என் மலர்
சிவகங்கை
திருப்பத்தூரில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள பூமாயிஅம்மன் கோவிலின் 88ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 35ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
திருப்பத்தூர் அண்ணா சாலையில் இருந்து திருக்கோஷ்டியூர் வரை நடந்த இந்த பந்தயம் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாட்டுவண்டிபந்தய கமிட்டி குழு தலைவர் எம்.ஆர். பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.கே.உமாதேவன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில் நாதன், முன்னாள் ஒன்றிய தலைவர் கரு.சிதம்பரம், ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல், திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, அ.தி.மு.க. அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், மாட்டு வண்டி பந்தய மாநில தலைவர் எஸ்.கே மோகன சாமி, மாவட்ட தலைவர் நகரம்பட்டி வைத்தியர், மற்றும் மாட்டுவண்டிபந்தய விழாக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நடுமாடு, பெரியமாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டுமாடு, என பலதரப்பட்ட இன ரக மாட்டு ஜோடிகளுடன் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை 2 ஜோடிகளுக்கும், இன்றுகாலை 2 ஜோடிகளுக்கும் பந்தயம் நடைபெற்று வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுத் தொகையும் முதலிடத்தை பிடித்த வீரர்களுக்கு பரிசு கோப்பையும், வழங்கப்பட்டது.
சிவகங்கை புத்தக திருவிழாவில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நூல்களை நகராட்சி நிர்வாகம் வாங்கியது.
சிவகங்கை
சிவவகங்கை நகர் மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் சி.எம். துரைஆனந்த், ஆணையாளர், பாலசுப்பிர மணியன் பொறியாளர், நகரமைப்பு ஆய்வாளர், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் இணைந்து ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கினர்.
இந்த புத்தகங்களை நகராட்சி அலுவலகத்தில் தனிஅறையில் நூலகம் அமைத்து நகராட்சிக்கு வரும் பொதுமக்கள் புத்தகங்களை படித்து மகிழ்ந்திட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் கவுன்சிலர்கள் சண்முகராஜன், ராமதாஸ், கார்த்திகேயன், அயூப்கான், சரவணன், விஜயகுமார், கிருஷ்ணகுமார், மகேஷ் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் அருகே கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சமாதான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த நாச்சியாபுரம் அருகே உள்ளது. இளங்குடி கிராமம். இங்குள்ள பெரிய கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தனியார் குளிர்பானம் நிறுவனம் கண்மாயை மாசுபடுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்த நிலையில் வட்டாட் சியர் வெங்கடேஷ், காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் வசதி செய்து தருவதாக உறுதி கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட் சியர் வெங்கடேஷ் தலை மையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் காவல்ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம், இளங்குடி கிராம மக்கள், குளிர்பான நிறுவன நிர்வாகிகள் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இளங்குடி பெரியகண்மாயின் நீர்வரத்து கால்வாய்க்கு இடையூறாக தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தில் உள்ள கல்லுகால் மற்றும் ஆக்கிரமிப்புகளை இளங்குடி கிராம பொது மக்கள் முன்னிலையில் நாளை (23&ந்தேதி) அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதேபோல குளிர்பான நிறுவனத்திலிருந்து பெரிய கண்மாய் வரத்துக்கால் வாயில் கலக்கும் கழிவுநீரை பரிசோதனை செய்வதற்கு சிவகங்கை மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரை செய்யவும், கழிவுநீரை குளிர்பான நிறுவனத்தின் உள்பகுதிக்குள் வெளியேற்றவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் கிராமத்தின் சர்வே எண் 19ல் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி பாதை ஏற்படுத்த நாச்சியாபுரம் குறுவட்ட அளவர் மூலம் புலத்தணிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இளங்குடி கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில், இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்டது என்பதை உறுதி செய்ய அறநிலையத்துறை ஆய்வாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் முறையாக மனுசெய்ய முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் நாச்சியாபுரம் காவல் சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார், நாச்சியாபுரம் வருவாய் ஆய்வாளர் அங்காளேஸ்வரி, இளங்குடி கிராம நிர்வாக அலுவலர் முத்துகிளி, இளங்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் முத்து, சமூக ஆர்வலர்கள் சண்முகசுந்தரம், அண்ணாமலை, சக்திவேல், நித்தியா, வார்டு உறுப்பினர் சாந்தி நேரு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையில் மீட்கப்பட்ட தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் தர்மராஜ். நிதிநிறுவனம் நடத்திவரும் இவர் பொதுமக்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாககூறி பல கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
அதன் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் இந்த வழக்கு விசாரணை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தர்மராஜ், தனது வக்கீலை காரில் சிவகங்கைக்கு அழைத்துச் சென்றார்.
