என் மலர்tooltip icon

    சிவகங்கை

    முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களை பராமரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முதியோர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பேசியதாவது:-

    முதியோர்களை பாதுகாக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். அவர்கள் வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கிராம மக்களுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மருத்துவ வசதிகள், பொருளாதார வசதிகள் என நகர்புறத்திற்கு இணையாக மேம்படுத்திக் கொடுக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து மானிய திட்டத்தில் கடனுதவி வழங்கி மகளிரை பொருளாதார முன்னேற்றம் அடைய செய்தார். அந்த வழியில் தற்போது மு.க.ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை மகளிர் நலனுக்காக செய்து வருகிறார். அதில் குறிப்பாக ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இருந்த 100 நாள் 150 நாட்களாக உயர்த்தி உள்ளார்.

    பெண்கள் இட ஒதுக்கீட்டை 35 சதவீதமாக உயர்த்தியவர் கருணாநிதி, அதை தற்போது 40 சதவீதமாக உயர்த்தி உள்ளார் மு.க.ஸ்டாலின். தற்போது தமிழகத்தில் உள்ள முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்களுக்கு உதவும் பொருட்டு சமூக நலத்துறை சார்பில் பாதுகாப்பு இல்லங்கள் உருவாக்கப்பட்டு முதியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா காலங்களில் அவர்களுக்கு முறையாக தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாட்டுப்போட்டி, நாடக போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார். விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, ட்ரூபா முதியோர் இல்ல இயக்குனர் மைக்கேல் அன்னராஜ், சித்தா மருத்துவர் பிரபாகரன், தாசில்தார் பஞ்சாபிகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    சிவகங்கை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை டி.புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீபா (22) என்ற பெண்ணை கடந்த 8 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர். பிரதீபா 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

    இந்தநிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவரை மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துசென்று மருத்துவ சிகிச்சை அளித்தார். ஆனால் சிசிக்சை பலனின்றி பிரதீபா கடந்த 10-ந் தேதி இறந்தார்.

    மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இருந்த பிரசாத் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை அருகே உள்ள பனிப்புலான்வயலை சேர்ந்தவர் ஜான் அசோக் (31). வேன் டிரைவர். இவருக்கும் ஜெயசெல்விக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். ஜான் அசோக் குடித்து விட்டு வருவதால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜெயசெல்வி கோபத்தில் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த ஜான் அசோக் வீட்டில் தூக்குப்போட்டு இறந்தார். இதுகுறித்து ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சிவகங்கைக்கு வந்த அதிகாரிகள் போலீசார் உதவியுடன் சிங்காரம் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் பழக்கம் ஏற்பட்டதால் அவர்களது இயக்கத்தில் காளிதாஸ் சேர்ந்தார்.

    இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் காளிதாசை கைது செய்தனர். தற்போது அவர் கேரளாவில் சிறையில் உள்ளார்.

    அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படை யில் அவரது உறவினர் வீடுகளில் சோதனை நடத்த திட்டமிட்டனர்.

    சிவகங்கையில் காளிதாசின் சகோதரர் சிங்காரம் வசிப்பது தெரியவந்தது. அங்கு இன்று காலை தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் அதிரடியாக சோதனையில் இறங்கினர்.

    இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 2 அதிகாரிகள் சிவகங்கை வந்தனர். அவர்கள் சிவகங்கை போலீசார் உதவியுடன் சிங்காரம் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வீட்டின் கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை. அதே போல் வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. வீட்டிற்கு வெளியே நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சோதனை நடை பெற்று வருகிறது.



    திருப்புவனத்தில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    திருப்புவனம்:

    திருப்புவனம் நகர் பகுதியில் மீன் கடை, கோழிக்கடை, கறிக்கடை என 50-க்கும் மேற்பட்ட கடைகள் நகரின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளது என உணவு பாதுகாப்புதுறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருப்புவனத்தில் இறைச்சி கடைகள் அதிகம் செயல்பட்டன.

    இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பிரபாவதி, மீன்வளத்துறை ஆய்வாளர் சோபியா, திருப்பு வனம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, துப்புரவு மேற்பார்வையாளர்கள் பாண்டி, ராஜேந்திரன் உள்பட பலர் சேதுபதி நகர் எதிரே உள்ள மீன் மார்க்கெட் பகுதிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அங்குள்ள பல கடைகளில் மீன்களை சோதனை செய்ததில் உண்ணத்தகாத அழுகிய மீன்கள் சுமார் 10 கிலோவை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். பிறகு மீன் வியாபாரிகளிடம் அனைவரும் நல்ல மீன்களை விற்க வேண்டும், கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக் கூடாது, மீறி விற்பனை செய்தால் கடை நடத்த அனுமதி தர மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்தனர்.

