என் மலர்
திருநெல்வேலி
- கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த மாடசாமி கோவணத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
- அன்பு சுவரில் இருந்து வேட்டி எடுத்து கொடுத்த போலீசார் அவரை கலெக்டர் அலுவலத்தில் மனு கொடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கோவணத்துடன் வந்த முதியவர்
நாங்குநேரி அருகே உள்ள கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த மாடசாமி (வயது75) என்பவர் கோவணத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கிருந்த போலீசார் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். மனைவி இறந்துவிட்டார். எனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்ட வேண்டும் என கூறி 5 சென்ட் இடத்தை 2-வது மகன் கேட்டார். அதன்படி அவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தேன்.
ஆனால் அனைத்து இடத்தினையும் அவர் என்னிடம் இருந்து முறைகேடாக எழுதி வாங்கியது பின்னர் தெரியவந்தது. மேலும் என்னை கவனிக்காமல் வீட்டில் இருந்தும் துரத்திவிட்டார். எனவே அவரிடம் இருந்து எனது நிலத்தை மீட்டுதர வேண்டும் என கூறினார்.
பின்னர் அன்பு சுவரில் இருந்து வேட்டி எடுத்து கொடுத்த போலீசார் அவரை கலெக்டர் அலுவலத்தில் மனு கொடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
கொலை மிரட்டல்
வி.கே.புரம் அருணாச்சல புரத்தை சேர்ந்த ஜெயசீலன் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாடு உள்ளது. அந்த பகுதியில் தனிநபர் ஒருவர் ஆக்கிர மித்து வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தெற்கு பாப்பான் குளத்தை சேர்ந்த கருப்பசாமி மனைவி மாரியம்மாள் (35) என்பவர் தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு தலைமையில் வந்து கொடுத்த மனுவில், நான் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 18-ந்தேதி பணியில் இருந்த போது ஒரு பெண் சாதி பெயரை கூறி என்னை அவதூறாக பேசினார். பின்னர் 20-ந்தேதி மீண்டும் கணவருடன் வந்து என்ைன அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த நான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளேன். அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர். அவர் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
- ராஜேஸ்வரி அனந்தப்பனிடம் பேசிக் கொண்டிருந்தார்.
- இசக்கிராஜா, அனந்தப்பனை கை விரல்களில் கடித்தார்.
களக்காடு:
ஏர்வாடி மரக்குடி தெருவை சேர்ந்தவர் ஜோசப் பிரான்சிஸ் சாவி யோ. இவரது குடும்பத்தின ருக்கும், அதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜா (வயது 26) குடும்பத்தினருக்கும் பொது முடுக்கில் தூண் கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ஜோசப் பிரான்சிஸ் மனைவி ராஜேஸ்வரி (37) தனது வீட்டின் முன் நின்று தந்தை அனந்தப்பனிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கிராஜா, ராஜேஸ்வரி குடும்பத்தினரை அவதூறாக பேசினார். இதனை அன ந்தப்பன் தட்டி கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கிராஜா அனந்தப்பனை கை விரல்களில் கடித்தார். மேலும் ராஜேஸ்வரியை கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இசக்கி ராஜாவை கைது செய்தனர்.
- சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- கலந்துகொண்ட அனைவருக்கும் விதைப்பந்து வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன் மற்றும் வழக்கறிஞரும், புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வேணுகோபால் தலைமை தாங்கினர்.பணகுடி நகராட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் ஓய்வு பெற்ற துணை அஞ்சல் நிலைய அதிகாரி செல்வராஜ், ஓய்வு பெற்ற காவல்துறை சார் ஆய்வாளர்களான தங்கப்பா மற்றும் எழில் , ஒன்லேர்ன் நிறுவன பிரதிநிதி கிளமெண்ட் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் டாக்டர் தேவிகா பேபி வரவேற்று பேசினார். விழாவில் லட்சுமிதேவி கல்வி குழும தலைவரான அனுகிராகஹா, நிர்வாகிகள் டாக்டர் பொன்னு லட்சுமி மற்றும் ஆனந்த கண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ- மாணவிகள் தங்களது தனி திறமையை வெளிக்காட்டும் விதமாக கராத்தே, யோகா, சிலம்பம் மற்றும் ஸ்கேட்டிங் போன்றவற்றை செய்து அனைவரையும் கவர்ந்தனர். மாணவ- மாணவிகளின் நடனம் மற்றும் நாடகம் பார்வையாளர்களை கவர்ந்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் விதைப்பந்து வழங்கப்பட்டது. பள்ளியின் கல்வி நிர்வாகி டாக்டர் சுந்தர் ராஜ் நன்றி கூறினார்.
