என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்புவனம் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கணவன்-மனைவி இருவரும் வெற்றி பெற்றனர்.
    மானாமதுரை

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி 9-வது வார்டில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர்  சேங்கைமாறனும், 8வது வார்டில் இவரது மனைவி வசந்தியும் போட்டியிட்டனர். இருவரும் வெற்றி பெற்றனர். 

    அதேபோன்று திருப்புவனம் பேரூராட்சி 1-வது வார்டில் போட்டியிட்ட சேங்கைமாறனின் மைத்துனர் மனைவி செல்வியும் வெற்றி பெற்றார். 

    மேலும் இதே பேரூராட்சியில் அ.தி.மு.க.வின் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா.வை சேர்ந்த அயோத்தி, இவரது தம்பி பாரத்ராஜ், அயோத்தியின் அண்ணன் சூரசிங்கத்தின் மனைவி வெங்கடேசுவரி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
    காரைக்குடி அருகே தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி நடந்தது.
    காரைக்குடி

    இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடிபோட்டி தொடக்கவிழா சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. 

    பல்கலைக்கழக துணைவேந்தர், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், கருப்புசாமி தலைமை தாங்கினர். உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் போட்டியை தொடங்கி வைத்தார். 

    இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா   பல்கலைக்கழகங்களில் இருந்து 53 அணிகள் பங்கேற்கின்றன. 800 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். 

    முதல் நாள் நடந்த போட்டியில் பாரதிதாசன் பல்கலை அணி 28-22 என்ற வித்தியாசத்தில் கர்நாடகா பல்கலை அணியையயும், ஆந்திர பல்கலை அணி 40-30 என்ற கணக்கில் மகாராணி கிளஸ்டர் பல்கலை அணியையும் தோற்கடித்து வெற்றிபெற்றது.  

    ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலை அணி 23-9 என்ற கணக்கில் நூருல் இஸ்லாம் பல்கலை அணியையும், அண்ணா பல்கலை அணி 34-32 என்ற கணக்கில் ராயலசீமா பல்கலை அணியையும், உஸ்மானியா பல்கலை அணி 40-36 என்ற கணக்கில் குவேம்பு பல்கலை அணியையும் தோற்கடித்து வெற்றிபெற்றது.  

    கண்ணூர் பல்கலை அணி 46-32 என்ற கணக்கில் காகத்திய பல்கலை அணியை வென்றது. முன்னதாக பல்கலைக்கழக பதிவாளர் சேகர் வரவேற்றார். ஆட்சிக்குழு உறுப்பினர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த போட்டிகள் வருகிற 26ந்தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது.
    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 7 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. பேரூராட்சிகளிலும் வெற்றிவாகை சூடியது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. இதில் மானாமதுரை தற்போதுதான் முதன்முறையாக நகராட்சியாக மாறியுள்ளது. இங்கு நடைபெற்ற தேர்தலில் 3 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. 

    சிவகங்கை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களையும், காரைக்குடியில் 36 வார்டுகளில் 18 வார்டுகளையும், மானாமதுரையில் 27 வார்டுகளில் 14 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது. 

    தேவகோட்டை நகராட்சியில் தி.மு.க.விற்கு 5 இடங்கள் கிடைத்தன. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  மொத்தமுள்ள 27 வார்டுகளில் அ.தி.மு.க.  10 இடங்களிலும், அ.ம.மு.க. 5 இடங்களிலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.  

    இதனால் இந்த நகராட்சியை கைப்பற்றுவது யார்? என்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு இருக்கிறது.  அ.ம.மு.க. ஆதரவை பொறுத்துதான் நகராட்சியை கைப்பற்றுவது யார் என தெரியவரும். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை 117 வார்டுகளில் 48 வார்டுகளை தி.மு.க. வென்றுள்ளது. 

    இதேபோல் இந்த மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் தி.மு.க. அதிகஅளவில் வெற்றி பெற்றுள்ளது.  திருப்பத்தூரில் 14 இடங்களையும், நாட்டரசன்கோட்டையில் 6 இடங்களையும், இளையான்குடியில் 10 இடங்களையும், கானாடுகாத்தான் 7 இடங்களையும், புதுவயலில் 8 இடங்களையும், நெற்குப்பையில் 9 இடங்களையும், கண்டனூரில் 7 இடத்தையும்,  சிங்கம்புணரியில் 14 இடத்திலும், கோட்டையூரில் 7 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.  

    இந்த பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகளும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதால் தலைவர், துணைத்தலைவர் பதவி தி.மு.க. வசமே செல்லும். பள்ளத்தூர் பேரூராட்சியில் தி.மு.க. 5 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், சுயேட்சைகள் 7 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவை பொறுத்து தான் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவி யாருக்கு? கிடைக்கும் என்பது தெரியவரும். 

