என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சிங்கம்புணரி அருகே குடிபோதையில் தந்தையை கொன்ற மகன்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே போதையில் தந்தையை, மகன் கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 54). இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த செல்வம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து வெளிநாட்டில் வேலை பார்க்க முடியாமல் அவர் ஊர் திரும்பினார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வம் ஓரளவு குணமடைந்தார். அதன்பின் அவரது மகளுக்கு திருமணம் முடித்து வைத்தார். செல்வத்தின் மகன் முகுந்தன்(22). பட்டதாரியான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. மேலும் மது பழக்கத்துக்கு அடிமையானார்.

    இதனை அவரது தந்தை செல்வம் கண்டித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் அடிக்கடி தந்தை- மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அவ்வப்போது கட்டிட வேலைக்கு செல்லும் முகுந்தன் அதில் கிடைக்கும் பணத்தில் மது குடித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முகுந்தன் வீட்டின் மாடியில் மது அருந்தியுள்ளார். அப்போது கூடுதல் மதுபானம் வாங்க பணம் தருமாறு தந்தை செல்வத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கண்டிப்புடன் மறுத்து விட்டார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்திலும், போதையிலும் முகுந்தன் தான் அணிந்திருந்த பனியனை கழற்றி தந்தையின் கழுத்தை நெரித்துள்ளார்.

    இதில் செல்வம் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து முகுந்தனை கைது செய்தார். போதையில் தந்தையை, மகன் கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபகாலமாக சிங்கம்புணரி பகுதிகளில் கஞ்சா, மதுவிற்கு இளைஞர்கள் அடிமையாகிவருகின்றனர். சிறுவர் பூங்கா, பஸ் நிலைய உட்புறம், சீரணி அரங்கம் ஆர்ச் பகுதிகளில் மாலை நேரங்களில் கஞ்சா, மதுபோதை ஆசாமிகள் பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர். காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
    Next Story
    ×