என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தேவகோட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோது சில கட்டுபாடுகளுடன் செயல்படும் மளிகை கடை, ஓட்டல்கள் பேக்கரி, டீக்கடை மற்றும் செட்டிநாடு திண்பண்டமான முறுக்கு, சீப்பு சீடை போன்ற விற்பனை செய்யும் கடைகளில் காலாவதியான உணவு வகைகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர்.

    இதில் பன், கேக், பிஸ்கட், கூல் டிரிங்ஸ் வகைகள், வாட்டர் பாட்டில்கள், லேஸ், மிச்சர், முறுக்கு, வத்தல், வெல்லம், பருப்பு வகைகள் விற்பனை தேதி முடிந்து விற்பனைக்கு வைத் திருந்தனர். காலாவதியான இந்த உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆட்டு இறைச்சி கடைகளில் நகராட்சி முத்திரை இல்லாத கறிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நகராட்சியில் ஒப்படைத்து அழித்தனர்.

    பாதுகாப்பு பணியில் காவல் உதவி கண்காணிப் பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், ராமச்சந்திரன், காவலர்கள் ஆரோக்கியம், இளங்கோ மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்த சோதனையில் நகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டனர்.

    திருப்புவனம் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்புவனம்:

    திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது அல்லிநகரம் விலக்கு பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் விவசாயி தவமணி. இவரது வாழைத்தோட்டம் கலியாந்தூர் செல்லும் சாலையில் உள்ளது. இங்கு வாழைத்தார்களை வெட்ட தவமணி, மகன் கல்லாணை, தாத்தா சொக்கர் மற்றும் கணேசன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது மின்ஒயர் அறுந்து கிடந்துள்ளது. இதில் கல்லாணையின் கால்பட்டதில் மின்சாரம் தாக்கி அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    மின்சாரம் தாக்கி பலியான கல்லாணை, அல்லி நகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நடிகர்- நடிகைகள் இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். ஊரடங்கு முடிந்ததும் இவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச் ராஜா கூறியுள்ளார்.

    காரைக்குடி:

    பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சிவ கங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் 13 லட்சம் பேர் கெரோனாவால் பாதிக்கப்பட்டு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைதான் முக்கிய காரணமாகும்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வரும். வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு பாக்கி வைத்துள்ள மல்லையாவின் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியுள்ளோம்.

    நடிகர்கள் கமல், விஜய் சேதுபதி, நடிகை ஜோதிகா போன்றோர் இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். ஊரடங்கு முடிந்ததும் இவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    22 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தை பச்சை மண்டலமாக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காரைக்குடி:

    கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய- மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டம் நோய் தொற்று பரவலை தடுக்க முழு வீச்சில் களத்தில் இறங்கியது.

    சிவகங்கை மாவட்டத்தில் முதல் முறையாக கடந்த மாதம் 2-ந்தேதி திருப்பத்தூரைச் சேர்ந்த 48 வயது நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

    அதைத் தொடர்ந்து திருப்பத்தூர், இளையான்குடி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து படிப்படியாக வீடு திரும்பிவிட்டனர்.

    கடந்த மாதம் 19-ந்தேதி முதல் நேற்று வரை 22 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தை பச்சை மண்டலமாக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் கூறுகையில், பச்சை மண்டலத்துக்கான அறிவிப்பு இதுவரை வரவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். சமூக இடைவெளியை கடைபிடித்தல் முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

    சிவகங்கை மாவட்டம் மானாதுரையில் செயல்படும் அரிமா சங்கம் சார்பில் ஏழைகளுக்கு தினந்தோறும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாதுரையில் செயல்படும் வைரம் அரிமா சங்கம் சார்பில் அதன் தலைவர் சஞ்சை தலைமையில் ஒருங்கிணைந்து முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள் அரசு அனுமதியுடன் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 300 ஏழைகளுக்கு அறுசுவை உணவுகளை வழங்கி வருகின்றனர்.