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, பரமக்குடி ஆகிய 4 நகராட்சிகளையுமே தி.மு.க.தான் கைப்பற்றியுள்ளது.  பரமக்குடியில் 19 இடங்களை வென்றுள்ள தி.மு.க. 53 ஆண்டுகளுக்கு பிறகு நகர்மன்ற தலைவர் பதவியை அலங்கரிக்க உள்ளது.  கீழக்கரை நகராட்சியில் தி.மு.க. 13 வார்டுகளில் வெற்றி பெற்றிருப்பது தற்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ராமநாதபுரம் நகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 33 வார்டுகளில் 23 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இந்த நகராட்சியில் அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ராமேசுவரம் நகராட்சியில் தி.மு.க. 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. 

    ராமநாதபுரம் மாவட்டம் பேரூராட்சிகளில் சிலவற்றை சுயேட்சைகள் கைப்பற்றி உள்ளன. குறிப்பாக சாயல்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளையும் சுயேட்சை வேட்பாளர்களே கைப்பற்றி உள்ளன. இதில் முதுகுளத்தூர் பேரூராட்சியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட கருப்பண்ணன், அவரது மனைவி மீனாள் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

    தொண்டி பேரூராட்சியில் 4வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி, சுயேட்சை வேட்பாளர் சமயராணி ஆகியோர் தலா 186 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். அங்கு குலுக்கல் மூலம் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி வெற்றி பெற்றார்.  பரமக்குடி நகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த 3 பெண்கள் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சி சீட் வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிவாகை சூடியுள்ளனர்.
    சிவகங்கை நகராட்சியில் வெற்றி பெற்ற 4 வேட்பாளர்கள், வெற்றி பெற்ற கையோடு தி.மு.க.வில் இணைந்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய 3 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது.

    தேவகோட்டை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் அ.தி.மு.க. 10 வார்டுகளிலும், தி.மு.க. 5 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 வார்டுகளிலும், அ.ம.மு.க. 5 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். அங்கு மட்டும் எந்தக் கட்சி பெரும்பான்மையை பெறும் என்பதில் இழுபறி நிலவுகிறது.

    இந்நிலையில் சிவகங்கை நகராட்சியில் வெற்றி பெற்ற 4 வேட்பாளர்கள், வெற்றி பெற்ற கையோடு தி.மு.க.வில் இணைந்தனர்.

    22வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன், 4வது வார்டில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் சேது நாச்சியார், 19வது வார்டில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் பாக்கியலட்சுமி, 23வது வார்டில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் ராஜபாண்டி ஆகிய 4 பேரும் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    அவர்கள் 4 பேரையும் சால்வை அணிவித்து அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

    சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையை கைப்பற்றுவதில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த மானாமதுரை நகராட்சியாக  தரம் உயர்த்தப்பட்டு முதன்முறையாக தேர்தலை சந்தித்தது. 

    இந்த மாவட்டத்தில் ஏற்கனவே சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி நகராட்சிகள் உள்ளன. 4 நகராட்சி வார்டுகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

    இதில் தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகளில்  10 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 6 வார்டுகளையும், தி.மு.க., அ.ம.மு.க. தலா 5 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. 

    இதனால் இந்த நகராட்சியை கைப்பற்றுவது யார்? என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. தி.மு.க.. அ.தி.மு.க. சமவிகிதத்தில் உள்ளதால் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில்  தி.மு.க. 11 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், காங்கிரஸ், அ.ம.மு.க. தலா 3 வார்டுகளிலும், சுயேட்சை 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.

    காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 13 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 6 வார்டுகளிலும், அ.தி.மு.க.வினர் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 14, சுயேட்சை 7, அ.தி.மு.க. 5, பா.ஜனதா 1 இடங்களை பிடித்துள்ளன. ஏற்கனவே பேரூராட்சியாக இருந்தபோது மானாமதுரை தி.மு.க. வசம்தான் இருந்தது.- தற்போது நகராட்சியாக மாறியபிறகும் தி.மு.க.வே முதல் முறையாக நகராட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    சிவகங்கையில் கணினி பட்டா திருத்த முகாம் நாளை நடக்கிறது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது:

    அரசின்  சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டுசெல்லும் வகையில்  ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் கணினி திருத்த சிறப்புமுகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது. 

    அதன் தொடர்ச்சியாக நாளை (23ந்தேதி) காரைக்குடி வட்டத்தில் அமராவதி கிராமத்திலும், தேவகோட்டை வட்டத்தில் குருந்தனக்கோட்டை கிராமத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் தானிப்பட்டி கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் மாந்தகுடிபட்டி கிராமத்திலும் கணினிபட்டா திருத்த முகாம்கள் நடக்கிறது.

