என் மலர்
திருச்சிராப்பள்ளி
- துறையூர் பச்சை மலையில் வாலிபர் கொன்று புதைத்த வழக்கில் பெண் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் காந்திநகர் காலனியை சேர்ந்த பெருமாள் மனைவி ராசாத்தி (45). இவருக்கு நந்தகுமார் (25), கார்த்திக் (22) என்கிற 2 மகன்கள் உள்ளனர். இதில் கார்த்திக் அடிவாரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வினோத் (எ) பன்றி வினோத் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கார்த்திக் பெரம்பலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்தாக தெரிகிறது. இதில் பிரச்சினை ஏற்பட்டதால் மனம் உடைந்து கடந்த செப்டம்பர் மாதம் வீட்டிற்கு தெரியாமல் சென்னைக்கு சென்று, அங்கு கூலி வேலை பார்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராசாத்தி தனது மகன் கார்த்திக் வீட்டிற்கு வராததால் வினோத்தின் (40) உதவியுடன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து வினோத் மற்றும் காணாமல் போன கார்த்திக்கின் சகோதரரான நந்தகுமார் ஆகிய 2 பேரும், அடிவாரப் பகுதியை சேர்ந்த விஜய் (24) என்பவரிடம் கார்த்திக்கை பற்றி பாரில் வைத்து விசாரித்துள்ளனர். அப்பொழுது விஜய்க்கும், வினோத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பானது.
அப்பொழுது வினோத் அருகில் இருந்த கட்டையை எடுத்து விஜயை தாக்கியதில், தலையில் பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வினோத் மற்றும் நந்தகுமார் ஆகிய 2 பேரும்,
விஜயின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து, பச்சை மலையில் உள்ள தாளூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோட்டத்தில் புதைத்தனர். இதனைத் தொடர்ந்து தோட்டத்து உரிமையாளரான ஜெயராமன் சந்தேகம் அடைந்து துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டாட்சியர் வனஜா ஆகியோர் கொண்ட குழுவினர் தொழிலாளர்கள் உதவியுடன் தோண்டி பார்த்ததில் ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அது விஜய் என்றும், கொன்று புதைக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து வினோத், நந்தகுமார் ஆகிய 2 பேரும் துறையூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விரைவாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் விஜய்யை கொலை செய்யும் பொழுது, வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (27), அடிவாரப் பகுதியை சேர்ந்த சிவா (31) மற்றும் காணாமல் போன கார்த்திக்கின் தாயார் ராசாத்தி (42) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தில் இருந்ததும், கொலை செய்த பிறகு பிணத்தை மறைக்க உதவி செய்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து 3 பேரையும் துறையூர் போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து அவர்கள் கீரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணனிடம் சரணடைந்தனர். அவர் 3 பேரையும் துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த துறையூர் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜனனி நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
- ஜனனி வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சி பகுதியில் உள்ள கானப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில், விவசாயி. இவரது மகள் ஜனனி (வயது 18). இவர் நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை வீட்டிற்கு வந்த ஜனனி வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹாலில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாத்தா மாலை வேளையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஜனனி தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் செபாஷ்டின் சந்தியாகு போலீசாருடன் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜனனி தற்கொலைக்கு காரணம் என்ன? கல்லூரியில் ஏதும் பிரச்சினையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- திருச்சியில் திடீரென கார் டிரைவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
- ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் நாடிமுத்து (வயது 48). கார் டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த நாடிமுத்து திடீரென்று தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுவில் விஷம் கலந்து குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி வயலூர்ரோடு கோப்பு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் நவீன்(வயது 28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெயிண்டராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான நவீன் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடை பகுதியில் மயங்கி கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், நவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சியில் வீரமாமுனிவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
- கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது
திருச்சி,