    பின்னர் திருப்புவனம் தெப்பகுளம் அருகே செயல்படும் இறைச்சிக்கடை, மீன் கடைகளை ஆய்வு செய்தும் வியாபாரி களிடம் நல்ல உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். பிளாஸ்டிக் பயன் படுத்திய 4 கடைகளில் 8 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தும், தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் முககவசம் அணியாமல் இருந்த 5 பேருக்கு தலா ரூ. 200 வீதம் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
    போலீஸ்காரரை மிரட்டிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர் இதனை தொடர்த்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    எஸ்.புதூர்:

    எஸ்.புதூர் அருகே உள்ள வலசைப்பட்டி கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறப்பில் இறுதிசடங்கு செய்வதில் தகராறு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இந்த நிலையில் புழுதிபட்டி போலீஸ் நிலைய காவலர் வினோத் சம்பவ இடத்திற்கு சென்றார்.

    அப்போது அங்கிருந்த வலசைப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் மகன் சுப்பிரமணியன் (வயது53) மற்றும் அவரது மகன் சந்திரசேகரன் (23), பெருமாள் மகன் செல்வம் ஆகிய 3 பேர் சேர்ந்து காவலர் வினோத்தை கட்டையைகாட்டி மிரட்டியும், தகாத வார்த்தையால் பேசியும் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வலசைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் சந்திரசேகரன் ஆகிய 2 பேைரயும் கைது செய்து, சிங்கம்புணரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்பு பரமக்குடி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெருமாள் மகன் சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.
    தேவகோட்டையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை ஈயோலிவயலை சேர்ந்த கணேசன் மகன் சக்தி (வயது29).

    நேற்று மாலை இவர் ஜீவா நகர் நாடகமேடை அருகே இருசக்கர வாகனத்தில் தேவகோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரை சிதம்பர நாதபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் வன்மீக நாதன் (31) வழி மறித்து தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் அரிவாளை எடுத்து சக்தியை வெட்ட முயன்றபோது அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதில் அருகில் நின்று கொண்டிருந்த வன்மீக நாதனின் நண்பர் ஆனையடி வயலை சேர்ந்த சுரேசுக்கு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை நகர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று வன்மீக நாதனை கைது செய்தார்.அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீஸ் விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை கண்ணன்கோட்டை அருகே உள்ள அரசு மதுபான கடைக்கு வன்மீகநாதன் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது குடிக்க சென்றார்.

    அப்போது அங்கு வந்த சக்திக்கும், வன்மீக நாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தை நினைத்து வன்மீகநாதன் அதிக அளவில் மது குடித்து வந்தார். மேலும் சக்தியை கொலை செய்யும் நோக்கத்தோடு அரிவாளை எடுத்துக் கொண்டு நேற்று சென்றார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக சக்தி காயமின்றி தப்பினார்.

    வன்மீநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதே டாஸ்மாக் கடையில் சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க. பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேசிய நெடுஞ்சாலை அருகில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் மது அருந்த வரும் நபர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தேவகோட்டை நகர் காவல் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் போலீசார் குறைந்த அளவே பணியில் உள்ளனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்க அவர்கள் திணறி வருகின்றனர்.

    இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்து காவலர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சிங்கம்புணரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்காக கொரானா தொற்று பற்றிய விழிப்புணர்வு குறும்பட போட்டி நடத்தப்பட்டது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்காக கொரானா தொற்று பற்றிய விழிப்புணர்வு குறும்பட போட்டி நடத்தப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு குறும்பட போட்டியில் உயிரை காக்க எங்கும் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றுவது பற்றிய குறிப்புகளோடு குறும்பட போட்டி நடைபெற்றது. 121 மாணவ-மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் 10 மாணவர்கள் சிறப்பாக செய்து விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற மற்ற நபர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை வெற்றிச்செல்வி, ராஜமாணிக்கம் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி பொறுப்பாளர் கிருஷ்ணன், தலைமையாசிரியர் ஷியாம், நிர்வாகி சரவணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் பாரிவள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் வெற்றிச்செல்வி, ராஜமாணிக்கம் மற்றும் சாந்தி செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.
    சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கபட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் புதிதாக அமைக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பீட்டிலான ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கொரோனா நோய்த்தொற்று உச்சத்திலிருந்த முதலாம் அலையிலும், இரண்டாம் அலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு ஆக்சிஜன் இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்தது. . ஆங்காங்கே தற்காலிக ஆக்சிஜன் உற்பத்தித்திறன்கள் மற்றும் ஆக்சிஜன் கலன்கள் பெறப்பட்டு தேவையான சிகிச்சையினை வழங்கி மக்களை தமிழக அரசு பாதுகாத்தது. தற்போது மீண்டும் அந்தநிலை வராத வண்ணம் ஆங்காங்கே காற்றிலிருந்து ஆக்சிஜன் தயாரித்து மருத்துவச் சிகிச்சை பயன்படுத்தும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இத்திட்டத்தை தொடங்கி உள்ளது.

    தமிழகம் முழுவதும் 70 மருத்துவமனைகளில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய 2 ஊர்களில் இந்த மையம் தொடங்கபட்டுள்ளது. அதன்மூலம் ஒரு நிமிடத்திற்கு 1,000 லிட்டர் இயற்கையாக காற்றிலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தநிகழ்ச்சியில் சிவகங்கை மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதிபாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன், அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் முகம்மது ரபி, உதவி மருத்துவர் மிதுன், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    காரைக்குடி அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    பள்ளத்தூர் போலீஸ் சரகம் வடகுடியை சேர்ந்தவர் அழகர்(வயது 69). இவர் வடகுடியிலிருந்து கோட்டையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கோட்டையூர் அருகே செல்லும்போது சாலையின் ஓரமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வேன் நின்று கொண்டிருந்தது. அதனை அழகர் கடக்க முயன்றபோது திடீரென வேன் டிரைவர் கதவை திறக்க இருசக்கர வாகனத்தில் சென்ற அழகர் அதில் மோதி கீழே விழுந்தார். இதனால் அழகருக்கு பலத்த அடிபட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அழகரை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அழகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்புவனம் அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்புவனம்:

    ஏனாதி விலக்கு பஸ் நிறுத்த பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பூவந்தி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் சென்ற போலீசார் இதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி (வயது36) என்பவரை பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    காரைக்குடி அருகே பித்தளை பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி டி.டி நகரைச் சேர்ந்தவர் மேரி. இவர் காரைக்குடி முதல் போலீஸ் பீட் அருகே பித்தளை பாத்திரங்களை பாலீஸ் செய்யும் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் பூட்டியிருந்த கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பித்தளை பாத்திரங்களை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானாமதுரை அருகே நள்ளிரவில் வைகை ஆற்றில் இருந்து மணல் கடத்திய 9 பெண்கள் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றில் இருந்து இரவு நேரங்களில் அடிக்கடி மணல் கடத்துவது அதிகரித்து உள்ளது. போலீசாரும் அவ்வப்போது சோதனை நடத்தி மணல் கொள்ளையர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கும்பல் மானாமதுரை கால்பிரிவு விலக்கு பகுதியில் உள்ள வைகை ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மானாமதுரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    போலீசார் வருவதை அறிந்ததும் மணல் திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகள் லாரியில் ஏறி தப்பி முயன்றனர். ஆனால் லாரி அங்குள்ள மணலில் சிக்கி கொண்டது. உடனே லாரியில் இருந்த சிலர் கீழே இறங்கி தப்பி ஓடினார்கள். போலீசார் விரைந்து சென்று தப்பி ஓடிய சிலரை மடக்கி பிடித்தனர்.

    இது தொடர்பாக மானாமதுரை பகுதியை சேர்ந்த பாலமுருகன்(வயது 26), மருதுபாண்டியன்(38), பிரேம்நாத்(21), மூர்த்தி(21), கார்த்தி(21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அதோடு வைகை ஆற்றில் இருந்து மணலை திருடுவதற்காக தலைசுமை தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்ட மானாமதுரை மறவர் தெருவை சேர்ந்த 9 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

    மணலில் சிக்கிய லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். அங்கிருந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் கூறும் போது, வைகை ஆற்றில் மணல் கடத்துவது சட்டவிரோதம். மணல் கடத்தலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என்றார்.

    ×