    தினமும் சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பிரியாணி, முட்டை, வாழை பழத்துடன் வாகனத்தில் ஏற்றி கொண்டு ஏழை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். 45-வது நாளாக இன்றும் உணவு வழங்கினர்.

    இதுபற்றி அரிமா சங்க தலைவர் சஞ்சை கூறியதாவது:-

    உலகை புரட்டி போட்ட கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள், முதியோர்கள், நோயாளிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். பசியுடன் யாரும் இருக்ககூடாது என தினமும் மானாமதுரை பஸ் நிலையம், ரெயில் நிலைய ரோடு, மெயின் பஜார், வாரச்சந்தை, நான்கு வழிச்சாலை, மூங்கில் ஊரணி, சிப்காட், சிவகங்கை ரோடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு வழங்கி வருகிறோம்.

    சில நாட்களுக்கு முன்பு மானாமதுரையைச் சுற்றியுள்ள ஏழை-எளிய குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் சமையல் பொருட்களை வழங்கி உள்ளோம். பொதுமக்கள் இதனை பாராட்டி தற்போது உணவு தயாரிக்க அரிசி வழங்கி வருகின்றனர் என தெரிவித்தார்.

    தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் தலைதூக்கும் என்று கார்த்தி சிதம்பரம் எம்பி கூறியுள்ளார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லுக்கட்டி வடபகுதியில் ஏழைகள் 500 பேருக்கு சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 45 நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் ஒரே நாளில் திறக்கப்பட்டன. இதனால் தான் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. பொது முடக்கத்தின் போது மதுபானக் கடைகளை தினமும் 2 மணி நேரம் திறந்து வைத்திருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது.

    என்னைப் பொருத்தவரை பூரண மதுவிலக்கு என்ற கொள்கையானது உலகம் முழுவதும் தோல்வி அடைந்திருக்கிறது. தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் தலைதூக்கும். பொது முடக்கத்தால்தான் குற்றச் சம்பவங்கள் குறைந்தன. மதுபானக்கடைகள் திறப்பால் மட்டும் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க வில்லை. மதுவை தடை செய்தால் மட்டும் பிரச்சினைகளை தீர்த்து விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 7 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே மூங்கில் ஊரணி பகுதியில் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தலைவராக இருப்பவர் நடராஜன் (வயது55). சம்பவதன்று முகாமை சேர்ந்த சரண்ராஜ், நிகஷன் மற்றும் சிலர் மது அருந்திவிட்டு சத்தம் போட்டு கொண்டு இருந்தனர். இதை நடராஜன் தட்டிக்கேட்டுள்ளார்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் நடராஜனை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சரண்ராஜ், நிகஷன், வசந்தகுமார், சசிகுமார், நர்மால், கனிசல், சஞ்சய் ஆகிய 7 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செர்டு சேவை நிறுவனம் நடத்தி வருபவர் பாண்டி. இவர் தினமும் கொரோனாவில் வேலை இழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி மற்றும் நிவாரண தொகுப்புகளை வழங்கி வருகிறார்.

    மானாமதுரை:

    மானாமதுரை கெங்கை நகர், கலைகூத்துநகர், மாரியம்மன் நகர் ஆகிய பகுதியில் வெளியூர்களில் சர்க்கஸ் தொழில் செய்யும் குடும்பங்கள் வின்சென்ட் நகர், சன்னதி புதுகுளம் கலைநகர் மற்றும் காட்டு நாயக்கன்குடியிருப்பு ஆகிய பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    இதுதவிர மானாமதுரை வைரம் அரிமா சங்கத்தினர் தினமும் 300 பேருக்கு உணவு வழங்குகின்றனர். அவர்களையும் பாராட்டி 200 கிலோஅரிசியும் வழங்கி சேவை சேய்து வருகிறார்.

    கடந்த 30 வருடமாக சமூகத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்களை கண்டறிந்து சிறுதொழில் செய்ய வங்கி கடன் உதவி 15 ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சியால் மானாமதுரை அருகே அழகாபுரி கிராம மக்கள் எலிகறி சாப்பிட்டு வாழ்ந்து வந்ததை அரசுக்கு தெரிவித்து வீடுகள் கட்டவும் தொழில் செய்து வாழவும் சேவை செய்தேன்.

    சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பின்தங்கிய மக்களுக்கு மாலை நேர கல்வி மையம் ஏற்படுத்தி அடிப்படை கல்வியும் கிடைக்க ஏற்பாடு செய்து உள்ளேன். ஊரடங்கு காலம் முடிந்த உடன் அரசு அனுமதி பெற்று ஏழை-எளிய மக்களுக்கு விதிமுறைகள்படி இலவச மருத்துவ சேவை செய்ய திட்டமிட்டு உள்ளேன் என்றார்.

    சிவகங்கை அருகே பாதை தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீஸ் சரகம் மேலத் தோப்பை சேர்ந்தவர் ராக்கப்பன்( வயது 60). விவசாயியான இவருக்கும் உறவினர் கருப்பையாவுக்கும் வீட்டிற்கு செல்லும் பாதை தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராக்கப்பன் தனது இடத்தில் சாராயம் காய்ச்ச முயன்றதாக சாக்கோட்டை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.

    இதற்கு கருப்பையா தான் காரணம் என்று நினைத்த அவர், தகராறு செய்து அவரை தாக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ராக்கப்பனை தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சாக்கோட்டை போலீசார் கருப்பையாவை கைது செய்தனர். 
    1½ ஆண்டிற்கு பிறகு சிவகங்கை கிராபைட் ஆலை மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த கோமாளிபட்டியில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மூலம் கிராபைட் தாதுவை வெட்டி எடுத்து சுத்திகரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலை சுற்றுப்புற சூழல் அனுமதி இல்லாததால் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்படவில்லை. இதைதொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் முயற்சியால் மீண்டும் அனுமதி கிடைத்து நேற்று முதல் ஆலை செயல்பட தொடங்கி உள்ளது.

    இதன் தொடக்கவிழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் பாஸ்கரன் ஆலை செயல்பாட்டினை தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கையை அடுத்த சேந்திஉடையநாதபுரம், குமாரப்பட்டி மற்றும் புதுப்பட்டி கிராமங்களில் 236.85 எக்டேர் பரப்பளவில் பூமிக்கடியில் கிராபைட் தாது கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் கிராபைட் உலகிலேயே சிறந்ததாக கூறப்படுகிறது. கிராபைட் தாது அதிக வெப்பத்தை தாங்க கூடியது. இந்த கிராபைட் தாது மூலம் பென்சில் முதல் ஆகாய விமானத்திற்கு தேவையான பாகங்கள் மற்றும் தங்கத்தை உருக்க பயன்படும் குருசிபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும். தற்போது இங்கு 96 சதவீதம் வரை சுத்தமான கிராபைட் தாது கிடைக்கிறது. இந்த பணி கடந்த 1987-ம் ஆண்டு முதல் தொடங்கியது. 1994-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மூலம் ரூ.28 கோடி மதிப்பில் கிராபைட் சுத்திகரிப்பு ஆலை கட்டமைக்கப்பட்டது.