- 108 சிவதாண்டவ கலை வேலைப்பாடுகளுடன் நிலைக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் முன்பு 108 அடி உயரத்தில் 9 நிலை முழுவதும் கருங்கற்களால் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.
நேற்று ராஜகோபுரவாசல் கல்நிலை விடும் விழா நடந்தது. 22 அரை அடி உயரம் 12 அரை அடி அகலத்தில் 108 சிவதாண்ட வகலை வேலைப்பாடு களுடன் நிலைக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலைவாசல் விடும் விழாவை முன்னிட்டு சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டது.
தொடர்ந்து கோபூஜை நிலை கல்லுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வஸ்திரங்கள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு கிரைன் மூலம் நிலைவிடப்பட்டது.
விழாவில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், கவுரவ தலைவர் லங்கால்லிங்கம், செயலாளர் வெள்ளையா நாடார், பொருளாளர் சுடலை மூர்த்தி, துணைத்தலைவர் கனகலிங்கம், ராஜகோபுர கமிட்டி உறுப்பினர்கள் ராஜாமணி நாடார், சுந்தர், மணி, பாலகிருஷ்ணன், தேர் திருப்பணி குழு செயலாளர் தர்மலிங்க உடையார், வணிகர் சங்க பேரமைப்பு மாநில இணைச்செயலாளர் தங்கையா கணேசன், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், ராஜகோபுர ஸ்தபதி சந்தானகிருஷ்ணன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
- கட்டிட கழிவுகள் முழுவதும் பாளையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டது.
- மண் அள்ளி விற்பனை செய்த மாரியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளை சமாதான புரத்தில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அங்கிருந்த கடைகள் அருகிலேயே தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
கட்டுமான பணி
தொடர்ந்து பழைய கடைகள் அனைத்தும் முழுமையாக இடிக்கப்பட்டு அந்த கட்டிட கழிவுகள் முழு வதும் பாளை அம்பேத்கர் காலனியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டது. அதன்பின்னர் தற்போது மார்க்கெட் கட்டு மான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் மண் குவியல் அளவு குறைந்து வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, பாளை மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து விடம் தகவல் தெரிவித்து விசாரணை நடத்த உத்தர விட்டார்.
போலீசில் புகார்
அதில், மர்ம நபர்கள் சிலர் லாரியில் மண் குவியல்களை அள்ளிச்சென்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் பாளை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பாளை கே.டி.சி.நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்த மாரி என்ற மணல்மாரி மற்றும் அவரது கூட்டாளிகளான அனவரதநல்லூரை சேர்ந்த ராமர், வல்லநாடு அருகே மணக்கரையை சேர்ந்த செந்தில் ஆகியோர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரிகளில் மண் லோடுகளை அள்ளி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாரியை போலீசார் கைது செய்தனர். ஜே.சி.பி., லாரி யை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ராமர், செந்தில் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் அங்கு ஓடி வந்து அவர் கையில் இருந்த பாம்பை கைப்பற்றினர்.
- பாம்புடன் மனு அளிக்க வந்த பெண்ணால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவருக்கு சமரச செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு சமர செல்விக்கு சொந்தமான இடத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி உள்ளார். வீட்டுக்கான மின் இணைப்பு கேட்டு 2019-ம் ஆண்டு மனு அளித்த நிலையில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
பலமுறை மின்வாரியம் மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின் இணைப்பு வேண்டி புகார் அளித்துள்ளார்.
