என் மலர்tooltip icon

    சிவகங்கை

    அப்பகுதி பெண்கள் உள்பட பலர் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு செயல் அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் குடிநீர் குழாயை திறந்து விட வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்தனர் .

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள காவிரி கூட்டுக்குடிநீர் ஏர் வாழ்வு தண்ணீரை அச்சு கட்டு பகுதியில்உள்ள பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக அந்த நீரை பிடித்து பயன் படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த குடிநீர் பைப் அடைக்கப்பட்டது இதனையடுத்து 2 நாட்களாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் உள்பட பலர் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு செயல் அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் குடிநீர் குழாயை திறந்து விட வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்தனர் .

    அதன் பின்னர் பொது மக்கள் மற்றும் தமுமுக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசனை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர்.அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் பேரூராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூரில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே தென்கரையைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் முருகவேல் (வயது 45). சரக்கு வாகன டிரைவர். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சுப்பன் என்பவருடன் தென்கரை அருகே குறுக்குச் சாலையிலிருந்து மெயின் சாலையை கடந்தார். அப்போது நிலைதடுமாறி முருகவேல் கீழே விழுந்தார். அந்த நேரத்தில் சிராயல் புதூரிலிருந்து வந்த கார் முருகவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுப்பன் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பாண்டியனிடம் நாச்சியாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருவிடையார்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகன் தண்டாயுதபாணி(34). இவர் தனது இருசக்கர வாகனத்தில் தேவாரம்பூர் விலக்கு என்ற இடத்தை கடக்கும் போது எதிரே குறிஞ்சிநகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தண்டாயுதபாணி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். முத்துப்பாண்டி பலத்த காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து திருப்பத்தூர் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரி்த்து வருகின்றனர்.
    உலக சுற்றுலா தினத்தையொட்டி கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்காக தோண்டிய குழிகளை இன்று பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளில் குழிகள் தோண்டி அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் மண்பாண்ட ஓடுகள், சேதமுற்ற நிலையில் சிறிய பெரிய பானைகள், பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம், சுடுமண் கிண்ணங்கள் உள்ளிட்டவை ஏராளமானவை கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அதே போல் கொந்தகை, அகரம், மணலூரிலும் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

    கீழடியில் வாரந்தோறும் 6 நாட்களும் குழி தோண்டி அதில் பழங்கால பொருட்கள் இருக்கிறதா? என ஆய்வு நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இதனால் கீழடியில் வாரநாட்களில் பொதுமக்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. பொதுமக்களும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்கள் கீழடிக்கு சென்று அகழாய்வு பணிகளை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கீழடி, கொந்தகை, ஆகிய 2 இடங்களில் அகழாய்வு குழிகளை பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும் பொதுமக்கள் கீழடியில் அகழாய்வு பணிகளை நேரில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


    ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலின்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதுடன், நாற்காலிகளையும் தூக்கி வீசினர்.
    சிவகங்கை:

    உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்னிலையில், சிவகங்கை மாவட்டக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கட்சியின் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் பேசியதால், வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. 


    கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலையிலேயே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். நாற்காலிகளையும் தூக்கி வீசினர். இந்த மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நிலைமையை கட்டுப்படுத்தி அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.
    திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் விக்ரம் (வயது25) . இவர் புதுக்கோட்டையில் இருந்து டிராக்டரில் ஜல்லி ஏற்றிக்கொண்டு நேற்று காலை திருப்பத்தூர் நோக்கி வந்துள்ளார். அப்போது திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி விலக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு நிலைதடுமாறிய விக்ரம் ரோட்டோரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மான்சிங்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருப்பத்தூரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை, தெக்கூர், மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக பலத்த சூறாவளிக்காற்றுடன் கூடிய கன மழை கொட்டியது.