    இந்த கிராபைட் ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.136 கோடிக்கு லாபம் ஈட்டியுள்ளது. கிராபைட் சுரங்கத்தில் இருந்து ஒரு ஆண்டில் 60 ஆயிரம் டன் கிராபைட் தாது உற்பத்தி என்பதை உயர்த்தி 1,05,000 டன் உற்பத்தியை எட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    இந்த சுரங்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கடந்த 25.2.2020 அன்று பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணை 23.3.2020 அன்று பெறப்பட்டு மீண்டும் சுரங்கப் பணியும், கிராபைட் சுத்திகரிப்பு பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சுரங்கம் மற்றும் கிராபைட் சுத்திகரிப்பு ஆலையில் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் மறைமுகமாக வேலைவாய்ப்பினை பெறுகின்றனர்.
    கருப்பு தங்கம் என சிவகங்கை மாவட்ட மக்களால் அழைக்கப்படும் இந்த கிராபைட் சுரங்கம் அதன் சுத்திகரிப்பு ஆலையின் மூலமாக தமிழ்நாடு கனிம நிறுவனம் மாதம் ஒன்றுக்கு ரூ.2 கோடி வருவாய் ஈட்டக்கூடிய அளவிற்கு இதன் செயல்பாடு இருக்கும். 
    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கனிம நிறுவன மேலாளர்கள் முத்துசுப்பிரமணியன், ஹேமந்த்குமார், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மஞ்சுளாபாலசந்தர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் சசிக்குமார், சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் கோமதி மணிமுத்து, கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பலராமன்,ஜெயப்பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஊரடங்கு உத்தரவில் கட்டுமான தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மாவட்ட எல்லை அடைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் பாரம்பரிய மிக்க வகையில் வீடுகளில் பதிக்கும் டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளன. இந்த கம்பெனிகளில் டைல்ஸ் தயாரிக்கும் பணியில் சுமார் 300 முதல் 400 பேர் வரை வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் டைல்ஸ்கள் மிகவும் அழகானதாகவும் இருப்பது மட்டுமல்லாமல் அவற்றால் எவ்வித பக்க விளைவும் இல்லாதது மற்றொரு தனிச்சிறப்பாக இருந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் டைல்ஸ்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் இந்த பகுதியில் அதிகமாகவும், தரமானதாக கிடைப்பதால் இங்கு தயாரிக்கப்படும் இந்த டைல்ஸ் போன்று வேறு எங்கும் தயாரிக்க முடியாது.

    மேலும் இங்குள்ள மண் மற்றும் தண்ணீர் ஆகியவை தனித்தன்மையாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் இந்த டைல்ஸ்கள் தரமானதாகவும், அனைவரையும் எளிதில் கவரும் வகையில் உள்ளது. இந்த டைல்ஸ் தயாரிக்கும் பணிக்கு இங்குள்ள வாரி என்று அழைக்கப்படும் ஒரு வகை மண்ணை சேர்ப்பதால் இந்த டைல்ஸ் பதிக்கும் வீடுகளில் கோடைகாலத்தில் குளுமையாகவும், குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இங்கு தயாரிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் டன் டைல்ஸ்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்க நிலையில் இருந்தது.

    இதுதவிர இந்த தொழிலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை இல்லாததால் கடுமையான வறுமையில் இருந்து வந்தனர். இந்தநிலையில் ஊரடங்கில் கட்டுமான தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் இருந்து வருவது வழக்கம். தற்போது ஆத்தங்குடி அருகே புதுக்கோட்டை மாவட்டம் கோனாப்பட்டு பகுதிக்கு முன்பாக மாவட்ட எல்லையான பழைய ஆத்தங்குடி பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டதால் அந்த பகுதியில் இருந்து வரும் தொழிலாளர்கள் வர முடியாமல் தற்போது இந்த தொழில் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த பணி மீண்டும் மந்தமான நிலையில் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து இந்த பகுதியில் டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வரும் உரிமையாளர் பெத்ராஜ் கூறியதாவது:- ஆத்தங்குடியில் 40-க்கும் மேற்பட்ட டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் இந்த டைல்ஸ் உலகம் முழுவதும் பெயர் பெற்றதாக விளங்கி வருகிறது. இந்த பணியில் ஆத்தங்குடி, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வரவேண்டிய 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிவகங்கை மாவட்ட எல்லையான பழைய ஆத்தங்குடி பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அங்கிருந்து வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதனால் தற்போது கம்பெனியில் மொத்தம் 6 தொழிலாளர்களை கொண்டு வேலை செய்து வருகிறேன். இந்த பாதையை திறந்து விட்டால் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து இந்த பணியை பார்க்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் அடைக்கப்பட்ட எல்லை பாதை பகுதியை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி செக்காலை முதல் வீதியில் வசிப்பவர் மீனாள் (வயது 30). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது முகமூடி அணிந்த 4 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். இருவர் வீட்டின் வெளியே நிற்க 2 பேர் மட்டும் வீட்டுக்குள் சென்று மீனாளிடம் அரிவாளை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.

    இது குறித்து மீனாள் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×