.எல்.ரோடு, கச்சேரி ரோடு, கணியம்பாடி தெரு, பூக்கடை பஜார், பொண்ணியம்மன் கோவில், திருவள்ளூவர் தெரு, ஆசிரியர் நகர், காதர்பேட்டை என முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
- சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழாவையொட்டி தினந்தோறும் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூதவாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் 6-ம் திருநாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நேற்று மாலை 4 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு உற்சவர் வெள்ளி யானை வாகனத்திலும், சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் தனித்தனியான சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் மூலவரிடம் இருந்து பூஜிக்கப்பட்ட தந்தத்தை கொண்டு வந்து உற்சவர் அருகே வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சூரனை வதம் செய்ய புறப்பட்ட கற்பகவிநாயகர் கோவிலை சுற்றி வந்து தெப்பக்குளம் எதிரே அமைக்கப்பட்ட பந்தலில் காட்சியளித்து சூரனை வதம் செய்தார். முன்னதாக சூரனை வதம் செய்ய வந்த கற்பகவிநாயகரை அப்பகுதி பெண்கள் பூக்கோலமிட்டு வரவேற்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி காட்டப்பட்டது. 7-ம் நாளான இன்று இரவு மயில் வாகனத்திலும், 8-ம் நாளான நாளை வெள்ளி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவில் 9-ம் திருநாளான 18-ந்தேதி மாலை தேரோட்டமும் தொடர்ந்துமாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 19-ந்தேதி 10-ம் நாளன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் மூலவருக்கு மோதகம் (கொளுக்கட்டை) படையல் செய்யும் நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தனர்
- சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வட்டாரத்திற்கு உட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சியில் இந்திரா நகர் மற்றும் ராஜீவ் காந்தி நகரில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் டெங்கு தடுப்பு ஒட்டு மொத்த துப்புரவு பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தல், தண்ணீரில் குளோரின் ஊற்றுதல், ப்ளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடமாடும் மருத்துவ குழு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது.
இந்த துப்புரவு பணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.
- திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
- 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்
திருப்பத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் அருகே உள்ள பட்டன் கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 37), விவசாயி.
கொலை
இவருக்கும், இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான துரை என்பவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி துரைக்கு சொந்தமான நிலத்தில் சின்னதுரை மாடுகளை மேய்த்துள்ளார். இதனை துரை தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த துரை மற்றும் அவருடைய ஆதரவாளர்களான வெள்ளையன், இந்திராணி, ஜானகி ஆகிய 4 பேரும் சேர்ந்து சின்னதுரையை சரமாரியாக தாக்கினர்.
அப்போது துரை உருட்டு கட்டையால் சின்னது ரையின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சின்னதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து துரை, வெள்ளையன், இந்திராணி, ஜானகி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பி.டி.சரவணன் ஆஜரானார். அதில் துரைக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு வழங்கினார்.
வெள்ளையன், இந்திராணி, ஜானகி ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
- பழங்கள் நாசம்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் கடந்த 20 ஆண்டுகளாக மேட்டுப்பா ளையம் பகுதியில் பழக்கடை மற்றும் ஜுஸ் கடை நடத்தி வருகிறார்.
தீ விபத்து
இந்த நிலையில் வெங்கடேசன் வழக்கம் போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். கடையை பூட்டி சென்ற சிறிது நேரத்திலேயே திடீரென கடை தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது.
அப்போது கடையில் ஜுஸ் போடுவதற்கு பால் காய்ச்ச வைத்திருந்த சிறிய சியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதனால் மேலும் தீ அதிகளவில் பரவி கொழுந்து விட்டு எறிந்தது. சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
தீயை அணைக்க முடியாததால் இது குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பழங்கள் நாசம்
இந்த விபத்தில் கடையில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பழங்கள் மற்றும் பொருட்கள் தீயில் கருகி நாசமானது. வாணியம்பாடி விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
தீ விபத்தின் போது முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டி க்கப்பட்டது.
