என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால், உயர்நீதிமன்ற மதுரை கிளையை மனுதாரர்கள் அணுகலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவரை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்நிலையில், மறைமுக தேர்தல் தொடர்பாக தேவகோட்டை நகராட்சி அதிமுக கவுன்சிலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

    தேவகோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், 15 வார்டுகளில் மனுதாரர்களாகி நாங்கள் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். 

    தேவகோட்டை நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு வருகிற 4-ந் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 14 ஓட்டுகள் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். அ.தி.மு.க. சார்பில் 15 கவுன்சிலர்கள் உள்ளதால், இந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுபவர்கள், தலைவர் மற்றும் துணைத்தலைவர்களாக வெற்றி பெற உள்ளனர்.

    ஆனால், இதை கெடுக்கும் விதமாக அ.தி.மு.க. கவுன்சிலர்களை ஆளும் கட்சியினர் பல்வேறு வழிகளில் மிரட்டி வருகின்றனர். வீடுகளுக்கு நேரடியாக வந்து மிரட்டுகின்றனர். பணம் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறுகின்றனர்.

    அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்பதால், தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை தேவகோட்டை நகராட்சி ஆணையர் தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளது. 

    அவ்வாறு தள்ளி வைத்தால், ஆளும்கட்சியினர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக குதிரை பேரம் நடைபெறும். எனவே, இந்த தேர்தலை நேர்மையாக நடத்தவும், தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிர்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மறைமுக தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும். உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். தேர்தலை தள்ளிவைக்கும் திட்டமில்லை என்று விளக்கம் அளித்தார்.

    அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கண்காணிப்பு கேமராவில் பேசுவது (ஆடியோ) பதிவாகாது என்பதால், அவற்றையும் சேர்த்து பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், 15 மனுதாரர்களில் ஒருவர் மீது 2 கவுன்சிலர்களை கடத்தி சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தலைவர், துணைத்தலைவர் மறைமுக தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என மனுதாரர்கள் அச்சம் கொள்ள எந்த காரணமும் இல்லை. திட்டமிட்டபடி தேர்தல் நடத்தலாம்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது போல, மறைமுக தேர்தலிலும் அதை பின்பற்ற வேண்டும். 

    அதேசமயம், மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும். ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் உயர்நீதிமன்ற மதுரை கிளையை மனுதாரர்கள் அணுகலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
    வாராப்பூர் ஊராட்சியில் திடக்கழிவு மூலம் வருமானம் ஈட்டும் முயற்சிக்கு பஞ்சாயத்து தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூரில் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் மலர்விழி நாகராஜன்.

    இவர் பதவியேற்ற காலத்தில் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்களுக்கு  செய்து வருகிறார். 

    தற்போது மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு இணங்க ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் சேகரிக்கும் குப்பை கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் உதவியோடு மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டையும் வெவ்வேறாக எடை போட்டு, பிறகு அதனை தரம் பிரிக்கப்படுகிறது.

     மக்காத குப்பைகளில் இருந்து கிடைக்கப்பெறும் பாட்டில், பிளாஸ்டிக் டப்பா போன்றவற்றை  மறுசுழற்சிக்கு அனுப்பி வைப்பதோடு, மக்கும் குப்பைகளில் இருந்து கிடைக்கும்   கழிவுகளை  35- லிருந்து 40 நாட்கள் வரை மக்கச்செய்து மீண்டும் அதனை சலித்து அதனுடன் கால்நடை கழிவுகளும், மண்புழுவையும் சேர்த்து 3 நாட்களுக்கு ஒரு தடவை கிடைக்கப்பெறும்  நொதியினை இயற்கை மண்புழு உரமாக   விவசாயிகளுக்கு விற்க ஏற்பாடு செய்துள்ளார்.

     அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை ஊராட்சிக்கு கொடுத்து வருகிறார். மேலும் குப்பை கிடங்கின் மறுபுறம் பல்வேறு மரக்கன்றுகளை வளர்த்து அதனை ஊராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் நடவு செய்து பராமரித்து வருவதோடு, இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு இலவசமாகவும் வழங்கிவருகிறார். 