முருகனின் மூத்த மகள் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலை இருந்து வருவதாகவும் நன்றாக படிக்கும் நிலையில் மகள் இருந்தும் படிப்பிற்கு உதவ முடியாத நிலையில் நாங்கள் இருப்பதாக வேதனையுடன் முருகன் மற்றும் மனைவி, கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர்.
இந்நிலையில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறியும் கடந்த சில நாட்களாக வீட்டுக்குள் விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகள் வருவதாகவும் தெரிவித்ததுடன் நேற்றைய தினம் வீட்டிற்குள் புகுந்த 3 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்புடன் சமரச செல்வி தனது மகளையும் அழைத்துக் கொண்டு இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் அங்கு ஓடி வந்து அவர் கையில் இருந்த பாம்பை கைப்பற்றினர்.
தொடர்ந்து பணியில் இருந்த போலீசார் அவரை அழைத்து வந்து கலெக்டரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். பாம்புடன் மனு அளிக்க வந்த பெண்ணால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இது தொடர்பாக மின்சார துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட வீட்டுக்கு செல்வதற்கு வழிப்பாதை இல்லை. அங்கு மின்கம்பம் அமைப்பதற்கு அருகில் இருப்பவர்களிடம் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே மின்கம்பம் அமைத்து மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளோம்.
ஆனாலும் இதுவரை சான்று கிடைக்கவில்லை.இதனால் மின்சாரம் வழங்கும்பணி தாமதப்பட்டு வருகிறது என்றனர்.
- இசக்கியப்பனுக்கு தொடை மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசைவேணியை கைது செய்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு மருதகுளம், வடக்குத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன்(வயது 44). இவருக்கும், இவரது மனைவி இசைவேணிக்கும்(40) திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இசக்கியப்பன் சூரத்தில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இசைவேணி தவறான பழக்க வழக்கத்தில் ஈடுபடுவதாக இசக்கியப்பனுக்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். நேற்று அவர் தனது மனைவி இசைவேணி மீது சந்தேகம் அடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் நீ எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது.
அப்போது ஆத்திரம் அடைந்த இசைவேணி, சற்றும் எதிர்பாராமல் வீட்டில் இருந்த கத்தியால், கணவர் இசக்கியப்பனை குத்தினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் இசக்கியப்பனுக்கு தொடை மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசைவேணியை கைது செய்தனர்.
- நெல்லை மாவட்டத்தில் குடிநீர் ஆதார மேம்பாட்டு பணிகள் ரூ.529.35 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் வறட்சியை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு திட்டங்களின் மூலம் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், புதிய கிணறு அமைத்தல், ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறு திறன் அதிகரித்தல் உள்ளிட்ட 108 குடிநீர் ஆதார மேம்பாட்டு பணிகள் ரூ.529.35 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் கோடை காலங்களில் ஏற்படும் வறட்சியை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் குழாய்களில் சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொதுமக்கள் குடிநீர் தொடர்பான புகார்களை அம்பை-04634250397, சேரன்மாதேவி- 04634260131, களக்காடு-04635265532, மானூர்-04622485123, நாங்குநேரி-04635250229, பாளையங்கோட்டை- 04622572092, பாப்பாக்குடி- 04634274540, வள்ளியூர்-04637220242, ராதாபுரம்-04637254125 ஆகிய பஞ்சாயத்து யூனியன் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்
- சாதனைப் பெண்கள் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
- மாநாட்டுப்பாடல்களும் பெண் எழுச்சி பாடல்களும் பெண்கள் அனைவரும் இணைந்து பாடினார்கள்.
நெல்லை:
பாளை மறைமாவட்ட பொன்விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக பெண்கள் மாநாடு பாளை தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி போப் பிரான்சிஸ் அரங்கத்தில் நடைபெற்றது.