பின்பு தர்மராஜ் தனதுகாரில் திரும்பி செல்லும் போது மற்றொரு காரில் வந்த 5 பேர் கும்பல், அவரை காருடன் கடத்தி சென்றது. இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் தர்மராஜை போலீசார் தேடி வந்தனர். அவரை தனிப்படை போலீசார் மதுரையில் மீட்டனர்.
அவரை கடத்திச் சென்ற 3 பேர் தப்பிவிட்ட நிலையில் சிவகங்கையை அடுத்த ஒக்கூரைச் சேர்ந்த கலையர சன் (36), கூத்தாண்டன் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பிடிபட்ட கலையரசன் மற்றும் 76 பேர் தர்மராஜ் நடத்தி வந்த நிதிநிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருப்பதும், அதனை அவர் திருப்பித்தராததால் கடத்தியது தெரியவந்தது.
இந்த வழக்கில் மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
காரைக்குடியில் நாளை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.
காரைக்குடி
காரைக்குடி தாலுகா கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் நாளை (21ந்தேதி) காலை 10 மணிக்கு வட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
இலவச வீட்டுமனைபட்டா, பல்வேறு திட்டங்களில் உதவித்தொகை பெறுதல், குடும்பஅட்டை விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு முகாமில் தீர்வு காணப்படும் என்பதால் பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
மானாமதுரையில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் கடந்த 10நாட்களாக நடைபெற்று வந்த சித்திரை திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது.
இந்தகோவிலில் கடந்த 7ந்தேதி சித்திரைதிருவிழா தொடங்கியது தினமும் இரவு மண்டகப்படிகளில் ஆனந்தவல்லி அம்மனும் பிரியாவிடை சமேதமாய் சோமநாதர் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்தனர்.
முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 15ந்தேதி எஸ்.பி.பொன்னம்பலம்பிள்ளை குமாரர்கள் குடும்பத்தினர் மண்டகப்படியில் ஆனந்த வல்லி அம்மனுக்கும் சோமநாதர் சுவாமிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுதரிசிக்க திருக்கல் யாண வைபவம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து 16ந்தேதி தேரோட்டம் நடந்தது. நிறைவு நாளில் இரவு ஆயிர வைசிய காசுக்கார செட்டியார் மண்டகப்படியில் அம்மனும், சுவாமியும் இரு ரிஷபவாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.
சித்திரை திருவிழாவின் நிறைவாக கோவில் கொடி மரத்தில் கொடிஇறக்கப்பட்டு தீர்த்தோற்சவ வைபவம் நடந்தது. இரவு கோவில் உள்பிரகாரத்தில் அம்மன், சுவாமி பக்திஉலா வருதல் நடைபெற்றது.
10நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் சுவாமிக்கான பூஜைகளை சோமாஸ்கந்தன் பட்டர், ராஜேஷ் பட்டர், சக்கரைப் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச் சாரியார்கள் நடத்தினர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர், மற்றும் மண்டகப்படி தாரர் கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கமும், சுகாதார ஏற்பாடு மற்றும் வைகை ஆறு சீரமைக்கும் பணிகளை நகராட்சிதலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் கண்ணன், சுகாதர ஆய்வாளர் தங்கதுரை ஆகியோரும் செய்திருந்தனர்.
மானாமதுரை அருகே அடகு வைத்த நகைகள் மாயமானதால் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை வேளாண்மை கூட்டுறவுசங்கத்தில் அடமானம் வைத்த நகைகள் மாயமானதால் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர்.
கீழப்பசலையில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்க செய லாளர்கள், தலைவர்கள் கூட்டணி அமைத்து விவசாயிகளின் நகைகளை அடமானம் வாங்கி போலி ரசீதுகள் கொடுத்துள்ளனர்.
