search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.
    X
    வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.

    முதியோர்களை பராமரிப்பதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

    முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களை பராமரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முதியோர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பேசியதாவது:-

    முதியோர்களை பாதுகாக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். அவர்கள் வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கிராம மக்களுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மருத்துவ வசதிகள், பொருளாதார வசதிகள் என நகர்புறத்திற்கு இணையாக மேம்படுத்திக் கொடுக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து மானிய திட்டத்தில் கடனுதவி வழங்கி மகளிரை பொருளாதார முன்னேற்றம் அடைய செய்தார். அந்த வழியில் தற்போது மு.க.ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை மகளிர் நலனுக்காக செய்து வருகிறார். அதில் குறிப்பாக ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இருந்த 100 நாள் 150 நாட்களாக உயர்த்தி உள்ளார்.

    பெண்கள் இட ஒதுக்கீட்டை 35 சதவீதமாக உயர்த்தியவர் கருணாநிதி, அதை தற்போது 40 சதவீதமாக உயர்த்தி உள்ளார் மு.க.ஸ்டாலின். தற்போது தமிழகத்தில் உள்ள முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்களுக்கு உதவும் பொருட்டு சமூக நலத்துறை சார்பில் பாதுகாப்பு இல்லங்கள் உருவாக்கப்பட்டு முதியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா காலங்களில் அவர்களுக்கு முறையாக தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாட்டுப்போட்டி, நாடக போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார். விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, ட்ரூபா முதியோர் இல்ல இயக்குனர் மைக்கேல் அன்னராஜ், சித்தா மருத்துவர் பிரபாகரன், தாசில்தார் பஞ்சாபிகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×