தமிழறிஞர் வீரமாமுனிவரின் 343-வது பிறந்தநாள் , கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதையொட்டி திருச்சி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் திருச்சி எடத்தெரு பழைய கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன். மத்திய மண்டல செயலாளர் அலெக்ஸ் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். பாதிரியார் தாமஸ், பாதிரியார் விஜய் பெலவேந்திரன் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
மாநில துணை அமைப்புச் செயலாளர் பாஸ்டர் சாம்ராஜ், மாநில ஆர்.சி துணை அமைப்புச் செயலாளர் வின்சென்ட், மாவட்ட அவைத் தலைவர்கள் ஜேக்கப் ஆண்ட்ரூஸ், மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் தேவராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள் பிரான்சிஸ் சேவியர் ,ஆரோக்கியராஜ் ,ஜெரால்ட், எட்வர்ட், மகளிர் அணி நிர்மலா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருச்சி ஜங்ஷனில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்
- காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை
திருச்சி,
புதுக்கோட்டையை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 39). இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.இதனால் அவர் குடும்பத்துடன் திருச்சி கே.கே. நகர் ஓலையூர் ஆரண்யா நகர் அப்துல் கலாம் தெரு பகுதியில் வசித்து வந்தார்.நேற்று இரவு பணிக்கு வந்திருந்த அவருக்கு 1-வது பிளாட்பாரம் ஒதுக்கப்பட்டிருந்தது.அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மஞ்சுநாத் திடீரென 2-வது பிளாட்பார்முக்கு சென்றார்.அப்போது கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த ரெயில் பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது திடீரென்று மஞ்சுநாத் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.அடுத்த அடுத்த நொடி அவரது உடல் மீது ரயில் சக்கரம் ஏறி இறங்கி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ரெயில் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் ஓட்டம் பிடித்தனர்.உடனே அங்கு பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்த சக ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மஞ்சுநாத் தற்கொலைக்கு காரணம் உடனடியாக தெரியவில்லை. பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.தற்கொலை செய்த மஞ்சுநாத்துக்கு நாகலட்சுமி (39) என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். தற்கொலை செய்த மஞ்சுநாத்துக்கு நேற்று இரவு 10 மணிக்கு டூட்டி நிறைவடைவதாக இருந்தது. இந்த நிலையில் இரவு 9.45 மணி அளவில் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.இந்த தற்கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்சி மணிகண்டத்தில் லோடு ஆட்டோ மோதி பள்ளி மாணவன் பலியானார்
- மணிகண்டம் போலீசார் விசாரணை
ராம்ஜிநகர்,
திருச்சி நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வீக ராஜ், விவசாயி. இவரது மகன் சச்சின் ஜோசர் (வயது 14). இவர் திருச்சி மதுரை சாலை நாகமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் மின்சார இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று பள்ளிக்குச் சென்ற இவர், பள்ளி முடிந்தவுடன் டியூஷன் சென்று முடித்துவிட்டு தீரன் மாநகரில், இருந்து நவலூர்குட்டப்பட்டு செல்லும் சாலையில் கலிங்கிபட்டி என்ற இடத்தில் வந்தார். அப்போது எதிரே மணப்பாறையில் இருந்து நாகமங்கலம் நோக்கி வந்த லோடு ஆட்டோ மோதியது. இதில் சச்சின் ஜோசர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டார்.
இதனை அறிந்த மணிகண்டம் போலீசார் பள்ளி மாணவனின் உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து லோடு ஆட்டோ டிரைவர் மணப்பாறை பெரியப்பட்டியை சேர்ந்த முத்துவேல் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- தமிழ் புலவர்கள் சிலைகள் வைக்கப்படும். தமிழ் புலவர் திருவள்ளுவர் சிலை வைக்கப்படும்.
- இந்து அறநிலைத்துறை அமைச்சரவை இருக்காது.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு ஸ்ரீரங்கம் மண்ணில் இருந்து பா.ஜனதா கட்சி உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா கட்சியினுடைய ஆட்சி வரும்பொழுது, முதல் வேலை அந்த சிலையை அப்புறப்படுத்தி நம்முடைய ஆழ்வார்களிலிருந்து, நாயன்மார்களிலிருந்து அவர்களுடைய சிலைகள் அங்கு வைக்கப்படும்.
தமிழ் புலவர்கள் சிலைகள் வைக்கப்படும். தமிழ் புலவர் திருவள்ளுவர் சிலை வைக்கப்படும். நம்முடைய சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் சிலைகள் வைக்கப்பட்டு வழிபடுவோம் தவிர,
கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்று சொல்லக்கூடிய சிலையை, பா.ஜனதா ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே, தமிழகத்தில் உள்ள கோவில்கள் அருகில் வைத்துள்ள எல்லா சிலைகளையும் அகற்றி காட்டுவோம். அதுபோல் இந்து அறநிலைத்துறை அமைச்சரவை இருக்காது. இந்து அறநிலைத்துறை என்ற அமைச்சகத்தின் கடைசி நாள், பா.ஜனதா ஆட்சிக்கு வரும் முதல்நாளாக இருக்கும்.