விவசாயிகள் சிறுக, சிறுக பணம் சேர்த்து வாங்கிய தங்க நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து விவசாய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற உடன் 5 பவுன் நகை தள்ளுபடி திட்டத்தை அறிவித்தவுடன் விவசாயிகள் நகைகளை திரும்ப கேட்டதும் இந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நகைகடன் தள்ளுபடியில் உண்மையான விவசாயி களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் ஊழியர்களே வெவ்வேறு பெயர்களில் நகைகளை அடமானம் வைத்து தள்ளுபடி பெற்றுள்ளனர். தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர்களை வங்கியின் பெயர் பலகையில் ஒட்டவேண்டும் என்ற விதிகயையும் மீறியுள்ளனர்.
இன்று வரை நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர்களை வங்கி நிர்வாகம் வெளியிட வில்லை. இதையடுத்து 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் வங்கிக்குள் புகுந்து ஊழியர்களிடம் நகை கடன் தள்ளுபடி மற்றும் அடகுவைத்த நகைகளை கேட்ட போது, தரமறுத்ததுடன் அடகு ரசீதுகளில் உள்ள பெயர்களையும் அழித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வா கத்திடம் புகார் செய்தனர். மேலும் முதல்வரின் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்துள்ளனர். இதுவரை ரூ.3 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ள தாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக அரசு முறைகேடுகளில் ஈடுபட்ட ஊழியர்கள்மீதும் கூட்டுறவு வங்கிகளின் தலைவர்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
காரைக்குடி அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் அருகே உள்ள சுதந்திரபுரத்தை சேர்ந்தவர் புவனேசு வரி. இவரது மகள் சுகன்யா(வயது28).
மனநிலை பாதித்த சுகன்யா கடந்த 16-ந்தேதி சுதந்திரபுரம் அருகே புளியங்குடியிருப்பு கோவில் திரு விழாவில் நடந்த அன்னதானத்தில் சாப்பிடச்சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
மாயமான அவரை தேடி வந்தநிலையில் சுதந்திரபுரம் பகுதியில் உள்ள முந்திரிக்காட்டில் கற்பழித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சுகன்யாவை கற்பழித்து கொன்ற கொலையாளி யார்? என்று கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
கொலையாளியை கண்டுபிடிக்க சிவகங்கை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் காரைக்குடி துணை போலீஸ்சூப்பிரண்டு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சுகன்யாவை கற்பழித்து கொன்றது அவரது பக்கத்து வீட்டு வாலிபரான தேவா(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு தபால்கள் அனுப்பும் போராட்டம் நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நகருக்கு வெளியே 3 கி.மீ. தொலைவில் ரூ 3.85 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க கடந்தமாதம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
ஏற்கனவே இளையான் குடியில் பஸ்நிலையம் செயல்பட்டு வரும் பகுதியி லேயே அந்த பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு அந்த இடங்களையும் சேர்த்து விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி ஊருக்கு வெளியே பஸ்நிலையம் அமைக்கப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து இளையான் குடி புதிய பஸ் நிலையம் எதிர்ப்பு குழு சார்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கடையடைப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. இளையான்குடி பொதுமக்கள் இங்குள்ள தபால்நிலையத்திற்கு வந்து புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் கொண்ட தபால்களை அனுப்பினர்.
இந்த போராட்டத்தில் புதிய பஸ்நிலைய எதிர்ப்புக்குழு நிர்வாகிகள், பொதுமக்கள் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். போராட்டக்குழு செயலாளர் துருக்கி ரபிக்ராஜா கூறு கையில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இளையான்குடி நகருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயன்தராத புதிய பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே அமைக்கக் கூடாது. தற்போதுள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் உள்ளது.
எனவே இளையான் குடியில் புதிய பஸ்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம், சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் என அடுத்தடுத்து நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார். போராட்டம் முடிந்தபின் சுமார்5 மூடைகளில் 5 ஆயிரம் மனுவுடன்கூடிய தபால்கவர்களை தபால் நிலைய அலுவலரிடம் பதிவு செய்து அனுப்ப வழங்கினார். தபால் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூரில் நூலக அறிவுசார் மையம் அமைப்பதற்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூபாய் 1.95 கோடி மதிப்பீட்டில் நூலகம் அறிவுசார் மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜா, திருப்பத் தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, துணைத்தலைவர் கான் முகமது, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சி யர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, பேரூராட்சி உறுப்பினர்கள் கண்ணன், சரவணன், பசீர்அகமது, பிளாசா ராஜேஸ்வரி சேகர், சாந்தி சோமசுந்தரம், சரண்யா ஹரி, நாகமீனாள்.
