search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தேவகோட்டை அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கைது

    தேவகோட்டை அருகே நிலம் விவகாரத்தில் சாதகமாக பேசாததால் பா.ஜ.க. பிரமுகரை கொன்றதாக கைது செய்யப்பட்ட 2 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன் என்ற கதிர் (வயது 40). தேவகோட்டை ஒன்றிய பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வந்த கதிரவன் பணம் கொடுக்கல்-வாங்கல் தொழிலும் செய்து வந்தார்.

    நேற்று மாலை இவர் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடை முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அரிவாளால் கதிரவனை வெட்டினர்.

    இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்தார். கீழே விழுந்த கதிரவனை 2 பேரும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அக்கம், பக்கத்தினர், கதிரவனை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் தேவகோட்டை பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. கடந்த வாரம் இதே மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகர் கொலை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மற்றொரு கொலை நடந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே கதிரவ னின் உறவினர்கள் மற்றும் கட்சியினர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டதால் பதட் டம் ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கதிரவன் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர். கொலை குறித்த தகவல் கிடைத்ததும் டி.ஐ.ஜி. மயில்வாகனன் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி கொலையாளிகளை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து துணை சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இதில் காவணவயல் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பெரியசாமி (37), அவரது உறவினர் வீரபாண்டி (28) ஆகியோர் தான் கொலையாளிகள் என தெரியவந்தது. போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    கொலைக்கான காரணம் குறித்து பெரியசாமி போலீசில் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கும், வாகைக்குடி கிராமத்தை சேர்ந்த பழனி என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன்பு நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது கதிரவன், சமரசம் பேச வந்தார். அவர் பழனிக்கு சாதகமாக பேசினார்.

    இதனால் எனக்கும் கதிரவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தில் அடிக்கடி கதிரவன் என்னை கிண்டல் செய்து வந்தார். இதனால் ஆத்திரத்தில் இருந்த நான் நேற்று மாலை எனது உறவினர் வீரபாண்டியுடன் சென்று பைபாஸ் சாலையில் பாஸ்ட்புட் கடை முன்பு அமர்ந்திருந்த கதிரவனை வெட்டிக் கொன்றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கொலை நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த துணை கண்காணிப்பாளரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×