- வேங்கை வயல் விகாரமானது தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
- அயோத்தியில் ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந் தேதி நடக்க உள்ளது.
திருச்சி:
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண்-என் மக்கள் என்னும் தலைப்பில் கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது அண்ணாமலைக்கு சாலையோரம் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் திரண்டு நின்று மலர் மாலைகள், சால்வை அணிவித்தும் முளைப்பாரியுடன் வரவேற்றனர்.
கந்தர்வகோடடை பஸ் நிலையத்தில் வேனில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
வேங்கை வயல் விகாரமானது தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் தி.மு.க. போலியாக சமூக நீதி பேசிக்கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான பிரச்சனைகள் உள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் பட்டியல் வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் இப்பகுதியில் இருந்து பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றால் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்கு ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என 6 மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். பரிசீலிப்பதாக பதில் வந்துள்ளது.
காவிரி-குண்டாறு திட்டம், முந்திரி தொழிற்சாலை, மருத்துவமனைகள் மேம்பாடு உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
அயோத்தியில் ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந் தேதி நடக்க உள்ளது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு தமிழகத்தில் இருந்து தினமும் ஒரு ரெயில் 60 நாட்கள் அயோதிக்கு இயக்கப்படும். அதில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்து ராமரை தரிச்சலாம்.
இதற்கான முழு செலவை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளும். சனாதனத்தை இந்து தர்மத்தை, கோவிலை அழிக்கிறவர்கள் மத்தியில் இருந்து தர்மத்தை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கு மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்
- அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
திருச்சி:
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு வீடு, அலுவலகங்கள், அவர் தொடர்புடையவர்கள் அலுவலகங்கள் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அவருடன் தொடர்பு இருப்பதாக கருதப்படும் திருச்சி தென்னூர் அண்ணா நகர் கண்ணதாசன் சாலை பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கு மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நிதி நிறுவன அதிபரான சாமிநாதன் காப்பி தூள் ஏஜென்சியாகவும் உள்ளார். சோதனைக்கு பின்னர் சாமிநாதன் குடும்பத்தினரை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காரில் அழைத்து சென்றனர் சென்றனர்.
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் திருச்சியிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அப்போது அவருக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- இதனை தொடர்ந்து போலீசார் ராமச்சந்திரனை உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது53). இவர் துறையூர் - ஆத்தூர் செல்லும் சாலையில் டிராக்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தை கடையின் அருகே வைத்து பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது, நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு ஜெயபாலன் அதிர்ச்சி அடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஜெயபாலன் துறையூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அப்போது சிறுநாவலூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (22) என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவருக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் ராமச்சந்திரனை உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு உள் நோயாளியாக போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துறையூரில் திருட்டு வழக்கில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த சினைப்பசு ஒன்று கயிற்றை அறுத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு சென்றது.
- எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது..
உப்பிலியபுரம்
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 63), விவசாயி. இவர் ஆ.கருப்பம்பட்டி பகுதியிலுள்ள தோட்ட வீட்டில் குடியிருந்து வருகிறார். தோட்டப்பகுதியில் கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில், நேற்று தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த சினைப்பசு ஒன்று கயிற்றை அறுத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு சென்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது..60 அடி ஆழமுள்ள கிணற்றில் 30 அடி நீர் நிரம்பியிருந்த கிணற்றில் உயிருக்குப் போராடிய நிலையில், உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவலளித்தனர்.
தகவலின் பேரில் நிலைய பொறுப்பாளர் சங்கப்பிள்ளை தலைமையில் 6 வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலம் பொதுமக்கள் உதவியுடன் சினைப்பசுவை உயிருடன் மீட்டனர். பின்னர் பசுவை சுப்ரமணியனிடம் ஒப்படைத்தனர். சினைப்பசு மீட்கப்பட்டதால் சுப்ரமணியன் மகிழ்ச்சி அடைந்தார். தீயணைப்பு வீரர்களுக்கு அவர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.