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பணப்பயிர்களான நிலக்கடலை, எள் முதலிய தானியங்கள் நடவு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கனமழை காரணமாக சாலை ஓரங்களில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தினால் முறையான வடிகால் இல்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    தெரு நாய் கடித்து பலத்த காயமடைந்த சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை நகரில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இந்த தெரு நாய்கள் மாடு ஆடுகளை கடித்து வந்தது.

    கீழ குடியிருப்பு அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த ரமேஷ் மகன் தஸ்வின் (வயது 5), குழந்தைச்சாமி மகன் கவுசிக் ராஜா (5), செல்லத்துரை மகன் கோகுல் (5), செந்தில்குமார் மகன் குரு சிவா (6) ஆகிய 4 பள்ளி மாணவர்களை தெரு நாய் கை, கால், இடுப்பு, தொடை பகுதியில் கடித்து குதறியது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று நாய்களை அடித்து விரட்டி குழந்தைகளை காப்பாற்றினர். பலத்த காயமடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

    மேலும் சிறிது நேரத்தில் குழந்தைகளை காப்பாற்றாமல் விட்டிருந்தால் நாய்கள் கடித்து குதறி விபரீதம் ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்தனர்.



    தேவகோட்டை அருகே நிலம் விவகாரத்தில் சாதகமாக பேசாததால் பா.ஜ.க. பிரமுகரை கொன்றதாக கைது செய்யப்பட்ட 2 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன் என்ற கதிர் (வயது 40). தேவகோட்டை ஒன்றிய பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வந்த கதிரவன் பணம் கொடுக்கல்-வாங்கல் தொழிலும் செய்து வந்தார்.

    நேற்று மாலை இவர் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடை முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அரிவாளால் கதிரவனை வெட்டினர்.

    இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்தார். கீழே விழுந்த கதிரவனை 2 பேரும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அக்கம், பக்கத்தினர், கதிரவனை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் தேவகோட்டை பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. கடந்த வாரம் இதே மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகர் கொலை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மற்றொரு கொலை நடந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே கதிரவ னின் உறவினர்கள் மற்றும் கட்சியினர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டதால் பதட் டம் ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கதிரவன் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர். கொலை குறித்த தகவல் கிடைத்ததும் டி.ஐ.ஜி. மயில்வாகனன் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி கொலையாளிகளை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து துணை சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இதில் காவணவயல் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பெரியசாமி (37), அவரது உறவினர் வீரபாண்டி (28) ஆகியோர் தான் கொலையாளிகள் என தெரியவந்தது. போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    கொலைக்கான காரணம் குறித்து பெரியசாமி போலீசில் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கும், வாகைக்குடி கிராமத்தை சேர்ந்த பழனி என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன்பு நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது கதிரவன், சமரசம் பேச வந்தார். அவர் பழனிக்கு சாதகமாக பேசினார்.

    இதனால் எனக்கும் கதிரவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தில் அடிக்கடி கதிரவன் என்னை கிண்டல் செய்து வந்தார். இதனால் ஆத்திரத்தில் இருந்த நான் நேற்று மாலை எனது உறவினர் வீரபாண்டியுடன் சென்று பைபாஸ் சாலையில் பாஸ்ட்புட் கடை முன்பு அமர்ந்திருந்த கதிரவனை வெட்டிக் கொன்றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கொலை நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த துணை கண்காணிப்பாளரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    வைகைக்கரையின் பகுதியை ஒட்டியுள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் உலக அரங்கில் வியப்பை ஏற்படுத்தி உள்ளன.
    திருப்புவனம்:

    திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பண்டைய கால வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை பார்வையிட்டார். மேலும் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியை விரிவுபடுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை தொல்லியல் துறை அலுவலர்களுடன் பார்வையிட்டார். கீழடியில் சிவப்பு நிற தானிய கொள்கலன் கண்டெடுக்கப்பட்ட குழியில் கீழே இறங்கி விவரங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி மற்றும் மனித எலும்புக்கூடுகளை பார்த்தார். அங்கு கட்டப்பட்டு வரும் அருங்காட்சியக பணிகளையும் அவர் பார்வையிட்டார். அதன்பிறகு அகரம், மணலூர் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைகைக்கரையின் பகுதியை ஒட்டியுள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் உலக அரங்கில் வியப்பை ஏற்படுத்தி உள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட் களை வரலாற்று சின்னங் களை பாதுகாக்க இப்பகுதியிலேயே மியூசியம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கீழடியில் 6 ஏக்கர் அளவிற்கு இடம் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு ஏக்கர் வீதம் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களின் உரிமையாளர்களிடம் இதற்கான தொகையை செலுத்தி நிலம் பெறப்படும். அதன்மூலம் சிறிய மியூசியம் அமைப்பதற்கான தொடக்க பணிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் சிவானந்தம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிகண்டன், திருப்புவனம் தாசில்தார் ரெத்தினவேல் பாண்டியன், மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், திருப்புவனம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
    தேவகோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே மண்ணன்வயல் கிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.4 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை தாழையூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான 2 வாலிபர்களை பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர் தேவகோட்டை அருகே உள்ள வடுகனி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பிரசாத் (வயது20) என்றும், மண்ணன்வயல் கிராமத்தில் உண்டியல் திருட்டில் சம்பந்தப்பட்டவர் எனவும் தெரியவந்தது.தப்பி ஓடியவர் தேவகோட்டை நடராஜபுரம் ஜெயராமன் மகன் பிரவீன் (27) என தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் பிரவீனை தேடி வருகின்றனர். பிரசாத்தை கைது செய்து தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.
    சிவகங்கை:

    கொரோனா நோய் தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த 12-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மீண்டும் நேற்று 2-வது கட்டமாக தடுப்பூசி முகாம் நடந்தது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 200 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, காளையார்கோவில் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 6 ஆயிரத்து 436 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 44 ஆயிரத்து 611 பேர் தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளனர். விரைவில் மாவட்டத்தில் 100 சதவீதத்தை எட்ட வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு உள்ளோம்.

    மேலும் கடந்த முறை நடைபெற்ற முகாம்களில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு கணினியில் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் தற்போது முகாம் நடைபெறும் இடத்திலேயே கணினி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மருத்துவத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ், இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், நகராட்சி ஆணையர் (பொ) பாண்டீஸ்வரி, நகர் நல மைய டாக்டர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் ரூ.17 லட்சம் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆறாவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர்.

    இவரது மனைவி சொர்ணம் மற்றும் 2 மகன்கள் குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகின்றனர். முதல் மகன் வள்ளியப்பன் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். 2-வது மகன் ராமசாமி ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த மாதம் 25-ந்தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்தபோது பிச்சப்பன் ஆறாவயலில் உள்ள வீட்டுக்கு வந்து சென்றார்.

    அதன் பிறகு நேற்று மாலை 2-வது மகன் ராமசாமி, மனைவி விசாலாட்சி இருவரும் தற்போது மழையால் வீட்டுக்குள் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்று பார்ப்பதற்காக ஆறாவயல் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு உள்ளே உள்ள 4 அறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தன. அறைகளில் இருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமசாமி ஆறாவயல் போலீசில் புகார் செய்தார்.

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தேவகோட்டை டி.எஸ்.பி. ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    முதல் கட்ட விசாரணையில் பிச்சப்பன் வீட்டில் இருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 18 கேரட் வைரம், 34 பவுன் தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.

    சிவகங்கையில் இருந்து தடவியல் நிபுணர் குழுவினர் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் ராம்போ கொள்ளையர்கள் வந்து சென்ற வழியாக ஓடியது.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்று தெரியவில்லை. தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அவர்களை பிடிக்க தேவகோட்டை டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், ராமச்சந்திரன், தலைமை காவலர் இளங்கோ, செந்தாமரை, சிலம்பரசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    ஆறாவயல் கிராமத்தில் அதிக அளவில் நகரத்தார்கள் வசித்து வருகின்றனர். இவர்களது பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. இதனை பயன்படுத்தி சில நாட்களுக்கு முன்பு கதவுகள் உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×