    மத்திய சுகாதார திடக்கழிவு மேலாண்மை குழு இங்கு வருகைபுரிந்து இயற்கை மண்புழு உரம் தயாரிக்கும் பகுதியை ஆய்வு செய்து ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜனை பாராட்டியது.

     நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் உள்ள கிடங்குகளில் நாள்தோறும் வீணாக கொட்டப்படும் குப்பை கழிவுகள் மலைபோல் காட்சியளித்து பயனற்று இருந்து வரும் நிலையில் வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவரின் இத்தகைய முயற்சியை சமூக ஆர்வலரும், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்களும்  பாராட்டினர்.

    சிவராத்திரியை முன்னிட்டு மானாமதுரை குறிச்சி காசி சிவன் கோவிலில் பக்தர்கள் இரவு முழுவதும் வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை&பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி வழிவிடு பெரியநாச்சி கோவில் வளாகத்தில் காசி சிவன் கோவில் சன்னதி உள்ளது.

    இன்று மாலை மாசி மாத சோமவாரம் பிரதோஷ பூஜை நடைபெறுகிறது. இதில் காசி நந்திக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெறுகிறது. 

    நாளை சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை விடிய விடிய சிவபூஜை வழிபாடு நடைபெறுகிறது.  21 வகையான மூலிகைகள் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. 

    ஒவ்வொரு பூஜை நேரத்தில் பக்தர்கள் அனைவரும் கங்கை நீரால் அபிஷேகம் செய்து காசியில் இருந்துகொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட காசி விஸ்வநாதரை காசியில் எப்படி கங்கை கரையில் தொட்டு வணங்கப்படுகிறதோ? அதேபோல் இங்கு தொட்டு வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    காசி சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்ய மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலில் தங்கி வழிபடுவார்கள்.
    மானாமதுரை அருகே ஜெகதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா தொடங்கியது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் அமைந்துள்ள ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி கோவிலில் சிவராத்திரி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    தென் மாவட்டங்களில் முதல்முறையாக இங்கு தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ள   சிவனுக்கு கும்பாபிஷேகம்,   மகாஅபிஷேகம் வருகிற 1&ந் தேதி (செவ்வாய்கிழமை) சிவராத்திரி தினத்தில் இரவு நடைபெறுகிறது.

    தஞ்சாக்கூரில்  ஒரே இடத்தில்  ஜெகதீஸ்வரர், ஜெயம்பெருமாள், 18 சித்தர்களுடன் கூடிய சுப்பிரமணியர் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

    மேலும் சுப்ரமணியர் கோவில் தெப்பக்குளத்தில்  ராகு, கேது பகவானுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு இந்த கோவில்களுக்கு  அடுத்தடுத்து கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.  தற்போது சுப்பிரமணியர் கோவிலில்  தென் மாவட்டங்களிலேயே முதன்முதலாக தவக்கோலத்தில் சிவன் எழுந்தருளிஅருள் பாலிக்கும்சிலைபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

    இதையடுத்து ஜெகதீஸ்வரர் திரிபுரசுந்தரி  கோவிலில்  மாசி சிவராத்திரி விழாவும் தவக்கால சிவனுக்கு புனித நீர் அபிஷேகமும் நடைபெறுகிறது. முன்னதாக ஜெகதீஸ்வரர் கோவிலிலும்,  சுப்பிரமணியர் கோவிலிலும்  காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் சுப்பிரமணியருக்கும், சிவனுக்கும், ஜெகதீஸ்வரர்  சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள்  தீபாராதனைகள் நடைபெற்றன.  விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1ந்தேதி ஜெகதீஸ்வர் சுவாமிக்கு 108 வகையான அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிவராத்திரி நாட்களில் தினமும் ஜெகதீஸ்வரர் சுவாமிக்கும், சுப்பிரமணியருக்கும், சிவனுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறுகின்றன. 

