search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை உயர்நீதிமன்றம்
    X
    சென்னை உயர்நீதிமன்றம்

    தலைவர் மற்றும் துணைத்தலைவர் முறைமுக தேர்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால், உயர்நீதிமன்ற மதுரை கிளையை மனுதாரர்கள் அணுகலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவரை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்நிலையில், மறைமுக தேர்தல் தொடர்பாக தேவகோட்டை நகராட்சி அதிமுக கவுன்சிலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

    தேவகோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், 15 வார்டுகளில் மனுதாரர்களாகி நாங்கள் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். 

    தேவகோட்டை நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு வருகிற 4-ந் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 14 ஓட்டுகள் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். அ.தி.மு.க. சார்பில் 15 கவுன்சிலர்கள் உள்ளதால், இந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுபவர்கள், தலைவர் மற்றும் துணைத்தலைவர்களாக வெற்றி பெற உள்ளனர்.

    ஆனால், இதை கெடுக்கும் விதமாக அ.தி.மு.க. கவுன்சிலர்களை ஆளும் கட்சியினர் பல்வேறு வழிகளில் மிரட்டி வருகின்றனர். வீடுகளுக்கு நேரடியாக வந்து மிரட்டுகின்றனர். பணம் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறுகின்றனர்.

    அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்பதால், தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை தேவகோட்டை நகராட்சி ஆணையர் தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளது. 

    அவ்வாறு தள்ளி வைத்தால், ஆளும்கட்சியினர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக குதிரை பேரம் நடைபெறும். எனவே, இந்த தேர்தலை நேர்மையாக நடத்தவும், தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிர்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மறைமுக தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும். உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். தேர்தலை தள்ளிவைக்கும் திட்டமில்லை என்று விளக்கம் அளித்தார்.

    அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கண்காணிப்பு கேமராவில் பேசுவது (ஆடியோ) பதிவாகாது என்பதால், அவற்றையும் சேர்த்து பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், 15 மனுதாரர்களில் ஒருவர் மீது 2 கவுன்சிலர்களை கடத்தி சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தலைவர், துணைத்தலைவர் மறைமுக தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என மனுதாரர்கள் அச்சம் கொள்ள எந்த காரணமும் இல்லை. திட்டமிட்டபடி தேர்தல் நடத்தலாம்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது போல, மறைமுக தேர்தலிலும் அதை பின்பற்ற வேண்டும். 

    அதேசமயம், மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும். ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் உயர்நீதிமன்ற மதுரை கிளையை மனுதாரர்கள் அணுகலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
    Next Story
    ×