விருதுகள்
பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்புரையாற்றினார். "பெண்களின் நல வாழ்வு திரு அவையின் நிறை வாழ்வு" என்ற மைய செய்தியை அகில இந்திய பெண்கள் பணிக்குழு செயலாளர் லிட்வின் வழங்கினார்.
சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்து அறிவியல் அறிஞர் கோமதி விளக்கி பேசினார். மேலும் சாதனைப் பெண்கள் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
திரு அவையிலும், சமூகத்திலும் பெண்களின் தலைமைத்துவம் குறித்து மறை மாவட்ட பெண்கள் பணிக்குழு செயலாளர் அமலி அமலதாஸ் விளக்க உரையாற்றினார். பெண்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாநாட்டுப்பாடல்களும் ,விழிப்புணர்வு பாடல் களும், பெண் எழுச்சி பாடல்களும் பெண்கள் அனைவரும் இணைந்து பாடினார்கள். தூய சவேரியார் கலை மனை களின் அதிபர் ஹென்றி ஜெரோம் சமூகத்தில் பெண்களின் சிறப்புகள் பற்றி எடுத்துக் கூறினார். நிகழ்ச்சிகளை ஜனதா, ஸ்டெல்லா தொகுத்து வழங்கினர்.
ஏற்பாடுகளை பாளை மறை மாவட்டத்தின் பெண்கள் பணிக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் முதன்மை குரு குழந்தை ராஜ் அடிகளார், பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், அருள் தந்தையர்கள், அருள் சகோதரிகள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வீட்டுக்குள் சென்ற முத்து சரவணன், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார்.
- மேலப்பாளையம் போலீசில் அந்த பெண்ணின் கணவர் புகார் அளித்தார்.
நெல்லை:
மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மூக்காண்டி. இவரது மகன் முத்து சரவணன்(வயது 21). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று 28 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் தூங்கி கொண்டி ருந்தார்.
அதனை கண்ட முத்து சரவணன், வீட்டுக்குள் சென்று அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த வர்கள் ஓடி வந்தனர். இதனால் முத்து சரவணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முத்து சரவணனை கைது செய்தனர்.
- சுப்புலெட்சுமி கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார்.
- இசக்கிபாண்டி பல்வேறு இடங்களில் தேடியும் சுப்புலெட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலங்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவரது மகள் சுப்புலெட்சுமி (வயது21). கடந்த 15-ந் தேதி சுப்புலெட்சுமி, கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிபாண்டி பல்வேறு இடங்களில் தேடியும் சுப்புலெட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சுப்பு லெட்சுமியை தேடி வருகிறார்.
- சிவராமன் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
- 7 பேர் கொண்ட கும்பல் சிவராமனை சரமாரியாக வெட்டியது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே கோடாரங்குளம் பகுதியை சேர்ந்த வர் தங்கபாண்டியன். இவருடைய மகன் செல்வா என்ற சிவ ராமன்(வயது 25). இவர் பி.ஏ. படித்து விட்டு தனி யார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
கொலை
இவருடைய குடும்பத்தின ருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுடலை முத்து குடும்பத்தின ருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலையில் சிவராமன் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றபோது சுடலைமுத்து மகன் உலகநாதன் என்ற சங்கர் செல்போனில் சிவராமனை தொடர்பு கொண்டு சொத்து பிரச்சினை தொட ர்பாக பேச ஆலடியூர் கல் குவாரி அருகில் வருமாறு சிவராமனை அழைத்தார்.
இதனை நம்பிய சிவராமன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார். அப்போது கல்குவாரி அருகில் சாலையோரம் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சிவராமனை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
3 பேர் கைது
இதுகுறித்து வி.கே.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து பிரம்மதேசத்தை சேர்ந்த முருகன், அம்பையை சேர்ந்த வெங்க டேஷ், மருதப்புரத்தை சேர்ந்த ராசு ஆகிய 3 பேரை கைது செய்தார்.
இதில் தொடர்புடைய முக்கிய கொலையாளியான சங்கர், ராஜா உள்ளிட்ட 4 பேரை பிடிக்க அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.