    தென் மாவட்டங்களிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள தவக்கோல சிவனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தஞ்சாக்கூருக்கு வருகை தருகின்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பரம்பரை பூசாரி பாலசுப்பிரமணியசுவாமி  செய்துள்ளார். சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதான    வசதியும் செய்யப்பட்டுள்ளது.
    மானாமதுரை அருகே காமாட்சி அம்மன் கோவில் உற்சவ விழா தொடங்கியது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூரில் பிரசித்தி பெற்ற கடம்பவன காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் வருடாந்திர மகா உற்சவம் சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது.

    இந்த ஆண்டு விழா காமாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஆனந்த விநாயகர் சன்னதி முன்பு சிறப்பு கணபதி ஹோமம் நடந்தது.

    வருகிற 11ந் தேதி (வெள்ளிக்கிழமை) காமாட்சி அம்மனின் திருபெட்டியுடன் வைகை ஆற்றில் இருந்து புறப்படும் நிகழ்ச்சியும் 12ந்தேதி (சனிகிழமை) காலை பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் மாலை திருவிளக்கு பூஜை வழிபாடும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில்தலைவர் நாகுபாண்டியன், பொதுசெயலாளர் நாகராஜன், பொருளாளர் அன்புக்குமார், துணைத்தலைவர்கள் யாழ்முருகன், முத்துபாண்டியன், இணை செயலாளர்கள் திருஞானம், சரவணன், துணை செயலாளர்கள் ராஜா, பழனியப்பன் மற்றும் செய்களத்தூர் கடம்பவன காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்து வருகின்றனர்.
    காரைக்குடி-சென்னை இடையே பயண நேரம் குறையும் என பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி-திருச்சி ரெயில்வே பிரிவில் மின் மயமாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 17-ந்தேதி தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்தார்.

    ஆய்விற்கு பின்னர் இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605) காரைக்குடி வரை மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டது.

    இன்று காலை 5 மணிக்கு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் (12606) ரெயிலும் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு சென்றது.

    தொடர்ந்து இனிமேல் மின்சார என்ஜின் மூலமாகவே ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காரைக்குடி-சென்னை இடையே பயண நேரம் குறையும் என பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதற்கு முன்பு காரைக்குடியில் இருந்து டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சியில் நிறுத்தப்பட்டு அங்கு மின்சார என்ஜினை மாற்றிய பிறகு புறப்பட்டு செல்லும் இதனால் சுமார் 30 நிமிடங்கள் வரை அங்கு ரெயில் நிற்கும் நிலை இருந்து வந்தது. இனி அந்த நிலை இருக்காது என பயணிகள் தெரிவித்தனர்.

    கார்க்யூ விமான நிலையத்தில் இருந்து அனைத்து மாணவ-மாணவிகளையும் பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செர்டு தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர்கள் பாண்டி- போதும்பொன்னு. இவர்களது 2-வது மகள் பார்கவி. உக்ரைன் நாட்டில் உள்ள கர்வியூ நகரில் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார். அங்கு போர் நடந்து வருவதால் மாணவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், தற்போது ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே போர் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ கல்லுரிகள் மூடப்பட்டுள்ளது. தான் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக பார்கவி செல்போன் மூலம் வீடியோ காலில் எங்களுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாலை நேரத்தில் பயங்கரமான சத்தம் கேட்டது என்றும், அது எல்லை பகுதியில் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பயங்கர சத்தம் என்றும் மகள் தெரிவித்தார்.

    ரஷ்யா நாட்டின் எல்லை பகுதியில் உள்ள மகள் படிக்கும் மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளதால் எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது. மூத்த மகள் 5 ஆண்டுகள் உக்ரைனில் தங்கி மருத்துவ படிப்புகளை முடித்து விட்டு பாதுகாப்பாக இந்தியா வந்து விட்டார். எனது மகளை போல் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கர்க்யூ நகரில் படித்து வருகின்றனர்.