    அதேபோன்று சிவகங்கை வட்டத்தில் அலவாக்கோட்டை கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் மாங்குளம் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் மாங்குடி கிராமத்திலும், இளையான்குடி வட்டத்தில் நாகமுகுந்தன்குடி கிராமத்திலும், காளையார் கோவில் வட்டத்தில் சிலுக்கப்பட்டி கிராமத்திலும் நாளை கணினி பட்டா திருத்த முகாம்கள் நடக்கிறது. 

    பொதுமக்கள் இந்த கிராமங்களில் நடைபெறும் சிறப்புமுகாமில்  கலந்துகொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 4 இடங்களில் நாளை நடக்கிறது.
    திருப்பத்தூர் 

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் மொத்தம் 66.96 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு நிறைவுபெற்றவுடன், போலீசார் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்தப்பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைத்தனர். 

    சிவகங்கை , மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட மற்றும் இளையான்குடி, நாட்டரசன்கோட்டை,  திருப்புவனம் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்  சிவகங்கையில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    இதே போன்று  காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட மற்றும் கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல் ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காரைக்குடியில் உள்ள அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியிலும், தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்குள்ள தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளன. 

    நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. 

    இந்த வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கேமராக்கள் மூலம் கண்காணிப்படுவது மட்டுமின்றி போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 4 மையங்களிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குகின்றன. 

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி மற்றும் கோட்டையூர் , பள்ளத்தூர், கானாடுகாத்தான்,  கண்டனூர், புதுவயல் பேரூராட்சிகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் காரைக்குடி வாக்குகள் எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்பட்டன. 
     
    இதனை கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் தேர்தல் அலுவலர்கள் சரிபார்த்தனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணும் மையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.  

    இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கும் பாதுகாப்பு அறை, கண்காணிப்பு பகுதியை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    கலெக்டரின் இந்த ஆய்வின்போது வட்டார தேர்தல் அலுவலர் சாந்தி, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், திருப்பத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலரும்  பேரூராட்சி செயல் அலுவலருமான ராதாகிருஷ்ணன்,  துணை அலுவலர்கள் திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர் மன்சூர்அலி, காளையார்கோவில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், திருப்பத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    நெற்குப்பை பேரூராட்சியில் 79.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
    திருப்புத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் 5வது வார்டில் ஒருவர் மட்டுமே போட்டியிட்டதால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  மீதமுள்ள 11 வார்டுகளுக்கு நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 

    இதில் 1வது வார்டில் 648 வாக்குகளில் 570 வாக்குகளும், 2வது வார்டில் 390 வாக்குகளில் 311 வாக்குகளும், 3வது வார்டில் 642 வாக்குகளில் 511 வாக்குகளும், 4வது வார்டில் 769 வாக்குகளில் 623 வாக்குகளும், 6வது வார்டில் 260 வாக்குகளில் 181 வாக்குகளும் பதிவானது.

    7வது வார்டில் 362 வாக்குகளில் 279 வாக்குகளும், 8வது வார்டில் 444 வாக்குகளில் 372 வாக்குகளும், 9வது வார்டில் 587 வாக்குகளில் 434 வாக்குகளும், 10வது வார்டில் 245 வாக்குகளில் 177 வாக்குகளும், 11வது வார்டில் 699 வாக்குகளில் 555 வாக்குகளும், 12வது வார்டில் 866 வாக்குகளில் 711 வாக்குகளும் என மொத்தம் 79.91 சதவீதம் வாக்குகள் பதிவானது.
    திருப்பத்தூர் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் வார்டு வாரியாக வெளியிடப்பட்டு உள்ளன.
    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  பதிவான வாக்குகள் வார்டு வாரியாக விபரம் வருமாறு:

