search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அயோத்தி ராமர் கோவிலுக்கு பா.ஜ.க. சார்பில் தினமும் ரெயில் சேவை: அண்ணாமலை அறிவிப்பு
    X

    புதுக்கோட்டை பாதயாத்திரையின் போது கடைவீதி வியாபாரி ஒருவர், அண்ணாமலையுடன் செல்பி எடுத்து கொண்டபோது எடுத்தபடம். 

    அயோத்தி ராமர் கோவிலுக்கு பா.ஜ.க. சார்பில் தினமும் ரெயில் சேவை: அண்ணாமலை அறிவிப்பு

    • வேங்கை வயல் விகாரமானது தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
    • அயோத்தியில் ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந் தேதி நடக்க உள்ளது.

    திருச்சி:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண்-என் மக்கள் என்னும் தலைப்பில் கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது அண்ணாமலைக்கு சாலையோரம் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் திரண்டு நின்று மலர் மாலைகள், சால்வை அணிவித்தும் முளைப்பாரியுடன் வரவேற்றனர்.

    கந்தர்வகோடடை பஸ் நிலையத்தில் வேனில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    வேங்கை வயல் விகாரமானது தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் தி.மு.க. போலியாக சமூக நீதி பேசிக்கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான பிரச்சனைகள் உள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் பட்டியல் வெளியிட்டுள்ளார்.

    மக்களவைத் தேர்தலில் இப்பகுதியில் இருந்து பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றால் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்கு ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என 6 மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். பரிசீலிப்பதாக பதில் வந்துள்ளது.

    காவிரி-குண்டாறு திட்டம், முந்திரி தொழிற்சாலை, மருத்துவமனைகள் மேம்பாடு உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

    அயோத்தியில் ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந் தேதி நடக்க உள்ளது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு தமிழகத்தில் இருந்து தினமும் ஒரு ரெயில் 60 நாட்கள் அயோதிக்கு இயக்கப்படும். அதில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்து ராமரை தரிச்சலாம்.

    இதற்கான முழு செலவை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளும். சனாதனத்தை இந்து தர்மத்தை, கோவிலை அழிக்கிறவர்கள் மத்தியில் இருந்து தர்மத்தை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×