    போர் நடைபெறும் பதற்றமான பகுதியாக உள்ள கார்க்யூ விமான நிலையத்தில் இருந்து அனைத்து மாணவ-மாணவிகளையும் பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து உக்ரைன் நாட்டில் 14 மருத் துவ மாணவர்கள் தவிக்கின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) -கண்காணிப்பு அலுவலர் பழனிக்குமாரிடம் மண்டபத்தை சேர்ந்த 2 மாணவர்களின் பெற்றோர், ராமநாதபுரம் பட்டணம் காத்தான் ராம்நகர் மாணவர் ஜிப்சனின் தந்தை ராஜேந்திரன் ஆகியோர் மகன்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்துள்ளனர்.

    மேலும் திருவாடானை அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து மகன் நவீன், ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளத்தை சேர்ந்த நவாஸ் அலி மகன் முகம்மது ஆதிம் ஆகியோரும் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள மற்ற மாணவர்களின் பெற்றோரும் மனு அளிக்கலாம் என்று கண்காணிப்பு அலுவலர் பழனிக்குமார் தெரிவித்தார்.
    ஆண்களை விட அதிக இடத்தில் வெற்றி பெற்ற காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    காரைக்குடி

    நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காரைக்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளுக்கு தேர்தல் நடை பெற்று முடிந்துள்ளது. இதில் தி.மு.க 18 இடங்களிலும், அ.தி.மு.க 7 இடங்களிலும், காங்கிரஸ் 3, கம்யூனிஸ்ட் 1, சுயேச்சை வேட்பாளர்கள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.திமுக கூட்டணி 22 இடங்களில வெற்றிபெற்றுள்ளது. 

    வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 1வது வார்டு கார்த்திகேயன் மற்றும் 30 வது வார்டின் விஷ்ணு பெருமாள் ஆகியோர் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் நகர செயலாளர் குணசேகரன் முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்து துரை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

    தற்போது தி.மு.க. கூட்ட ணியின் பலம் 24ஆக உள்ளது. காரைக்குடி நகர்மன்ற தலைவர் பதவி ஆண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.36 உறுப்பினர்களில் 17பேர் ஆண்கள் மற்றும் 19பேர் பெண்களாவார்கள். நகர்மன்ற தலைவர் பதவி ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் நகர்மன்ற துணை தலைவர் பதவி பெண்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலரான மகாலெட்சுமி கூறுகையில் உள்ளாட்சியில் பெண்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீட்டை அரசு அறிவித்தபோது பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டது.அதேபோல் காரைக்குடி நகராட்சியில் ஆண்களை விட பெண்கள் அதிக இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 

    இங்கு ஆண்களுக்கு  தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதால் துணை தலைவர் பதவியில் பெண்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதே பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலரின் கோரிக்கையாக உள்ளது என்றார்.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தபால் நிலையத்தில் புதிய ஆதார் அட்டை விண்ணப்பிக்க குழந்தைகளுடன் பெண்கள் திரண்டு வந்தனர்.
    சிவகங்கை

    தமிழக அரசு ஆதார் கார்டில் பெயர், முகவரி திருத்தங்கள் செய்யவும் புகைப்பட மாற்றம் மற்றும் ஆதார் கார்டில் செல்போன் நம்பர் இணைப்பு போன்றவற்றை பொதுமக்கள் மாற்றி அமைத்துக்கொள்ள ஏதுவாக தலைமை தபால் நிலையங்களில் ஆதார் மையங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தலைமை தபால் நிலையத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. 

    இங்கு இன்று காலை புதிய ஆதார் கார்டு எடுக்கவும், ஆதார் கார்டில் திருத்தம் செய்யவும் பெண்கள் கைக்குழந்தைகளுடன் திரண்டனர்.  நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்ததால் ஆதார் மைய ஊழியர்கள் முன்னுரிமையில்  முதலில் வந்த 50 நபர்களுக்கு மட்டும் இன்று ஆதார் கார்டு விண்ணப்பித்தும், திருத்தம் செய்தும் கொடுத்தனர். மற்றவர்களை நாளை வருமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

    ஆதார் மையத்தில் நாள்தோறும் ஏராளமானோர் வருவதால் அங்குள்ள ஊழியர்கள் திணறி வருகிறார்கள். எனவே தேவகோட்டை சுற்றுவட்டார மையத்தில் ஆதார் சேவை மையங்களை புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே போதையில் தந்தையை, மகன் கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 54). இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த செல்வம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து வெளிநாட்டில் வேலை பார்க்க முடியாமல் அவர் ஊர் திரும்பினார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வம் ஓரளவு குணமடைந்தார். அதன்பின் அவரது மகளுக்கு திருமணம் முடித்து வைத்தார். செல்வத்தின் மகன் முகுந்தன்(22). பட்டதாரியான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. மேலும் மது பழக்கத்துக்கு அடிமையானார்.