    மொத்த வாக்காளர்கள்  23,914. பெண் வாக்காளர்கள் 12,419. ஆண் வாக்காளர்கள் 11,495. பதிவான வாக்குகளில் மொத்த வாக்குகள் 15,986. பெண் வாக்காளர்கள் 8,740. ஆண் வாக்காளர்கள் 7,246.  இங்கு 66.85 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    வார்டு எண் 1 மொத்த வாக்குகள் 1,544. பதிவான வாக்குகள் 1,092. 
    வார்டு எண் 2 மொத்த வாக்குகள் 1,379. பதிவான வாக்குகள் 967.
    வார்டு எண் 3 மொத்த வாக்குகள் 833. பதிவான வாக்குகள் 596.
    வார்டு எண் 4 மொத்த வாக்குகள் 1,843. பதிவான வாக்குகள் 1,133.
    வார்டு எண் 5 மொத்த வாக்குகள் 1,004. பதிவான வாக்குகள் 669.
    வார்டு எண் 6 மொத்த வாக்குகள் 1,173. பதிவான வாக்குகள் 821.
    வார்டு எண் 7 மொத்த வாக்குகள் 1,282. பதிவான வாக்குகள் 783.
    வார்டு எண் 8 மொத்த வாக்குகள் 1,060. பதிவான வாக்குகள் 711.
    வார்டு எண் 9 மொத்த வாக்குகள் 1,600. பதிவான வாக்குகள் 1,113.
    வார்டு எண். 10 மொத்த வாக்குகள் 1,427 பதிவான வாக்குகள் 1,074.
    வார்டு எண். 11 மொத்த வாக்குகள் 1,355. பதிவான வாக்குகள் 929.
    வார்டு எண் 12 மொத்த வாக்குகள் 1,713. பதிவான வாக்குகள் 1,044.
    வார்டு எண் 13 மொத்த வாக்குகள் 1,391. பதிவான வாக்குகள் 776.
    வார்டு எண் 14&மொத்த வாக்குகள் 1,006 பதிவான வாக்குகள் 761.
    வார்டு எண் 15 மொத்த வாக்குகள் 1,471. பதிவான வாக்குகள் 950.
    வார்டு எண் 16 மொத்த வாக்குகள் 1,147. பதிவான வாக்குகள் 642.
    வார்டு எண் 17 மொத்த வாக்குகள் 1,438. பதிவான வாக்குகள் 961.
    வார்டு எண் 18 மொத்த வாக்குகள் 1,248. பதிவான வாக்குகள் 864.
    சிவகங்கை மாவட்டத்தில் 275 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது
    காரைக்குடி

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இங்குள்ள 285 கவுன்சிலர் பதவிகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றதாலும், கானாடு காத்தான் பேரூராட்சி 1-வது வார்டில் யாரும் போட்டியிடாததாலும் 275 வார்டுகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. ஆயிரத்து 185 பேர் போட்டியிட்டனர் இதற்காக 420 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டிருந்தன.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளம், சக்கர நாற்காலி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன. 

    இதுதவிர வாக்குச் சாவடி களில் குடிநீர் வசதி கழிப்பறை வசதி தடையில்லா மின்சார வசதி போன்றவையும் செய்யப் பட்டிருந்தன. பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு காமிரா மூலம் வாக்குப்பதிவு, பதிவு செய் யப்பட்டது.
    கானாடுகாத்தான் பேரூராட்சியில் 3, 5 வார்டுகளிலும் உள்ள குழப்பத்தால் பாலையூர் கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளில் அதிகாரிகள் வார்டுகளை மறுவரையறை செய்ததில் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு வார்டு தனித்தனியாக ஒதுக்கப்பட்டதால் குழப்பம் நிலவி வருகிறது.

    குடும்பத்தில் உள்ள 3 பேருக்கு ஒருவருக்கு 3-வது வார்டு இன்னொருவருக்கு 4-வது வார்டு இன்னொருவருக்கு 6-வது வார்டு என ஒதுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக கானாடுகாத்தான் பேரூராட்சியில் 3, 5 வார்டுகளிலும் உள்ள குழப்பத்தால் பாலையூர் கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளனர்.

    காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. பழையூர் பகுதியில் ஏற்கனவே 1, 2 என 2 வார்டுகள் இருந்தன.ஆனால் அதிகாரிகள் சமீபத்தில் வார்டுகளை மறுவரையறை செய்தபோது 2-வது வார்டை 2-ஆக பிரித்து 3, 5-வது வார்டுகளில் சேர்த்தனர். இதையடுத்து பழையூர் பகுதி மக்கள் வார்டை ஏற்கனவே இருந்தபடி சீரமைத்து தர வேண்டும் இல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக போவதாக அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    நடவடிக்கை இல்லாத நிலையில் பழையூர் பகுதியைச் சேர்ந்த பழைய 2-வது வார்டு மக்கள் திடீரென தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். தற்போது பாலையூர் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளதால், அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கையில் காசிவிஸ்வநாதர் கோவில் தெப்பத்திருவிழா விமரிசையாக நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதர்  கோவில் அமைந்துள்ளது. இங்கு மாசி மகா திருவிழாவை முன்னிட்டு 3ம் ஆண்டு தெப்பத்திருவிழா விமரி சையாக நடந்தது. 

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பத்தின் கரைகளில் அமைக்கப்பட்ட மதில் சுவரில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். முன்னதாக உற்சவர் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுடன் சர்வ அலங்காரத்தில் கோவில் திருக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வாகனத்தில் எழுந்த ருளினார். 

    தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுக்கு காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் சுவாமி& அம்மன் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

    திருக்குளத்தில் மின்னொளியில் தெப்பத்தில் அருள் பாலித்த சுவாமி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.


    ×