இதனால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாகுப்பம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புன்னியகோடி.
இவரது மகன் வெற்றிவேல் (வயது 34). இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துவிட்டு அப்பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வந்தார்.
நேற்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் ஆம்பூர் அருகே பச்சகுப்பம் ரெயில் நிலைய தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக பெங்களூரில் இருந்து தானாப்பூர் வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில் வெற்றி வேலுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாகவும், மேலும் வருகிற கார்த்திகை மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாக இருந்ததும் தெரியவந்தது.
- கேமராக்கள் பழுதால் தப்பிய திருடன்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 31), எலக்ட்ரிசியன். இவரது மனைவி பூஜா (23).
திருட்டு
8 மாதம் கர்ப்பிணியான பூஜா வழக்கம்போல் நேற்று பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பரிசோதனை செய்து முடிந்த பிறகு, மாத்திரை வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால், பூஜா தனது பையை தோளில் மாட்டிக்கொண்டு இருந்தார். மாத்திரை வாங்கி விட்டு பையை பார்த்தபோது, அது திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது பையில் வைத்திருந்த ரூ.14 ஆயிரத்ததை யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
பணத்தை இழந்த அங்கேயே கண்ணீர் விட்டு அழுதார். அவரது அழுகையை பார்த்த பொதுமக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
பின்னர் பொதுமக்கள் பூஜாவை சமாதானம் செய்து அவரது தந்தை முத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமாராக்களை ஆய்வு செய்யும் படி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கூறினர்.
கேமராக்கள் பழுது
அப்போது ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்வதில்லை என அலட்சியமாக ஊழியர்கள் பதில் கூறினர்.
இதனையடுத்து முத்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களின் தேவைக்காக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால் பல்வேறு குற்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
- பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்
- மக்களுக்கு ஆட்டோ மூலம் எச்சரிக்கை
ஜோலார்பேட்டை:-
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ெரயில்வே ஜங்ஷன் அருகே பெரிய ஏரி உள்ளது.
தற்போது இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பிய நிலையில் மீன்கள் இனப்பெருக்க உற்பத்தி மூலம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை ஏரி கரையின் பகுதிகளில் ஆங்காங்கே பெரிய அளவிலான மீன்கள் செத்து மிதந்து கிடந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறையினர் செத்து மிதந்து கிடந்த மீன்களை பார்வையிட்டு தற்போது மீன்களுக்கு அம்மை நோய் வந்திருப்பதாகவும். இதனால் மீன்கள் இறக்கும் நிலை ஏற்படும். எனவே மீன்களை பிடித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும் இது குறித்து அப்பகுதி மக்களுக்கு ஆட்டோ மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் கைகளால் பெற்றுக் கொண்டார்
- போலீசார் உடனிருந்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் கிரிசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரவீன்குமாருக்கு என்பவர் சென்னையில் உள்ள ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக கோப்பையும் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதை வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பழனியிடம் கொடுத்து அவர் கைகளால் பெற்றுக் கொண்டார். அப்போது தனி பிரிவு போலீசார் மூர்த்தி மற்றும் போலீஸ் நிலைய போலீசார் உடன் இருந்தனர்.
- வீட்டில் மாணவிக்கு எந்த பிரச்சினையும் இல்லை
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி நேரு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் பிருந்தா (வயது 14). அதேப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவி வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்தார். வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 'மாணவி பிருந்தா பள்ளி சீருடையில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். வீட்டிற்கு வரும்போது அவர் கவலையோடு வந்துள்ளார். வீட்டில் மாணவிக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட வில்லை.
வீட்டுக்கு வந்ததும் பெற்றோரிடம் பிருந்தா சகஜமாக பேசி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி தற்கொலை குறித்து போலீசார் அவர் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பள்ளியில் ஏதாவது மன உளைச்சல் ஏற்படும் அளவிற்கு சம்பவம் நடந்ததா? அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