திருஞானசம்பந்தம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவரும், கவுன்சிலருமான சீனிவாசன், திருப்பத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதய சண்முகம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு காளிமுத்து, பேச்சாளர் ஷாஜகான், கட்டிட ஒப்பந்ததாரர் இளங்கோ, உலக ஒருங்கிணைந்த மத நல்லிணக்க குழு தலைவர் ரபீக், ஆசிரியர் பாண்டியன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் தலைமை எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் பலர் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மணிமண்டபங்கள், நினைவு மண்டபங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி நினைவு சின்னம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபம், குன்றக்குடியில் அமைந்துள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணிமண்டபம், காரைக்குடியில் அமைந்துள்ள கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் ஆகியவைகளை செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குநர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மணி மண்டபங்கள், நினைவு மண்டபங்களில் கூடுதலாக புகைப்படங்கள், சிறப்பு மிக்க வரலாற்று விவரங்களை நிறுவிடவும், மண்டபத்தினுள் திருவுருவ சிலைகள் மற்றும் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவிக்க பயன்படுத்தப்படும் படிக்கட்டுகள் ஆகியவற்றின் உறுதித்தன்மை, மணி மண்டபங்கள் மற்றும் நினைவு மண்டபங்களின் வளாகத்தில் கூடுதலாக ஏற்படுத்த வேண்டிய கட்டிடங்கள், பூங்காக்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் பல்வேறு வகையான அழகுச்செடிகள் அமைத்து பராமரித்திடவும், மண்ட பத்தினுள் உள்ள நூலகங் களில், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ள புத்தகங்கள், குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் ஆகியவைகளை கூடுதலாக நிறுவிடவும், பார்வையாளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாகவும், மணி மண்டபங்களுக்கு வருகைபுரியும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொண்டு, வரலாற்று சிறப்புக்களை அவர்களுக்கு எடுத்துரைக்கவும், பொதுமக்களின் வருகைப்பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும் இயக்குநர் ஜெயசீலன் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
புத்தகங்களை வாசிப்பதால் நல்ல பழக்கங்களை அறிய முடியும் என்று கலெக்டர் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் புத்தக திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொண்ட பெருந்திரள் வாசிப்பு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. சிவகங்கை புத்தக திருவிழா மன்னர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த புத்தக திருவிழா வருகிற 25ந்தேதி வரை நடைபெற உள்ளது.
புத்தகத்திருவிழாவின் மூலம் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் புத்தகம் வாசிப்பதனால் ஏற்படும் பயன்கள், அறிவு சார்ந்த மற்றும் எதிர்கால தேவைக்கான கருத்துக்கள், நல்ல பழக்கவழக்கங்கள் போன்ற பயன்கள் குறித்து அறிந்துகொள்ள முடியும் என்பதனால் விழாவின் முக்கிய நிகழ்வாக பொதுமக்கள், பள்ளி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் பெருந்திரள் வாசிப்பு தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நேற்று 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட பெருந்திரள் வாசிப்பு நிகழ்வு நடை பெற்றது. இதில் கலெக்டர் பேசுகையில், புத்தக திருவிழா நடைபெறும் 11 நாட்களும் பட்டிமன்றங்கள், சிறப்பு தலைப்புக்களில் சொற்பொழிவுகள், சிறப்பு விருந்தினர்கள் ஆற்றும் கருத்துரைகள், இசைப் பேரூரைகள் நாட்டிய நாடகம் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவிகள் கலந்து கொள்ளும் 50க்கும் மேற்பட்ட வகையில் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் புத்தக திருவிழாவினை குடும்பத் துடன் பார்வையிட்டு குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பதனால் ஏற்படும் பயன்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். புத்தக திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் உள்ளுர் சிறப்பு உணவகங்கள் மூலம் தயாரிக்கப்படும் தரமான இயற்கை உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. அனைத்து பொதுமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்களை வாசிப்பதால் நல்ல பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ள முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன், பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