    இதனை அவரது தந்தை செல்வம் கண்டித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் அடிக்கடி தந்தை- மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அவ்வப்போது கட்டிட வேலைக்கு செல்லும் முகுந்தன் அதில் கிடைக்கும் பணத்தில் மது குடித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முகுந்தன் வீட்டின் மாடியில் மது அருந்தியுள்ளார். அப்போது கூடுதல் மதுபானம் வாங்க பணம் தருமாறு தந்தை செல்வத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கண்டிப்புடன் மறுத்து விட்டார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்திலும், போதையிலும் முகுந்தன் தான் அணிந்திருந்த பனியனை கழற்றி தந்தையின் கழுத்தை நெரித்துள்ளார்.

    இதில் செல்வம் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து முகுந்தனை கைது செய்தார். போதையில் தந்தையை, மகன் கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபகாலமாக சிங்கம்புணரி பகுதிகளில் கஞ்சா, மதுவிற்கு இளைஞர்கள் அடிமையாகிவருகின்றனர். சிறுவர் பூங்கா, பஸ் நிலைய உட்புறம், சீரணி அரங்கம் ஆர்ச் பகுதிகளில் மாலை நேரங்களில் கஞ்சா, மதுபோதை ஆசாமிகள் பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர். காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-, எஸ்.புதூர் ஒன்றியங்களில் பட்டா கணினி திருத்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் உத்தரவுக்கு இணங்க வருவாய்த்துறையினரால் பட்டா கணினி திருத்தம் முகாம் புதன் மற்றும் வெள்ளிகிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. 

    அதன் அடிப்படையில் திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட தானிப்பட்டி கிராமத்திலும், எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாந்தங்குடிபட்டி கிராமத்திலும் கணினி முகாம் நடைபெற்றது. 

    முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டும், விசாரணை கூறிய மனுக்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள கிராம  நிர்வாக  அலுவலரினால்  சம்பந்தப்பட்ட மனுதாரர்களிடம் நேரடியாக விசா ரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி, தலைமை நிலஅளவர் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் இளையராஜா, ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம அலுவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 27ந் தேதி 1264 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன.
    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர்  அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரத்துறையின் மூலம் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    இந்த கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பணிகள் குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

    தேசிய போலியோ  சொட்டு மருந்து முகாம் 27ந் தேதி அன்று மாவட்டம் முழுவதும் 1,264 மையங்கள் மூலம்  நடைபெற உள்ளன. 

    முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. மேலும், பொதுமக்களின் நலன்கருதி நடமாடும் மையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் சிறப்பு மையங்கள் அமைத்து போலியோ சொட்டுமருந்து வழங்க உள்ளன. 

    அதேபோல், ரெட்கிராஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளும் பொதுமக்களின் தேவைக்காக சிறப்பு மையங்கள் அமைத்து செயல்பட உள்ளன.
     
    அன்றையதினம் பணி மேற்கொள்வதற்காக பொது சுகாதாரத்துறையுடன் சமூகநலத்துறை, ஊட்டச்சத்துத்துறை. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சித்துறை, கல்வித் துறை ஆகியத்துறைகள் ஒருங்கிணைந்து 5,060 பேர் பணியாற்ற உள்ளனர்.

    எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும், மீண்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து குழந்தைகளை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) ராம்கணேஷ், இணை இயக்குநர் (மருத்துவம்)  இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநர் (குடும்பநலம்) யோகவதி மற்றும் மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×