search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருங்காட்சியக பணிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்
    X
    அருங்காட்சியக பணிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்

    கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

    வைகைக்கரையின் பகுதியை ஒட்டியுள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் உலக அரங்கில் வியப்பை ஏற்படுத்தி உள்ளன.
    திருப்புவனம்:

    திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பண்டைய கால வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை பார்வையிட்டார். மேலும் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியை விரிவுபடுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை தொல்லியல் துறை அலுவலர்களுடன் பார்வையிட்டார். கீழடியில் சிவப்பு நிற தானிய கொள்கலன் கண்டெடுக்கப்பட்ட குழியில் கீழே இறங்கி விவரங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி மற்றும் மனித எலும்புக்கூடுகளை பார்த்தார். அங்கு கட்டப்பட்டு வரும் அருங்காட்சியக பணிகளையும் அவர் பார்வையிட்டார். அதன்பிறகு அகரம், மணலூர் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைகைக்கரையின் பகுதியை ஒட்டியுள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் உலக அரங்கில் வியப்பை ஏற்படுத்தி உள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட் களை வரலாற்று சின்னங் களை பாதுகாக்க இப்பகுதியிலேயே மியூசியம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கீழடியில் 6 ஏக்கர் அளவிற்கு இடம் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு ஏக்கர் வீதம் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களின் உரிமையாளர்களிடம் இதற்கான தொகையை செலுத்தி நிலம் பெறப்படும். அதன்மூலம் சிறிய மியூசியம் அமைப்பதற்கான தொடக்க பணிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் சிவானந்தம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிகண்டன், திருப்புவனம் தாசில்தார் ரெத்தினவேல் பாண்டியன், மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், திருப்புவனம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×